Tuesday, May 24, 2011

திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை : ஜெயலலிதா.


திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் திமுகவினர் அடாவடியாக சொத்துக்களை சேர்த்துள்ளனர். அவற்றை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே சட்ட மேலவை தேவையில்லை என முடிவுசெய்யப்பட்டது. தற்போதும் சட்ட மேலவை தேவையில்லை. எனவே அது அமையாது என்றார் அவர்.

பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிடாது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள ரவிராஜபாண்டியன் குழுவின் முடிவை அரசு அமல்படுத்தும். பள்ளிகள் கேட்டுக்கொண்டால் கட்டண விவகாரத்தில் அரசு தலையிடும் என ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என ஜெயலலிதா தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

தானியங்கி பெட்ரோல் நிலையங்கள் - இந்தியன் ஆயில் முடிவு.


கலப்படம், அளவு குறைவு என பெட்ரோல் நிலையங்கள் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறிவருவதால், அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் தானியங்கி முறைக்கு மாற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் ஊழியர்களும் வாடிக்கை யாளர்களும் கடுமையாக மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதற்குக் காரணம், அளவு குறைவு, கலப்படம் போன்ற புகார்கள்தான்.

இந்த புகார்களைக் களையும் பொருட்டு, இனி அனைத்து பெட்ரோல் நிலையங் களிலும் தானியங்கி எந்திரங்களைப் பொருத்தும் முடிவுக்கு வந்துள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.

நாடுமுழுவதும் மொத்தம் 19000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு. இவற்றில் மாதம் 200 கிலோலிட்டர் விற்பனைத் திறன் கொண்ட 4500 நிலையங்களை மட்டும் இப்போதைக்கு தானியங்கி முறைக்கு மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக 100 கிலோ லிட்டர் விற்பனைத் திறன் கொண்ட நிலையங்களும் தானியங்கி முறைக்கு மாற்றப்படும்.

பிரான்ஸ்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை வாலிபர் கைது.


பிரான்ஸில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டதாக கடந்த 10ம் தேதி 6 பேரை அந் நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் என்பவரும் அடக்கம். பிரான்ஸைச் சேர்ந்த இருவரை பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் ஒன்றுக்கு இவர் அனுப்பி வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

ரஷீத் குறித்து பிரான்ஸ் போலீசார் மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து அவர் குறித்து மத்திய உளவுப் பிரிவினரும் தமிழக உளவுப் பிரிவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இவர் மதுரை மேலூரைச் சேர்ந்தவர் என்றும், தனியார் பொறியியல் படித்தபோது சிமி இயக்கத்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாதியின் கூட்டாளிகளுடன் இவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்தபோதே இவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கண்காணிக்க ஆரம்பித்ததாகவும், 3 மாதங்களுக்கு முன் இவர் பிரான்சிலிருந்து மேலூர் வந்து 10 நாட்கள் தங்கியிருந்தபோதும் கண்காணிப்பிலேயே இருந்தார் என்றும், அந்த நேரத்தில் இவரது நடவடிக்கைகளில் தீவிரவாத செயல்கள் ஏதும் இல்லாததால் இவரை அப்போது ஐ.பி. கைது செய்யாமல் விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பிரான்சில் இவர் எந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்ற விவரம் ஐ.பியிடம் இல்லை. இப்போது பிரான்ஸ் போலீசார் தந்துள்ள தகவல்களின்படி இவரது பின்னணியை ஐ.பியும் மாநில உளவுப் பிரிவினரும் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

இவர் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மெக்கனிக்கல் என்ஜினியரான இவர் அல்-கொய்தா அமைப்புடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தானில், குறிப்பாக பின்லேடன் கொல்லப்பட்ட அபோடாபாத் நகரில் தீவிரவாத அமைப்பினருடன் இவர் தொடர்பு கொண்டிருந்ததாகவும் பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் வாலிபர்கள் மூவரை தீவிரவாத பயிற்சிக்காக இவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இவர் குறித்து முழுமையாக விசாரித்து தகவல் தருமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. இதையடுத்து ரஷீத்தின் குடும்பத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் போலீஸார் திரட்டி வருகின்றனர். ரஷீத் குடும்பத்தினர் கடைசியாக திருச்சியில் தங்கியிருந்ததும், அவர் தனது பாஸ்போர்ட்டை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் பெற்றார் என்றும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் ரஷீதின் செயல்பாடுகளை அறிந்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வேண்டாம் என அவர்கள் பலமுறை எச்சரித்ததால் 10 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களை விட்டு ரஷீத் விலகிச் சென்றுவிட்டதாகவும், கடைசியாக 3 மாதங்களுக்கு முன்பே அவர் வீட்டுக்கு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு : 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு - ஜெயிலில் கனிமொழிக்கு பழம், ஜூஸ் கொடுக்க தடை .

