Monday, May 30, 2011

கலைஞர் 12வது முறையாக எம்.எல்.ஏ. பதவி ஏற்பு.


தி.மு.க., தலைவர் கலைஞர், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் இன்று (30.05.2011) காலை 11 மணிக்கு, புதிய எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்றனர்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 23ந் தேதி நடைபெற்றது.

அப்போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா உள்பட 229 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அன்றைய தினம் தி.மு.க. தலைவர் கலைஞர், டெல்லி சென்றிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் சென்றிருந்தார். அதனால் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவில்லை. சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்ததால், அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் திருச்சி சென்றுவிட்டனர். அதனால் அவர்களும் அன்றைய தினம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை. அதன்பிறகு, கடந்த 27 ந் தேதி தற்காலிக சபாநாயகர் முன்னிலையில், சிவபதி, மனோகரன் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு, 12வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கலைஞரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணியளவில் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கூர்ந்து கவனியுங்கள் : கலைஞர்

பதவியேற்ற பின்னர் திமுக தலைவர் கலைஞரிடம், உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த கலைஞர், கூர்ந்து கவனியுங்கள் என்றார்.

இலங்கையில் நானோ கார் விலை ரூ.9.25 லட்சம்.


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான நானோ குட்டிக் கார், இலங்கையில் கால் பதித்தது.

நானோ காரின் அறிமுக விழா கொழும்பு நகரில் நடைபெற்றது. உலகிலேயே மிக மலிவான இந்தக் காரின் விலை, இலங்கை பணத்தில் ரூ.9.25லட்சம் ஆகும். இந்தியாவில் இக்காரின் விலை சுமார் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மட்டுமே. அதை விட பல மடங்கு அதிக விலைக்கு இலங்கையில் விற்கப்படுகிறது.

இதற்கு இறக்குமதி வரியும், உள்ளூர் விற்பனை வரியும் இலங்கையில் அதிகமாக இருப்பதே காரணம்.

இருப்பினும், நானோ குட்டி காருக்கு இலங்கையில் அதிக கிராக்கி காணப்படுகிறது.

ரூ.1 லட்சம் செலுத்தி, ஏராளமானோர் காருக்கு ஆர்டர்' கொடுத்தனர். அவர்களுக்கு
2 வாரங்களில் கார் சப்ளை செய்யப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

வல்லாரை தரும் நினைவாற்றல் !


வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே “வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழி ஏற்பட்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அமினோ அமிலங்கள், சென்டிலிக் சென்டோயிக், அமிலங்கள், கரோடின், ஹைட்ரோ காட்டிலின், வெல்லிரைன், பிரமினோசைடு, விட்டமின் பி1, பி2 மற்றும் விட்டமின் சி, டேனிக் அமிலம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளது.

வல்லாரையின் மருத்துவ பயன்கள்

அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இதன் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் உடையவை. உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது. மூட்டுவலியைப் போக்குகிறது. சிறுநீர் போக்கினை தூண்டுகிறது. தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது. ரத்தக்குழாய்களை நெகிழ்வடையச்செய்கிறது.

நினைவாற்றல் அதிகரிக்கும்

வல்லாரை இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இத்தாவரத்தினை சக்தி அளிக்கும் டானிக் மற்றும் நினைவாற்றலையும் கவனத்தையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கவும் பயன்படுத்துகின்றனர். காலை வேளையில் வல்லாரையை பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும். காலைவேளையில் ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகவும், கட்டுப்போடவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும்

இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள் புண்கள் ஆறுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது கொல்லஜென் என்னும் புரதம் தோன்றவும், புதிய ரத்தக் குழாய் உருவாதலையும் துரிதப்படுத்துகிறது. புண்கள் ஆறுதலின் பொழுது திசுக்களைச் சரி செய்ய ஆக்ஸிகரண எதிர்ப் பொருள்களின் அளவு அதிகரிக்கச் செய்கிறது. இது இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கக் கூடுமெனவும் கருதப்படுகிறது

மனநோய்கள் மறைய...

