Saturday, May 28, 2011

விரைவில் உடல்நலம் பெற்று திரும்புவேன் : ரஜினிகாந்த் பேச்சு.


நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் புறப்பட்டார். மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆம்புலன்ஸ் மூலமாக அவர் விமானத்தின் அருகேயே அழைத்துச் செல்லப் பட்டார். இதற்காக சிறப்பு அனுமதி வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெறுகிறார்.

.ரஜினிகாந்த் பேசிய குரல் பதிவை ரஜினி மகள் சௌந்தர்யா ஊடகங்களுக்கு கொடுத்துள்ளார்.

ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுகிறேன்....... பரபரப்பு ஆடியோ

அவர் புறப்பட்டுப் போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக் காத்திருந்தனர். ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆம்புலன்ஸில் ரஜினியை அழைத்துச்சென்றதால் பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது குரலை பதிவு செய்து கொடுத்திருக்கிறார் ரஜினி.

அந்த ஆடியோவில் ரஜினியின் குரல் மிகவும் தளர்ந்திருக்கிறது. அவர் உடல் நிலையை அவரின் குரல் உணர்த்துகிறது.

அந்த ஆடியோ :

‘’ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன். ஹா..ஹா...ஹா.... ஹேப்பியா போய்கிட்டு இருக்குறேன் நானு.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா. நீங்க கொடுக்கிற ஒரு அன்புக்கு நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.

பணம் வாங்குறேன்... ஆக்ட் பண்றேன்... அதுக்கே இவ்வளவு அன்பு கொடுக்கிறீங்கன்னா, இதுக்கெல்லாம் நான் என்னத்த திருப்பி கொடுக்கிறது.

டெஃபனெட்டடா நீங்க எல்லோரும் தலை நிமிர்ந்து வாழும்படி, எங்க fans through out the world, தலை நிமிர்ந்து வாழும்படி நான் நடந்துக்கிறேன் கண்ணா. கடவுள் கிருபை என் மேல் இருக்கு. என் குருவின் கிருபை என் மேல் இருக்கு.

எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்களோட கிருபை எல்லாம் என் மேல, என் மேல இருக்கு. நான் சீக்கிரம் வந்துடறேன்.

ஓகே. பாய். குட்’’


ஆடியோவை கேட்க இங்கே கிளிக் செய்யவும்....

http://www.nakkheeran.in/WebTv.aspx?WTV=8


டீசல் விலை உயர்த்தப்பட்டால் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.


டீசல் விலை உயர்த்தப்பட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்து உள்ளது.

இது குறித்து இச் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் வியாழக் கிழமை நிருபர்களிடம் கூறியது:

2008-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 132.47 டாலராக இருந்தது. இப்போது ஒரு பேரலுக்கு 97 டாலராக குறைந்துள்ளது.

ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு ஒரு லிட்டர் டீசல் ரூ.37.57-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.40.63-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறி, மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. இதனால், ஏற்கெனவே கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் லாரி தொழில் மேலும் நலிவடையும் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, டீசல் விலையை அதிகரிக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இச் சூழலில், வரும் 9-ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. இக் கூட்டத்தில் டீசல் விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

டீசல் விலை உயர்த்தப்படும்பட்சத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் டீசல் விலை மாறுபடுகிறது. இந்தியா முழுவதும் டீசலுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

கடந்த ஓராண்டில் மட்டும் லாரி டயர்களின் விலை 52 சதவீதம் வரை அதிகரிக்கத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.21 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ஜோடி டயர்கள், இப்போது ரூ.32,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டயர் விலை மேலும் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால், லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ள தனியார் டயர் தயாரிப்பு நிறுவனங்களைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனங்களுக்காக யாரும் லாரிகளை இயக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் வெளிநாடுகளில் இருந்து டயர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் நல்லதம்பி.

சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது.


சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதியளித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு எடுத்துள்ள முடிவு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே, இது தொடர்பாக சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அ. சௌந்திரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்கள்.

இருவரும் கூறிய விஷயங்களை அமைச்சர் பொறுமையாகக் கேட்டறிந்தார். பின்னர் சமச்சீர் கல்வித் திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதனை கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

இப்போது அரைகுறையாக உள்ள இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் அமைச்சரவை முடிவின்படி, ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்தபின் சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்றார்.

