Wednesday, June 8, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்.


தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு :-

தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.

இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை, இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். பின்னர் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்,

இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன? என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபக்சேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை. அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலலிதா பேசினார்.

ஒரே ஆண்டில் 30 அணுகுண்டுகளை குவித்துள்ள இந்தியா, பாக்.


இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்ந்து ஒரே ஆண்டில் 20 முதல் 30அணுகுண்டுகளை
உருவாக்கி தங்களது அணு ஆயுதப் பிரிவில் சேர்த்துள்ளதாக ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வுக் கழகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த அந்த அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது ஆண்டறிக்கையில், இரு நாடுகளும் அணு ஆயுதக் குவிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணைகள் குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

2010ம் ஆண்டில் இந்தியாவின் அணு ஆயுத எண்ணிக்கை 60 முதல் 80 ஆக இருந்தது. ஆனால் தற்போது இது 80 முதல் 110 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் பாகிஸ்தானும் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 70 முதல் 90 என்பதிலிருந்து 90 முதல் 110 ஆக உயர்த்தியுள்ளது. தற்போது இரு நாடுகளின் அணு ஆயுத பலமும் சம அளவில் உள்ளன.

இரு நாடுகளுமே அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வககையிலான அதி நவீன ஏவுகணைகளை பெருமளவில் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான ஸ்கேன் ரிப்போர்ட் : ரூ. 5லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு.


தவறான ஸ்கேன் ரிப்போர்ட் கொடுத்த ஸ்கேன் சென்டரும், அதன் அடிப்படையில் ஆலோசனை வழங்கிய ரேடியாலஜிஸ்ட்டும் சேர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பம்

திருப்பூர் பாளையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சத்யா. கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பரில் சத்யா கர்ப்பமானர். சத்யா கர்ப்பம் தரித்த நாளிலிருந்து கணவர் விஜய் அவரை கண்ணை இமை காப்பது போல் பராமரித்தார்.

வளையன்காடு மனோ மருத்துவமனையில் தன்னை பரிசோதித்துக் கொண்ட சத்யா, டாக்டர் சாரதாவின் ஆலோசனைப்படி சத்தான உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து டாக்டர் சாரதா சொன்னதன் பேரில் திருப்பூர் அவினாசி ரோட்டிலுள்ள பூஜா ஸ்கேன் சென்டரில் கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுத்துக் கொண்டார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டை பரிசோதித்த டாக்டரும் கருவில் குழந்தை எவ்வித குறைபாடும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளதாக கூறி மருந்து கொடுத்தார்.

பிரசவம்

சத்யா திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். 2009-ம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு வலது கை முற்றிலும் இல்லாமல் இருந்தது. இதனால் சத்யாவும், அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கருவில் குழந்தை நலமாக இருக்கிறது. நல்ல வளர்ச்சி உள்ளது என அறிக்கை வழங்கிய ஸ்கேன் சென்டர் மீதும், அதற்கு தகுந்தாற்போல் மருந்து, சத்துணவு உட்கொள்ள ஆலோசனை வழங்கிய டாக்டர் மீதும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தங்களை நம்ப வைத்து மோசடி செய்தனர் என ஸ்கேன் சென்டர் உரிமையாளர் மீது ரூ. 10 லட்சம் இழப்பீடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதிரடி தீர்ப்பு

நீதிபதி தண்டபாணி, உறுப்பினர்கள் ரத்தினம், சரஸ்வதி ஆகியோர் வழக்கினை விசாரித்தனர். இவர்கள் ஸ்கேன் ரிப்போர்ட், டாக்டர் ஆலோசனை சீட்டுகள், இதர மருத்து ஆவணங்கள் ஆகியவற்றை சாட்சியாக கொண்டு தீர்ப்புக் கூறினர்.

