Tuesday, May 24, 2011

‘’விடுதலை’’க்கு தடையா? : ஜெயலலிதாவுக்கு வீரமணி கண்டனம்.


திராவிட இயக்கப் போர் வாளான “விடுதலை” நாள் ஏட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு “விடுதலை” ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,

’’தமிழர்களின் “கெசட்” என்றால் அது “விடுதலை” என்பது சுவர் எழுத்தாகும்.

நம் ஆயுதம் “விடுதலை” என்று சுருக்கமாகச் சொன்னார் அதன் உரிமையாளரான தந்தை பெரியார். தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் “விடுதலை” என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

“ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய்; இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாய்க் கிடக்கிறாய். வீரனாய் விறல் வேந்தனாய் இருந்த நீ கோழையாய் பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாசனத்தில் சிறப்போடு இருந்தநீ, இன்று செங்கை ஏந்திக் சேவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே! என்று கூறி விளக்கமும், விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’.”

“இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம் என்று மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது. ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?” (திராவிட நாடு 27.6.1948) என்று “விடுதலை” சார்பில் நின்று விவேகக் குண்டுகளை வீசினார் அண்ணா.

தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும், தலையங்கங்களும், பெட்டிச் செய்திகளும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் மட்டுமல்ல;
நாடாளுமன்றத்திலும்கூட பெரும் புயல்களைக் கிளம்பியதுண்டு.

1939ஆம் ஆண்டிலேயே ஈழத் தமிழரைப்பற்றி எழுதியது “விடுதலை”; இந்தி எதிர்ப்புப் போரில் இணையற்ற தளபதியாகக் களத்தில் நின்று வெற்றி வாகைசூடிய விவேக சிந்தாமணி விடுதலை.

குலக்கல்வித் திட்டத்தை ஓட ஓட விரட்டியடித்து, ஆச்சாரியாரை ஆட்சியை விட்டு அகலச் செய்து, கர்ம வீரர் கல்வி வள்ளல் காமராசரை அரியாசனத்தில் அமர வைத்ததில் “விடுதலை”யின் பங்கு என்ன என்பதை வரலாறு வாழ்நாள் எல்லாம் பேசிக் கொண்டே இருக்கும்.

சமூக நீதிக்களத்தில் அதன் பங்களிப்பு சாதாரணமானதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வருவதற்காக முழு மூச்சாகப் பாடுபட்ட பேராயுதம் எது? “விடுதலை” தானே? 31 (சி) சட்டத்துக்குக் கருத்துரு கொடுத்தது “விடுதலை”யே!

ஏன்? இன்றைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் 31(சி) சட்டத்தினைக் கொண்டு வந்து 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியதற்கு கருத்துரு கொடுத்ததும் “விடுதலை”யன்றோ!

ஆட்சிகள் போகலாம் - வரலாம்; அதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ளத் தேவையில்லை.

மே.16ஆம் தேதி, முதல் அமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவி ஏற்கிறார் என்றால் அவசர அவசரமாக அன்றைய தினமே அரசு நூலகங்களில் “விடுதலை” ஏட்டை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

2012 மார்ச்சு வரை அரசு நூலகங்களில் “விடுதலை” இடம் பெறுவதற்கான அரசு ஆணை ஏற்கெனவே இருக்கும் நிலையில், திடீரென்று அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் - அவசரம் ஏன்? ஏன்?

மாறுபட்ட கருத்துகள் - விளக்கங்கள் கூடவே கூடாது என்று நினைப்பது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உகந்ததுதானா? ‘விடுதலை’யைப் பொறுத்தவரையில் ஆதரிக்க வேண்டியதை ஆதரித்தும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும் நடைபோடும் பகுத்தறிவு ஏடு.

பகுத்தறிவு கொள்கையோடு உலகிலேயே வீரநடை போடும் ஒரே ஏடு “விடுதலை”யே! இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51(ஏ)வில் கண்டுள்ள விஞ்ஞானம், சீர்திருத்த மனப்பான்மையை அன்றாடம் வளர்க்கும் ஒரே ஏடும் விடுதலையே! இதற்காக திராவிட இயக்கங்கள் பெருமைப்பட வேண்டாமா?

