Sunday, May 29, 2011

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சுவையான சில குறிப்புகள்.

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!


சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!

உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

`அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா.

``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.


பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி பிரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.

தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

`நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

நன்றி - speedsays.blogspot.com

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு : நகரசபை தலைவர்கள் - மேயர் நேரடியாக தேர்வு ; தமிழக அரசு பரிசீலனை.


உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு:  நகரசபை தலைவர்கள்- மேயர் நேரடியாக தேர்வு; தமிழக அரசு பரிசீலனை

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலைப் போல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி அமைப்பில் சென்னை, வேலூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 மேயர்கள் பதவி வகித்து வருகிறார்கள்.

அவர்களில் 8 பேர் தி.மு.க.வினர், 2 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். இதேபோல் 148 நகரசபை தலைவர்கள் உள்ளனர். இது தவிர மாவட்ட ஊராட்சிகள் 31, ஊராட்சி ஒன்றியங்கள் 385, பேரூராட்சிகள் 561 உள்ளன. மொத்தத்தில் பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட 1 லட்சத்து 32 ஆயிரத்து 95 பதவிகள் உள்ளன.

தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 21-ந்தேதி முடிவடைகிறது. ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசு உள்ளாட்சி தேர்தலை வழக்கமான காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சையத் முனீர்கோடா கடந்த 24-ந்தேதி பதவி விலகினார்.

புதிய தேர்தல் அதிகாரியாக சோ. அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

அநேகமாக ஆகஸ்ட் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த முறையை ரத்து செய்து விட்டு பெரும்பான்மை உறுப்பினர்களே தலைவர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தனர்.

உள்ளாட்சி மன்றத்தில் தலைவர் ஒரு கட்சியாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மாற்று கட்சியாகவும் இருந்தால் தீர்மானங்களை நிறைவேற்று வதில் சிக்கல்கள் ஏற்படுவதால் புதிய முறையை கொண்டு வந்ததாக கூறினார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தியது. இப்போது ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அ.தி.மு.க. மீண்டும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகிறது. முன்பு நடைமுறையில் இருந்தது போல் மேயர்கள், நகரசபை தலைவர்கள் பதவிகளுக்கு மக்கள் வாக்களிக்கும் நேரடி தேர்தல் முறை மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம்.


வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அற்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணையையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்து விடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷண நிலை மாறும் போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புபைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள, செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும். வெங்காயச்சாற்றையும், வெந்நீரையும் கலந்த வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர வல்வலி, ஈறுவலி குறையும். அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச்சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

அண்ணா பல்கலைக்கழகங்களை இணைக்க அதிமுக அரசு திட்டம்.


திமுக ஆட்சிக்காலத்தில் ஊர் ஊருக்கு ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து அண்ணா பல்கலைக்கழகத்தை கூறு போட்டனர். தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து சென்னையில் மட்டும் இயங்கும்படி செய்ய அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தைப் பிரித்து கோவை, திருச்சி, நெல்லை, மதுரை என பிரித்து கிளைகளை அமைத்தனர். அதன் பிறகு சென்னை அண்ணா, கோவை அண்ணா, நெல்லை அண்ணா, திருச்சி அண்ணா என்று அவை அழைக்கப்பட்டன.

தற்போது இந்த பல்கலைக்கழக பிரிவினையை ரத்து செய்து விட்டு ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக, முன்பு போல மாற்றியமைக்க அதிமுக அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர அரசு பணிந்தது : 9 நாள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் மேதா பட்கர்.


மும்பை, குடிசைவாசிகள் தங்கியிருந்த இடத்தை மகாராஷ்டிர அரசு தனியார் நிறுவனத்துக்கு அளித்ததை எதிர்த்து சமூக நல ஆர்வலர் மேதா பட்கர் 9 நாள்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

குடிசைவாசிகளை அந்த இடத்தில் இருந்து அகற்றும் முடிவை மகாராஷ்டிர அரசு கைவிட்டதை அடுத்து அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

மும்பையின் புறநகர் பகுதியான கோலிபாரின் பகுதியில் உள்ள 140 ஏக்கர் நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு மகாராஷ்டிர அரசு அளித்தது. ஆனால் அந்த இடத்தில் ஏராளமானோர் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர்.

இதனையடுத்து குடிசைவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த 20-ஆம் தேதி கோலிபாரின் பகுதியில் மேதா பட்கர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

மேதா பட்கரின் போராட்டத்துக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவு குவிந்தது. குடிசைவாசிகள் மறுவாழ்வுத் திட்டத்துக்கு சம்மதித்து விட்டதாக போலியாக கையெழுத்திட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று மேதா பட்கர் குற்றம்சாட்டினார். மேலும் மகாராஷ்டிர மாநில குடிசைப் பகுதிச் சட்டம் 1971-ன் 3கே பிரிவை நீக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஏனெனில் இந்தப் பிரிவு, எவ்வித அனுமதியுமின்றி குடிசைவாசிகளை அகற்ற மாநில அரசு அதிகாரம் அளிக்கிறது.