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.

உடல் சோர்வு நீங்கும்

பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்று போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அடிவயிற்றுக் கோளாறுகள், காய்ச்சல், ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழல் நோய்கள் ஆகியவற்றினைக் குணப்படுத்த உதவுகிறது. இதிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட எண்ணெய் பொருள் முடி வளர்தலை ஊக்குவிக்கிறது.

இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும். உடல்புண்களை ஆற்றும் வல்லமைக் கொண்டது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமை கொண்டது. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். சளி குறைய உதவுகிறது.

உண்ணும் போது தவிர்க்க வேண்டியவை

இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக் கூடாது. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக் கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

ஏற்காடு கோடை விழா மலர்கண்காட்சி நிறைவு.


ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று முன்தினம் கோடை விழா மலர்கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை யொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணாபூங்காவில் பல ஆயிரம் பூந்தொட்டில் பல வகையான லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

இதை காண தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்திருந்தனர். அவர்கள் ஏற்காட்டில் நிலவிவரும் சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர். ஏற்காடு பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இயற்கை அழகை ரசித்து குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

நேற்று சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கபடி போட்டி, கோலப்போட்டி, இசை நாற்காலி, படகு போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் பல இனங்களை சேர்ந்த அரிய வகை நாய்கள் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்வித்தது.

முன்னதாக காலையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து தவழும் குழந்தைகள் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, கல்லூரி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோடை விழா நிறைவு விழா ஏற்காடு திரையரங்கத்தில் நடந்தது.

திமுகவின் தோல்வி என்னை பாதிக்காது : அருள்நிதி.


திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான அருள்நிதி, "வம்சம்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து, "உதயன்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இது குறித்து அருள்நிதி, ’’படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளது. இந்த சண்டைக்காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன்.

இப்படத்தின் சூட்டிங்கின் போது கால் உடைந்தது. இருப்பினும் தொடர்ந்து நடித்தேன். முன்னதாக "வம்சம்" படத்தில் கை உடைந்தது.

இன்னும் ஓரிரு வாரத்தில் இப்படம் ரிலீசாக இருக்கிறது’’ என்று செய்தியாளர் களிடம் தெரிவித்தபோது,

தேர்தலில் திமுக தோல்வியால் தங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு,

’’சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தது என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. நான் ஒரு நடிகன், அரசியல்வாதி அல்ல. சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக பார்க்காதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிவேக ஈனுலை : விஞ்சுவது விஞ்ஞானமா? விவேகமா?


அணுசக்தியைப் பயன்படுத்தி சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என மே தினத்தன்று "பிசினஸ்லைன்' செய்தி வெளியிட்டுள்ளது. இது மட்டுமன்றி, கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த முயற்சி இந்தியாவில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படவுள்ள சாதனையாகத் திகழுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலின் சாதனையாக பரிமளித்தாலும், இது மறைமுகமாக சுமந்துள்ள சோதனைகளையும், வேதனைகளையும் எடுத்துக்காட்டக்கூடிய காலத்தின் கட்டாயத்தில் கட்டப்பட்டுள்ளோம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்னோபிலிலும், இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்றும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்க உயிர்ச்சேதங்கள் பற்றி சராசரி மனிதனும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிக்கொணர வேண்டும்.

கல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி வெளியான அதே தினம், பி பி சி தொலைக் காட்சி நிகழ்ச்சியில், 25 ஆண்டுகளுக்குப் பின்பும், இன்றும் செர்னோபிலில் உள்ள உயிரற்ற திடப்பொருள்கள் மற்றும் உயிருள்ள தாவரங்களிலிருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளதை, கதிர்வீச்சு கணிப்புப் பொறி மூலம் தெளிவாகக் காட்டப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் அன்றும், இன்றும் அணுக்கதிர் வீச்சின் கொடூர விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருவதை தெள்ளத் தெளிவாகக் காட்டப்பட்டது.