அரசு என்பது அனைத்து மக்களுக்கும் கருத்துரிமை என்ற அடிப்படைக் கோட்பாடு கொண்டதல்லவா!

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், நான் எப்பொழுதும் செயல்படுவதில்லை என்று கூறும் முதல் அமைச்சர் திடீரென்று “விடுதலை”யை நிறுத்தியது எந்த அடிப்படையில்? அல்லது அவர் அறியாமல் “அதி விசுவாசிகளான’’ அதிகாரிகளின் வேலையா இது?

பெண்கள் உரிமைக்காக வாழ்நாள் எல்லாம் குரல் கொடுப்பதை குருதியோட்டமாகக் கொண்ட “விடுதலை” ஏடு பெண் ஒருவர் முதல் அமைச்சராக இருந்த ஒரு கால கட்டத்தில் அரசு நூலகங்களுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டது என்ற பழியைச் சுமக்கலாமா?

அதிமுக அரசின் இந்தச் செயல்பாடு - காலா காலத்துக்கும் குற்றச் செயல் என்று பேசப்படாதா?

எப்படிப்பட்ட “விடுதலை?” தந்தை பெரியார் அவர்களின் போராயுதம் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா, டி.ஏ.வி. நாதன், பண்டித எ. முத்துசாமிப்பிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார், குத்தூசி குருசாமி, அன்னை மணியம்மையார் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்ட அரும் பெரும் வரலாற்றுப் பெருமைக்குரிய ஏடாயிற்றே!

அண்ணாவின் பெயரையும் “திராவிட” என்ற இன அடையாளத்தையும் கொண்ட ஒரு கட்சி ஆட்சி நடத்தும் ஒரு கால கட்டத்தில், திராவிட இயக்கத்தின் ஆணிவேரான - அதன் தாய் என்று சொல்லத்தக்கதான “விடுதலை” ஏட்டைப் புறக்கணிக்கும் வகையில் ஆணை பிறப்பது வரலாற்றுக் குற்றம் ஆகாதா?

புதிய புதிய சட்டங்கள் உருவானதற்கும், தமிழர்களைப் பாதிக்கச் செய்யும் சட்டங்கள் பின் வாங்கப்படுவதற்கும், புதிய புதிய திட்டங்கள் கருக் கொள்வதற்கும், பிற்போக்குத்தனமான திட்டங்கள் குதிகால் பிடரியில் இடிபட ஓட்டம் பிடிப்பதற்கும் காரணமாக இருந்தது ‘விடுதலை’ அல்லவா! ‘விடுதலை’ வெறும் காகிதமல்ல - தமிழர்களைப் பழைய நிலையிலிருந்து விடுதலை செய்த வீரவாள்! - போர் வாள்!!

கடலூர், மதுரை சிறைகளில் “விடுதலை”க்குத் தடை போடப்பட்டது - சிறை அதிகாரிகளால்; அந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் “ரிட்” மனு ஒன்றைத் தாக்கல் செய்தோம். உள்துறை தனிச் செயலாளர் அந்தத் தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் (27.11.1987) வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தது உண்டே!
பழியைத் தேடிக் கொள்ள வேண்டாம்!

1935இல் தொடங்கப்பட்டு, பவள விழாவும் கண்ட திராவிட இயக்க மூச்சுக் காற்றான “விடுதலை” ஏட்டை நூலகங்களில் நீக்கிய பழியை முதல் அமைச்சர் ஏற்க வேண்டாம் என்பது நமது வேண்டுகோள்.

நெருக்கடி நிலை என்னும் நெருப்பாற்றை எல்லாம் நீந்திக் கரை சேர்ந்த வரலாறு “விடுதலை”க்கு உண்டு; இப்பொழுது நடப்பது நெருக்கடி நிலை ஆட்சியல்லவே!
முதல் அமைச்சர் பரிசீலிக்கட்டும்!

