Saturday, May 28, 2011

சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி.


சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் காரணமாக அவதிப்பட்டு வரும் ரஜினிகாந்த்துக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூருக்கு நேற்று அவரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

நேற்று இரவு எட்டரை மணியளவில் முதலில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் விமான நிலையம் சென்றனர்.

பின்னர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 10 மணியளவில் ராமச்சந்திரா மருத்துவமனையி்ன் பின்புறம் வழியாக கீழே அழைத்து வரப்பட்டார். சக்கர நாற்காலியில் வைத்து அவரை கூட்டி வந்தனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் வெள்ளை நிற உடையில் அவர் இருந்தார்.

அதன் பின்னர் அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது வேனின் விளக்குகளை அணைத்து விட்டனர். ரஜினியை வேனில் ஏற்றிய பின்னர் வேன் கிளம்பிச் சென்றது. அப்போது மருத்துவமனைக்கு வெளியே பலத்த கெடுபிடிகளையும் தாண்டி கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினிகாந்த்தை வாழ்த்திக் கோஷமிட்டனர். அவரைப் பார்க்கவும் முண்டியடித்தனர். பலர் வேனுக்குப் பின்னால் ஓடவும் செய்தனர்.

உணர்ச்சிப் பெருக்குடன் ரசிகர்கள் காணப்பட்டதால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

யார் யார் சென்றனர்?:

ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஸ்வின், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரக மருத்துவ நிபுணர் பி.சௌந்தர்ராஜன், எலெக்ட்ரோ பிஸியாலஜிஸ்ட் டி.ஆர்.முரளீதரன் உள்ளிட்டோர் சென்றனர்.

இரவு 11.30 மணிக்கு புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினி புறப்பட்டுச் சென்றார்.

சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜி.கே.வாசன் உதவி:

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு ரஜினியும் அவரது குடும்பத்தினர், மருத்துவக் குழுவினர் செல்ல உடனடி விசாவுக்கும், விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை ஆம்புலன்ஸ் செல்வதற்கான சிறப்பு அனுமதி பெறவும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உதவி செய்துள்ளார்.

உற்சாகத்துடன் இருக்கிறார் ரஜினி-லதா:

சிங்கப்பூர் செல்லும் முன் லதா ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.

ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தனிமையில் இருக்க விரும்புகிறார்-ஐஸ்வர்யா:

ரஜினிகாந்த் குறித்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா கூறுகையில், அப்பா மற்ற பயணிகளுடன் தான் சிங்கப்பூர் செல்கிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. உடலில் உபரியாக இருக்கும் நீர்ச்சத்தை குறைக்கவும், புத்துணர்வுக்காகவும்தான் சிங்கப்பூர் போகிறார். அவர் கொஞ்ச காலம் குடும்பத்தினருடன் தனிமையில் இருக்க விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் அவர் ஓவ்வொரு வீட்டிலும் நேசிக்கப்படுபவராக-அந்த வீட்டில் ஒருவராக இருக்கிறார். அவரை பற்றி வரும் வதந்திகள் காரணமாக பொதுமக்கள் பீதியடைவது, அப்பாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரையும் அது வருத்தப்பட வைத்திருக்கிறது என்றார்.

ரூ.2400 கோடி கடன் : எரிபொருள் நிறுத்தம் , ஏர் இந்தியா விமானங்கள் ரத்து !


ரூ.2400 கோடி வரையிலான கடன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எரிபொருள் சப்ளையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று திடீரென நிறுத்தின. இதனால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், மாலையில் நிலைமை சீரானது.

விமானங்களை இயக்குவதற்கு பெட்ரோல் கலந்த 'ஏவியேசன் டர்பைன் ஃப்யூயல்' (ஏடிஎப்) என்ற எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விமான நிறுவனங்கள் வாங்கி வருகின்றன. மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு தேவையான 63 சதவீத எரிபொருளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்குகிறது.

தனியார் விமான நிறுவனங்களுக்கு கிலோ லிட்டருக்கு ரூ.1800 வரை சலுகையையும் பணம் செலுத்த 90 நாள் வரை அவகாசமும் அளிக்கப்படுகின்றன.