எனினும் மாநில அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாததால் மேதா பட்கரின் உண்ணாவிரதம் தொடர்ந்து 9 நாள்கள் வரை நீடித்தது.

இந்நிலையில் ஆட்சியர் நிர்மல் தேஷ்முக், மேதாபட்கரை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவரது கோரிக்கைகளை ஏற்று பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். இதனையடுத்து மேதா பட்கர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, தேசிய மக்கள் கூட்டணி அமைப்பின் உறுப்பினர் மதுரேஷ் குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய இரு குழுக்களை அமைக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

தடுமாற்றத்தில் குடிநீர்வாரியம்...

வ. ஜெயபாண்டி


நீரின்றி அமையாது உலகு'' என்பது வள்ளுவப் பெருமானின் வாக்கு. உலகில் உயிர்வாழ அடிப்படையாக உள்ள தண்ணீரைப் பாதுகாப்பானதாக்கிப் பயன் படுத்துவதில் தமிழகம் இன்னும் கற்கால நிலையிலே இருக்கிறது என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

மனிதன் உயிர் வாழத் தேவையானவற்றில் முதன்மையானதாக உள்ள குடிநீர் என்பது அனைத்து மக்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதைவிட, கிடைக்கும் தண்ணீரும் குடிப்பதற்குத் தகுதி உள்ளதாக இருக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

குடிநீர் மூலமே தமிழகத்தில் 25% தொற்றுநோய்க் கிருமிகள் பரவி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படிப் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மட்டும் ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை அரசு செலவிட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், பெரும்பாலான உள்ளாட்சிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகக் கூறி மக்கள் போராட்டம் நடத்தினாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை. சுகாதாரத் துறையும் நீரின் மூலம் பரவும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த பல கோடி ரூபாயைச் செலவிடும் அரசானது, அந்த நோய் எதன் மூலம், எப்படிப் பரவுகிறது? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை என்பதும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளது கவலையாகும்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து நிலைகளிலும் குடிநீர் மேல்நிலைத் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதற்காக குடிநீர் விநியோகத்துக்கான கட்டணமும் மக்களிடமிருந்து அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் வசூலிக்கின்றன.

இவ்வாறாக வசூலிக்கப்படும் குடிநீர் கட்டணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. காரணம், குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே பராமரித்து வருகிறது. ஆனால், அந்த குடிநீர் விநியோகப் பராமரிப்புக்கு உரிய நிதியானது அந்த வாரியத்துக்கு வழங்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே குடிநீரானது முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதாக விநியோகிக்கப்படுவதில்லை என்கின்றனர் வடிகால் வாரியத்தில் உள்ள அதிகாரிகள்.

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் இரண்டரைக் கோடி பேர் குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கும் குடிநீரையே தினமும் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதில் 5 மாநகராட்சிகள், 54 நகராட்சிகள், 98 நகர டவுன் பஞ்சாயத்துகள், 175 ஊரக டவுன் பஞ்சாயத்துகள் அடங்குகின்றன.

இதைத்தவிர்த்து 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் குடிநீர் பராமரிப்புக்கான செலவு ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகி வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் குடிநீர் கட்டண நிதி மட்டும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு அளிக்கப்படுவதில்லை என்பதே அதிர்ச்சித் தகவல்.

கடந்த 2000-வது ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரையில் மட்டும் தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.488 கோடியே 47 லட்சம் என்கிறார்கள் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள்.

மாநகராட்சிகளில் சேலம், கோவை ரூ.52 கோடியும், நகராட்சிகளில் எடப்பாடி, திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், ஜெயங்கொண்டம், கம்பம், கூடலூர், புளியங்குடி ஆகியன ரூ.1.99 கோடியும் பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல கிராமப் பஞ்சாயத்து யூனியன், மூன்றாம்நிலை நகராட்சிகள் என 15 உள்ளாட்சி அமைப்புகள் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. பெரும்பாலான கிராமப் பஞ்சாயத்துகள் ரூ.35 கோடிக்கும் மேலாகப் பாக்கி வைத்துள்ளன.

மேலும், தூத்துக்குடி துறைமுகம், உர நிறுவனம், சிப்காட் என பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ரூ.18 கோடிக்கும் மேலாக குடிநீர் வாரியத்துக்கு பாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குடிநீருக்கென கட்டணம் வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் அந்தக் கட்டணத்தை குடிநீரைச் சுத்தமாக மக்களுக்கு வழங்கும் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும் அல்லவா? ஆனால், குடிநீர் கட்டணத்தை முழுவதுமாக உள்ளாட்சி நிர்வாகிகளே பங்குபோட்டு வேறு திட்டக்கணக்கு எழுதி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் ஒருவர் குடிநீர்க் கட்டணத்தைச் செலுத்த சில நாள்கள் தாமதம் ஆனாலும் குடிநீர் இணைப்பைத் துண்டித்து கட்டணத்தை வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் வடிகால் வாரியத்துக்குப் பணம் செலுத்தாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? அப்படிக் கட்டணம் செலுத்தாத உள்ளாட்சி அமைப்புகளின்

குடிநீர் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரமும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இல்லையாம். ஆகவே, குடிநீர் வடிகால் வாரியம் தனக்கான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் நிர்பந்தப்படுத்தி வசூலிக்க முடியாத நிலையும் உள்ளது என்கிறார் குடிநீர் வடிகால் வாரிய ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவர் கே.கே.என்.ராஜன்.

