Friday, May 20, 2011

கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்.

கனிமொழி கைது குறித்து  கருணாநிதி விளக்கம்


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசியது :

கனிமொழி கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்

மேலும் கனிமொழி கைது குறித்து உங்கள் மனநிலை என்ற கேள்விக்கு உங்களுக்கு ஒரு பெண் இருந்து அவர் கைது செய்யப்பட்டால் நீங்கள் எந்த மனநிலையில் இருப்பீர்களோ அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என தெரிவித்தார்.

விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு.

விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்மீன்களும், பல கிரகங்களும் உள்ளன. இருந்தும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தினந்தோறும் புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் இருப்பதை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இவை வியாழன் கோள் அளவில் உள்ளன.

25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோள்களை நியூசிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இக்குழுவில் சர்வதேச விஞ்ஞானிகளும் உள்ளனர்.

கேரளா: புதிய எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்கு.

கேரளாவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 67 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது மட்டும் 5 வழக்குகள் உள்ளன.

சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் குறித்து கேரளாவைச் சேர்ந்த எலக்ஷன் வாட்ச் என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. தமி்ழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 31 சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம். புதுச்சேரி கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணி்க்கை குறைவு. ஐந்து மாநிலங்களிலும் 33 சதவீத எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்.

கேரளாவில் 67 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கூட்டணியில் 40 பேர், மீதமுள்ள 27 எம்.எல்.ஏ.க்கள் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்தவர்கள். 12 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. காங்கிரஸ்எம்.எல்.ஏ.க்கள் அன்வர் சாதத், ஹைபி ஈடன் ஆகியோர் மீது அதிகபட்சமாக 15 வழக்குகள் உள்ளன. முஸ்லீம் லிக் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான முனீர் மீது 14 வழக்குகள் உள்ளன.

மார்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன் மீது 10-ம், காங்கையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மீது 7 வழக்குகளும் உள்ளன. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மீது 5 வழக்குகள் உள்ளன.

முதல்வராக பதவியேற்ற உம்மன் சாண்டி மீது ஒரேயொரு வழக்கு மட்டுமே உள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 35 பேர் கோடீஸ்வரர்கள். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போர் குற்றவாளி ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும் ; வைகோ ஆவேசம்.

இலங்கை போர் குற்றவாளி  ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி  தூக்கிலிட வேண்டும்;  வைகோ ஆவேசம்

சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் இலங்கை முள்ளி வாய்க்கால் படுகொலை 2-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

2 ஆண்டுகளுக்கு முன்னர் மே 17-ம் நாள், தமிழ் இனத்தை அழிக்க மாபாதகம் செய்த ராஜபக்சே கூட்டத்தை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தித் தண்டிப்பதற்குச் சூளுரைக்கவும், தாய்த் தமிழகம் ஆர்த்து எழவும் இந்த நிகழ்ச்சியை இங்கே நாம் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

தமிழ் இன படுகொலையில் இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல, இந்திய அரசுதான் குற்றவாளி. இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் தலைமை, அதன் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், அவரது அமைச்சரவையில் பங்கு ஏற்ற அமைச்சர்கள், அரசியல் கட்சிகள், இவர்கள் எல்லோரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், இந்திய அரசு கொடுத்த ஆயுதங்கள், ரடார்கள், அள்ளிக்கொடுத்த ஆயிரம் கோடி பணம், அனுப்பி வைத்த முப்படைத் தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், தந்து உதவிய நவீனக் கருவிகள், துல்லியமாக இலக்குகளைக் கண்டறிந்து குண்டு வீசுவதற்குச் செய்து தந்த ஏற்பாடுகள்தான் காரணம்.

இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம் என்றார் பிரபாகரன். ஆனால், சோனியாகாந்தி திட்டமிட்டு, ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுப்பதற்கு, மன்மோகன் சிங் அரசைப் பயன்படுத்திக் கொண்டார். எலும்புத் துண்டுகளைப் போடுவது போல சில மந்திரி பதவிகளைக் கருணாநிதிக்குத் தூக்கி எறிந்தார்.

அதையே சாசுவதம் என்று நினைத்து, இன்றைக்குத் தீராத பழியைத் தேடிக்கொண்டார் கருணாநிதி. அவருக்காக நான் வேதனைப்படுகிறேன். அது அண்ணா உருவாக்கிய இயக்கம், ரத்தத்தை வியர்வையாகக் கொட்டி நாங்கள் வளர்த்த இயக்கம். எல்லாவற்றையும் பாழாக்கி விட்டீர்களே? பழிதானே மிஞ்சியது? இழிவுச்சொல்தானே மிஞ்சியது? இனத்துரோகி என்ற பட்டம்தானே மிஞ்சியது? இப்போது, கலைஞர் மிகவும் நொந்து போயிருக்கிறார். அவரை மேலும் கஷ்டப்படுத்த நான் விரும்ப வில்லை.