ஸ்கேன் ரிப்போர்ட் தயாரித்த பூஜா ஸ்கேன் சென்டரும், அதன் அடிப்படையில் ஆலோசனை வழங்கிய மையத்தின் ரேடியாலஜிஸ்ட் கவிதா லட்சுமியும் சேர்ந்து ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அத்துடன் வழக்கு செலவுத் தொகையாக 1,000 ரூபாயையும் இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் இருந்து மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கிய டாக்டர் சாரதா விடுவிக்கப்பட்டார்.

கனிமொழி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி - கண்ணீர் விட்டு அழுத ராசாத்தி அம்மாள்.


திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி இந்த இருவரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது ஜாமீன் மனுக்களை ஏற்கனவே சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் ஒரு மாத கால கோடை விடுமுறை அடுத்த நாள் தொடங்கியது. இதனால் ஒரு மாதத்திற்கு கனிமொழி வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பரிஹோக் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தனது தீர்ப்பை அளித்தார் நீதிபதி பரிஹோக்.

அப்போது கனிமொழி மற்றும் சரத்குமாரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் இருவரும் பலனடைந்திருப்பார்கள் என்பதற்கு பூர்வாங்கம் உள்ளது. எனவே இருவரையும் ஜாமீனில் விட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

கண்ணீர் விட்டு அழுத ராசாத்தி அம்மாள்:

ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பித்து விட்டார்.

அவரை அருகில் இருந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக தலைவர்கள் ஆறுதல் படுத்தினர்.

ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனிமொழி தொடர்ந்து சிறையிலேயே அடைபட்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிசுக்களையும் துளைத்தெடுத்த சிங்களப் படையின் குண்டுகள் !


இலங்கைப் படையினரின் கொடூரத் தாக்குதலுக்கு வயிற்றில் இருக்கும் சிசுக்களும் கூட தப்பாத அவலம் வன்னியில் நிகழ்ந்துள்ளது.

வன்னியின் மாத்தளன் பகுதியில் இலங்கைப் படைகள் வெள்ளிக்கிழமை நடந்த எறிகணைத் தாக்குதலில் நான்கு கர்ப்பிணிப் பெண்கள் கொடூரமாக உயிரிழந்தனர்.

விஸ்வமடு, தியாரவில் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான சிவதர்சனி என்ற கர்ப்பிணிப் பெண் மார்ச் 2ம் தேதி நடந்த எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தார்.

உடனடியாக அவரை அருகில் இருந்த தற்காலிக மருத்துவ மையத்திற்குக் கொண்டு சென்றனர். அவரது அடி வயிற்றில் குண்டுத் துகள்கள் பாய்ந்திருந்தன. நேற்று அவருக்கு பிரசவம் ஏற்பட்டது. பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தத் தமிழ்த் தாய்.

பிறந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவமனை ஊழியர்கள், அக்குழந்தையின் இடது தொடையில், குண்டுத் துகள்கள் பாய்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். தாயிடம் முதல் பாலைக் கூட குடிக்காத நிலையில் அக்குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடையில் பாய்ந்திருந்த துகள்கள் வெளியே எடுக்கப்பட்டன.

அதேபோல, கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த 28 வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

படுகாயமடைந்த நிலையில் இருந்த அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது வயிற்றில் இருந்த கரு, இரு கால்களும் சுருங்கிப் போன நிலையில் பிணமாக எடுக்கப்பட்டது.

அடுத்த நாளே அந்தத் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நெட் இணையதளம் இந்த மனதை உறைய வைக்கும் செய்தியையும், படங்களையும் வெளியிட்டுள்ளது.

அதேபோல வியாழக்கிழமை ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் இறந்து பிறந்தன.

தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால், கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சுகாதாரமான, ஆரோக்கியமான உணவு அவர்களுக்குக் கிடைப்பதவில்லை. இதுவே இந்த அவலத்திற்குக் காரணம்.

கடந்த வாரம் வீசிய திடீர் புயல் மற்றும் கன மழை காரணமாகவும் கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சி குறைபாடு.


