Tuesday, June 7, 2011

ஏர்செல் சிவசங்கரன் வாக்குமூலம் எப்.ஐ.ஆர். ஆக பதிவாகிறது ; சி.பி.ஐ. திடீர் முடிவு.


பிரபல தொழில் அதிபர் சிவசங்கரன் கடந்த 2006-ம் ஆண்டு தனது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றார். ஸ்பெக்ட்ரம் உரிமம் அவரது நிறுவனத்துக்கு திட்ட மிட்டு கொடுக்கப்படவில்லை என்றும், அதன் பிறகு நிர்ப்பந்தம் காரணமாக ஏர்செல் நிறுவனத்தை விற்க வேண்டிய சூழ்நிலை சிவசங்கரனுக்கு உருவாக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட சிவசங்கரன், எனது நிறுவனத்தை விற்க தயாநிதி மாறன்தான் நிர்ப்பந்தம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆனால் நான் யாரையும் நிர்ப்பந்தம் செய்ய வில்லை என்று தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் சிவசங்கரன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடுகள் குறித்து சிவசங்கரன் விளக்கம் அளித்தார். ஏர்செல் நிறுவனம் கைமாறியதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக சிவசங்கரன் கூறியதாக தெரிகிறது.

சிவசங்கரன் தெரிவித்துள்ள தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக தொகுத்துள்ளனர். அவர் வெளியிட்ட கருத்துக்களும் முதல் கட்ட விசாரணை குறிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஆக மாற்ற சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இது தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தொழில் அதிபர் சிவ சங்கரனை முக்கிய சாட்சியாக சேர்க்கவும் சி.பி.ஐ. தீர்மானித்துள்ளது.

இது ஸ்பெக்ட்ரம் ஊழலை நிரூபிக்க சி.பி.ஐ.க்கு பலம் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் சி.பி.ஐ. யிடம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தை தொடர்ந்து, இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்படி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களை நினைத்து பயப்படாமல் அதிகாரிகள் தைரியமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரம் முழுமையான அறிக்கை தர வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாரதீய ஜனதா போராட்டத்தில் சுஷ்மாசுவராஜ் நடனம்.


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் போராட்டம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப் பட்டது. உண்ணாவிரத பந்தலில் நள்ளிரவில் புகுந்த போலீசார் தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்ததுடன் பாபா ராம்தேவை டெல்லியில் இருந்து வெளியேற்றியது.

போலீசாரின் இந்த செயலை கண்டித்து டெல்லி ராஜ்காட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்கள். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ், தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடனம் ஆடினார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர், ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:-

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் சுஷ்மாசுவராஜ் காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் நடனம் ஆடியது கண்டிக்கத்தக்கது. சத்யாகிரக போராட்டத்துக்கு அவர் அளித்துள்ள முக்கியத்துவம் இதுதானா? இப்படித்தான் சத்தியாகிரகத்தை வெளிப் படுத்துவதா? அதில் என்ன சந்தோஷப்பட இருக்கிறது.

அப்படி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இருந்தால் அன்னாஹசாரே அல்லது பாபாராம்தேவ் ஆகியோர் முன்னிலையில் நடனம் ஆடட்டும். காந்தி சமாதியின் புனிதத்தை கெடுக்க வேண்டாம் என்றார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மேலூர் கோர்ட்டில் சரண்.


மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்டம் மேலூர் கோர்ட்டில் இன்று சரணடைந்தார். பின்னர் அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது மேலூர் அருகே கோவிலில் ஏற்பட்ட தகராறில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உட்பட 6 பேர் மீது, மேலூர் தாசில்தார் காளிமுத்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திடீரென காளிமுத்து தான் அளித்த வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை கோர்ட் ஏற்கவில்லை. வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த அடிப்படையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 6 பேரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.

முன்ஜாமீன் வழங்கப்பட்டதன் பேரில் மதுரை மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி யாத்மின் முன்பு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னள் ஆகிய இருவர் மட்டும் இன்று காலை ஆஜரானார்கள்.