நிலைமை இப்படியிருக்க, குடிநீரில் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டதும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவில்லை என குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது உள்ளாட்சி அமைப்புகள் பழியையும் போட்டு வருவதாக ஆதங்கப்படுகின்றனர் வாரிய அதிகாரிகள்.

குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் குழு கூட்டமும் அவ்வப்போது கூட்டப்படுகிறது. ஆனால், அக்கூட்டத்தில்கூட வாரியத்துக்கான நிலுவைத் தொகையை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆனால், நிலுவைத் தொகைக்கான வட்டி தள்ளுபடி செய்யும் நடவடிக்கை மட்டும் மேற்கொள்ளப்படுகிறதாம்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த அரசு மழைநீர் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல, குடிநீரைப் பாதுகாப்பானதாக மக்களுக்கு வழங்கவும் அப்போதைய அரசு ஆர்வம் காட்டியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதற்கு அடுத்து வந்த திமுக அரசு மழைநீர் சேமிப்புத் திட்டத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டது. வருமுன் காப்போம் என்ற வாக்கியத்தைக் கூறி திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்த திமுக அரசு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு நிதியோ, மானியமோ வழங்கவில்லை.

ஆக, அடிப்படையில் மக்களுக்கு எது தேவையோ அதைத் தராத அரசாகவே திமுக அரசு இருந்தது. கோடை வெயில் இப்போது கொளுத்திவரும் நிலையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் குளிர்நீர், குளிர்பானம் என அருந்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி அனைவரும் நீரை நம்பியுள்ள நிலையில் அந்த நீர், நோய் பரப்பும் வகையில் இருந்தால் உடல்நலம் பாதிக்கும்.

ஆகவே, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சேர வேண்டிய நிதியை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வசூலித்து, அதை வைத்து மக்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க இப்போதைய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே சமூக நல விரும்பிகள் அனைவரது வேண்டுகோள்.

மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய அரசு துணைபோகிறது : பொன்முடி குற்றச்சாட்டு


சமச்சீர் கல்வியை நீக்கி, மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய அதிமுக அரசு துணை போகிறது என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்தபின் அவர் பேசியது:

ஆட்சியில் இருந்தபோது நடந்த கூட்டங்களுக்கு வந்ததைவிட இப்போது அதிகளவில் கூட்டம் வந்துள்ளது, இதுதான் திமுக. விழுப்புரம் மாவட்டம் மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளீர்கள்.

தேர்தல் தோல்வி குறித்து நாம் இங்கு பேசவரவில்லை, அதற்கான காரணங்களை நீங்கள் ஏற்கெனவே பேசிவிட்டிருப்பீர்கள். ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் 88-வது பிறந்தநாள் விழாவை பட்டிதொட்டியெல்லாம் கூட்டங்கள் நடத்தி கொண்டாட வேண்டும்.

தோல்வி நிரந்தரமல்ல, உள்ளாட்சித் தேர்தல் வருகிறது, அடுத்து மக்களவைத் தேர்தல் வருகிறது. இப்படி பரபரப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒரு தொகுதியில் வெற்றிபெற்று இவ்வளவு பெரிய இயக்கத்தை கட்டிக்காத்த தலைவர் (கருணாநிதி) நம்முடன் இருக்கிறார் என்ற மகிழ்வோடு நாம் கட்சிப் பணியாற்றுவோம்.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் ஒரே பாடமுறையில் கல்வி கற்க, 5 ஆண்டுகளாகப் படிப்படியாக கல்வியாளர்கள் குழு கருத்தைக் கேட்டே செயல்படுத்தியுள்ளோம். முத்துக்குமரன் குழுவுக்குப் பிறகு மற்றொரு குழுவும் அமைத்து தமிழ்வழி, ஆங்கில வழி என படிக்கலாம், ஆனால் ஒரே பாடத்தைப் படிக்க வேண்டும் என்பதுதான் சமச்சீர் கல்வி.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது சமச்சீர் கல்வி. இதனை நிறுத்துவதற்கு பதில் அதை செயல்படுத்த படிப்படியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி இருக்கலாம்.

மெட்ரிக் பள்ளிகள் லாபமடைய இக்கல்வி முறையை அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு துணைபோகிற அரசாக அதிமுக அரசு உள்ளது என்றார்.