முதல் அமைச்சர் அவர்கள் நிதானமாகக் கருத்து செலுத்தி, நல்லது நடக்க ஆவன செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

கழகத் தோழர்களே, தமிழ் இன உணர்வாளர்களே விடுதலை சந்தாக்களைக் குவியுங்கள்! பணிகளை உடனே துவக்குங்கள்!!’’ என்று தெரிவித்துள்ளார்.

சமச்சீர்கல்வித் திட்டம் : மார்க்சிஸ்ட் வேண்டுகோள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளனர். இப்பின்னணியில்தான், 2010-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சமச்சீர்கல்வியை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கி அமல்படுத்தியது.

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, சமச்சீர்கல்வி அமலாக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவும், கூடவே கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வல்லுனர்குழு அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வி முறையை நிறுத்தி வைப்பதாகவும் பழைய பாடப்புத்தகங்களையே பின்பற்ற வேண்டுமெனவும் இப்பின்னணியில் பாடப்புத்தகங்கள் அச்சிட வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுவதை ஜூன் 15-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கல்வித்தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால் இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும் ரூ. 200 கோடிக்கு மேல் செலவிட்டு அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் முழுமையாகக் கைவிடப்படுவதும் மாணவர்கள் மததியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள்-கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டும் அமலாக்கிக் கொண்டே கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும், பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரி செய்யுமாறும் வேண்டுகிறோம்.

மேலும், தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையிலிருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

உயிர் தப்பிய அமைச்சர் சிவபதி.


உயிர் தப்பிய அமைச்சர் சிவபதி

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்றுகாலை 6.30 மணிக்கு நடந்தது. இதில் அமைச்சர்கள் மரியம்பிச்சை, சிவபதி ஆகியோர் பங்கேற்று பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பிறகு சென்னையில் நடைபெறும் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்புவிழாவில் பங்கேற்பதற்காக தனித்தனி காரில் புறப்பட்டனர். முதலில் சென்ற அமைச்சர் மரியம்பிச்சையின் கார் பாடாலூர் அருகே லாரி மீது மோதி விபத்தில் சிக்கியதில் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

பின்னால் தனிக்காரில் வந்ததால் அமைச்சர் சிவபதி விபத்தில் இருந்து தப்பினார். விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த அவர் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்டார்.

மரியம்பிச்சையின் உடலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பிரேத பரிசோதனை விரைந்து நடைபெற நடவடிக்கை எடுத்தார். அங்கு திரண்டு கண்ணீர் விட்ட அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் சிவபதி ஆறுதல் கூறினார்.

அமைச்சர் காரில் இருந்த 6 பேர் உயிர் தப்பினர்
.

அமைச்சர் மரியம்பிச்சை காரில் டிரைவர் ஆனந்த் அமைச்சரின் நேர்முக உதவியாளர் மகேஷ்வரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் வட்ட செயலாளர் கார்த்திகேயன், ஆயில்மில் சீனிவாசன், வெங்கடேசன், சரவணன் ஆகியோர் இருந்தனர்.
விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மகேஷ்வரன், கார்த்திகேயன், வெங்கடேசன் ஆகியோர் லேசான காயத்துடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்தது எப்படி?

மரியம்பிச்சையின் கார் டிரைவரை விசாரணைக்காக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஆனந்த்(35) என தெரிய வந்தது.

போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் டிரைவர் கூறி இருப்பதாவது:-

அமைச்சர் மரியம்பிச்சையின் கார் இன்று காலை 7 மணிக்கு பாடாலூர் அருகே பெருமாள்மலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் இடதுபுறமாக ஒரு கண்டெய்னர் லாரி சென்றது. இதனால் லாரியை முந்தி செல்வதற்காக ஹாரன் அடித்தேன். இதில் கண்டெய்னர் லாரி டிரைவர், லாரியை இடது புறமாக திருப்புவதற்கு பதிலாக வலது புறமாக திருப்பினார்.

இதனால் கார், எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இதில் முன்பகுதியில் உட்கார்ந்திருந்த அமைச்சர் மரியம்பிச்சை இருக்கை யிலேயே இறந்தார். விபத்தை கண்டதும், கண்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்று விட்டார்.

இவ்வாறு டிரைவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திகார் சிறையில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு.

