Thursday, June 2, 2011

ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல.. அவர் ஒரு தொழிலதிபர் - திக்விஜய் தாக்கு.


கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி வரும் யோகா குரு ராம்தேவுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அவரை அழைத்து வருவதற்காக 4 அமைச்சர்கள், அதிகாரிகளை விமான நிலையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது ரொம்ப ஓவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

யோகா குரு ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது.

இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.

கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.

அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப்முகர்ஜி, கபில்சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப் படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.

உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்:

இந் நிலையில் பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்தும், கறுப்புப் பண விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அவசர கேபினட் கூட்டம் நடந்தது.

இதில் பிரணாபமுகர்ஜி, கபில்சிபல், ப.சிதம்பரம், தயாநிதிமாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தயாநிதி வீடு - சன் டிவி - ரகசிய எக்ஸ்சேஞ்ச் ரூ.400 கோடி இழப்பு : சிபிஐ புகார்.


ஏர்செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்பு களைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்து உள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.

இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப் படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.

இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.

இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.

ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.

இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.

அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.

என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.

தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.

டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.

இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.

வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.

சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

Wednesday, June 1, 2011

தப்பிப்பாரா தயாநிதி ?



அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, 2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.

இந்த நடைமுறை, ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷனின் அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதால், தயாநிதி கையில் இத்துறை இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி சுழன்றடிக்கிறது .

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையிலான நடைமுறைகளை விசாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளியிட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2004 மார்ச் 5-ம் தேதி , 8 ஏரியாக்களுக்கு யுஏஎஸ்எல் எனப்படும் உரிமம் கோரி சிவா குரூப் நிறுவனத்தின் சிவசங்கரனின் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) விண்ணப்பித்தது. அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார். விண்ணப்பிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஏழு ஏரியாக்களுக்கான உரிமங்களுக்கு கையெழுத்தானது. மத்தியபிரதேசம் மாநிலத்திற்குக் கோரப்பட்டிருந்த உரிமம் மட்டும் கையெழுத்தாகவில்லை.

2004 ஏப்ரல் 21-ந் தேதியன்று உ.பி. (கிழக்கு), உ.பி. (மேற்கு) பகுதிகளில் உரிமம் கோரி டிஷ்நெட் விண்ணப்பித்தது. இந்நிலையில், டிஷ்நெட் நிறுவனத்தின் மதிப்பு, அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து 2004 மே 5-ந் தேதியன்று கேள்வி எழுப்பிய தொலைத் தொடர்புத்துறை, மத்தியபிரதேசத்திற்கான உரிமத்தையும், மற்ற பகுதிகளுக்காக போடப்பட்ட விண்ணப்பத்தையும் நிறுத்தி வைத்தது.

தே.ஜ.கூ. ஆட்சிக்குப்பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 2004 மே 26-ந் தேதியன்று தயாநிதி மாறன் பொறுப் பேற்றார். ஜூன் மாதத்தில், தொலைத் தொடர்புத்துறை கேள்விகளுக்கு விரிவான பதிலைத் தாக்கல் செய்தது டிஷ்நெட் நிறுவனம். இதனைப் பரிசீலித்த தொலைத் தொடர்புத்துறை செயலாளர், உ.பி. மேற்கு- கிழக்கு பகுதிகளுக்கான விண்ணப்பம் குறித்தும் ம.பி. மாநிலத்திற்கான லைசென்ஸ் வழங்குவதற்கான அவகாசம் குறித்தும் ஒப்புதல் தெரிவிக்கும் திட்டத்தை முன் வைத்தார். இந்த திட்டம், அமைச்சர் தயாநிதி மாறன் முன்வைக்கப்பட்டது.

அவருடைய செயலாளர், 2004 மார்ச் 24 அன்று டிஷ்நெட் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் ஈக்விட்டி குறித்து விளக்கம் கேட்டு நோட் போட்டார். அதற்கும் டிஷ்நெட் விரிவான விளக்கம் கொடுத்தது. இந்நிலையில், 2005 மார்ச் 1ஆம் நாள் ஹரியானா, கேரளா, கொல்கத்தா, பஞ்சாப் மாநிலங்களில் உரிமம் கேட்டு டிஷ்நெட் விண்ணப்பித்தது.