ஏழை, எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை எளிதில் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. அமைச்சரவை இது குறித்து பரிசீலினை செய்யும் என்றும் அவர் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா?


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்கள், தங்களது விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சென்று விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

விண்ணப்பத்தைப் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கவும் ஜூன் 2-ம் தேதி கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி, முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

இணையதளத்தில் வசதி: பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (மே 25) முதல் வழங்கப்பட்டு வருவதால், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற்ற மாணவர்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வருகின்றனர். சில மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போட்டு வருகின்றனர்.

இதே போன்று டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேரவும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மற்றும் டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதை தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 தேர்வு பதிவு எண் ஆகிய ஏதாவது ஒன்றை "டைப்' செய்யும் நிலையில் விண்ணப்பம் சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.

சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா?


சமச்சீர் கல்விச் சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்தக் கல்வியாண்டில் பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என்றும் அண்மையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே. ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. பாலு கூறியதாவது:

சமச்சீர் கல்வி முறை பற்றி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன் தலைமையிலான குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த புதிய பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2011-2012-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே ரூ. 200 கோடி செலவு செய்துள்ள அரசு, புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க மேலும் சுமார் ரூ. 200 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாலு வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து தங்களுக்கான சிறந்த பாடத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது.

இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்களுக்காகவே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.

இதற்கிடையே, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?

தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?

முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?

இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மக்களுக்கு எதிராக மக்களாட்சி.

உதயை மு. வீரையன்


நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் மக்களின் தீர்ப்பு ஆளும் கட்சிகளுக்கு எதிராகவே முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சிகள் அதிரடித் தோல்வியைச் சந்தித்தன. அசாம் மட்டுமே தப்பிப் பிழைத்தது. இதற்கு என்ன காரணம்?

"மக்களாட்சி' என்பது மக்களுக்கு எதிராகவே நடத்தும் ஆட்சி எனப் புதிய கொள்கை உருவாக்கிக் கொண்டதுதான். எப்படியோ திரட்டிய கறுப்புப் பணத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றனர். பிறகென்ன? ஐந்தாண்டுகளுக்குக் கவலையில்லை. கட்சிகளின் ஆட்சியில் மக்களை மதிப்பதில்லை. மக்கள் குரலுக்கு மதிப்பளிப்பதும் இல்லை.

உத்தரப் பிரதேசத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதை, கங்கா எக்ஸ்பிரஸ் பாதை என்னும் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குக் கூடுதல் இழப்பீடு கோரி நொய்டாவின் புறநகர்ப் பகுதியான பட்டா பர்சால் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகளும், காவல்துறையினரும் என நான்குபேர் பலியாயினர்.

இதனால் அங்கே காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் குடியிருப்புகள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் காணாமல் போய்விட்டனர். அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நொய்டாவில் நடைபெற்ற வன்முறைகளுக்கு ஆளும் அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதலமைச்சர் மாயாவதியின் சொந்த மாவட்டத்திலேயே விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

விவசாயிகளிடமிருந்து நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொண்டு, அவர்களை கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கவும் அரசு முயல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர் மீது இருபதுக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாய சங்கத் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய தோழர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது. அத்துடன் அவர்களைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பதற்றம் நீடிக்கவே செய்கிறது.

நாட்டின் உயிர்நாடியான விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலத்திலும் கவலைக்குரியதாகவே மாறி வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும்போது அவர்களுக்காகக் குரல்கொடுப்பதும், அவர்களே ஆளும் கட்சியாக மாறியதும், அதே விவசாயிகளை ஒடுக்குவதும் வாடிக்கையாகிவிட்டது, இன்னும் சொல்லப்போனால், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே அரசியல் கட்சிகள் மக்கள் நலம் நாடுபவர்களாக இருக்கின்றனர்.