இதையடுத்து இருவரையும் ஜாமீனில் செல்ல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அழகிரி வந்ததால் மேலூர் கோர்ட் வளாகத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர் தொழிற்சாலையில் பிரதமர் பயன்படுத்தும் விமானம் பழுது பார்க்கும் பணி.


ஓசூர் அருகே பேள கொண்டப்பள்ளியில் தனியார் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 2 பேர் முதல் 6 பேர் வரை பயணம் செய்யக் கூடிய குட்டி ரக பயணிகள் விமானம், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆள் இல்லாத குட்டி விமானங்கள் தயாரிக்கப்படுகிறது.

இதைத் தவிர பெரிய மற்றும் சிறிய ரக பயணிகள் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பழுது நீக்கி தரப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்தும் விமானத்தை இங்கு பழுது பார்க்க விமானப்படை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த சில நட்களுக்கு முன்பு வந்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. (பொறுப்பு) சைலேந்திரபாபு கடந்த 30-ந்தேதி ஓசூர் வந்து பிரதமர் விமானம் வர உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் பயன்படுத்தக்கூடிய விமானம் நேற்று ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப் பள்ளியில் உள்ள தனியார் விமான தயாரிப்பு நிறு வனத்திற்கு வந்தது. இங்கு விமானத்தின் பழுதுகள் சரிபார்க்கப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி மேற்பார்வையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரஜினி உடல் நலம் பெற கிணற்று தண்ணீரில் யோகாசனம் செய்த ரசிகர் .

ரஜினி உடல் நலம் தேற கிணற்று தண்ணீரில் யோகாசனம் செய்த ரசிகர்: கோவிலிலும் சிறப்பு பூஜை

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டத்திலும் ரஜினி ரசிகர்கள் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.

உத்தமபாளையம் ஒன்றிய ரசிகர் மன்றம் சார்பில் நேற்று காலையில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்தார்கள். இதில் தேவாரம் பகுதியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி தேவராத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் விஜயன் (வயது48) என்பவர் கிணற்று தண்ணீரில் யோகாசனம் செய்தார். உப்புக் கோட்டையில் உள்ள ஒரு கிணற்று தண்ணீரில் இவர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு யோகாசனம் தொடங்கி பிரார்த்தனை செய்தார். மாலை 6 மணி வரை அவர் யோகசனம் செய்தார்.

ரஜினி ரசிகர் யோகாசனம் செய்வதை அறிந்ததும் அங்கு ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். அவர்கள் யோகாசனம் செய்த ரஜினி ரசிகருக்கு உற்சாகம் அளித்தனர்.

திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கும் எல்.கே.ஜி. மாணவி.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் சொந்தமாக கட்டிட வசதி கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்து பள்ளியில் (ஸ்ரீராமஜெயம் வித்யாலயா) எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைதான் ராகவி.

இவள் அதிசய குழந்தையாக உள்ளாள். திருக்குறள் என்றதும் 100 திருக்குறளை திக்காமல் திணறாமல் கடகடவென சொல்கிறாள். 5 என்றவுடன் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், ஐம்பூதங்கள், ஐவகை நிலங்கள் என 5 செய்திகளை அடுக்கி கொண்டே போகிறாள்.

நாடுகள் என்றவுடனேயே உலகத்தின் அத்தனை நாடுகளுக்கான தலைநகரங் களையும், நாட்டின் தேசிய பறவை, தேசிய மலர், தேசிய பூ, தேசிய மரம், தேசிய விலங்கு என அனைத்தையும் சொல்கிறாள்.

மாநிலங்கள் என சொன்னதும் இந்தியாவின் அத்தனை மாநிலங்களையும் அதன் தலைநகரங்களையும் சொல்கிறாள். மேலும் கனீரென்ற குரலில் பேசி கண்ணகி பாத்திரத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான நடிப்புத்திறமையும் மாணவி ராகவியிடம் உள்ளது.