அதே மாதம் 30ஆம் நாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் ஒரு நோட் போட்டார். அதில், தொலைத்தொடர்பு அமைச்சருடன் (தயாநிதி) ஆலோசித்ததில், துறை சார்பிலான நோட்டீஸ்கள், அறி வுறுத்தல் கடிதங்களுக்கு உரிய பதிலளிக்கக் கோரி விண்ணப்பதாரரின் ஃபைல்கள் அனைத்தும் திருப்பி அளிக்கப் படுகின்றன என்று தெரிவித்திருந்தார். இதன்பின், எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் டிஷ்நெட் நிறுவனத்தின் ஃபைல்கள்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் அவை தொலைத் தொடர்புத்துறையின் பல பகுதிகளிலும் சுற்றியது.

அதே நேரத்தில், தொலைத்தொடர்புத்துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 2005ஆம் ஆண்டில் மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட மேக்ஸிஸ் குரூப் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதற்காக சிவா குரூப் சிவசங்கரனை அணுகியது. அதே ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, உரிமங்கள் வழங்குவதற்கான புதிய வழி காட்டுதல்களை தொலைத் தொடர்புத் துறை அறிவித்தது. இதன்மூலம் ஏற்கனவே இருந்த பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன.

2005ஆம் ஆண்டு 30ஆம் நாள் ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் ஏற்பதாக கையெழுத்தானது. இதையடுத்து, ஏற்கனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் தொலைத்தொடர்புத் துறையில் அவசரமாக பரிசீலிக்கப்பட்டன. அதன்பின் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, குஜராத், என எல்லா மாநிலங்களுக்கும் உரிமம் கோரியது ஏர்செல். 2ஆண்டகளாக நிலுவையில் இருந்த பீகார், ஹிமாச்சல்பிரதேசம் மாநிலங்களுக்கான உரிமங்கள் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று மத்தியபிரதேசம் உள்பட 14 சர்க்கிள் களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பான கடிதம் அளிக்கப்பட்டு, 15 நாட்களில் அதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1,399,47 கோடி ரூபாயை செலுத்தி உரிமங்களைப் பெற்ற ஏர்செல் நிறுவனம், இந்தியாவின் முன்ன்னி செல்போன் நிறுவனமாக மாறியது.

இந்த உரிமங்கள் வழங்கப்பட்ட நான்கே மாதங்களில், அதாவது 2007 பிப்ரவரி மாதத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் நிறுவனத்தின், துணை நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஏசியா என்டர்டெய்ன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம், கலாநிதிமாறனின் சன் குரூப் நிறுவனத்தின் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் - சன் டி.டி.ஹெச்சில் சுமார் 600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. சன் எஃப்எம் ரேடியோ நெட்வொர்க்கில் சுமார் 100 கோடி ரூபாயை மேக்ஸிஸ் குரூப் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாயை சன் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது இயல்பாக நடந்தவையா என தெஹல்கா பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றையின் மதிப்பு சுமார் 22,000 கோடி ரூபாய். ஆனால் அந்நிறுவனம் 1,399 கோடி ரூபாய் மட்டுமே செலுத்திப் பெறுகிறது. இதில் சுமார் 20,600 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்பது ராசா மீதுள்ள குற்றச்சாட்டு அதேபோலத்தான், ஏர்செல் நிறுவனத்திற்கும் தயாநிதிமாறனால் குறைந்த கட்டணத்தில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன.

ஒதுக்கீட்டின் பிரதிபலன் என்ற கோணத்தில் பார்த்தால் ராசா மீதான வழக்கில் உள்ளவை அனைத்தும் தயாநிதிமாறனுக்கும் பொருந்துகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

2ஜி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தனது 3வது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் சோனியாவை தயாநிதிமாறன் சந்தித்தது டெல்லி முதல் சென்னை வரை பரபரப்பை ஏற்படுத்தினாலும், தயாநிதி மேற்கொண்ட சரணாகதி படலம்தான் சோனியாவுடனான சந்திப்பு என்கிறது டெல்லி வட்டாரம்.

நன்றி - நக்கீரன்.

கேரள கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மீது ஷூ வீச்சு.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் எடக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பென்னி, 37. இவர், நிலம்பூரில், பூட்டிக்கிடந்த மரத் தொழிற்சாலையில் இருந்து, பல பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீதான வழக்கு விசாரணை, நிலம்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தினேஷ் முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று, கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க, சிறையில் இருந்து பென்னியை போலீசார் அழைத்து வந்தனர்.

