Wednesday, June 1, 2011

1.65 லட்சம் என்ஜினீயரிங் விண்ணப்பம் விற்பனை: 50 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு.


பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 34 ஆயிரம் குறைவாகும்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்டன. கடைசி நாளான நேற்று வரை மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

ஆன்-லைன் மூலம் 5 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 1.70 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 34 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக இந்த ஆண்டு வினியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரத்து 541 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே பி.இ. விண்ணப்ப வினியோகம் தொடங்கியதால் விண்ணப்ப விற்பனை அதிகமாக இருந்தது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் பி.இ. விண்ணப்ப வினியோகம் தொடங்கியதால் விண்ணப்ப விற்பனை குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கல்லூரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை காட்டிலும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.இ. இடங்கள் அதிகரிப்பதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஆண்டு 2.20 லட்சம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு குழு அச்சடித்து இருந்தது. ஆனால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆனதால் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வீணாகியுள்ளன.

இதுவரை 55 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க ஜூன் 3-ந் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு குழுவிற்கு சேர்ந்து விட்டதை www.annauniv.edu/tnea2011என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பி.இ. விண்ணப்ப எண்ணை இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் “டைப்” செய்யும் நிலையில், விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ளமுடியும்.

ஜூன் இறுதியில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்.

கனிமொழி ஜாமீன் மனுமீது 3-ந் தேதி தீர்ப்பு.


2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுக்கு துணை போனதாக கனிமொழி எம்.பி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவர் மீதும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இதையடுத்து கனிமொழி, சரத்குமார் இருவரும் கடந்த மாதம் 20-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள்.

சி.பி.ஐ. கோர்ட்டு அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததால் இருவரும் அன்றே உடனடியாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தங்களை ஜாமீனில் விடக்கோரி கடந்த 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது கனிமொழி தரப்பிலும், சி.பி.ஐ. தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரிகோகே தீர்ப்பை தள்ளி வைத்தார்.டெல்லி ஐகோர்ட்டுக்கு வரும் 4-ந் தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே நாளை மறுநாள் (3-ந்தேதி) கனிமொழி எம்.பி. ஜாமீன்மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று தி.மு.க.வினர் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் சட்ட நிபுணர்கள் கூறுகையில், கனிமொழியை ஜாமீனில் விட்டால் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பாதிக்கப்படுமா என்பதை பொறுத்தே அவருக்கு விடுதலை கிடைக்கும் என்றனர்.

ஸ்வான் டெலிகாம் நிறுவன நிர்வாக இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி குழுமத்தின் அதிகாரிகள் கவுதம் ஜோஷி, அரிநாயர், சுரேந்திரபிபாரா ஆகியோரது ஜாமீன் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: வாஜ்பாய்க்கு “சம்மன்” அனுப்ப பாராளுமன்ற கூட்டுகுழு முடிவு.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, பாராளுமன்ற பொது கணக்கு குழு, பாராளுமன்ற கூட்டுக் குழு ஆகியவை தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. இதில் பாராளுமன்ற கூட்டுக்குழு, காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு விரைவான விசாரணையை நடத்தி வருகிறது. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் சமீபத்தில் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவரிடம், பா.ஜ.க. ஆட்சி நடத்த 1998-ம் ஆண்டு முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எப்படி செய்யப்பட்டது? என்பது பற்றி அறிக்கை தயாரித்து தருமாறு கூட்டுக்குழு தலைவர் சாக்கோ கேட்டுக் கொண்டார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டதாக பா.ஜ.க. தலைவர்கள் ஏற்கனவே பல தடவை கூறி உள்ளனர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஸ்பெக்ட்ரம் முடிவுகளில் தவறு நடப்பதை பா.ஜ.க. ஏற்கனவே சுட்டி காட்டியதையும், பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

என்றாலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ.க.வையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் பாராளுமன்ற கூட்டுக்குழு சேர்த்து இருக்கிறது. அதுமட்டுமின்றி சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிப்பது போல, வாஜ்பாய்க்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்து இருக்கிறது.

1999-ம் ஆண்டு சிறிது நாட்கள் தொலை தொடர்புத் துறையை வாஜ்பாய் தன் வசம் வைத்திருந்ததால், அவருக்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கொள்கைகள் முழுமையாக தெரிந்து இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்ப தீர்மானித்துள்ளதாக சாக்கோ கூறினார்.

வாஜ்பாய்க்கு எப்போது சம்மன் அனுப்புவது என்ற முடிவை வரும் 6-ந் தேதி எடுக்கப் போவதாகவும் சாக்கோ கூறினார். வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்பதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். மிகவும் வயதாகி விட்ட வாஜ்பாய், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவர் எந்தவித குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் நன்கு பழகும் வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப சாக்கோ திட்டமிட்டிருப்பது பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனால் உற்பத்தியால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்.