இக்குழந்தையை பள்ளியின் தாளாளர் ஜெயமணி, பெற்றோர் செந்தில்குமார்-இந்திரா ஆகியோர் மேலும் சாதனை படைக்க ஊக்குவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இனிமேல் எந்தக் காலத்திலும் மேல்-சபை வராது : ஜெயலலிதா பேச்சு.


தமிழக சட்டசபையில் மேல்-சபையை ரத்து செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை ஒன்றைத் தோற்றுவிக்கலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு இச்சட்டப் பேரவையால் திரும்பப் பெறவேண்டும் என்றும், இந்த முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றம் தேவையெனக் கருதும் அளவிற்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களிலும் திருத்தம் கொண்டு வருவதற்கு உரிய அவசியமான விதிக்கூறுகளை உள்ளடக்கிய தேவையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்றும் இப்பேரவை தீர்மானிக்கிறது.

அ.தி.மு.க.வை தோற்றுவித்தவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். அரசால் தமிழக சட்டமன்ற மேலவையை நீக்கும் தீர்மானம் 1986 ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்ற மேலவையை நீக்கும் சட்டம் 30.8.1986 அன்று அங்கீகரிக்கப்பட்டு 1.11.1986 முதல் அமல்படுத்தப்பட்டது.

எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக, 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிப்பதற்கான தீர்மானத்தினை 20.2.1989 அன்று இந்த அவையில் நிறைவேற்றியது.

1991 ஆம் ஆண்டு அ.தி. மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற மேலவையை மீண்டும் தோற்றுவிக்க வேண்டாம் என முடிவெடுத்து, அதற்கான தீர்மானத்தினை 4.10.1991 அன்று இதே சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியது.

1996 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தி.மு.க. அரசு, சட்டமன்ற மேலவையை உருவாக்க வேண்டும் என்ற அளவில் மீண்டும் ஒரு தீர்மானத்தினை 26.7.1996 அன்று நிறைவேற்றியது.

மீண்டும் 2001 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற அ.தி.மு.க. அரசு, சட்டமன்ற மேலவைத் தேவையில்லை என்ற அளவில் ஒரு தீர்மானத்தை 12.9.2001 அன்று இயற்றியது.

இதனையடுத்து, 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மைனாரிட்டி தி.மு.க. அரசு, நான்கு ஆண்டு காலம் கழித்து 12.4.2010 அன்று சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், மத்தியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இதற்கான சட்டத்தினையும் இயற்றியது.

இருப்பினும், சட்டமன்ற மேலவைக்கான தொகுதி வரையறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என்று தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால், சட்டமன்ற மேலவைக்கான தேர்தல்கள் நடைபெறாத சூழ்நிலை தற்போது உள்ளது.

சட்டமன்ற மேலவை தேவை என்று 2010 ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அரசியல் அறிஞர்கள், சான்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள், அலுவலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ... இத்தகைய அமைப்புகளைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகள் இடம்பெற்று அரிய ஆலோசனைகளைக் கூறத்தக்க வகையில் ... சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வருவோம் என்ற அளவில் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், மருத்துவர்கள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள் இருக்கிறார்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக இருந்தவர்களும் இருக்கிறார்கள், கல்வியாளர்கள் இருக்கிறார்கள், சமூக எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சாமானியர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ஆக்குகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அப்படி இருக்கும்போது, சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சமயத்தில் இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. அவருடைய மகன் மு.க. ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. மற்றொரு மகன் மு.க. அழகிரி மற்றும் பேரன் தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டுவிட்டன. மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கும், தன் துதி பாடுகிறவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சட்டமன்ற மேலவையை தி.மு.க. கொண்டு வந்ததே தவிர, பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை, சான்றோர்களின் கருத்துக்களை பெறுவதற்காக அல்ல என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2010 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை அமைப்பது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய செங்கோட்டையன்... இறுதிக் காலத்தில், கடைசி நேரத்தில் ஓராண்டிற்கு முன்னாலே இதைக் கொண்டு வரவேண்டியதன் அவசியம் என்ன? என்று கேட்டதற்கு பதில் அளித்த அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, இது யாருக்குக் கடைசி காலம் என்பது இந்த நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற அளவிலே கூறியிருக்கிறார்.

இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டமன்ற மேலவை தேவையில்லை என்பதை மக்களும் ஆமோதித்து இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

இந்தியாவிலே இருக்கின்ற 28 மாநிலங்களில், கர்நாடகா, மகராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் மட்டும் தான் சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்றப் பேரவை ஆகிய இரு அமைப்புகளும் இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற பெரும்பாலான மாநிலங்களில் சட்டமன்ற மேலவை இல்லை. இதிலிருந்தே மேலவை வேண்டும் என்ற கருத்து எவ்வளவு வலுவிழந்து காணப்படுகிறது என்பதை எளிதில் எவரும் தெரிந்து கொள்ளலாம்.

அந்நியர் நம்மை ஆண்ட போது, 1919-ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தக் குழு கொடுத்த அறிக்கை ஒன்றினால் உருவானவைதான் சட்டமன்ற மேலவைகள். ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட்டிருந்த காலத்தில், ஜனநாயக ரீதியாக அமையும் சட்டமன்றப் பேரவைகளுக்குப் போட்டியான அமைப்புகளாக உருவாக்கப்பட்டது தான் சட்டமன்ற மேலவைகள் என நற்சிந்தனையாளர்கள் பலரும் கருதி வந்தனர்.

முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் அனைவரும் ஜனநாயக அமைப்பில் இரண்டாம் அவை எனக் கருதப்படும் மேலவை தேவையற்றது என்பதையே மிகத் திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முதுபெரும் தலைவர்களில் ஒருவரான மறைந்த கல்யாண சுந்தரம், சிக்கனம் தேவையென்று சொன்னால், மிகச் சரியான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால், தேவையற்ற மேலவையை கலைத்துவிடலாம் என்பது என் அபிப்ராயம் என்று தெரிவித்து இருக்கிறார்.

சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “மேலவை எனப்படும் இந்த இரண்டாம் அவை எப்போதும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று அல்ல; தற்காலிகமான ஏற்பாடுதான். இதனை என்றைக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம், நீக்கி விடலாம், கலைத்து விடலாம் என தெளிவுபட கூறியுள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிறைவேற்றிட சபதமேற்று, அதற்கான பொறுப்பினை ஏற்றுள்ள நாங்கள், அவருடைய கொள்கைகளின்படியும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் மேலான கருத்துக்களின்படியும், அனைத்து முற்போக்கு சிந்தனையுள்ளம் கொண்டவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளின்படியும், தமிழகத்திற்கு மேலவை தேவையில்லை என முடிவெடுத்து இத்தீர்மானத்தை முன் வைத்துள்ளோம்.

எனக்கு முன்னால் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குணசேகரன் திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு வரும்போது இந்த மேலவை வராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். திரும்பத் திரும்ப தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மேலவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறார்கள். இனிமேல் எந்தக் காலத்திலும் மீண்டும் ஆட்சிக்கு வருபவர்கள் மேலவையை கொண்டு வருவதற்கு வழியில்லாமல் செய்திட ஏதாவது ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்று இங்கே கேட்டுக் கொண்டார்.

எனக்குத் தெரிந்தவரை மேலவை வேண்டுமென்று நினைக்கின்ற ஒரே கட்சி தி.மு.க. தான். ஆகவே, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து மேலவையை கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்தமனமாகிய சூரியன் அஸ்தமனமாகியதுதான். இந்தச் சூரியன் திரும்பவும் உதயமாகாது என்பதைத் தெரிவித்து, தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை தேவையென எடுக்கப்பட்ட முடிவினை நீக்கிக் கொள்வது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு இந்த மாமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டு அமைகின்றேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.