கருவுற்ற தாய்மார்களின் சேய்களின் உருவச் சேதாரங்களையும், ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் வாழ்வதற்குப் பாதகமாக உள்ளதால், வெறிச்சோடிக் கிடக்கும், காலியான, கைவிடப்பட்ட கட்டடங்கள், தெருக்கள், ஆழ்மனத்தில் அச்சத்தையும், விளக்க முடியாத மெüன வேதனையையும் ஏற்படுத்தின.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள இந்த விபரீத நிகழ்வுகள், ஏதோ ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகப் பின்தங்கிய இரண்டு நாடுகளில் நேர்ந்துள்ள சம்பவம்போல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

கடலோரத்தில், சென்னை மாநகருக்கு 50 கிலோ மீட்டர் அருகில் உள்ள கல்பாக்கத்தில் நிறுவப்படவுள்ள இந்த அணுஉலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டவிழ்ந்து, செயலிழந்து, வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் மேம்பட்டது, பாதுகாப்பானது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணுஆலை விபத்துக்குப்பிறகு, புதிதாக ஏதும் பெரிய அளவில் அணுமின் நிலையங்கள் நிறுவப்படவில்லை என்பதையும், அணுமின் நிலையங்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய எந்த நிறுவனமும் முன்வருவதில்லை என்ற உண்மைக்குப் பின் பொதிந்துள்ள அர்த்தங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சுனாமி என்றால் என்னவென்பது கடலூருக்கும், கடலோரமுள்ள சென்னைக்கும் நன்றாக தெரியவைத்தது சமீபத்திய சம்பவங்கள். இனியும் வரலாமென்பதும், இந்தோனேசியா, அந்தமானின் அடுத்தடுத்த கடல்ஆழ் நிலநடுக்கங்கள் நினைவுபடுத்திக்கொண்டே உள்ளன.

அணுஉலையில் கிடைத்திடும் இந்த 500 மெகாவாட் மின்சாரத்தை, பாதுகாப்பான முறையிலும், குறைந்த செலவிலும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் உற்பத்தி செய்ய முடியும்.

நிலவளம், நீர்வளத் தன்மைக்கேற்ப, மலைவேம்பு, முள்ளில்லா மூங்கில் போன்ற தேர்வு செய்யப்பட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 30 டன் முதல் 50 டன் வரை ஓர் ஏக்கரில் அறுவடை செய்ய முடியும் என்பது தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 100 டன் அல்லது ஏக்கருக்கு 40 டன் ஆண்டுக்குக் கிடைக்கும் என்றால்கூட, 10 மெகாவாட் மின்சாரம், ஆண்டுமுழுவதும் தயாரிக்க சுமார் 1 லட்சம் டன் தேவை என்ற அளவில் 1,000 ஹெக்டேரில் (2500 ஏக்கர்) பெற்றிடலாம்.

தமிழ்நாட்டில் 125 லட்சம் ஏக்கர் (50 லட்சம் ஹெக்டேர்) விவசாய நிலங்கள் உள்ளன. சுமார் 40 லட்சம் ஏக்கர் தமிழ்நாட்டில் சரிவரப் பயிரிடப்படாமல், பயன்படுத்தப்படாமல், குறையாக விடப்பட்டுள்ளது. இவற்றில் 2 லட்சம் ஏக்கர் அளவுள்ள, வளமிருந்தும் குறையாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் மட்டுமே இவ்வீரிய மர வகைகளை வளர்த்தாலே இந்த 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே உள்ளதாலும், கருவிகளைத் தயாரிக்கும் தலைசிறந்த நிறுவனங்கள் நமது நாட்டிலேயே இருப்பதாலும், தக்க விளைநிலங்களும், ஏற்புடைய விவசாயிகளும் தமிழகத்திலே உள்ளதாலும் தங்கு தடையின்றி உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

கல்பாக்கம் அணுஉலை நிறுவ 1 மெகாவாட்டுக்கு ரூ. 11 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி அணு ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளபடி, மேலும் இரண்டு புதிய 500 மெகாவாட் அணுஉலைகள் கல்பாக்கத்திலும், மற்றும் இரண்டு மற்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டு 2020-ல் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.