மாநிலத்தில் சட்டம், ஒழுங்கைச் சீர்குலைப்பதற்காகவே மக்களை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக ஆளும் மாயாவதி குற்றம்சாட்டுகிறார். சட்டம் இயற்றி ஒழுங்குபடுத்த வேண்டிய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்னைகளை அரசியலாக்கவே விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் பற்றி எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளார். நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டம் அவசியம் என்றும், வளர்ச்சிப் பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய நஷ்டஈடு, விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஆகியவை மத்திய அரசின் உத்தேச மசோதாவில் வலியுறுத்தபட்டுள்ளன என்றும் அக்குழு கூறியுள்ளது.

இத்தகைய பிரச்னைகளுக்குச் சட்ட அடிப்படையில் ஒருமித்த கருத்தை உருவாக்க இயலாது என்றும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசுதான் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

உழைத்து, உழைத்து ஓடாகிப்போன விவசாயிகள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகின்றனர். விவசாயிகள் சங்கத்தலைவர் மேல் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுத்து தேடுதல் வேட்டை நடத்துவதும், அவர்களைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. ஒடுக்கப்பட்டவர் ஆட்சியில் உணவு உற்பத்தி செய்பவர் நிலங்களை இழந்து நிர்கதியாகத் தெருவில் நிற்க வைப்பது சரியாகுமா?

தேசிய மனித உரிமை ஆணையம் இதை வன்மையாகக் கண்டித்துள்ளது. நொய்டாவில் இப்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை கவலையளிக்கிறது என்றும், காவல்துறையினர் அத்துமீறி விவசாயிகளின் வீடுகளுக்குள் நுழைந்திருப்பது பற்றிப் புகார் வந்துள்ளது என்றும், இதன் அடிப்படையில் விசாரணைக்காக ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.

பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்குப் பின்னால் அரசியல் கட்சிகள் நின்றால் தூண்டிவிடுவதாகப் புகார் கூறுவது எல்லாம் ஆளும் கட்சிகளுக்கும் வழக்கமானதுதான். இதே ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது இதைத் தானே செய்தன?

மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணுமின் நிûலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீது, காவல்துறையினரைக் கொண்டு அரசு தாக்குதல் நடத்தியது. அப்போது காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதனால் பலியானவருக்காக முழு அடைப்பும் அதைத் தொடர்ந்து வன்முறையும், பதற்றமும் பரவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 144 தடையுத்தரவு போடப்பட்டது.

ஜெய்தாப்பூரில் அமைக்கவிருக்கும் 6 மின் உலைகளைக்கொண்ட இந்த மின் நிலையம் உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம், அதனால் ஏற்பட்ட சுனாமியால் அங்குள்ள அணு உலைகளின் குளிர்விப்பான்கள் செயலிழந்து கதிர்வீச்சுப் பரவியதால் இங்கும் போராட்டம் தீவிரமடைந்தது.

அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட அரசு மறுப்பது, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானது ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், "அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் அரசியல் சதி' என அரசு கூறியது.

இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது. "ஜெய்தாப்பூர் திட்டத்துக்காக பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் அணு உலைகள் இதுவரை உலகில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. அவற்றின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது' என்று அது தெரிவித்துள்ளது.

ஆனால், இதை மகாராஷ்டிர அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அத்துடன் காவல்நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது, அணுமின் நிலையம் அமையவிருக்கும் பகுதியில் வன்முறை நடந்தது ஆகியவற்றுக்குப் பின்னணியில் அரசியல் சதி ஏதும் இருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். இது எப்படி இருக்கிறது?

அணுமின் நிலையம் என்பது உலகம் முழுவதும் அழிவையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பெரிய வல்லரசு நாடான ரஷியாவின் செர்னோபிலில் நடந்த அணு உலை வெடிப்பை மறக்க முடியுமா? இப்போது ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் அணு உலைகள் வெடித்துச் சிதறி மக்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

நமது நாட்டில் போபால் நச்சுக்காற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி, அவர்களது சந்ததியினரும் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சுக்குப் பாதுகாப்புத் தேட முடியுமா?

மக்கள் எதிர்ப்புக்குக் காரணம் இதுதான். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அந்த மாநில அரசு இல்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் இதுவே.