இன்றைய நவீன யுகத்தில் ஏராளமான குழந்தைகளை அச்சுறுத்தும் நோய் ஆட்டிசம். இதனை நோய் என்பதை விட குறைபாடு என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஆ‌ட்‌டிச‌ம் எ‌ன்பதை ‌விள‌க்கமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு த‌ன்னை‌ச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. த‌ன்னை‌ச் சு‌ற்‌றி நட‌க்கு‌ம் எதை‌ப் ப‌ற்‌றியு‌ம் கவலை‌ப் படாம‌ல், த‌ங்களு‌க்கெ‌ன்று ஒரு த‌னி உலக‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌ப்பா‌ர்க‌ள்.

என்னென்ன அறிகுறிகள்?

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் செய‌ல்படுவது‌ண்டு. சிலருக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்படும். தா‌யி‌ன் முக‌த்தை அடையாள‌ம் காணுத‌ல், ‌சி‌ரி‌த்த‌ல், மழலை‌யி‌ன் ஒ‌லி எழாம‌ல் இரு‌ப்பது, அரு‌கி‌ல் ‌நி‌ன்று கூ‌ப்‌பி‌ட்டாலு‌ம் எ‌ந்த சலனமு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ப்பது, பொ‌ம்மைகளோடு கூட ‌விளையாட மறு‌த்த‌ல், கைக‌ளி‌ல் ஒரு ‌பிடி‌ப்‌பு‌த் த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது போ‌ன்ற‌ சி‌ன்ன செய‌ல்களை‌க் கூட செ‌ய்யாம‌ல் குழந்தைகள் முட‌ங்‌கிக் கிடக்கும். இ‌த‌ன் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்றா‌ல் இ‌ந்நோ‌ய் கு‌றி‌த்து மரு‌த்துவத் துறையினரால் கூட இதுவரை ச‌ரிவர பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை எ‌ன்பதுதா‌ன்.

ஆண் குழந்தைகள் அதிகம் பாதிப்பு

பெ‌ண்களை ‌விட ஆ‌ண்களையே அ‌திகமாக ஆ‌ட்டிச‌ம் நோ‌ய் தா‌க்கு‌வது தெரியவந்துள்ளது. இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌ட்டு‌ம் சுமா‌ர் 20 ல‌ட்ச‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் ஆ‌ட்டிச‌த்‌தினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனாலு‌ம், ஆட்டிச‌ம் ப‌ற்‌றிய எ‌ந்த ‌விவரமு‌ம் பொதும‌க்களை இ‌ன்றுவரை அ‌திகள‌வி‌ல் செ‌ன்றடைய‌வி‌ல்லை எ‌ன்பது கவலை‌க்கு‌ரிய ‌விஷயமாகு‌ம்.

அமெரிக்கா ஆய்வு

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌ப்‌பி‌ற்கு எ‌ந்த காரணமு‌ம் இதுவரை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. ஆனால் ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு `ஆட்டிசம்’ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டு களுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டு களுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிச ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

குழந்தைகளுக்கு மறுவாழ்வு

ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆ‌ட்டிச‌ம் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், அத‌ற்கான உ‌ரிய ‌சி‌கி‌ச்சை முறைகளை மே‌ற்கொ‌ண்டு, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு மறுவா‌ழ்வு அ‌ளி‌‌ப்ப‌தி‌ல் சமூக‌ம் அ‌க்கறை செலு‌த்த வே‌ண்டு‌ம்.

பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம். இதன் மூலம் அவ‌ர்களையு‌ம் இய‌ல்பான வா‌ழ்‌க்கை வாழ வ‌ழி செ‌ய்யலா‌ம்.

கேபிஎன் பேருந்து லாரி மீது மோதி விபத்து - தீயில் கருகி 22 பேர் பலி






சென்னையிலிருந்து திருப்பூருக்கு சென்ற கேபிஎன் டிராவல்ஸ் பேருந்து லாரி மீது மோதி விபத்தில் எரிந்தது 22 பேர் பலி.

காஞ்சிபுரத்தை அடுத்த ஓச்சேரி அருகே, ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில், தீயில் கருகி, 22 பேர் பலியாகினர்.

