Tuesday, May 31, 2011

1000 படகுககளின் உரிமம் ரத்து ; மீன் துறை அதிரடி.


நாற்பத்தைந்து நாட்கள் தடைக்காலம் முடிந்ததையடுத்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

தடைக்காலம் முடிந்ததும் டோக்கன் பெறாமல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று மாலையே கடலுக்குச் சென்றுவிட்டனர். ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 படகுகள் மட்டுமே டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றுள்ளன.

மண்டபம் பகுதியில் உள்ள 570 விசைப்படகுகளில் 234 படகுகள் மட்டுமே டோக்கன் வாங்கிச் சென்றன. 336 படகுகள் டோக்கன் பெறாமல் நேற்று மாலையை கடலுக்குச் சென்றன. அதேபோல, மண்டபம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட படகுகளில் ஒரு சில படகுகள் மட்டுமே டோக்கன் பெற்றுச் சென்றுள்ளன.

டோக்கன் பெறாமல் விசைப்படகுகள் கடலுக்குச் சென்றுள்ளது மீன்துறை அதிகாரிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மீன்துறை உதவி இயக்குநர் மார்க்கண்டேயன் ராமநாதபுரம் கலெக்டர் ஹரிஹரனை நேரில் சந்தித்து டோக்கன் பெறாமல் சென்ற மீனவர்கள் குறித்து புகார் தெரிவித்தார்.

அனுமதி பெறாமல் சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மீன்துறை அனுமதி பெறாமல் சென்ற படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் மீனவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் கூறினர்.

கஞ்சா வழக்கு ஆரம்பம் - திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது.


திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும், ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான குடமுருட்டி சேகர், நேற்று (31.05.2011) இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரது காரை மடக்கி விசாரணை செய்தனர். அவரின் காரையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் கூறியதாகவும், அதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா இருந்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இரண்டு பிரிவின் கீழ் சேகர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் போலீசார் சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த மாவட்ட திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்.

அமெரிக்காவிடம் பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு கூரியர் கடிதம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வந்த அபுஅகமது அல்- குவைதியுடன் டெலிபோன் பேச்சை ஒட்டுக் கேட்டு பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கா மோப்பம் பிடித்ததாக தகவல் வெளியானது.

தற்போது அது உண்மை இல்லை. பின்லேடன் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தது தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா அப்துல் ஹானிபிராதர் என தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இவர் பின்லேடன் நண்பர்களில் ஒருவராக திகழ்ந்தவர். தலிபான் இயக்கத்தை தோற்றுவித்த தலைவர்களில் ஒருவராவர். ஆப்கானிஸ்தானில் ரோட்டோரங்களில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருவதில் வல்லவர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அமெரிக்க படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அமெரிக்க புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். அப்போதுதான் பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த ரகசிய இடம் பற்றி அவர் அமெரிக்க உளவுத்துறையிடம் தெரிவித்தார்.

இது குறித்து ஒரு ரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அதாவது, தலிபான்கள் அதிகம் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதை அமெரிக்கா ஏற்று அறிவித்தது. இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலையும், அந்த பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்.


தமிழகத்தில் 21 மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:-

1.பி.உமாநாத் கோவை கலெக்டர் - தமிழக அரசின் நிதித்துறை இணை செயலாளர்

2.பி.சீத்தாராமன் கடலூர் கலெக்டர் - சுனாமி நீடித்த வாழ்வாதார திட்ட இயக்குனர்

3.எம்.வள்ளலார் திண்டுக்கல் கலெக்டர் - தொழில் மற்றும் வர்த்தக துறை கூடுதல் கமிஷனர்

4. சி.காமராஜ் ஈரோடு கலெக்டர் - போக்குவரத்து துறை துணை செயலாளர்

5.ராஜேந்திர ரத்னு கன்னியாகுமரி கலெக்டர் - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலாளர்

6.ஜெ.உமா மகேஸ்வரி கரூர் கலெக்டர் - உயர் கல்வித்துறை இணை செயலாளர்

7.ஆர்.பழனிச்சாமி விழுப்புரம் கலெக்டர் - நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர்

8.எம்.விஜயகுமார் பெரம்பலூர் கலெக்டர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலாளர்

9.ஏ.சுகந்தி புதுக்கோட்டை கலெக்டர் - சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணை செயலாளர்

10.டி.என்.அரிகரன் ராமநாதபுரம் கலெக்டர் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை துணை செயலாளர்

11.ஜெ.சந்திரகுமார் சேலம் கலெக்டர் - வருவாய் துறை இணை செயலாளர்

12.எம்.எஸ்.சண்முகம் தஞ்சாவூர் கலெக்டர் - தொழில் துறை இணை செயலாளர்

13.எம்.ஜெயராமன் திருநெல்வேலி கலெக்டர் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளர்