இடதுசாரிக் கட்சிகளின் பிடியில் 34 ஆண்டுகள் இருந்த மேற்கு வங்க மாநில அரசு இந்தத் தேர்தலில் சரிந்து போனதற்குக் காரணம் என்ன? மாநில முதல்வராக ஜோதிபாசு இருந்தவரை சுமுகமாகவே இருந்தது. அவர் ஓய்வுபெற்ற பிறகு புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வரானதும் பிரச்னைகள் ஆரம்பமாயின.

சிங்கூரிலும், நந்திகிராமிலும் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியபோதுதான் விவசாயிகள் வெகுண்டெழுந்தனர்.

மேற்கு வங்க அரசு எல்லா அரசுகளையும்போல காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முனைந்தது; கட்சிக்காரர்களையும் களத்தில் இறக்கியது. விவசாயிகளுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் களத்தில் இறங்கியது. இரண்டு பக்கமும், உயிர் இழப்புகளும், சேதங்களும் அதிகமாயின. தொழிலதிபர் டாடா வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது; இப்போது ஆளும் கட்சியே வெளியேற்றப்பட்டுவிட்டது.

அரசாங்கம் என்பது மக்களுக்கு விருப்பமானதைச் செய்வதல்ல; மக்களுக்குத் தேவையானதைச் செய்வதுதான். ஆனால், மத்திய, மாநில அரசுகள் தங்கள் சுயநலத் தேவைகளுக்காகச் செயல்படும்போது மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

மக்களின் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கக் கூடாது. வாய்ப்புக் கிடைக்கும்வரை வாய்மூடியே இருப்பார்கள். எரிமலைகூட பார்ப்பதற்கு அமைதியாகத்தான் தெரிகிறது.

வீரியம் இழந்த புதிய விதைப்புரட்சி.

ஆர்.எஸ். நாராயணன்


எதிர்கால உணவுத் தேவையை நிறைவேற்ற இந்தியா 2020-ல் நுழையும்போது அரிசி உற்பத்தி மட்டும் 12.21 கோடி டன்னுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய திட்டக்கமிஷன் இலக்கு நிர்ணயித்தது.

இன்றுள்ள வளர்ச்சி வீதம் நீடித்தால்-அதாவது ஆண்டுக்கு 1.34 சதம் என்றால் 2020-ல் 10.6 கோடி டன் அரிசிதான் இயலும். 12.21 கோடி டன் இலக்கை எப்படி நிறைவேற்றுவது என்ற கேள்விவந்தபோது, 2007-ல் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷன் உருவாக்கப்பட்டு, 2011-12-ல் அரிசி உற்பத்தியை 10 கோடி டன்னுக்கு உயர்த்த முடிவானது. அரிசியுடன் கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தி உயர்வுக்கான வரையறையும் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷனில் செய்யப்பட்டது. இவற்றுக்காக 4,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில் அரிசி உற்பத்தி உயர்வுக்கான பங்கு 1963 கோடி ரூபாய். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ""கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது பசுமைப்புரட்சி'' என்று கோஷமிட்டு, ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா நிதியிலிருந்து 400 கோடி ரூபாய் பணத்தை மேற்படி மாநில அரிசி, பருப்பு, எண்ணெய் வித்து, உற்பத்தி உயர்வுக்காக ஒதுக்கியது நினைவிருக்கலாம். கிழக்கு மாநிலங்கள் என்றால் இவற்றில் பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா, கிழக்கு உ.பி. அடங்கும்.

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியங்களில் அரிசியின் உற்பத்தித்திறன் - அதாவது தலா ஹெக்டேர் விளைச்சல் பஞ்சாப் - ஆந்திரப் பிரதேசம் - தமிழ்நாடு அளவைவிடக் குறைவாயிருப்பதன் காரணம் வீரிய ரகம் அல்லது ஒட்டுவீரிய ரக விதைப்பயன் குறைவு என்று கூறும் கிரிக்கெட் விவசாய அமைச்சர் சரத்பவார் சீனாவைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுகிறார்.

சீனாவில் சுமார் 3 கோடி ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் சுமார் 2 கோடி ஹெக்டேர் நிலத்தில் வீரிய ஒட்டு ரக நெல் பயிராகிறது. சீனாவில் வீரிய ஒட்டு ரகம் சுயம்பூ ஐ.ஆர்.ஆர்.ஐ. மணிலா தயாரிப்பு அல்ல. 1964-ல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ள அந்தத் தொழில்நுட்பத்தில் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் ஒரு வரிசையில் மலட்டு நெல்லும் ஒரு வரிசையில் வீரிய ரகமும் நட்டு வீரிய ஒட்டு என்ற ஹைபிரீட் விதை நெல் உற்பத்தியாவதாக ஒரு கருத்துண்டு.

