Friday, May 27, 2011

விதிமீறல்களால் தடுமாறி நிற்கிறதா ? சமச்சீர் கல்வி பாடநூல்கள் .

தமிழ்ப்பெரியசாமி



கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் பொது மக்களுக்குத் தீராத சிக்கலாகத் தோன்றுவது இரண்டு. ஒன்று; தனியார் பள்ளிகளின் கட்டணத் தொகை. இரண்டாவது; பாட நூல்கள்.

நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்து, அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்ப்பாட நூல் வழங்குவதைப் புதிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. காரணம், அவற்றில் முன்னாள் முதல்வரின் எழுத்தும் வரலாற்றுக் குறிப்புகளும் இருப்பதுதான்.

பலகோடி ரூபாய் செலவில், வண்ணமயமாக, அளவிலும் பெரியதாய் அச்சிடப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள் இப்போது மறுபரிசீலனைக்கு உட்பட்டுள்ளன. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் கல்வித்துறை அலுவலர்களும் பாடநூல் குழுவினருமே ஆவர்.

பாடத்திட்டத்தின் நோக்கத்தையும் செயல்முறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் கருவி பாடநூல். ஒவ்வொரு பாடத்துக்கும் கலைத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை அமைக்கப்பட்ட பின்னர், அதற்கேற்ப பாடநூல்கள் தயாரிக்கப்படுகின்றன.

பாடநூல்கள் மதம், ஜாதி, இனம், அரசியல் சார்பற்றவையாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலை விளக்கிக் கூறும் வரலாற்றுப் பாட நூல்களைவிட, தமிழ்ப்பாட நூலில் அரசியல் கலந்தது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசுத் தேர்வுக்குரிய பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் தயாரிப்புக் குழுவில், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் சிறப்புத் தலைவரும், மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதிலும், சட்டமேலவைத் தேர்தலுக்குத் தமிழாசிரியர் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த கல்வியாண்டில் வெளிவந்துள்ள முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களைத் தயாரிக்கத் தேவைப்பட்ட ஆசிரியர்களை, கல்வித்துறையினர் மாநில அளவில் திறனறி தேர்வு நடத்தித் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதே கல்வித்துறை இவ்வாண்டு இத்தகைய பணிக்காக ஓர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை - ஓய்வு பெற்றவர்களை எந்தத் தகுதி அடிப்படையில் நியமித்தது என்பது தெரியவில்லை.

சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தமிழ்ப்பாட நூல்களில் முதல் பக்கத்தில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் "நீராருங் கடலுடுத்த' எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. அடுத்த பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரின் செம்மொழி வாழ்த்துப் பாடல் அச்சிடப்பட்டுள்ளது. ஒருமொழிக்கு இருவகைப்பட்ட வாழ்த்துப் பாடல்கள் தேவைதானா? செம்மொழி வாழ்த்து என்பது ஒரு நிகழ்ச்சிக்காகத் தயாரிக்கப்பட்ட கருத்தமைவுப் பாடல் மட்டுமே. அந்த விழாவோடு அதன் செயல்பாடுகள் முடிந்துவிட்டன. தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடல் இந்திய நாட்டின் அரசியலிலோ, கல்வித்துறையிலோ இடம்பெற்றிருக்கவில்லை. அதுபோன்ற ஒரு பாடலைத் தமிழ்நாட்டில் பாடநூல் குழுவினர் பாடநூலில் திணித்திருப்பது விதிகளை மீறிய செயலாகும்.

இதைக் கல்வித்துறை அலுவலர்கள் ஒப்புக்கொண்டு, நூல்களை அச்சிட்டு விற்பனை செய்யும் நிறுவனமான தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் கொடுத்து அச்சிடச்செய்து வெளிக்கொண்டு வந்துள்ளது எந்த வகையில் நியாயமானதாகும்.

இதில் அரசுத்துறைக்குரிய விதிமீறல்கள் எதுவும் நடந்திருக்கிறதா என்று எவ்வித மேலாய்வும் செய்யாமல் பாடநூல் குழுவினர் கருத்தை, கல்வி அலுவலர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டது முறைதானா? அத்துடன் இருவகையான வாழ்த்துப் பாடல்கள் இடம் பெற்றிருப்பதானது, எதிர்காலத் தலைமுறையினர் தமிழ் வேறு, செம்மொழி வேறு என்று பொருள்கொள்ளவும் இடமளிக்கிறது.

பாடநூல் பால்போல் இருக்க வேண்டும். அது மருந்தாகவும் உணவாகவும் இருப்பது அவசியம். அதில் சமநிலை பேணாது தங்கள் விருப்பம்போல் அரசியலைச் சேர்ப்பது சமூகநீதியைத் தகர்ப்பதாகும்.

வளரும் தலைமுறையின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஊன்றுகோலாக நிற்கும் பாடநூலைத் தமது விருப்பத்தின் விளம்பரக் கருவியாகப் பயன்படுத்துவது ஆசிரியர்க்கு அழகாகாது.

தமிழ்ப்பாட நூல்களில் புதிய அரசின் கருத்துக்கு ஒவ்வாத பகுதிகள் இடம்பெற்றிருப்பது ஒருபுறமிருக்க, பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் செய்யுள், இலக்கணம், மொழிப் பயிற்சி, ஆங்கிலச் சொற்களுக்கான மொழி பெயர்ப்பு ஆகியவற்றில் ஏராளமான பிழைகள் இடம் பெற்றுள்ளன.

உரைநடைப் பாடப்பகுதிகள் பத்தாம் வகுப்புக்கேற்ற தரத்தில் அமையவில்லை. களையப்பட வேண்டியதும் திருத்தப்பட வேண்டியதுமான பகுதிகள் எல்லா வகுப்புகளிலும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் சென்ற ஆண்டு வெளிவந்த ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளே இன்னும் திருத்தப்படவில்லை.

