Friday, June 3, 2011

கலைஞர் வீட்டு வசதித் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் ரத்து.


கலைஞர் வீட்டு வசதித் திட்டம் ரத்து.

கிராமப்புற ஏழைகளுக்கான கலைஞர் வீட்டு வசதித் திட்டம் ரத்து செய்யப் படுகிறது. புதிதாக சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த புதிய திட்டத்தின் கீழ் 1.8 லட்சம் செலவில் அரசே வீடு கட்டி பயனாளிகளுக்கு தரும். நகர்ப்புற ஏழைகளுக்கு மத்திய அரசு நிதியை ஒருங்கிணைத்து வீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

பாலிதின் பைகளுக்கு தடை.

சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்த அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும். கிராம புறங்களையும், நகர்ப்புறங்களையும் தூய்மைப்படுத்த ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்கிப் போகாதா பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறப்பு தகவல் கல்வி திட்டம் தொடங்கப்படும்.

முதன் முறையாகவோ அல்லது மறுசுழற்சி மூலமோ தயாரிக்கப்படும் 60 மைக்ரான் மற்றும் 8க்கு 12 அளவுக்கு குறைவான பாலிதின் பைகளுக்கு தடை விதிக்கப்படும்.

இந்திய தர நிர்ணயக் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மறு சுழற்சி முறை கடுமையாக ஒழுங்கு முறைப்படுத்தப்படும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுள்ளது.

புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தம்.

புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் படுகின்றன. இதுவரை நடந்த கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.

மெட்ரோ ரயில் திட்டம் ரத்து.

தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால், மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப் படும்.

மோனோ ரயில் திட்டம்.

சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக இது 300 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்கப்படும்.

மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப் படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும்.

செப்டம்பர் 15 முதல் இலவச மிக்சி கிரைண்டர்

எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

சமச்சீர் கல்வித் திட்டம் செம்மையாக்கப்படும். சமச்சீர் கல்வி பாடத் திட்டத்துக்கான பரிந்துரையை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 1000லிருந்து ரூ. 2000 வழங்க உத்தரவு.

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 6ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு ஏற்படும் வகையில் அதிமுக அரசு செயல்படும்.

மரபு சாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய தனிக் கொள்கை வகுக்கப்படும்.

500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு தார்ச்சாலகள் அமைக்கபபடும்.

பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமையாக்கப்படும்.

சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம்:

தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப் படும்.

நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு பெற நடவடிக்கை:

இலங்கையில் போரினால் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். எஞ்சியுள்ள தமிழர்களும் உரிய கெளரவத்துடன் அவரவர் பகுதிகளிலேயே வாழ, உரிய மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது இந்த அரசு.

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் படும். அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில தேவையான வசதிகள் செய்து தரப்படும். அவர்கள் வேலைவாய்ப்பு பெற சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக அரசின் அனைத்து நலத் திட்டங்களும், இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா? - பெல்ஜியத்தில் வைகோ பேச்சு !.


சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? செர்பியாவில் 8000 பேரை படுகொலை செய்தான் என்று போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே?. அதே வரிசையில் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை கூண்டில் ஏற்றக் கூடாதா என்று பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய கருத்தரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை குறித்த கருத்தரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக் குழு கூடும் அரங்கில் நேற்று நடந்தது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த இந்தக் கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் மர்பி தொடக்க உரை ஆற்றினார்.

இடதுசாரி பசுமை இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான டாஞ்சா நீமர் தலைமை தாங்கினார்.

இந்த அமர்வில் ஒவ்வொருவரும் பேச தலா 5 நிமிடங்கள், அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வைகோவுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்குத் தன் உரையைத் தொடங்கிய வைகோ 18 நிமிடங்கள் உணர்ச்சி ததும்ப உரையாற்றினார்.

வைகோ உரை விவரம்:

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் இருந்து நான் வந்திருக்கின்றேன்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும், ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

எங்கள் ஈழத் தமிழ் மக்களின் விம்மலும், அழுகைக்குரலும், மனித குலத்தின் மனசாட்சியை, அனைத்து உலக நாடுகளின் இதயக் கதவுகளை, நிச்சயமாகத் திறக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் பேசுகிறேன். பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்?.