இதே போன்ற சலுகையை அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனமும் கோரிக்கை விடுத்தது. எனவே, மத்திய மந்திரிசபை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டது.

ரூ.2400 கோடி கடன்

அதைத் தொடர்ந்து, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.5 ஆயிரம் வரை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டது. அதன்படி, தினந்தோறும் ரூ.18 கோடியே 50 லட்சம் வரை எரிபொருளுக்கு ஏர் இந்தியா வழங்க வேண்டும். ஆனால், சராசரியாக ரூ.13 கோடி மட்டுமே செலுத்தி வந்தது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக பெரும் கடன் தொகை நிலுவையில் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி வரை ஏர் இந்தியாவுக்கு பாக்கி உள்ளது. அதற்கான வட்டியையும் சேர்த்தால் ரூ.2400 கோடி ஆகிறது. இதுபோல, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.300 கோடி வரை ஏர் இந்தியா நிறுவனம் கடன் வைத்துள்ளது.

விமானங்கள் ரத்து

தொடர்ந்து கடன் தொகை அதிகரித்து வருவதால், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தன. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான எரிபொருள் வழங்குவதை திடீரென நிறுத்தின. குறிப்பாக கோழிக்கோடு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களில் எரிபொருள் சப்ளை செய்யப்படவில்லை.

"தனியார் விமான நிறுவனங்கள் அனைத்தும் வங்கி உத்தரவாதத்தை அளித்து தான் 90 நாள் வரை கால அவகாசத்தை பெறுகின்றன. தொடர்ந்து சலுகைகளை கேட்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த தகவல் தெரியுமா?", என எண்ணெய் நிறுவனங்கள் கேள்வி எழுப்பின.

இதனால், பல்வேறு நகரங்களில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. திருவனந்தபுரத்தில் மட்டும் அதிகபட்சமாக 6 விமானங்கள் ரத்தாகின.

மீண்டும் எரிபொருள் சப்ளை

உடனடியாக எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டகால், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் நேற்று மாலை முதல் மீண்டும் எரிபொருள் சப்ளை செய்தன. எனவே விமானங்கள் வழக்கம்போல இயங்கின.

சோனியாவுடன் தயாநிதி மாறன் சந்திப்பு.


திமுக எம்பியும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி சிறையில் உள்ள நிலையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று முன் தினம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாதும் உடனிருந்தார்.

கனிமொழியை திகார் சிறையில் கருணாநிதி கடந்த திங்கள்கிழமை சந்தித்தார். ஆனால், சோனியாவையோ பிரதமரையோ அவர் சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந் நிலையில் வரும் ஜூன் மாதத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 3வது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடிக்க அதிமுக பல மறைமுக முயற்சிகளில் இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சிறையில் கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு:

இந் நிலையில் திகார் சிறையில் உள்ள கனிமொழியை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை சந்தித்தார்.

இந்த சந்திப்பு 5.15 முதல் 6 மணி வரை நடந்தது. அப்போது மத்திய இணையமைச்சர் நெப்போலியனும் உடனிருந்தார்.

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் டெல்லி வந்துள்ளார்.

சித்தார்த் பெகுரா ஜாமீன் மனு-தீர்ப்பு ஜூன் 3க்கு ஒத்திவைப்பு:

இதற்கிடையே 2ஜி முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஜூன் 3ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி ஒத்தி வைத்துள்ளார்.

ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறன் மீது வழக்கு?


ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஏர்செல் நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார்.

இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்ததாக பரவலான கருத்து இருந்து வருகின்றது.

இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரன் முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது.

இலங்கை தமிழர் வம்சாவழியைச் சேர்ந்த, மலேசிய தொழிலதிபரான டி.அனந்தகிருஷ்ணன் என்பவர் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸை நிர்வகித்து வருகிறார்.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை வரும் ஜூலை மாதம் முன்பு, அதாவது உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் தான் அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க சிபிஐ திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

சென்னை : மின்சார நிறுத்தம் - கடற்கரை ரயில்கள் தாமதம்


சென்னை: தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில்கள் மற்றும் கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்று (28.05.2011) காலை மின்சார நிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நின்றன.

இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்றன. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.


சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டுவந்தது ஏன் ? கலைஞர் விளக்கம்.


கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2006 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று தி.மு.க. அறிவித்திருந்தது. சமச்சீர் பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம் 2010 ம் ஆண்டு இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010 11 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் நடைமுறை படுத்தப்பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

அன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 1.3.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கல்வியாளர்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சமச்சீர் கல்வி சட்டத்தின்படி 2010 2011 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டன.

சமச்சீர் கல்விமுறையை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தலாம் என்றும், முதற்கட்டமாக 2010 2011 கல்வி ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், அதனைத் தொடர்ந்து 2011 12 கல்வியாண்டில் பிற எஞ்சிய அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக 2010 2011 ம் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் முதலாம் வகுப்புக்கு தேவையான 61 லட்சம் பாடப்புத்தகங்களும் ஆறாம் வகுப்புக்கு தேவையான 84 லட்சம் பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு அவைகள் முறையே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களும் கடந்த ஆண்டு அந்த புத்தகங்களை படித்து முடித்துள்ளார்கள்.

அரசின் கொள்கை முடிவின்படி 2011 2012 ம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

இந்த வகுப்புகளுக்கான பாட திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொது மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது.

எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் அனைவருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த காலக்கட்டத்தில் கல்வியிலும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தான் தி.மு.கழகத்தின், ஏன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான கல்வியாளர்களின் நிலை. அதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகத்தான், எடுத்த எடுப்பிலேயே தான்தோன்றித் தனமாக அதனை அறிவித்து விடாமல், அதற்காக வல்லுநர்கள் குழு, கல்வியாளர்கள் குழு, அதிகாரிகள் குழு என்றெல்லாம் நியமித்து, அந்த குழுக்களை கொண்டு வெளிமாநிலங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய செய்து, அதன் பிறகு தான் படிப்படியாக சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, அது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென்று அந்த திட்டத்தை கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து தயார் செய்யப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக தயாரித்து, அதன்பிறகு அச்சடித்து அவற்றை விநியோகிப்போம் என்பதும் சரியான நடைமுறை தானா என்பதை அரசினர் எண்ணி பார்க்க வேண்டும்.

சமச்சீர் கல்வித்திட்டம் என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை வழங்கிட உருவாக்கப்பட்ட திட்டமாகும். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம், ஓ.எஸ்.எல்.சி., போன்ற பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களோடு ஒப்பிடும்போது, ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் போட்டியிட முடியாமல் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை இருந்ததை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

சமச்சீர் கல்வித்திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் தற்போதைய முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு கட்சி 24 5 2011 அன்று விடுத்துள்ள அறிக்கையில், "சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் முழுமையாக கை விடப்படுவதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள் கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்திருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமைக் கட்சியான இந்திய கம்ழூனிஸ்டு கட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில் "சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வித் துறையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு அதனை தள்ளி வைப்பதாக அறிவித்திருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது'' என்று குறிப்பிட்டிருப்பதையும், அ.தி.மு.க.வின் மற்றொரு தோழமை கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி "தரமான கல்வியுடன் கூடிய சமச்சீர் கல்வி திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்து வோம்'' என்று கூறியிருப்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே.சியாம்சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர்கள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் நேற்றையதினம் கூறும்போது, "சமச்சீர் கல்வி சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக்குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம் தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை இந்த நீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவை கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்'' என்று தெரிவித்து, அது இன்றைய ஏடுகளில் எல்லாம் பெரிதாக வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றையதினம் இந்த துறையின் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் அந்த கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் போன்றவர்களிடம் சமச்சீர் கல்வி திட்டம் கைவிடப்பட மாட்டாது என்று கூறியதாக "தீக்கதிர்'' நாளேட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. அரசினால் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இந்த அரசின் அறிவிப்புக்கான காரணம் என்றால் அதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்திலே அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடுவதற்காக மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் பாடலில் "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்'' என்ற வரியை நீக்கி விட்டுத்தான் தமிழக அரசின் சார்பில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழகத்திலே அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கச் செய்தேன்.