கோர்ட்டில், சாட்சி கூண்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார்.அவரது வழக்கு, பல மாதங்களாக விசாரணை முடியாமல் இருந்து வந்ததால், ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

அன்றைய தினமும் அவருடைய வழக்கை முதலில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, வேறொரு வழக்கு விசாரணை முதலில் துவங்கியது.

ஏற்கனவே மெதுவாக நடந்து வரும் விசாரணையால், ஆத்திரத்தில் இருந்த பென்னி, தான் அணிந்திருந்த, "ஷூ'வை கழட்டி, மாஜிஸ்திரேட்டை நோக்கி எறிந்தார். ஆனால், இலக்கு தவறி, வேறொரு வழக்கு குறித்தான விசாரணை நடத்திக் கொண்டிருந்த வக்கீல் முனீர் என்பவரது பின்னந்தலையில் பட்டது.

இதை பார்த்து, கோர்ட்டில் இருந்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரும், செய்வதறியாது திகைத்தனர். பென்னி ஓடி விடாதபடி போலீசார் அவரை சூழ்ந்து கொண்டனர். இச்சம்பவம், அங்கு சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தயாநிதி-ஏர்செல் விவகாரம்: சிபிஐ விசாரணை ஆரம்பம்?


ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டது குறித்தும், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய மலேசிய நிறுவனம் சன் டிவி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்தும் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக இது குறித்து தெகல்கா இதழில் வெளியான செய்திகளை மையமாக வைத்து தயாநிதி மாறனுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில்,

2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயரித்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது.

தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து தயாநிதி விளக்க வேண்டும்.

2ஜி ஊழல் விவகாரத்தில் கடந்த காலத்தில் பிரதமர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தது போல் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளக்கூடாது. மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள செய்தி அபாண்டமானது என்று அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்கனவே கூறி்யுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக தெகல்காவுக்கு அவர் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவும் கோரியுள்ளது.

கருத்து கூற காங்கிரஸ் மறுப்பு:

இந் நிலையில் தயாநிதி மாறன் தொடர்பாக எழுப்பபடும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க மிகவும் பொருத்தமானவர் தயாநிதி மாறன்தான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. பாஜக ஆட்சி உள்ளிட்ட கடந்த காலங்களில் தொலைத்தொடர்புக் கொள்கை பின்பற்றப்பட்ட விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் அந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது.

எனவே தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அவை குறித்தும் அக் குழு விசாரிக்கும். பாஜக ஆட்சியிலிருந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கூட்டுக் குழுவுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது என்றார்.

இந் நிலையில் இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு தயாநிதி மாறனை அழைத்து விசாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சிபிஐயும் விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதி்ர்க் கட்சிகள் போர்க் கொடி உயர்த்தலாம் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே தயாநிதி-ஏர்செல் விவகாரம் குறித்து சிபிஐ அமைதியாக தனது விசாரணையை ஆரம்பித்துவிட்டதாகவும், தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

வாஜ்பாய்க்கும் ஜேபிசி சம்மன்?:

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாஜகவையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்கவும் காங்கிரஸ் எம்பி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வாஜ்பாய் கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பது பாஜக தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் பற்றி சுவையான சில குறிப்புகள்.

விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என வீட்டில் அழைக்கிறார்கள். சினிமாவுக்கு வந்த பின் டைரக்டர் எம்.ஏ.காஜா வைத்த பெயர் விஜயகாந்த். பின், அடுத்த படத்திலேயே டைரக்டர் விஜயன் அதை அமிர்தராஜ் என மாற்றியும் நிலைத்தது விஜயகாந்த்தான் !




வீட்டுப் பூஜை அறையில் மெக்கா மதீனா படங்களும், இயேசு, மேரி, மாதா, படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும்,முருகனும்,பிள்ளையாரும் சிறப்பிடம் பெறுகிறார்கள். இப்பவும் மனசு சரி இல்லை என்றால், கண்ணூர் தர்காவுக்குப் போய் வழிபாடு செய்வார் விஜயகாந்த்!

ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக்கொண்டவுடன், இப்போது கோயிலுக்கு செல்வது இல்லை !



எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் !




தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984 – ல் ‘மதுரை சூரன்’ முதல் ‘ஜனவரி 1’ படம் வரை 18 படங்களும் 1985 –ம் ஆண்டில் மட்டும் ‘அலை ஒசை’யில் ஆரம்பித்து ‘நானே ராஜா நானே மந்திரி’ வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது !

அதே போல் எந்த நடிகரின் 100 வது படமும் அவ்வளவு பிரமாதமாக ஹிட் ஆனது கிடையாது
, அதறகு விதிவிலக்கு கேப்டன் பிரபாகரன்

பள்ளியில் படிக்கும்போது ஃபுட் பால் பிரமாதமாக விளையாடுவார். இப்போதும் ஃபுட்பால் வெறியர். இங்கிலாந்து வரை போய் நேரில் ஃபுட்பால் போட்டிகளைப் பார்த்து ரசிப்பார். அவரது மகன்களுக்கும் இப்போது ஃபுட்பால் பிரியம் வந்து விட்டது.

விஜயகாந்த் வில்லனாக நடித்த ஒரே படம்... ‘இனிக்கும் இளமை’ அதற்குப் பிறகு எல்லாமே ஹீரோ வேடம்தான் !

இதுவரை விஜயகாந்த் 152 படங்களில் நடித்திருக்கிறார். 153 – வது படம் அவரது டைரக்ஷனில் வருகிறது. இவ்வளவு நாள் ஃபில்டில் இருந்ததற்கு ஒரு படம் டைரக்ட் செய்தாக வேண்டும் என்பது அவரது விருப்பம் !

நடிகர் ராஜேஷின் தம்பி திருமணத்தில்தான் எம்.ஜி.ஆரோடு கைகுலுக்கிச் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். அதை ஒருவரும் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற ஆறாத வருத்தம் விஜயகாந்த்துக்கு உண்டு !

‘செந்தூரப் பாண்டி’யில் விஜய்யோடு நடித்து, ‘பெரியண்ணா படத்தில் சூர்யாவோடு நடித்து அவர்களை பி அண்ட் சி-க்கு கொண்டு சேர்த்த பெருமை விஜயகாந்த்க்கு உண்டு. இதை விஜய்யே ஒரு விழா வில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் !

விஜயாகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரன் இன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் சண்முக பாண்டியன் +1 படிக்கிறார். இரண்டு பேருக்கும் சினிமாப் பக்கம் வரும் ஐடியாவே இல்லையாம். யாரிடமும் நாங்கள் விஜயகாந்த்தின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாமல் பழகுவார்கள் !

வீட்டில் செல்லமாக ராக்கி, சீசர், டேனி என்ற மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். விஜயகாந்த்தின் மீது அன்பைப் பொழியும் செல்லங்கள் !

செயின் ஸ்மோக்கராக இருந்த விஜயகாந்த், திருமணத்துக்கு பிறகு அந்தப் பழக்கத்தை அறவே விட்டுவிட்டார். அசைவப் பிரியரான அவர், இப்போது அயிரை மீன் குழம்பைச் சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார்!

இதுவரை இரண்டே படங்களில் சிறு வேடங்களில் விஜயகாந்த்தாகவே வந்திருக்கிறார்.ஒன்று, ராமநாராயணன் அன்புக்காக ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, அடுத்து டைரக்டர் பாலா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘மாயாவி’ !

கமல், ரஜினி போன்றவர்கள் விஜயகாந்த்தை ‘விஜி’ எனவும், நெருங்கிய நண்பர்கள் ‘பாஸ் எனவும்,கட்சி வட்டாரத்தில் ‘கேப்டன்’ எனவும் அழைக்கிறார்கள்.

திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகிஎம்.ஜி.ஆர் அதோடு, எம்.ஜி.ஆர். - ஜானகிஎம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் தம்பதியினருக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார் திருமதி ஜானகி !

முதலில் வாங்கிய டி.எம்.எம். 2 நம்பர் அம்பாஸடர் காரை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் விஜயாகாந்த். இன்றைக்கும் அதை ஆபீஸுக்கு எடுத்து வருவது உண்டு !

சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை அத்துமீறிவிட்டதால் விஜயகாந்த் எஸ்.எஸ்.எல்.சி – யைத் தாண்டவில்லை. ஆனால், வீட்டு வேலைக்காரர்களின் பிள்ளைகளை இன்ஜினீயரிங் வரைக்கும் படிக்கவைக்க உதவி செய்கிறார் !