14.டி.பி.ராஜேஷ் திருவள்ளூர் கலெக்டர் - தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலைய துறை, செய்தித்துறை துணை செயலாளர்

15. சி.சமயமூர்த்தி திருப்பூர் கலெக்டர் - பொதுத்துறை இணைச் செயலாளர்

16.வி.கே.சண்முகம் விருதுநகர் கலெக்டர் - வேளாண்மைத்துறை இணை செயலாளர்

17. டி.கே.பொன்னுசாமி அரியலூர் கலெக்டர் - எரிசக்தித்துறை இணை செயலாளர்

18.வி.பழனிக்குமார் வேலூர் கலெக்டர் - எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர் செயலர்

19.எஸ்.மதுமதி நாமக்கல் கலெக்டர் - சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (சுகாதாரம்)

20.வி.சம்பத் சிவகங்கை கலெக்டர் - தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவன நிர்வாக இயக்குனர்

21. மகேசன் காசிராஜன் திருச்சி கலெக்டர் - நில வடிநீர் முகமை செயல் இயக்குனர்.

நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.35 உயருகிறது.


பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, 4 மாதங்களாக பெட்ரோல் விலைஉயர்த்தப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 15-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை நாளை புதன்கிழமை முதல் மீண்டும் உயர்த்தப்படுகிறது. இத்தகவலை முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 35 காசுகள், விலை உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

திஹார் சிறையில் எப்படி இருக்கிறார் ராசா?


முன்னாள் அமைச்சர் ராசா திஹார் சிறைக்கு உள்ளே வந்து மூன்று மாதங்களாகி விட்டது. வெளியில் எத்தனையோ நடந்து முடிந்து விட்டது. உற்ற நண்பர் சாதிக் பாட்சா உயிரிழந்து விட்டார்.ஆட்சி பறி போய் விட்டது. சக எம்.பி. கனிமொழியும் கைதாகி உள்ளே வந்து விட்டார். இத்தனையையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

சுறுசுறுப்பாக இயங்கி வந்த ராசா, இன்று ஒரு குட்டி அறையில் டிவி, செய்தித் தாள்கள், புதிதாக கிடைத்த நண்பர்கள் சகிதம் முடங்கிக் கிடக்கிறார்.

காலையில் சின்னதாக ஒரு வாக்கிங், மாலையில் சக கைதிகளுடன் பேட்மிண்டன் என்று பொழுது போய்க் கொண்டிருக்கிறது ராசாவுக்கு. ஆரம்பத்தில் மகா இறுக்கமாக காணப்பட்ட ராசா இன்று சற்று ரிலாக்ஸ்டாக தெரிகிறார். சிறை வாழ்க்கை இப்போது அவருக்குப் பழகி விட்டது.

ராசா குறித்து திஹார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிற விஐபி கைதிகளைப் போல அல்லாமல், வெகு விரைவிலேயே சிறை வாழ்க்கைக்குப் பழகிக் கொண்டு விட்டார் ராசா. ஆரம்பத்தில் அவர் யாருடனும் சரியாக பேசவில்லை. அமைதியாக இருந்தார். பிற கைதிகளுடன் பேச மாட்டார். ஆனால் தற்போது அப்படி இல்லை. நன்றாகப் பேசுகிறார். பிற கைதிகளுடன் சகஜமாக பேசிப் பழகுகிறார். சிலர் அவருக்கு நண்பர்களாகி விட்டனர். அவரிடம் நண்பர்களாகியுள்ள பலரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாவர் என்றார்.

பிப்ரவரி 17ம் தேதி ராசா திஹார் சிறைக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை அவர் படு சமர்த்தாக இருந்து வருகிறாராம். எந்தவிதமான பிரச்சினையும் செய்வதில்லை. மிகமிக ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறாராம்.

மிக மிகப் பெரிய ஊழல் புகாரை தன் தலை மீது வைத்திருந்தாலும், ராசாவின் பழக்க வழக்கம், படு எளிமையாக உள்ளதாம். திஹார் சிறையின் முதலாவது சிறையில், 9வது வார்டில் அடைக்கப்பட்டிருக்கிறார் ராசா. அதே சிறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகியுள்ள மேலும் சிலரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தினசரி காலை 5 மணி முதல் 6 மணி வரை சிறைக்குள் வாக்கிங் போகிறார் ராசா. தான் அடைக்கப்பட்டுள்ள வார்டுக்குள்ளேயே இந்த வாக்கிங். அந்த வார்டில் உள்ள 14 கைதிகளுடனும் அவர் நண்பராகப் பழங்குகிறார்.