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். அதற்கு, உலகின் ஜனநாயக நாடுகள், பாதை அமைக்கட்டும். பிரஸ்ஸல்சில் நடக்கும் இந்தக் கூட்டம் அதற்கு வழி காட்டட்டும்.

ஈழத் தமிழரின் கண்ணீரை, அனைத்து உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் மரண ஓலம் உலக நாடுகளின் செவிகளில் ஏறவில்லை. ஐ.நா. மன்றம் தன் கடமையை ஆற்றவில்லை. இருப்பினும், ஈழத் தமிழர்களுடைய கொடுந்துயரத்தை உணர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றம், 2009 மார்ச் 12ம் நாள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, தரணி வாழ் தமிழர்களின் சார்பில், என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.நாவின் மூவர் குழு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், சில பக்கங்களை வாசிக்கவே மனம் நடுங்கியது. இதோ, இதயத்தை ரணமாக்கும் அந்தப் பகுதிகளை இங்கே நான் வாசிக்கின்றேன்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டது. படுகாயமுற்றவர்களுக்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலையில், அதற்கான மயக்க மருந்துகள் இல்லை. கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் பட்டாக் கத்திகளைக் கொண்டு, உறுப்புகளை வெட்டினார்கள். குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுச் செத்துக் கிடந்தபோது, அவர்கள் கைகளில் பால் பவுடர் அட்டைகள் இருந்தன.

தமிழர்களின் பிணங்கள் ஆங்காங்கு சாலை ஓரங்களில் சிதறிக் கிடந்தன. பக்கத்திலேயே படுகாயமுற்றவர்கள் மரண வேதனையில் துடிதுடித்தபோது, எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர் பிணங்களின், அழுகிப் போன உடல்களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிறைத்தது. தமிழ்ப்பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர். கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனையும், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவனையும், ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று அறிவித்து விட்ட நிலையில், அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று சிங்கள அரசு அறிவித்து விட்டு, ஐ.நா. அதிகாரிகளுக்கும், நார்வே, பிரிட்டன், அமெரிக்க அரசுகளுக்கும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடி பிடித்து வந்தபோது, சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை அல்லவா?.

அனைத்து உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா?. ஐ.நா. மன்றம் தன் கடமையைச் செய்யவில்லை என்று மூவர் குழு சொல்லிவிட்டது.

ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனையின் அடிப்படை என்ன, வரலாறு என்ன என்பதை, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், பின்னர் 1796ல் பிரிட்டன் படைகள் வந்தன. நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர்.

1948 பிப்ரவரி 4ல் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத் தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். பத்து இலட்சம் இந்தியத் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது.

1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. புத்த மதமே அரச மதம் ஆயிற்று. தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழியில், அறவழியில், காந்திய வழியில் உரிமைக்குப் போராடினர். காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு, சிங்கள அரசு அடக்குமுறையை ஏவியது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

1957ல் பண்டாரநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், 1965ல் சேனநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், சிங்கள அரசால் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர் குடியேற்றத்தைத் தமிழர் தாயகத்தில் அரசே நடத்தியது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தமிழர்கள் மீது ஈவு இரக்கம் அற்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆயின. தமிழர் அமைப்புகள் அனைத்தும் கூடி, தந்தை செல்வா தலைமையில், 1976 மே 14ம் நாள் வட்டுக்கோட்டையில் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்பது என்று பிரகடனம் செய்தன.

1977 பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து வாக்கு அளித்ததால், அதுவே ஒரு பொது வாக்கெடுப்பு ஆயிற்று. ஆனால், இதன்பிறகு, சிங்கள அரசு, தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது. 1983ல் வெலிக்கடைச் சிறையில், தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழர்கள் தாயகம் என்பதையும், சுய நிர்ணய உரிமையையும், சிங்கள அரசு ஏற்காது என்று திம்பு பேச்சுவார்த்தையில் கூறியது.