ஆனால், அவர் செய்த துரோகங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும். ஆனால், ஏழு கோடித் தமிழர்கள் இருக்கின்ற இந்தியாவே சும்மா இருக்கிறதே என்றுதான், மற்ற நாடுகள் இதில் தலையிட முன் வரவில்லை. கேடே நாம்தான். அதைத்தானே நார்வே நாட்டுக்காரர்கள் சொல்லுகிறார்கள்.

இப்படி ஒரு சிக்கலில் நாம் தவித்துக் கொண்டு இருந்தாலும், இதில் இருந்து மீள முடியும். அதற்காகத்தான், முத்துக்குமார் உள்பட நேற்றைய கிருஷ்ணமூர்த்தி வரை 17 பேர் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கின்றார்கள். இந்த வீர வணக்கத்தைச் செலுத்துகின்றபோது, முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நிராதரவராய்த் தவித்தார்களே, பதறினார்களே, பச்சைக்குழந்தைகளைப் பறி கொடுத்தார்களே, அந்தப் பாவத்துக்கு மன்னிப்பு உண்டா? நாதியே இல்லையா தமிழ்ச்சாதிக்கு? இதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ராஜபக்சேயைக் கூண்டில் நிறுத்தித் தூக்கில் இட்டால் தான் தமிழன் சாப்பிட்ட சோறு செரிக்கும். தமிழ் ஈழம் மலர்வதை நாம் காணத்தான் போகிறோம். செய்த தியாகம் வீண் போகாது. சிந்திய ரத்தத்தின் மீது ஆணை. எரியும் தழல் நெருப்பின் மீது ஆணை. மாவீரர்கள் செய்த தியாகத்தின் மீது ஆணை. தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க, தமிழகத்து இளைஞர் கூட்டம் கிளர்ந்து எழ வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்.

புதிய சட்டசபை கட்டிடத்தை  அரசு கைவிட்டது ஏன்?  புதிய தகவல்கள்

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ராணுவத்துக்கு சொந்தமானது. இங்கு நெருக்கடி ஏற்பட்டதால் தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம்-சட்ட சபை கட்டிடத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் கருணாநிதி கட்டினார்.

9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. அரசு தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியும் அரசு அலுவலகங்களும் உள்ளன. புதிய தலைமை செயலகம் கட்டுமான பணி ரூ.425.57 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டது. பின்னர் 704 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ரூ.1200 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையிலேயே முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அங்குள்ள சட்டமன்ற கூட்ட அரங்கும் இரவு-பகலாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்களுக்கும் கோட்டையில் உள்ள அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதிய தலைமை செயலகத்தை அவசர அவசரமாக கட்டிய போதே ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். எந்த பாரம்பரிய அடையாளமும் இல்லாமல், கலைநயமும் இல்லாமல் சர்க்கஸ் கூடாரம் போல் இருப்பதாக குறை கூறினார். புதிய சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் நடந்த போது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

புதிய தலைமை செயலகத்தை தற்போது பயன்படுத்தாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புதிய தலைமை செயலகம் எதிரில் மிக அருகிலேயே கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் பாதை செல்கிறது. அந்த மேம்பாலத்தில் இருந்து எளிதில் சட்டமன்றத்தை தாக்க முடியும். எனவே, இது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.425 கோடிக்கு திட்டமிட்டு இதுவரை ரூ.1200 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அவசரமாக கட்டியதால் கட்டிடத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே செலவு பல மடங்காக உயர்ந்து இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளன. வேலையும் இன்னும் முடியவில்லை. அதுபற்றி விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுவரை புதிய தலைமை செயலகத்தை எந்த அலுவலுக்கும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, அண்ணா சாலை பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க அரசு விரும்புகிறது. புதிய சட்டசபை கட்டிடத்தை பயன்படுத்துவது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறி உள்ளார். எனவே வருங்காலத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வாடகை கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள் இங்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

நகைபறிப்பு, கொள்ளை என தலைவிரித்தாடும் தமிழகம்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்!!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு
ரோட்டில் நடந்து சென்ற     பெண்ணின் வாயை பொத்தி நகை பறிப்பு

தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூச்சியூரைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (60). நேற்று இரவு 8 மணியளவில் இவர் தொண்டாமுத்தூர் ரோடு ஓணாம்பாளையம் அய்யப்பன் கோவில் அருகில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் விஜயலட்சுமியின் வாயை பொத்தினார்கள்.

பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். அந்த வழியாக இருட்டுக்குள் சென்று விட்டனர். நகையை பறி கொடுத்த விஜயலட்சுமி திருடன்.. திருடன் என கத்தினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்ததும் நகையை பறித்தவர்கள் அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் தலைமறைவாகி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டியில் பயங்கரம்: அடகு கடை காரரை கொன்று கொள்ளை; ரூ.5 கோடி நகைகளை அள்ளிச் சென்றனர்
பண்ருட்டியில் பயங்கரம்: அடகு கடை காரரை கொன்று கொள்ளை;  ரூ.2 கோடி நகைகளை அள்ளிச் சென்றனர்

பண்ருட்டியை சேர்ந்தவர் சண்முகம் செட்டியார் (வயது 75). இவர் பண்ருட்டி ராஜாஜி ரோட்டில் அடகு கடை வைத்திருந்தார். கடையின் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். நேற்று இரவு அவர் கடையை மூடி விட்டு கடையின் மாடி அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கடையின் பின்பக்க ஜன்னலை பெயர்த்து உள்ளே நுழைந்தனர். கொள்ளையர்களை பார்த்ததும் சண்முக செட்டியார் திடுக்கிட்டு எழுந்தார்.உடனே கொள்ளையர்கள் அவர் மீது பாய்து கை, கால்களை கட்டிப்போட்டனர். அவர் வாயில் துணியை கட்டி முகத்தை அமுக்கினார்கள்.இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் கொள்ளையர்கள் அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அங்கிருந்த கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.சண்முக செட்டியார் நகைக்கடையில் எப்போதுமே ரூ.5 கோடிக்கு மேல் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அவை அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளி சென்று விட்டனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே துணிகர சம்பவம்: சமையல் அறை வெண்டிலேட்டரை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை;ராணுவ வீரர் வீட்டில் 50 பவுன் நகைகள்- ரூ20 ஆயிரம் பணம் கொள்ளை.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத புதிய தலைமைச் செயலகத்திலிருந்து எப்படி செயல்படுவது? - ஜெயலலிதா கேள்வி.


திமுக ஆட்சிக்காலத்தில் அவசரம் அவசரமாக கட்டப்பட்ட, இன்னும் கட்டி முடிக்கப்படாத புதிய தலைமைச் செயலக கட்டட்டத்திலிரு்து செயல்பட்டால் அரசு நிர்வாகத்திற்கு பெரும் ஊறு ஏற்படும் என்பதால்தான் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயல்படும் முடிவை தான் எடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தற்போது ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபைக் கட்டிடத்தில் போதுமான வசதிகள் இல்லை. கட்டடப் பணிகள் நிறைவு பெறாமலேயே அவசரம் அவசரமாக துவக்க விழா நடத்தப்பட்டுள்ளது.

19.3.2010ல் புதிய கட்டடத்தில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, சட்டமன்றத் தரையில் புதிய தரைவிரிப்புதான் போடப்பட்டிருந்தது. கேலரி உள்ள முதல் மாடி முடிக்கப்படாமல், பெரிய திரைச்சீலை ஒன்றால் சுவர்கள் மறைக்கப்பட்டு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது.

மேலும், அப்போதைய அரசில் அனைத்து அமைச்சர்களின் துறைகளும் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படாமல், முந்தைய அரசு இரண்டு கட்டிடங்களிலுமாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இன்னமும் முழுமையான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படவில்லை. மின் தூக்கிகள் கூட முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கட்டிடத்தின் மேல் மாடிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்கு வணிகர்களும், புதுப்பேட்டை மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்பவர்களும், ரிச்சி தெரு மின்னணு சாதன வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தக் கடைகள் விரைவில் அங்கிருந்து காலி செய்யப்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வந்துள்ளனர்.

எனவே, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இயங்குவதற்கு வசதியாக அனைத்துத் துறைகளையும் ஒரே இடத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் உள்ள பழைய புனித ஜார்ஜ் கோட்டையையே மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளோம். இன்னும் ஒன்றரை வருடத்துக்குள் தேர்தல் வாக்குறுதிகளை கூடுமான வரையில் நிறைவேற்ற வசதியாக, அனைத்து அரசு அலுவலகத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட புனித ஜார்ஜ் கோட்டையே வசதி என்பதால், அதையே தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஆட்சி நிர்வாகம் நடத்த அங்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே, ‌ செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபையை மாற்றியுள்ளோம். இதில் எவ்வி‌த அரசியல் உள்‌நோக்கமும் கிடையாது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நான் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்பதை நடுநிலையாளர்கள் உணர்வார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.