திகார் சிறையில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகள் கனிமொழியை டில்லி திகார் சிறையில் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.

கருணாநிதியுடன் அவரது மனைவி ராசாத்தி அம்மாள், கனிமொழியின் கணவர் அரவிந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

கனிமொழியுடன் சிறிது நேரம் கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Saturday, May 21, 2011

பக்தர்கள் வழங்கிய ரூ.34 கோடி சொத்துக்களை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய  ரூ.34 கோடி சொத்துக்களை விற்க  திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் பணம்-நகைகளை போடுவது வழக்கம். சில பக்தர்கள் தங்களது நில பத்திரங்களை காணிக்கையாக வழங்குவார்கள். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அந்த நிலங்களின் மதிப்பை கணக்கிட்டனர். அப்போது அவற்றின் மதிப்பு ரூ.34 கோடி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். மொட்டை போடும் இடம், அன்னதான காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஜிசாட் - 8 செயற்கை கோள் வெற்றிகரமாக பறந்தது : பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு.

ஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக பறந்தது: பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு

தொலைத்தொடர்பு வசதியை மிக அதிக நவீன முறையில் மேம்படுத்துவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-8 என்ற செயற்கை கோளை தயாரித்தது.

3100 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இஸ்ரோ தயாரித்துள்ள மிகப் பெரிய செயற்கை கோள்களில் ஒன்றாகும். இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.08 மணிக்கு பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜிசாட்-8 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் அது சுற்றுப்பாதையில் பறக்க விடப்பட்டது. ஜிசாட் செயற்கை கோள் வெற்றிகரமாக தன் பணிகளை செய்யத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 600 கோடி ரூபாய் செலவில் ஜிசாட் செயற்கை கோள் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜிசாட்-8 செயற்கை கோள் திட்ட வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டி உள்ளார். இதற்கிடையே இன்று காலை 10.32 மணிக்கு இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் அஸ்த்ரா ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது. விண்ணில் இருந்து விண்ணில் பாய்ந்த இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.

கனிமொழி கைதான அந்த நிமிடங்கள்.

கைதான போது கணவர்-மகனிடம்  கண்கலங்கிய கனிமொழி

தி.மு.க. அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்து தந்தையின் இலக்கிய புலமையையும் கற்று தேர்ந்து கொண்டவர் கனிமொழி. பொழுது விடிந்தது முதல் இரவில் துயில் கொள்ளும் நேரம் வரை கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் பேச்சுகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, எழுதுவது என்று எத்தனையோ பணிகளுடன் எப்போதும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டிருப்பார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக அவரை தடுமாற வைத்தன. நேற்று கைது செய்யப்பட்டதும் அவரை நிலைகுலைய வைத்து விட்டது. மிகப்பெரிய வக்கீல், அரசியல் பின்புலம் ஆகியவற்றால் வழக்குகளை சந்திக்கலாம். ஜெயிலுக்கு போகாமல் இருக்க முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற துளியளவு நம்பிக்கையுடன் டெல்லி பிரம்மபுத்திரா இல்லத்தில் நேற்று காலையில் துயிலெழுந்தார்.

தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், சுகவனம், ஜெயதுரை, ஆதிசங்கர், ஹெலன்டேவிட்சன், ரித்தீஷ், கே.பி.ராமலிங்கம், செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, தங்கவேலு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, இவர்களை தவிர விசுவாசமிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில் குவிந்து இருந்தனர்.

கோர்ட்டு முடிவு எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தில் இருந்த கனிமொழிக்கு அனைவரும் தைரியம் கொடுத்தனர். காலை 10 மணிக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு கனிமொழி சென்றார். தி.மு.க. எம்.பி.க்களும் கோர்ட்டிற்கு வந்து இருந்தனர். ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, சரத்குமாரின் மனைவி ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

காலை 11 மணி, 12.30 மணி என்று தீர்ப்பு சொல்லும் நேரம் அடிக்கடி தள்ளிகொண்டே போனதால் திக்...திக் மனதோடு ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மணித்துளியாக நகர்த்தி கொண்டிருந்தார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சைனி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தனது உத்தரவை படித்ததும் கனிமொழி மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது. அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் பூங்கோதை, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் ஆறுதல் படுத்தினார்கள். ஜெயிலுக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டதும் சென்னை மாநகராட்சி 95-வது வார்டு கவுன்சிலர் துரை கோர்ட்டு அறையிலேயே ஒ வென்று கதறி அழுது விட்டார். அதைப்பார்த்ததும் மற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் வடிந்தது.