சென்னையிலிருந்து திருப்பூருக்கு 07.06.2011 அன்று இரவு கேபிஎன் அல்ட்ரா கோச் பேருந்து சென்று கொண்டிருந்தது. இரவு 11.30 மணியளவில், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கித்தில் இருந்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த காவேரிபாக்கம், அவலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற பஸ் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ், ரோட்டை ஒட்டியுள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் டீஸல் டேங்க் வெடித்ததில் பஸ் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. இரவு நேரம் என்பதால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள், பஸ் முழுவதும் மளமளவென தீ பரவியது. ஆம்னி பஸ் என்பதாலும், இருந்த ஒரு கதவும் தாழிடப்பட்டு, ஜன்னல்களும் டபட்டிருந்ததால், பஸ்சிலிருந்து பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

தீ பரவி புகை மூட்டம் சூழ்ந்ததால், என்ன ஆனது என்றே தெரியாமல், பலரும் மயங்கினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்த, மற்ற வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டன. அதில், இருந்தவர்கள் போலீஸ், மற்றும் அவசர ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், தீயின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பஸ்சுக்குள் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. அதனால், மூன்று குழந்தைகள் உட்பட 22 பேர் உடல் கருகி பலியாகினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்தது பற்றி அறிந்ததும் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வி.எஸ்.விஜய், சின்னையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. பலியானவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று அமைச்சர்களும் பொதுமக்களுடன் இறந்தவர்களின் உடல்களை 108 ஆம்புலன்சில் ஏற்றினர். விடியற்காலை 4 மணி வரை பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பிறகே அமைச்சர்கள் சம்பவ இடத்தை விட்டு கிளம்பினர்.

ஆம்னி பஸ் விபத்து நடந்தது எப்படி ?

தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கேபிஎன் ஆம்னி பேருந்தின் டிரைவர், இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது.

காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான கேபிஎன் பேருந்து சென்னையிலிருந்து எட்டரை மணியளவில் திருப்பூருக்குக் கிளம்பியது.

1.30 மணியளவில் பேருந்து அவலூரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் ஒரு லாரி போய்க் கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் ஆம்னி பேருந்தின் டிரைவர் நாகராஜ் தடுமாறினார். உடனடியாக பேருந்தை இடதுபுறமாக அவர் திருப்பியுள்ளார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கால்வாய் பாலத்தின் சுவரில் மோதி இடித்துத் தள்ளி கீழே விழுந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

லாரி டிரைவர் ஏன் திடீரென பிரேக் போட்டார் என்பது தெரியவில்லை. அதேசமயம், பேருந்து அதிவேகமாக போய்க் கொண்டிருந்ததா என்பதும் தெரியவில்லை.

விபத்தில் உயிர் தப்பிய நாகராஜ் உடனடியாக அடுக்கம்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை உடனடியாக போலீஸார் வேலூர் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நாகராஜ், சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.

வாலாஜா மருத்துவமனையில் உடல்கள்

விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்போது வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போயிருப்பதால் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

உயிர் பிழைத்தவர் கதறல்

இந்தக் கோர விபத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் மட்டும் உயிர் தப்பினார். காயத்துடன் உயிர் தப்பிய அவர் தற்போது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விபத்து குறித்துக் கூறுகையில், பேருந்து அவலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. எப்படி விபத்து நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், பேருந்து கவிழத் தொடங்கியது மட்டும் எனக்குத் தெரியும்.

பேருந்து எதன் மீதோ பலத்த சப்தத்துடன் மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் பின்பக்க அவசர கால கதவு திறந்து கொண்டது. என்ன நடந்தது என்பதை நான் சுதாரிப்பதற்குள் தீ மளமளவென பேருந்துக்குள் பரவி விட்டது. உடனடியாக நான் வெளியே குதித்தேன்.

ஆனால் என்னுடன் பயணித்த எனது மனைவி ஸ்மிதாவை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீது தீ பரவியதால் அவர் உடல் கருகி இறந்து போய் விட்டார் என்றார் கண்ணீர் விட்டபடி.