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன்மனு விசாரணை; 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

கனிமொழி தன் மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான். வேறு எந்த செயல்பாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

எனக்கு சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மறுத்தது சரி அல்ல. பணபரிவர்த்தனையில் நான் பலன் பெறவில்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் உள்ளான். அவனை நான்தான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிறகு இந்த விசாரணையை வரும் 30-ந் தேதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி அஜீத் பரிகோகி ஒத்தி வைத்தார்.

கனிமொழி மனு மீது உரிய பதில் அளிக்க சி.பி. ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். கனிமொழியிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் முழுவதையும் 30-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி இன்னும் ஒரு வாரம் திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கனிமொழி போலவே, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவரது மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனு மீதான விசாரணையும் வரும் 30-ந் தேதிக்கு நீதிபதி அஜீத் ஒத்தி வைத்துள்ளார்.


திகார் ஜெயிலில் கனிமொழிக்கு பழம் - ஜூஸ் கொடுக்க தடை

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழி, ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியிடம் ஒரு பாக்கெட் உலர் பழ வகைகள் மற்றும் ஒரு பாட்டில் ஜூஸ் கொடுக்கப்பட்டது.

கருணாநிதி ஜெயிலில் இருந்து புறப்பட்டுச் சென்றதும் கனிமொழி அந்த உலர் பழங்களையும், ஜூஸ் பாட்டிலையும் தன்னுடன் எடுத்துச் செல்ல தயாரானார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை. உலர் பழங்களையும், ஜூசையும் அவர்கள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து திகார் ஜெயில் சட்ட அதிகாரி சுனில் குப்தா கூறுகையில்,

சிறை சட்ட விதிகளின் படி, பார்வையாளர்கள் கொடுக்கும் எந்த பொருளையும் கைதிகள் தங்கள் அறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. கோர்ட்டு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் உணவு மட்டும் கொண்டு செல்லலாம் என்றார். அவர் மேலும் கூறுகையில், கனிமொழி விஷயத்தில், அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கொடுக்கும் உணவை கனிமொழி எடுத்துச் செல்லலாம் என்று கோர்ட்டு எந்த சிறப்பு அனுமதியும் கொடுக்க வில்லை.

எனவே கனிமொழி பழம், ஜூஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றார். திகார் ஜெயில் டைரக்டர் ஜெனரல் நீரஜ்குமார் கூறு கையில், ஜெயிலுக்குள் யாரும் வி.ஐ.பி. அல்ல. வி.ஐ.பி.க்கள் கைதிகளாக வரும் போது கோர்ட்டு அனுமதி இல்லாமல் எந்தவித சலுகையும் கொடுக்க மாட்டோம் என்றார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டு உணவை கொடுக்கலாம் என்று கோர்ட்டு அனுமதி கொடுத்துள்ளது. அதுவும் கறி மற்றும் பழ வகைகள் இல்லாமல் கொடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா நேரில் அஞ்சலி - படங்கள்.

சாலை விபத்தில் உயிரிழந்த அமைச்சர் மரியம் பிச்சைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். தனி விமானம் மூலம் திருச்சி சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மரியம் பிச்சையின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.












அமைச்சர் மரியம் பிச்சை மரணம் - படங்கள்.



தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம்பிச்சை, சென்னையில் இன்று எம்எல்வாக பதவியேற்க இருந்தபோது இந்த துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது.


















மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம்.


தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனைக்குச் சென்று சின்னக் குத்தூசியின் உடல் நலம் விசாரித்தனர்.

மறைந்த சின்னக்குத்தூசியை கடந்த 15 ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சிறந்த முறையில் கவனித்து வந்தார். சின்னக் குத்தூசியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் கூட அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் பார்த்து வந்தார்.

சின்னக்குத்தூசி மறைவு : மு.க.ஸ்டாலின் அஞ்சலி















மறைந்த சின்னக் குத்தூசியின் உடல் ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.