எம். குப்புசாமி



பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.

2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.

இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?

எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.

எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக் கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.

உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப் படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.

எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.

ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.

இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.

மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடி சாராயத்தைத் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப் பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.

தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.

தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.

இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோ மேயானால் மொலாஸஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

ஏர்செல் விவகாரம் : தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனை பிரதமர் மன்மோகன் சி்ங் பதவி விலகச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, தயாநிதிமாறன் பிரதமரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாநிதிமாறன் தன் மீதுள்ள குற்றச்சாடுகளை எதிர்கொள்ளும் வகையில் அவர் பதவி விலக வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங் அவரிடமிருந்து பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற வேண்டும். என ஜெயலலிதா கூறியுள்ளார்.

2ஜி சிக்கலில் மாட்டுவாரா மன்மோகன்?


ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரமதருக்கும் தனக்கும் நிகழ்ந்த 18 கடித பரிமாற்றங்களை முன் வைத்து வாதாட உள்ளதால், ஸ்பெக்ட்ரம் ஊழலின் விசாரணை வளையத்தில் மன்மோகன்சிங்கும் இழுக்கப்படலாம் என்று தெரிகிறது.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமைச்சரவை யின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டேன் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் ராசா முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் நான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடிதங்களை ஆதாரமாக வைத்து ராசா வாதாடும்போது மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.

ராசாவின் வாதத்தை வைத்து பிரதமர் மன்மோகன்சிங்கையும் சிபிஐ தனது விசாரணைக்குள் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

ராசா அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

29 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்.


தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை இரவு 21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக புதிய ஆட்சியர்களை நியமித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. அனுஜார்ஜ்- அரியலூர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)

2. எம். கருணாகரன்- கோவை மாவட்ட ஆட்சியர் - (ஆவின் நிறுவன இணை மேலாண் இயக்குநர்)

3. வி. அமுதவல்லி- கடலூர் மாவட்ட ஆட்சியர் - (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்)

4. ஆர். லில்லி- தருமபுரி மாவட்ட ஆட்சியர் - (உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை ஆணையாளர்)

5. கே. நாகராஜன்- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் - (வருவாய் நிர்வாக இணை ஆணையாளர்)

6. ஆர். ஆனந்த குமார்- ஈரோடு மாவட்ட ஆட்சியர் - (தருமபுரி மாவட்ட ஆட்சியர்)

7. எஸ்.சிவசண்முக ராஜா- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் - (பொதுத் துறை துணைச் செயலாளர்)

8. ஆஷிஷ் குமார்- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)

9. வி. ஷோபனா- கரூர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாவட்ட ஆட்சியர்)

10. சி.என். மகேஸ்வரன்- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் - (தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்)

11. டி. முனுசாமி- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் - (நில நிர்வாக இணை ஆணையாளர்)

12. ஜெ. குமரகுருபரன்- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் - (வணிக வரி கள் துறை இணை ஆணையாளர்)

13. தாரேஷ் அகமது- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)

14. பி. மகேஸ்வரி- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் - (அம்பத்தூர் நகராட்சி ஆணையாளர்)

15. வி. அருண் ராய்- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் - (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்)

16. கே. மகரபூஷணம்- சேலம் மாவட்ட ஆட்சியர் - (சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர்)

17. வி. சாந்தா- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் - (வணிக வரிகள் துறை இணை ஆணையாளர்)

18. கே. பாஸ்கரன்- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் - (திருவாரூர் மாவட்ட ஆட்சியர்)

19. கே.எஸ். பழனிசாமி- தேனி மாவட்ட ஆட்சியர் - (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை துணை செயலாளர்)

20. ஆர். செல்வராஜ்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் - (தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய செயலாளர்)

21. ஜெய ஸ்ரீ முரளிதரன்- திருச்சி மாவட்ட ஆட்சியர் - (உள்துறை இணைச் செயலாளர்)

22. எஸ். நடராஜன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் - (சிப்காட் நிர்வாக இயக்குநர்)

23. எம். மதிவாணன்- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் - (சர்க்கரைத் துறை கூடுதல் ஆணையாளர்)

24. ஆஷிஷ் சாட்டர்ஜி- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் - (காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்)

25. அன்சுல் மிஸ்ரா- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் - (கோவை மாநகராட்சி ஆணையாளர்)

26. சி. முனியநாதன்- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் - (நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்)

27. எஸ். நாகராஜன்- வேலூர் மாவட்ட ஆட்சியர் - (ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் இயக்குநர்)

28. சி.டி. மணிமேகலை- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் - (மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முன்னாள் ஆணையாளர்)

29. எம். பாலாஜி- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்)