மலட்டு நெல்லையும் வீரிய நெல்லையும் கலந்து வீரிய ஒட்டு விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிந்த இந்திய அரிசி விஞ்ஞானி ரிச்சாரியோ, இந்தியாவுக்கு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்று ஃபோர்டு பவுண்டேஷனை எதிர்த்துப் போர் தொடுத்தார். ரிச்சாரியோ, கட்டாக் அரிசி ஆய்வு நிலையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் டைரக்டராகவும் செயல்பட்டார்.

ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்றதால் அவரை ஓரம் கட்டினார்கள். அவர் வழக்குத் தொடர்ந்தார். அவருக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டது. முடிவில் இதய நோய் வந்து இறந்துபோனார். ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் விதையை அப்போதே அவர் வேண்டாம் என்றார். இப்போதுதான் மத்திய அரசு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வீரியம் இழந்ததை உணர்கின்றனர். இப்போது சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்யலாமென்று யோசிக்கப்படுகிறது.

சீனாவின் உற்பத்தித்திறன் 6.61 டன் நெல். இந்தியா 3.37 டன். இதன் காரணம் வீரிய ஒட்டு ரக நெல் மட்டுமல்ல. சீனாவில் 90 சதவீத சாகுபடி நிலம் நீர்வளம் நிரம்பியது. இந்தியாவில் சுமார் 50 சதவீத நெல் சாகுபடி நிலம் மட்டுமே நீர்வளம் உள்ளது. மானாவாரி நெல் சாகுபடி சீனாவில் இல்லை. தவிரவும் இந்தியாவைவிட சீனாவில் ரசாயன உரம் அதிகம் வழங்கப்படுகிறது. ஆகவே, சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்வதால் மட்டும் உற்பத்தியை உயர்த்த இயலாது. நமது சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல மகசூல் தரக்கூடிய நெல் விதைகளைத் தேர்வு செய்வது நல்லது.

அரிசி உற்பத்தியை உயர்த்த வீரிய ஒட்டு நெல் விதைகளே சரியான தீர்வு என்று கூறிய அமைச்சர் சரத் பவாரின் யோசனையை ஏற்று கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் உள்ள அனைத்து அரிசி ஆராய்ச்சி நிலையங்களும் முழு மூச்சில் செயல்பட்டு வெளியிட்ட வீரிய ஒட்டு எதுவுமே நல்ல பலன் தரவில்லை. குறிப்பாக, கிழக்குப் பிராந்தியத்தில் தோல்வியே. சுமார் 43 வீரிய ஒட்டு நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தோல்விக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விதை ரகங்கள் முதற்கண் தடுமாறும் தட்பவெப்பத்தைத் தாக்குப் பிடிக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிப்படையாத மடுவு முழுங்கி போன்ற பல ரகங்கள் கங்கைப் பிரதேசங்களில் உண்டு. இதற்கு நேர்மாறாக நீர் இல்லாமல் வறட்சியுறும் சூழ்நிலைக்கு ஏற்ப வறட்சி தாங்கும் நெல்விதை ரகங்களும் உண்டு. குளிரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. உவரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. மானாவாரி ரகங்களும் உள்ளன. மாநில அளவில் புவியியல் தட்பவெப்ப மாற்றங்களை அனுசரித்துப் பயிராகும் விதை ரகங்கள் வீரிய ஒட்டு ரகங்களை விடவும் விளைச்சல் கூடுதலாயுள்ளன.