முதலில் சிறை சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார் ராசா. ஆனால் அது அவருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவருக்கு மட்டும் சாப்பாடு வரும். பின்னர் நண்பர்கள் அதிகமாகவே அவருக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டு பாத்திரத்தின் சைஸ் பெரிதாகி விட்டது. இப்போது தனக்கு கொண்டு வரப்படும் சாப்பாட்டை தனது சக கைதிகளுடன் பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார் ராசா.

இட்லி, வடை, சாம்பார், ரசம், தயிர்ச் சாதம் என தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிறார் ராசா.

தனது அறையில் கொடுக்கப்பட்டுள்ள டிவியைப் பார்க்கும் ராசா, செய்தித் தாள்களையும், புத்தகங்களையும் படிக்க அதிக நேரம் செலவிடுகிறார். மாலையில் சக கைதிகளுடன் சேர்ந்து பேட்மிண்டன் ஆடுகிறார்.

பிற கைதிகளுடன் ஒப்பிடுகையில் ராசா மிக மிக ஒழுங்குடன் இருக்கிறார் என்கிறார்கள் சிறை அதிகாரிகள்.

அவர் எந்த சிறப்புச் சலுகைகையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தமிழ் செய்தித் தாள்களை தாருங்கள் என்பது மட்டுமே அவர் வைத்த ஒரே கோரிக்கை. மற்ற எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

தற்போது கடந்த சில நாட்களாக சிறை சாப்பாட்டையே மீண்டும் சாப்பிட ஆரம்பித்துள்ளார் ராசா.

சிறை வளாகத்தில் உள்ள கேன்டீனில் விற்கும் ஸ்னாக்ஸ் அவருக்குப் பிடித்துப் போய் விட்டது. அடிக்கடி அதை வாங்கிச் சாப்பிடுகிறார். அப்படி வாங்கும்போது சக கைதிகளுக்கும் சேர்த்தே வாங்குகிறார்.

திஹார் சிறைக்குள் பணப் புழக்கத்திற்குத் தடை உள்ளது. கூப்பன் கொடுத்துதான் பொருட்களைப் பெற முடியும். அதாவது கைதிகளை வாரத்திற்கு 2 முறை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி வரும்போது ஒரு முறைக்கு 1000 ரூபாயை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து அதற்குப் பதில் கூப்பன்களாகப் பெற்று அதை கைதிகளிடம் தரலாம். கைதிகள் அந்த கூப்பனைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஸ்னாக்ஸ் போன்றவற்றை சிறை கேன்டீனில் பெற முடியும்.

ராசா அடைக்கப்பட்டுள்ள வார்டில் மேலும் இரு விஐபிக்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் மூத்த போலீஸ் அதிகாரிகள். ஒருவரது பெயர் எஸ்.எஸ். ராத்தி. இவர் டெல்லி காவல்துறையின் முன்னாள் உதவி ஆணையர் ஆவார். 1997ல் கன்னாட் பிளேஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

இன்னொருவர் ஆர்.கே.சர்மா. இவர் பத்திரிக்கையாளர் ஷிவானி பட்நாகரைக் கொன்ற வழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வருகிறார்.

ராசா எப்போது வெளியே வருவார் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கனிமொழியை முதலில் பெயிலில் எடுக்கவே திமுக தரப்பு படு தீவிரமாகவும், ஆர்வமாகவும் இருப்பதாக திமுகவினரே கூறுகிறார்கள். எனவே ராசா இப்போதைக்கு வெளியே வரும் வழி தெரியவில்லை என்பது அவர்களின் கருத்து. ராசாவுக்கும் இது தெரிந்திருக்கும். எனவேதான் அவர் முன்பை விட இப்போது மிகுந்த ரிலாக்ஸ்டான மன நிலைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டார்.

வெளியே வரும்போது மிகச் சிறந்த பேட்மிண்டன் வீரராக ராசா உருவெடுத்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

புகைப் பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் மரணங்கள்.


புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக புகையிலை எதிர்ப்பு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. புகைப் பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அதில் 10 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 2008ம் ஆண்டு மத்திய நலத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோதிலும், காலப்போக்கில் கைவிடப்பட்டுவிட்டது. அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வதுடன், புகையிலை பொருட்களின் மீதான வரிகளையும் அதிகரிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு என்பது யாரோ சம்பந்தப்பட்ட விஷயம் என்று எண்ணாமல் அனைவருக்கும் தீங்கு என்பதை உணர்ந்து சமுதாயத்தில் உள்ள அனைவரும் புகையிலைக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.