துயரத்தில் ஆழ்ந்து இருந்த கனிமொழி அதை அடக்கி கொண்டு துக்கம் தாளாமல் அழுத துரையை தேற்றினார். மாலை 3 மணியளவில் கனிமொழியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள “லாக்-அப்” அறைக்கு அழைத்து செல்வதற்காக சுற்றியிருந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பெண் போலீசார் கனிமொழியை லாக்-அப் அறைக்கு அழைத்து சென்றனர்.

கையை தட்டினால் ஏவலுக்கு எத்தனையோ போலீசார் வந்து நிற்பதையும் பாதுகாப்பு அரணாக சுற்றி நிற்பதையும் சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட கனிமொழியின் கைகளை பிடித்து பெண் போலீசார் அழைத்து சென்றதை பார்த்து அவரால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கலங்கியப் கண்களுடன் லாக்-அப்புக்கு நடந்தார்.

அவரை தொடர்ந்து கணவர் அரவிந்தனும் வந்தார். எத்தனையோ அரசியல் களங்களுக்கு மனைவியை அனுப்பி வைத்து மகிழும் அரவிந்தனும் மனைவி ஜெயிலுக்கு செல்வதை பார்த்து நொறுங்கி போனார். லாக்-அப் அறைக்குள் செல்வதற்கு முன்பு கனிமொழி கணவரை கட்டித் தழுவினார். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் கண்ணீர் விட்டனர்.

கனிமொழியின் தோளில் தட்டி அரவிந்தன் தேற்றினார். லாக்-அப் அறைக்குள் சென்றதும் அவரால் துயரத்தை அடக்க முடியவில்லை. பெருகிவந்த கண்ணீரை துடைத்தபடியே சிலநிமிடங்களை கழித்தார். அடுத்த 10 நிமிடத்தில் கணவர் அரவிந்தனை சந்திக்க வேண்டும் என்று கனிமொழி முறையிட்டார். அவரது செல்போன் நம்பரையும் போலீசாரிடம் கொடுத்தார்.

அவரது தவிப்பை புரிந்த போலீசார் உதவ முயன்றனர். ஆனால் நீதிபதியின் உத்தரவால் எல்லோரும் வெளியே சென்று விட்டனர். போலீசாரால் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடியவில்லை. தமிழக பத்திரிகையாளர்களும் அரவிந்தனை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடிய வில்லை.

இறுதியில் தி.மு.க. பிரமுகர் பாலகுரு என்பவர் மூலம் அரவிந்தனை தொடர்பு கொண்டனர். அவர் உடனடியாக விரைந்து வந்தார். கனிமொழியுடன் லாக்-அப் அறையில் சுமார் 20 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தார். அப்போது மகன் ஆதித்யாவை பார்க்க ஆசைப்படுவதாக கூறினார். உடனே ஆதித்யாவை அழைத்து வந்தனர்.

மகன் ஆதித்யாவின் கைகளை பிடித்து வருடியபடி அவரிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆதித்யாவை தைரியமாக இருக்கும்படி வாஞ்சையுடன் தடவிகொடுத்தார். மாலை 4.30 மணிக்கு போலீசார் ஒரு வேனில் ராசாவையும், சரத்குமாரையும் திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

அதன்பிறகு பெண் போலீசார் மற்றொரு வேனில் கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். இது நான் எதிர்பார்த்தது தான் என்று கனிமொழி ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு கூறினார். ஆனால் ஜெயிலுக்குள் நுழைந்ததும் அவரது முகமே மாறிவிட்டது. இறுகிய முகத்துடன் ஜெயிலுக்குள் சென்றார்.