இந்தப் பின்னணியில், உலகின் பல தேசிய இனங்கள் கடைப்பிடித்த போர்முறையான ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிருபித்த நிலையில், விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 டிசம்பர் 24ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால், வேறு வழி இன்றி, சிங்கள அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னாளில் 2008 ஜனவரியில், போர்நிறுத்தத்தைச் சிங்கள அரசு முறித்தது. சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில், முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்திலும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயிலும் நடந்தன.

இந்த முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஆழிப்பேரலை நிவாரண முகாமில், 2006 ஆகஸ்ட் 8ம் நாள், 17 தமிழ் இளைஞர்கள் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆறு நாள்கள் கழித்து, செஞ்சோலையில், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில், சிங்கள விமானக் குண்டுவீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பட்டப்பகலில் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. எங்கும் தமிழர் பிணங்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009ல் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.

இலங்கை அரசைப் பாராட்டி, போர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்ததாக வாழ்த்தி, இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக்கோரி சிங்கள அரசு தயார் செய்த தீர்மானத்தை, கியூபா, பொலிவியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன.

மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27ல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றின. 12 நாடுகள் அந்த அக்கிரமமான தீர்மானத்தை எதிர்த்தன. அவ்வாறு, இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என தற்போது ஐ.நா. மூவர் குழு பரிந்துரைத்து விட்டது.

2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.

இந்த அரங்கில் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? இதோ, கடந்த வாரத்தில், செர்பிய முஸ்லிம்கள் 8000 பேரை, 95 இல் படுகொலை செய்தான் என்று, போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன், ராஜபக்சேயைக் கூண்டில் ஏற்றக் கூடாது?.

அவன் சகோதரர்களையும், கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு, ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இங்கே, பால் மர்பி அவர்கள் பேசும்போது, வட அயர்லாந்தில் குண்டுகளை வீசினார்கள், ஆயுதங்களால் தாக்கினார்கள், ஆயினும் வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

அயர்லாந்து விடுதலைப் போராட்ட வரலாற்றை என் கல்லூரி நாள்களில் படித்து உணர்வு பெற்றவன் நான். வட அயர்லாந்திலே நடைபெற்ற ஐரிஷ் விடுதலை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடிப்படையில் வேற்றுமைகள் உண்டு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அங்கே இங்கிலாந்து அரசு, இனக்கொலை செய்யவில்லை. ஆனால், சிங்கள அரசு தமிழ் இனக்கொலை நடத்தியது.

பிரபாகரன் அவர்கள் முப்படைகளை உருவாக்கினார். ஏழு வல்லரசுகளை எதிர்த்து, யுத்தக் களத்தில் நின்றார். ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரவலாற்றுக் கட்டாயமாயிற்று.

இந்த அரங்கத்தில் உள்ள என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். ஒரேயொரு கேள்வி. யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப் புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக, கொடியவன் ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னதில்லையே?. அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிருபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன்.

நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா?. இசைப்பிரியா எனும் தமிழ்த் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள ராணுவத்தினர் கொன்றார்களோ? அத்தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே? என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண்மையானது என்றும், இது கொடூரமான போர்க் குற்றங்கள் என்றும், ஐ.நா. மன்றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய்யும் ஐ.நாவின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் என்பவர், நேற்றைய தினம் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.

கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?.

ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரஸ்ஸல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை. சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவமும் காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிங்கள ராணுவத்தாலும், போலீசாலும் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

நான் ஒரு அப்பாவி - தயாநிதி மாறன்.


தொலைபேசி இணைப்புகளை நான் தவறாகப் பயன்படுத்தவில்லை. நான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை. என்னையும், எனது குடும்பத்தையும் களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் பிஎஸ்என்எல் இணைப்புகளை சன் டிவிக்காக துஷ்பிரயோகமாக பயன்படுத்தியது ஆகிய சிக்கல்களில் மாட்டியுள்ளார் தயாநிதி மாறன்.

அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், தயாநிதி மாறன் தானாகவே விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை கோரி வருகின்றன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தயாநிதி மாறனை செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது அவர் கூறுகையில்,

தீண்டத்தகாதவனாக இருந்தேன்

என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும். அந்த சமயத்தில் நான் அரசியலில் தீண்டத்தகாதவனாக இருந்தேன். நான் அமைச்சர் பதவியில் இல்லாத அந்த சமயத்தில், யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.

யாருக்கும் உதவியதில்லை

யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. அரசியல் வட்டாரத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டு இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்து இருப்பதாக கருதினால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.

குடும்ப நேர்மையை சந்தேகிப்பதா?

எனது குடும்ப தொழில் சம்பந்தமாக எனது சென்னை இல்லத்துக்கு 300-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது ஆகும். இது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் மூலம் எனது நேர்மையை மட்டுமின்றி எனது குடும்பம் மற்றும் எனது கட்சியின் நேர்மையையும் பற்றி சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் இருந்தது. எனக்குள்ள குறிப்பிட்ட தொகையை காட்டிலும் குறைவான தொகைக்கு தான் நான் பேசினேன். இதை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து எனக்கு வந்துள்ள கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனது போட் கிளப் இல்லத்தில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். மந்திரி என்ற முறையில் எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் (எண் 24375100) வழங்கப்பட்டு இருந்தது.

நான் ஒரு அப்பாவி

நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். நான் ஒரு அப்பாவி. என்னையும் எனது நேர்மையையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு வழங்கப்பட வேண்டும் என்றார் தயாநிதி மாறன்.

புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தம் - விசாரணை நடத்தப்படும் : ஆளுநர்


புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன. கட்டுமானப் பணிகள் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை தொடங்கினார்.

உரையில்இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

3வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள ஜெயலலிதாவுக்கும், பெரும் வெற்றியுடன் ஆட்சி அமைத்துள்ள அதிமுகவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் படுகின்றன. இதுவரை நடந்த கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.

சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.

தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக இது 300 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.

மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும்.

செப்டம்பர் 15 முதல் இலவச மிக்சி கிரைண்டர்

எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

சமச்சீர் கல்வித் திட்டம் செம்மையாக்கப்படும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக் கான பரிந்துரையை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.

எந்த தண்டனையையும் எதிர்கொள்ளத்தயார் : தயாநிதிமாறன் ஆவேசம்.


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தயாநிதிமாறன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். சிரித்துக்கொண்டே வந்த அவரிடம் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

உடனே ஆவேசமான அவர், ’’என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனக்கு எதிராக அரசியல் சதிச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

எனது கட்சி, குடும்ப நேர்மையை சந்தேகிக்கும் வகையில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. புகார் கூறப்பட்டுள்ள காலத்தில் நான் தீவிர அரசியலில் இல்லை.

எனது இல்லத்தில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டுமே இருந்தது’’ என்று சொல்லிவிட்டு , பி.எஸ்.என்.எல். பொது மேலாளரின் கடிதத்தை எடுத்துக்காட்டி தயாநிதிமாறன் விளக்கினார்.

பின்னர், ‘’நாளிதழ் வெளியிட்ட செய்தி அவதூறானது. பதவி காலத்தில் எந்த நிறுவனத்திற்கும் சலுகை காட்டியதில்லை. என் நேர்மையை நிரூபிக்க வாய்ப்பு தரவேண்டும். தவறு செய்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் எதிர்கொள்ளத்தயார்’’ என்று கூறிவிட்டு அவசர அவசரமாக கிளம்பினார்.



நாளிதழ் வெளியிட்ட கட்டுரை இது :

நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார்.

இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது.

இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.

பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.

அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.

இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை.

இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன் பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.

10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் : தயாநிதிமாறன் நோட்டீஸ்.


தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில்,

’’ தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி?’ என்ற தலைப்பில் ஜூன் 2ம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளீர்கள்.

இதற்கு என் கட்சிக்காரர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது. எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள எஸ்.குருமூர்த்தி, எனது கட்சிக்காரருக்கு விரோதமாக உள்நோக்கத்துடன் செயல்படும் நபர்களில் முக்கியமானவர் ஆவார்.