ஞாயிற்றுக்கிழமை கேப்டன் வீட்டில் 100பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலுகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். வந்து செல்கிறவர்களை வெறும் வயிறோடு திரும்ப அனுமதிக்க மாட்டார் விஜயகாந்த் !

விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுபிக்க உதவியிருக்கிறார்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் 17 படங்களும், ராமநாராயணன் டைரக்ஷனில் 17 படங்களும் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அவரோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி !

பாரதிராஜா தவிர்த்து பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்ததே இல்லை விஜயகாந்த் !

கறுப்புப் பணம்: ராம்தேவின் உண்ணாவிரத திட்டத்தை கைவிட வைக்க 'தலைகீழாய் நிற்கும்' மன்மோகன் !


வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரியும் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஜூன் 4ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ள யோகா குரு பாபா ராம்தேவை சமாதானப்படுத்த பிரதமர் மன்மோகன் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் லோக்பால் சட்டத்தைத் திருத்தக் கோரியும் சமூக சேவகர் அன்னா ஹசாரே சமீபத்தில் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவருக்கு நாடு முழுவதும் கிடைத்த ஆதரவைக் கண்டு மத்திய அரசு மிரண்டுவிட்டது.

அவரது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வைக்காவிட்டால், தேசிய அளவில் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, ஹசாரே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள் அடங்கிய லோக்பால் வரைவு மசோதா குழுவை நியமித்தது.

இந்நிலையில் நாட்டை சுரண்டும் ஊழல்வாதிகளுக்கு, கறுப்புப் பணம் வைத்திருப் போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டத்தில் குதித்துள்ளார்.

முதலில் அன்னா ஹசாரேவைப் போலவே இவரையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால், தேசிய அளவில் இவருக்குக் கிடைத்துவிட்ட ஆதரவைக் கண்டு அதிர்ந்து போயுள்ள மத்திய அரசு, அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது.

வரும் ஜூன் 4 தேதி முதல் டெல்லி ராம் லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் துவக்கினால், அவருக்கு நாடு முழுவதுமே ஆதரவ அலை உருவாகும், இதனால் தேசிய அளவில் மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சமூக அமைப்புகளும் பாபா ராம்தேவை தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து பிரதமரும் பிரணாப் முகர்ஜியும் ஆலோசனை நடத்தி, கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய வருமானவரித் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவை புதிதாக உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்தேவ் போராட்ட அறிவிப்பையடுத்தே இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ராம்தேவ் திருப்தி அடைய வில்லை. வெறும் குழுக்களை அமைப்பதால் மட்டுமே தனது கோரிக்கைக்கு நியாயம் கிடைக்காது என்றும் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார்.

ஆனாலும் எப்படியாவது அவரது உண்ணாவிரதத்தைக் கைவிட வைக்கும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் பிரதமர். முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவரை பாபாவிடம் நேரில் அனுப்பி வைத்த பிரதமர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினார்.

ஆனால், இப்படியெல்லாம் என்னை ஏமாற்றிவிட முடியாது என்று கூறிவிட்ட ராம்தேவ், திட்டமிட்டபடி தனது உண்ணாவிரதம் தொடங்கும் என்று அறிவித்தார்.
அதே நேரத்தில் லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டியதி்ல்லை என்று கூறி, அன்னா ஹசாரேவின் முக்கிய கோரிக்கையை மட்டும் பாபா நிராகரித்தார். இதனால் இவரை வைத்து லோக்பால் குழுவை பலவீனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று இன்று டெல்லி வந்தார் ராம்தேவ்.

இதையடுத்து அவருக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் ஐஸ் வைக்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியது. டெல்லி வந்த அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர்.

அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கறுப்புப் பண விவகாரத்தில் பிரதமரின் கருத்தை பிரணாப் முகர்ஜி இவரிடம் விளக்கவுள்ளார். இதையடுத்து உண்ணாவிரதத் திட்டத்தை பாபா கைவிடுவாரா அல்லது திட்டமிட்டபடி தொடங்குவாரா என்பது தெரியவரும்.

அன்னா ஹசாரேவின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மத்தியஅரசு, இப்போது ராம்தேவிடம் மாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.