Monday, May 30, 2011

மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி டிரைவர் பிடிபட்டார்.


அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு காரணமான லாரி பிடிபட்டது. லாரி டிரைவரும் பிடிபட்டான். லாரி உரிமையாளரையும் கைது செய்து விசாரணை செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது.

சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழாவிற்காக அமைச்சர் மரியம்பிச்சை, திருச்சியில் இருந்து காரில் கடந்த 23ம் தேதி சென்றபோது, பாடாலூர் அருகே காரும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மர்மம் இருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் விசாரணை நடந்தது. சாலையின் சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சுழல் காமிராவில் பதிவான, லாரிகள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.அதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து தப்பிச்சென்ற லாரியை மேற்கு வங்கத்தில் மடக்கிப் பிடித்தனர் போலீசார். பிடிபட்ட லாரியை மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வருகின்றனர் பிசிஐடி போலீசார்.

மரியம் கார் மீது மோதிவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரையும் போலீசார் கைது செய்தனர்.

லாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது விசாரனையில் தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு : கரிம் மொரானி ஜாமீன் மனு தள்ளுபடி,


2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சினியுக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரிம் மொரானியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம்ஸ் நிறுவனம். அதன் ஒரு அங்கமான சினியுக் நிறுவனம் வாயிலாக கலைஞர் டி.வி.,க்கு ரூ.214 கோடி பணத்தை பரிவர்த்தனை செய்தது என்பது சி.பி.ஐ., யின் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கரிம் மொரானி ஜாமின் கோரி டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை கடந்த 23ம் தேதியன்று டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ., கோர்ட் உத்தரவுவிட்டது. மேலும் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது இதனையடுத்து கரிம் மொரானி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இத்தாலி பல்கலைக்கழகம்.


110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ளது மிலன் பல்கலைக்கழகம் (Universita Popolare Degli Studi Di Milano - UUPN). 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வி நிறுவனம் இது. மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த பல்கலைக் கழகம்.

இந்த ஆண்டு தமிழ் நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மிலன் பல்கலைக்கழகம். ஐரோப்பிய பல்கலைக் கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மிலன் பல்கலைக் கழகத்தின் தலைவர் போராசிரியர் டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை ஏற்றுக் கொண்ட விக்ரம், பின்னர் வந்திருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

மகனை ஒப்படைக்க கோரி முதல் கணவர் வீட்டு முன்பு நடிகை வனிதா உண்ணாவிரதம்.


நடிகை வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை இருவரும் தங்களிடம் ஒப்படைக்க கோரி போராடி வருகின்றனர். தற்போது விஜய் ஸ்ரீஹரி ஆகாஷ் வசம் இருக்கிறான். அவனை தன்னிடம் ஒப்படைக்கும்படி வனிதா வற்புறுத்தி வருகிறார்.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. “விஜய் ஸ்ரீஹரி வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் இருக்க வேண்டும் என்றும் மற்ற நாட்கள் ஆகாஷ் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு தீர்ப்புப்படி மகனை ஆகாஷ் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வனிதா நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இப்பிரச்சினை மீது போலீசார் விசாரணை நடத்தினர். விஜய் ஸ்ரீஹரியிடம் போலீசார் பேசினர். அப்போது அவன் வனிதாவுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டான்.

இதையடுத்து விஜய் ஸ்ரீஹரியை குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வற்புறுத்தி வனிதா இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

காலை 12 மணிக்கு படுக்கையுடன் சாலிகிராமம் லோகையா வீதி 5-வது குறுக்கு தெருவில் உள்ள ஆகாஷ் வீட்டுக்கு வந்தார். தனது பெண் குழந்தையையும் உடன் அழைத்து வந்தார். ஆகாஷ் வீட்டு முன் படுக்கையை விரித்தார். அதில் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வனிதாவிடம் அவர்கள் சமரசம் பேசினர். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம் இருப்பது பற்றி வனிதா கூறியதாவது:-

எனது மகனை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கடந்த 7 மாதங்களாக ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வந்து விட்டேன். ஆனாலும் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

என் குழந்தையை என்னுடன் அனுப்ப ஆகாஷ் மறுக்கிறார். என்னைப் பற்றி தவறான தகவல்களை ஸ்ரீஹரியிடம் சொல்லி என்னுடன் சேர விடாமல் மிரட்டுகிறார். என் குழந்தை இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன்.

தண்ணீர், சாப்பாடு, கூட சாப்பிட மாட்டேன். இங்கிருந்து என் குழந்தையோடுதான் செல்வேன். இல்லையென்றால் சாவேன். ஆகாஷ் செய்யும் தவறை போலீசார் கண்டு கொள்ளவில்லை. கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் தவறு செய்கிறார்கள்.

என் குழந்தை என்னிடம் சேராமல் இருப்பதற்கு போலீசாரும் ஒரு காரணம். இந்த அரசு மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. என் குழந்தையை என்னிடம் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

பெத்த குழந்தையை மீட்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்சினைக்கு பின்னால் என் தந்தை இருக்கிறார். கோர்ட்டு உத்தரவுபடி என் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு வனிதா கூறினார்.