அந்தப்பாடல் தற்போது சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்களிலே இருப்பதால் இன்றைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தையே எதிர்த்திட முனையுமா? மேலும் கோவையில் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக நான் தொகுத்து எழுதிய வாழ்த்துப் பாடல் அந்த புத்தகத்திலே இடம் பெற்றுள்ளது. அந்தப்பாடலில் தொல்காப்பியம், சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பர், அவ்வை என்றெல்லாம் அனைத்து இலக்கியங்களையும் இலக்கிய கர்த்தாக்களையும் பாகுபாடு பாராமல், இணைத்து எழுதிய பாடல் சமச்சீர் கல்விப்பாட புத்தகங்களிலே இடம் பெற்றுள்ளது தான் அரசின் இந்த முடிவுக்கு காரணமா? ஆம் என்றால் அந்தப்பாடல் நான் தொகுத்து எழுதியது என்பதையே எடுத்து விட்டு அல்லது அந்த பாடலையே முழுமையாக எடுத்து விட்டு சமச்சீர் கல்விக்கான புத்தகத்தை வெளியிடுவதில் தவறு ஒன்றுமில்லையே?

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை உருவாக்க மாட்டோம்: ஜெயலலிதா


தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்,

தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் தங்களுடைய கரங்களைப் பிடித்து, தங்களை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தார்கள். இது சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒரு நடைமுறை.

நாடாளுமன்ற மக்களவையானாலும், மாநிலங்களிலுள்ள சட்டமன்றப் பேரவையானாலும் இந்த வழக்கம் உள்ளது. இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது? என்பதை எடுத்துச் சொன்னால் அனைவருக்கும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த மரபுக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. நம்முடைய இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டிஷ் ஜனநாயகத்தை பின்பற்றியே அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் எவ்வகையில் அமைக்கப்பட்டதோ அதே வகையில் அமைக்கப்பட்டது தான் இந்திய பாராளுமன்றமும், இந்திய சட்டமன்றங்களும். இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாராளுமன்றம் வந்துவிட்டது. சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார். பாராளுமன்றமும் இருக்கும். இந்தியாவில் அந்த முறையைப் பின்பற்றிய போது மன்னர் இல்லை, ஜனாதிபதி இருக்கிறார்.

அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் மன்னர் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று விரும்புவார். அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டும். பெரும்பாலும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மன்னருடைய விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். இந்தச் செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் பேரவைத் தலைவர். அதனால்தான் பாராளுமன்றத் தலைவர் என்று பெயரை வைக்காமல் ஸ்பீக்கர் என்று பெயர் வைத்தார்கள்.

நாம் தான் இங்கே பேரவைத் தலைவர் என்று அழைக்கிறோமே தவிர, இன்று வரை, அங்கே இங்கிலாந்தில் ஸ்பீக்கர் என்று தான் அழைக்கிறார்கள். அப்படி மன்னர் எதை விரும்பினாரோ அதை செய்ய இயலாது என்று ஒரு ஸ்பீக்கர் சென்று துணிச்சலுடன் மன்னரிடம் கூறும் போது என்ன நடக்கும்? சில காரியங்கள் செய்வதற்கு தான் மன்னருக்கு பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரச்சினைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.

ஆகவே, தான் விரும்பியது நடக்காது என்று ஸ்பீக்கர் எடுத்துரைக்கும் போது, உடனே மன்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார். இது பலமுறை நடந்ததால் யாருமே அந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே புதியதாக பாராளுமன்றம் அமையும்போது, ஒரு ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கும் போது, இன்னார் தான் ஸ்பீக்கர் என்று அறிவித்தவுடன் அவர் உடனே தப்பித்தால் போதும், தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்.

அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து, இழுத்து வந்து, ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு. காலப் போக்கில் அது மாறி இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு, ஸ்பீக்கர் இப்போது ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை, ஸ்பீக்கரின் தலையை எடுங்கள் என்று சொல்லக்கூடிய மன்னரும் இங்கே இல்லை. ஆனால் இந்த மரபு மட்டும் அப்படியே இருக்கிறது.

நிச்சயமாக ஆளுங்கட்சி சார்பில் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை நாங்கள் எந்த நாளிலும் உருவாக்க மாட்டோம் என்றார்.