இந்நிலையில் புதிய நூல்களில் குவிந்துள்ள பிழைகளைக் களைவது எப்போது பிழையற்ற பாடநூல்களைத் தயாரிக்கப் புலமை மட்டும் போதாது பொறுப்புணர்வும் வேண்டும்.

இந்திய அணு உலையை வேவு பார்த்த ஹெட்லி.


சிகாகோ மும்பையின் பல பகுதிகளை வேவு பார்த்து லஷ்கர் இ தொய்பாவுக்குத் தகவல் கொடுத்த டேவிட் கோல்மேன் ஹெட்லி, இந்திய அணு உலை ஒன்றையும் தாக்குதலுக்காக வேவு பார்த்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் இக்பாலின் உத்தரவின் பேரில் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பணியை அவன் செய்துள்ளான்.

சிகாகோ டிரிப்யூன் இதுதொடர்பான ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐஎஸ்ஐ அதிகாரியான இக்பால், இந்தியாவில் செய்ய வேண்டிய வேவுப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த உத்தரவிட்டது இந்த இக்பால்தான். இதற்காக இந்திய பணத்தையும் அவர் ஹெட்லிக்குக் கொடுத்தார்.

மேலும் இக்பாலின் ஆலோசனைப்படி இந்தியாவில் உள்ள ஒரு அணு உலைக்கும் சென்றுள்ளான் ஹெட்லி. அது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளான்.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹெட்லி மும்பைக்கு வந்தான். பல முக்கிய இடங்களை உளவு பார்த்து தகவல் சேகரித்தான். மும்பை துறைமுகத்தை படகு மூலம் சுற்றி வந்து சூழ்நிலையை ஆராய்ந்தான். துறைமுகப் பகுதியை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டான்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் முழுமையாக கண்காணித்து தகவல் சேகரித்தான். இந்த நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பிய அவன், அங்கு ஜகி, சஜீத் மிர், அபு குஹாபா மற்றும் இன்னொரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவரை சந்தித்துப் பேசினான்.

கூகுள் எர்த் மூலம் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்களின் படங்களை டவுன்லோட் செய்து திட்டத்திற்கு மெருகூட்டியவன் இந்த குஹாபா. மும்பைக்கு அருகே சிறிய மீனவர் குடியிருப்பு அருகே தீவிரவாதிகள் தரையிறங்கலாம் என்று ஐடியா சொல்லியவன் ஹெட்லி.

அங்கிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களுக்கு டாக்சிகள் மூலமாக செல்லுமாறும் யோசனை தெரிவித்தவனும் ஹெட்லியே.

இந்த நேரத்தில், தாஹ் மஹால் ஹோட்டலுக்கு எதிர்ப்புறத்தில், வலது புறமாக தரையிறங்குமாறு யோசனை தெரிவித்தான் ஜகி என்கிற லக்வி.

திட்டங்களை வகுத்த பின்னர் சிகாகோ திரும்பிய ஹெட்லி அங்கு ராணாவை சந்தித்தான். ராணாவிடம் தான் வேவு பார்த்த தகவல்கள் உள்ளிட்டவற்றைத் தெரிவித்து பகிர்ந்து கொண்டான். சஜீத்தை சந்தித்தது, மும்பையில் படகு சவாரி செய்தது உள்ளிட்ட அனைத்தையும் ராணாவிடம் தெரிவித்தான்.

தாக்குதல் திட்டம் குறித்து ஜகியூர் ரஹ்மான் லக்வி கூறிய யோசனைகள், இந்திய, பாகிஸ்தான் கடலில் நிசப்தம் நிலவும் காலம் உள்ளிட்டவை குறித்து ராணாவிடம் விளக்கி விவாதித்தான் ஹெட்லி.

மேலும் இந்திய அணு மின் நிலையத்தை தான் வேவு பார்த்த வந்த விஷயத்தையும் ராணாவிடம் தெரிவித்துள்ளான் ஹெட்லி.

டெல்லியிலும் உளவு பார்க்குமாறு மேஜர் இக்பால் தன்னிடம் கேட்டுக் கொண்டதையும் ராணாவிடம் தெரிவித்துள்ளான் ஹெட்லி.

பின்னர் சிகோகோவிலிருந்து மீண்டும் பாகிஸ்தான் திரும்பினான் ஹெட்லி. அங்கு சஜீத், அபு குஹாபா ஆகியோரை பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினான். பின்னர் ஹெட்லியை மீண்டும் மும்பை செல்லுமாறு சஜீத் பணிக்கவே மீண்டும் மும்பை வந்தான் ஹெட்லி என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தை சிகாகோ கோர்ட்டில் அமெரிக்க அரசுத் தரப்பு வக்கீல்கள் சமர்ப்பித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி அமைச்சருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சமச்சீர் கல்வி அமலாக்கம் சம்பந்தமான அரசின் முடிவு, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமச்சீர் கல்வி சம்பந்தமான தனது நிலைபாட்டை விளக்கி, அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து 24-05-2011 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சௌந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக்கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்து உரையாடினர்.

சமச்சீர் கல்வி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், குழப்பங்களையும் அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சர் பொறுமையாக விஷயங்களைக் கேட்டறிந்த பின்னர், சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும் எனவும், அதைக் கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவை முடிவின்படி, இன்றுள்ள திட்டத்தை அரைகுறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது எனவும், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்தபின் சமச்சீரான கல்வி அமலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளி கல்விக் கட்டணங்களை அவர்கள் கட்டக்கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அ.சௌந்திரராசன் அமைச்சரிடம் முன் வைத்தார். அமைச்சரவை அதுகுறித்து பரிசீலனை செய்யும் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.