வனிதா உண்ணாவிரதம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியேறினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுபடி விஜய் ஸ்ரீஹரி விருப்பபட்டால் வனிதாவை 3 நாட்கள் சந்திக்கலாம். அவன் தனது தாயாரை பார்க்க விருப்பம் இல்லாத பட்சத்தில் அவனை சமாதானப்படுத்தி தாயார் வனிதாவிடம் அனுப்பலாம். ஆனால் அவன் போக மறுக்கிறான். தாயார் குழந்தையிடம் அன்பாக இருந்தால் பாசத்துடன் செல்லும். அவனை வனிதாவிடம் செல்ல கட்டாயப்படுத்தினால் அவரிடம் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறான்.

அதனால் மனோத்துவ டாக்டரை அணுகி குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறேன். 3 வருடம் குழந்தை ஹரி வனிதாவிடம் இருந்தது. இப்போது 3 நாள் அவருடன் அனுப்புவதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. என்னிடம் இருந்து அவன் செல்ல மறுக்கிறான். ஆனால் வலுக்கட்டாய மாக வனிதா இழுப்பதால் வெறுக்கிறான். இதனால் திடீர் என்று அவன் எப்படி மாறுவான்.

இவ்வாறு ஆகாஷ் கூறினார்.

ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கினேனா..? ரஹ்மான் ஆவேசம்


ஆஸ்கர் விருதைப் பெற பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார் சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.

அவர் கூறுகையில், 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.

உடனே அவரிடம் நிருபர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? எதை வைத்து இந்த குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு இஸ்மாயில் தர்பாரால் ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியவில்லை. இதையடுத்து இஸ்மாயிலுக்கு பல்வேறு துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மீது தேவை இல்லாமல் புழுதி வாரி தூற்றக்கூடாது என்று இந்திப்பட உலகினர் கூறியுள்ளனர்.

இந்தியர்களுக்கு ஆஸ்கார் விருது மூலம் பெருமை தேடி தந்தவர் ரஹ்மான். அவரை பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று மற்றொரு இசை அமைப்பாளர் லலித் பண்டிட் கூறினார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. உடனடியாக அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், ஆஸ்கார் விருதுகளை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. 3 ஆயிரம் மக்களால் விருதுகள் தேர்வு நடக்கிறது. எப்படி பணம் கொடுத்து வாங்க முடியும், என்றார்.

19வது மனைவியாக, 20 வயது இந்திய பெண் தேடும் அரேபிய நாட்டு 65வயது கிழவர்.

90 குழந்தை பெற்றும் ஆசை தீரவில்லை: 19-வது மனைவியை தேடும் சவுதி அரேபியா நாட்டு கிழவர்; 20 வயது படித்த இந்திய பெண் வேண்டும் என்கிறார்
ஐக்கிய அரபு குடியரசு நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது அல்பலுசி. 65 வயதாகும் இந்த கோடீசுவரர் இதுவரை 17 பெண்களை திருமணம் செய்துள்ளார். 17 மனைவி மூலம் இவருக்கு 90 குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த 90 பேரில் பலருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது.

அந்த வகையில் முகம்மது அல்பலுசிக்கு 50 பேரன்- பேத்திகள் உள்ளனர். தற்போது அவரது மனைவிகளில் 2 பேர் கர்ப்பமாக உள்ளனர். எனவே முகம்மது அல்பலுசியின் குழந்தைகள் எண்ணிக்கை விரைவில் 92 ஆக உயர உள்ளது.

என்றாலும் முகம்மது அல்பலுசிக்கு இன்னமும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையும் விடவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பாகிஸ்தான் பெண் ஒருவரை 18-வது மனைவியாக திருமணம் செய்ய உள்ளார்.

முகம்மது அல்பலுசிக்கு திருமணம் செய்து கொள்ளும் 4-வது பாகிஸ்தான் பெண் இவர் ஆவார். சட்ட விதிகள் குறுக்கிட்டாலும் இவர், அதற்கு ஏற்ப வளைந்து கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்.

விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த முகம்மது அல்பலுசி அடுத்த மாதம் ஜெய்ப்பூர் வந்து செயற்கைகால் கருவிகளை மாற்ற திட்டமிட்டுள்ளார். அப்போது அவர், இந்திய பெண் ஒருவரை 19-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

இது குறித்து முகம்மது அல்பலுசி கூறியதாவது:-

என்னை திருமணம் செய்து கொள்ள பல பெண்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பேசுவது ஒன்றும் நடந்து கொள்வது ஒன்றுமாக இருப்பார்கள். எனக்கு தற்போது இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

எனது 17 மனைவிகளும் படிக்காதவர்கள். எனவே இந்திய பெண் 18 முதல் 22 வயதுக்குள்ளும் படித்தவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு முகம்மது அல்பலுசி கூறினார்.

இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்ற கேள்விக்கு இந்திய பெண்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றார்.

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த தால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை. கலைஞர் டி.வி. யில் நான் வெறும் பங்குதாரர் தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

கனிமொழி ஜாமீன் மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் 2மணிக்குத் தொடங்கியது.

கனிமொழியைப் பார்ப்பதற்காக, பாட்டியாலா வளாகத்துக்கு குஷ்பு உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர். கனிமொழியின் கணவர் அரவிந்தனின் தாயார், பூங்கோதை, வீரபாண்டி ஆறுமுகம், டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட சில கட்சிப் பிரமுகர்களும் கனிமொழியைக் காண நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்


கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார்.

அவர்களுடன் கனிமொழி பேசிக் கொண்டிருந்தார். டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது. இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.