வீரிய ஒட்டு ரகங்களை சிறு, குறு விவசாயிகளாலும் பழங்குடி விவசாயிகளாலும் ஏற்க முடியாது. வீரிய ஒட்டுரக நெல்லுக்கு ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். அவற்றின் சாகுபடி அடக்கச் செலவும் அதிகம் என்பதால் கிழக்குப் பிராந்திய விவசாயிகள் ஏற்க மறுக்கின்றனர். எனினும், பணவசதியுள்ள விவசாயிகளுக்கு தட்பவெப்பப் பிரச்னை இல்லாத புவியியல் சூழல் உள்ள நிலங்களில் மட்டுமே சீனாவில் விளையக்கூடிய உற்பத்தித்திறனைப் பெற முடியும், பெற்றும் உள்ளனர். ஆனால், தட்பவெப்பத்தை அனுசரித்து எல்லா நிலங்களுக்கும் பொருந்தும் விதை ரகங்கள்தான் இன்றைய தேவை.

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சிறப்பாக விளையும் சீன வீரிய ஒட்டு பெரும்பாலான இடங்களுக்குப் பொருந்தாது. எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெற முடியாது என்று வேளாண் துறைசார்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரிசா மாநிலத்தில் பருவம் - பட்டம் - புவியியல் தட்பவெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பல பாரம்பரிய நெல் விதைகளைப் பயிர் செய்து வெற்றி கண்டுள்ள நடாபர் சாரங்கி என்ற விவசாயியின் வெற்றிக்கதை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தை மிகவும் கவர்வதாயுள்ளது.

77 வயதாகும் சாரங்கி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். கோர்தா மாவட்டத்தில் நரிஷோ என்ற கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் 350 வகையான நெல் ரகங்களை விதைப் பயனுக்கென்றே சாகுபடி செய்து உள்ளூர் மக்களுக்கு வழங்குகிறார். அவருடைய பாரம்பரிய விதைகளை வாங்கிச் செல்லும் விவசாயிகள் நல்ல லாபத்தில் விவசாயம் செய்வதுடன் விளைச்சலும் கணிசமாயுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பசுந்தாள் உரம், இயற்கை உரம் கொண்டு நெல் பயிரிட்டு விளைந்ததை அறுவடை செய்து அரிசியாக்கி மணக்க மணக்க உண்பதுடன் நல்ல விலைக்கு விற்பனையும் செய்கின்றனர். சாரங்கி சேகரித்துள்ள பாரம்பரிய விதைகளின் பெயர்களில் பக்திமணமும் உண்டு. உதாரணம்: கேதார கௌரி, பத்ம கிஷோரி, கோவிந்த போக், காஸ்காமினி, ரத்னசூடி, கன்னையா பத்தியா, காலாஜீரா (கருப்பு சீரகச்சம்பா). இவரிடம் உள்ள மடுவு முழுங்கி விதைகள் வெள்ளம் வடிந்த பிறகும் 25 கிளைகள் (டில்லர்) வெடித்து வளர்கின்றன. வெள்ளத்தில் தலை உயர்ந்து வளரும். அதேபோல் சாரங்கி வழங்கும் வறட்சியைத் தாங்கி வளரும் நெல் பயிரின் தண்டு மிக மிக உறுதியுடன் விளங்குகின்றனவாம்.

நாட்டுக்கு ஏற்ற விதை நெல் ரகங்களை நல்ல முறையில் தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்யும் பணியை உண்மையில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். பணம் என்னவோ கோடிக்கணக்கில் நாட்டுக்குத் தேவையற்ற விதை ரகங்களைக் கண்டுபிடிப்பதில் பல்கலைக்கழகங்கள் செலவு செய்வது உண்மைதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பணச்செலவே இல்லாமல் சாரங்கி கண்டுபிடித்த நாடியா ஃபூலோ, சோரா, காலாக்கியரி போன்ற மானாவாரி நெற்பயிருக்கு ஈடாகப் பல கோடி ரூபாய் பணம் செலவழித்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ள ரகங்கள் போட்டி போடவே தகுதி இல்லை என்று அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே பணம் முக்கியமல்ல. தேடுதல் வேட்டைதான் இன்றைய தேவை. அரசாங்கம் வழங்கும் விதைகள் வீரியம் இழந்து வரும் சூழ்நிலையில் - இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாரங்கிபோல் ஒரு விவசாயி தோன்றிவிட்டால் எத்தனை பஞ்சம் வந்தாலும் அதை இந்தியா தாங்கி நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும் வழங்கக்கூடிய இந்தியாவில் என்றுமே சோற்றுக்குப் பஞ்சம் வரும் வாய்ப்பே இராது.