மர மின்சார ஆலைகளுக்கு, ஒரு மெகாவாட் உற்பத்தி செலவு ரூ. 4 கோடி மட்டுமே. அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 14,000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குத் தேவைப்படும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் 2,490 மெகாவாட் மின் உற்பத்தி செய்கையில், நாள் ஒன்றுக்கு சுமார் 70,000 டன் கரியமில வாயுவைக் காற்றில் வெளியேற்றுகிறது. தமிழ்நாட்டில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், சுமார் 500 லட்சம் டன் கரியமிலவாயு ஆண்டொன்றுக்குக் காற்றில் கலக்கப்படுகிறது.

மரமூலப்பொருள் மின் ஆலைகளும், அதே அளவு மின் உற்பத்தியின்போது அதே அளவு கரியமிலவாயுவை வெளியேவிட்டாலும், சரிசமமான அளவு கரியமிலவாயு, மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். மரங்கள் வளரும்போது அவைகளால் உறிஞ்சப்படுகின்றன. எனவே, அவை கார்பன் நியூட்ரல் என உலகளவில் அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.

இவ்வகை மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 20 டன் மகசூல் குறைந்த அளவில் கிடைத்தாலும், டன் ரூ.2,500 என்ற கொள்முதல் சந்தை விலைப்படி ரூ.50,000 வருமானம் ஆண்டுக்கு ஓர் ஏக்கரில் கிடைக்க வழிவகை செய்யும். இவ்வாறு தமிழக விவசாயிகளின் ஆண்டுத் தேவையான 3,500 மெகாவாட் மின்சாரம் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்களைப் பயன்படுத்தி நிச்சயமாகப் பெறமுடியும். அவ்வாறு செய்தால், ஒவ்வோராண்டும் ரூ. 5,000 கோடி, இதை வளர்க்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் சென்றடையும். இதனால், கிராமப்புற வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பும், வருமானமும் ஆண்டு முழுவதும் கிடைக்கும். மின்சார வினியோகத்துக்காகச் செலுத்தப்பட்டு கடத்தப்படும் மின்சார இழப்பு உற்பத்தியில் 19 ரூ என தமிழகத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 31 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 முதல் 120 மெகாவாட் மின்சாரம் இம்முறையில் உற்பத்தி செய்யலாம். ஒன்றியங்கள் ஒவ்வொன்றிலும் 10 மெகாவாட் அளவில் மர மின் ஆலை நிறுவினால் ஆண்டு முழுவதும் மின் கடத்தல் இழப்பை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். தட்டுப்பாடுகள், தடைகளின்றி தொடர்ந்து கிடைக்கவல்ல இம்மின் சக்தியால், உணவு உற்பத்தி பெருகும். மரத்தை மூலப்பொருளாகக் கொண்ட பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்க உதவிடும் கிராமப் பொருளாதாரம் வளர்ந்திடும்.

விவசாயிகளைப் பங்குதாரராக வைத்தால், தடையின்றி மூலப்பொருள் மின் உற்பத்திக்கு ஆண்டுமுழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். மூலப்பொருள் விற்பது மட்டுமன்றி, மின் ஆலை லாபத்திலும், விவசாயிகளுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கும். மூலப்பொருள் தட்டுப்பாடுதான் மரமின் உற்பத்தி ஆலைகள் எதிர்கொள்ளும் பிரச்னையாக இப்போது உள்ளது. மரமின்சார உற்பத்தி செலவு யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 ஆகும். இப்போது தமிழ்நாடு மின்வாரியம் வாங்குவது யூனிட் ஒன்றுக்கு ரூ.4.50. காற்றில்லாதபோதும், மழையில்லாதபோதும், மின் உற்பத்தி பாதிக்கப்படும்போது, வெளிச்சந்தையில் இரண்டு மடங்குக்குமேல் வெளி மாநிலங்களுக்கு விற்க முடியும். 1 மெகாவாட் என்றால் தினமும் 24,000 யூனிட் உற்பத்தி அளவு என்பதால், 10 மெகாவாட் மர மின் ஆலையால் தினமும் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும்.