இந்தக் கட்டுரையில் எனது கட்சிக்காரர் அவரது வீட்டில் 323 இணைப்புகள் கொண்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பகத்தை ஏற்படுத்தி அவரது இல்லத்திலிருந்து ரகசிய கேபிள் வழியாக சன் நெட்வொர்க் அலுவலகத்துக்கு இணைப்பு கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இணைப்பகத்தை சன் டிவி தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பகம் தினகரன் நாளிதழ் அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை, உள்நோக்கம் கொண்டவை. எனது கட்சிகாரரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கற்பனையாக புனையப்பட்டவை.

இதேபோன்ற கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு தினமணி பத்திரிகையில் வெளியானது. அப்போது எனது கட்சிக்காரர் (தயாநிதி மாறன்) கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தபோது போட்கிளப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரேயொரு இணைப்புதான் கொடுக்கப்பட்டது என பிஎஸ்என்எல் விளக்கம் அளித்தது.

இணைப்பு கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 2009 மார்ச் வரை 4 லட்சத்து 50 ஆயிரம் அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள அமைச்சருக்கு தகுதி இருந்தும், எனது கட்சிக்காரர் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 698 அழைப்புகளைத்தான் பயன்படுத்தினார் என பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த இணைப்புக்கான பில்லிங் தகவல்கள் மாதந்தோறும் நாடாளுமன்ற தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொது மேலாளர் வி.மீனலோசினி கடந்த 6-5-2009 அன்று எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை மேற்படி கடிதம் தெளிவாக நிரூபிக்கிறது.

இந்த தொலைபேசி இணைப்பு குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக கடந்த 25-4-2009 அன்று தினமணி பத்திரிகைக்கு எனது கட்சிக்காரர் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோன்ற குற்றச்சாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த 2009ம் ஆண்டு அமைந்தகரை பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவதூறான செய்தி வெளியிட்டதற்காக தொடரப்பட்ட வழக்கிலும், அதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கிலும் தீர்ப்பு வரும் வரை காத்திராமல் மீண்டும் அதே பொய்யான தகவல்களை கட்டுரையாக வெளியிடுவது நீதித்துறையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதுடன் மலிவான விளம்பரத்துக்காகவும் எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும்தான் என்று தெரிகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை எனது கட்சிக்காரர் திட்டவட்டமாக மறுக்கிறார். எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தவறான தகவல்களை கட்டுரையில் வெளியிட்டிருக்கிறீர்கள். தவறான கட்டுரை வெளியிட்டதற்கு ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவரும் சமமான பொறுப்பாவீர்கள்.

இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கட்டுரைக்கு அளித்த அதே முக்கியத்துவத்துடன் அந்த மன்னிப்பை உங்கள் பத்திரிகையில் பிரதானமாக வெளியிட வேண்டும். மேலும் நஷ்டஈடாக ரூ. 10 கோடி தரவேண்டும். தவறினால் உங்கள் அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றுகூறப்பட்டுள்ளது.

2ஜி : டாடா , அம்பானி, தயாளு அம்மாளுக்கு எதிரான மனு தள்ளுபடி : டெல்லி நீதிமன்றம்.


2ஜி வழக்கில் அனில் அம்பானி, தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் பெயரை 2ஜி வழக்கில் சேர்க்கக் கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பத்திகையாளர் எம். ஃபர்குவான், காசியாபாத்தைச் சேர்ந்த தர்மேந்தர் பாண்டே ஆகியோர் இதுதொடர்பாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இன்று இந்த மனு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில்,2ஜி வழக்கில் அனில் அம்பானி, தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அரசியல் தரகர் நீரா ராடியா, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் பெயரை 2ஜி வழக்கில் சேர்க்கக் கோரி தொடரப்பட்ட மனுவை நீதிபதி நிராகரிப்பதாக அறிவித்தார்.

மேலும், மனுதாரர்கள் இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார். இத்தகைய மூன்றாம் நபர்களின் மனுக்களால் நீதிமன்றத்தின் மதிப்புமிக்க காலநேரம் வீணாவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மூன்று நாட்களுக்குள் இத் தொகையே செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிடில் வாரன்ட் பிரபிக்கபடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார் .