மின் தயாரிப்புச் செலவு, மர மின்சார முறையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.2.50 ஆகவும், சூரிய சக்தியில் மின்சார உற்பத்தி முறையில் ரூ.11 ஆகவும் இப்போது உள்ளதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். காற்றில் தயாரிக்கும் மின்சாரமும், சூரிய மின் சக்தியும், காற்றுள்ளபோதும், சூரியக்கதிர் உள்ள போதும் மட்டுமே செயல்படும் தன்மையைக் கொண்டன. நீர்வீழ்வு மின் உற்பத்தியும் பருவமழையையே நம்பியுள்ளதாகும். இவற்றின் மூலப்பொருள் விலையற்றதாக இருந்தாலும், அதனை உற்பத்தி செய்யப் பயன்படும் உபகரணங்களின் விலை மிக அதிகம். மேலும், இவற்றில் பெறப்படும் மின்சக்தி ஒன்றாயினும், மூலப்பொருள் உற்பத்தியால் வருமானம் கிராமப்புற மக்களுக்கு அளிக்க வல்லது. மர மின்சாரம் மட்டுமே என்பதையும் நினைவில்கொண்டு, அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

தங்குதடையின்றி, தமிழகத்தில் காலை முதல் மாலை வரை கதிரவனின் கதிர்களைத் தடைக்கல்லாகக் கொள்ளாமல், படிக்கல்லாக மாற்றிடும் செயலை நிகழ்வாக்கினால், இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலகத்தின் வளரும், கிராமம்சார்ந்த நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்வது திண்ணம்.

எல்லாமிருந்தும், ஏதுமில்லா இந்நிலை உடன் மாற வேண்டும்.

பொருளாதார ரீதியில் லாபகரமாகவும், சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவதா கவும், உலக வெப்பமாவதைக் குறைக்கவல்லதாகவும், மாற்றவல்ல திட்டங்களை நிறைவேற்றுவதுதான் விவேகம். விவேகமே விஞ்சட்டும்.

நன்றி - தினமணி.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் : பாராளுமன்ற குழு முன்பு தணிக்கை அதிகாரி ஆஜர் ; ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு பற்றி விளக்கம்.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. கணக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையில் பெரிய சர்ச்சை எழுந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கப்பிரிவு, பாராளுமன்ற பொது கணக்குக்குழு ஆகியவையும் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து உண்மையை கண்டறிய பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழுவுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. சாக்கோ தலைவராக உள்ளார். கூட்டுக்குழு தனது விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு வருமாறு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரிக்கு கூட்டுக்குழு உத்தரவிட்டிருந்தது. அதை ஏற்று இன்று காலை கூட்டுக்குழு முன்பு மத்திய கணக்கு தணிக்கைத்துறை தலைவர் வினோத்ராய் ஆஜரானார்.

அவரிடம், கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி களை எழுப்பினார்கள். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, எந்த அடிப் படையில் கணிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரி வினோத்ராய் விளக்கம் அளித்தார்.

1998-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதத்தை எடுத்துக் கூறிய அதிகாரி வினோத்ராய், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களையும் விளக்கமாக கூறினார். அவரது விளக்கத்தை கூட்டுக்குழு பதிவு செய்தது. தணிக்கை அதிகாரி கொடுத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை ஒன்றை கூட்டுக்குழு தயாரிக்கும்.

அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு தொடக்கத் தில் தணிக்கை அதிகாரி வினோத்ராய் பாராளுமன்ற பொது கணக்குக்குழு முன்பும் ஆஜராகி, ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு தொடர்பாக விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.