Friday, May 20, 2011

கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து சி.பி.ஐ.உத்தரவுப்படி கனிமொழி எம்.பி.யும், சரத்குமாரும் கடந்த 6-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அஜரானார்கள்.

கனிமொழி சார்பில் ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி வாதாடுகையில், ஸ்பெக்டரம் முறைகேடுக்கும், கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

ஆனால் சிபிஐ தரப்பு, கனிமொழிக்கும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கும் தொடர்பு உண்டு என்று வாதிட்டது.

பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும், தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் மனு செய்தனர். அந்த மனு மீது 14-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறி இருந்தார். ஆனால் உத்தரவு நகல்கள் தயாராகாததால் அன்று தீர்ப்பு வழங்காமல் 20-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் கனிமொழி கடந்த 5 நாட்களாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

தீர்ப்பு நாளான இன்று அவர் 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டுக்கு வந்து விட்டார். 10 மணிக்கு அவர் கோர்ட்டில் ஆஜரானார். மேலும் கனிமொழி முன்ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சைனி அறிவித்தார்.

2.30க்கு நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கனிமொழி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மதியம் 2.30 மணியளவில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அங்கிருந்து 3.30 மணியளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண் என்பதால் தனி வேனிலும், சரத்குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப் பட்டனர். சிறையில் கனிமொழிக்கு பெண்களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது.

கனிமொழிக்கு வீட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

14 - தேசிய விருதுகள் பெற்ற தமிழ் சினிமா.

டெல்லியில் இன்று 58வது தேசிய விருதுகளுக்கான பெயர்கள் அறிவிக்கப் பட்டன.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, தங்கத் தாமரை விருது ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆடுகளம் படத்தின் கதாநாயகன் தனுஷ்,

சிறந்த நடிகைக்கான தேசிய விருது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த சரண்யா,

சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது மைனா படத்தில் நடித்த தம்பி ராமையா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், தயாரிப்பு வடிவமைப்பு, என 2 தேசிய விருதுகள் எந்திரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடன இயக்குநர், சிறந்த படம் என 6 தேசிய விருதுகளை ஆடுகளம் தட்டிச் சென்றது.



சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடிகை, தமிழில் சிறந்த படம் என மூன்று விருதுகளை தென் மேற்குப் பருவக் காற்று அள்ளியுள்ளது.


இதுவரை 5 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 6வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

தற்போது தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

கனிமொழி : தந்தையின் சாயல்.

, சாத்தூர்.


எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை உடல்நலமில்லாமல், இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவருடன் நானும் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தோம். முதலமைச்சராக இருந்த கருணாநிதி போன் செய்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜே.கே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். அவருக்கே உரித்தான பாணியில் ஜே.கே, “இது அன்புக்கட்டளையா, அரசாங்க கட்டளையா?” எனக் கேட்டார். கருணாநிதியின் பதிலுக்குப் பிறகு, “அப்படியானால் வருகிறேன்” என்று ஜே.கே சம்மதித்தார்.

சிறிதுநேரத்தில் கனிமொழி அங்கு வந்தார். ஜே.கேவிடம் உடல்நலம் விசாரித்தார். வெளியே காவல்துறை தலைகள் தெரிந்தன. ஆஸ்பத்திரியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டதைப் பார்த்தேன். அருகில் நின்றிருந்தாலும் மிக உயரத்தில் கனிமொழி காட்சியளித்தார். முன்பெல்லாம் அவர் எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில், ஜனநாயக மாதர் சங்கக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆட்டோவில் வந்து ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போதும் அவர் கருணாநிதியின் மகள்தான். ஆனால் அதிகாரத்தின் வளையத்திற்குள் இல்லை. அதுதான் வித்தியாசம்.

ஸ்டாலின், அழகிரி என அரசியல் வாரிசுகள் உருவாகி வலம் வந்த காலத்தில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். பெண்ணியம் குறித்த விவாதங்களில், இலக்கியக் கூட்டங்களில் அவரது தலை சிலசமயங்களில் தெரிந்தது. அதுகுறித்த செய்திகள் எப்போதாவது பத்திரிகைகளில் வந்தது. சாத்தூரில் எழுத்தாளர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்ட கலை இலக்கிய இரவுக்கு கவிஞர் கனிமொழியை அழைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். கனிமொழியின் போன் நம்பர் வாங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். மிக இயல்பாகப் பேசினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் எந்த தேதி அவருக்கு சரியாக இருக்கும் என்றும், அவர் எப்படி வருகிறார் என்றும் மூன்று நான்கு முறை பேசினேன். பிறகு சில முக்கிய சொந்த வேலைகள் இருப்பதாகச் சொல்லி, வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார். அருகில் இருக்கிற நபரோடு பேசுவதாய்த்தான் அவருடனான உரையாடல்கள் இருந்தன. அப்போது அவர் கவிஞர் மட்டுமே.

சில வருடங்களில் கனிமொழி என்னும் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தென்பட ஆரம்பித்தது. சென்னை சங்கமம் தொட்டு அது நிகழ்ந்தது. உடனடியாக எம்.பியானார். அவரும் ஒரு அரசியல் வாரிசானார். தறிகெட்டு வேகமாக பறக்க ஆரம்பித்தார். கவிதைகள், இலக்கியக் கூட்டங்களில் இருந்து வேறு இடத்திற்கு பெயர்ந்து போனார். திரும்பிப் பார்க்க முடியாத தூரம் அது. ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்களுக்கும் அவரது கவிதைகளுக்கும் எந்த சம்பந்தம் இருக்க முடியும்? இப்போது விழுந்து கிடக்கிறார். அரசியல் அதிகாரத்தின் போதை எப்பேர்ப்பட்டது என்பதை அவரது வீழ்ச்சி சொல்லிக்கொண்டு இருக்கிறது.

முதன்முதலாக சுபமங்களாவில்தான் அவரது கவிதையொன்றை படித்தேன். அதைப் பற்றி அப்போது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, எழுதியவர் தி.மு.க தலைவரின் மகள் கனிமொழியென்றார்கள். ஆச்சரியமாய் இருந்தது. பின்னாளில் எழுத்தாளர் சா.கந்தசாமியும் அதே ஆச்சரியத்துடன், ‘கருவறை வாசனை’ புத்தகத்தைப் படித்துவிட்டு, ‘தந்தையின் சாயலற்ற எழுத்து’ எனச் சொன்னதையும் கேட்டு இருக்கிறேன். கனிமொழி என்னும் கவிஞர் அப்படித்தான் தெரிந்தார். உண்மையின் அருகில் நின்று பேசுவதாகவும், நவீன இலக்கியக் கூறுகள் கொண்டதாகவும் அவரது கவிதைகள் பொதுவாக இருந்தன. ஆனால் அவரது அரசியல் அப்படியில்லை. அச்சு அசலாய் தந்தையின் சாயல். அரசியலில் அதிகார உன்மத்தம் கொண்டவர்கள் எல்லோருக்கும் ஒரே சாயல்தான்.

கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்ததாகச் சொன்னாலும், கணவரைப் பிடித்தபடி கண்ணீர் விட்டிருக்கிறார். சிறையில் வாசிப்பதற்கு கண்ணாடியும், புத்தகங்களும் கேட்டு இருக்கிறார். முதலில் அவரது இந்தக் கவிதையை அவரேப் படிக்கட்டும்....

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசிவினேன்,
சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டைபோட்டுக் கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று...


www.mathavaraj.com

ஏற்காட்டில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்.

ஏற்காட்டில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள்

ஏழைகளின் ஊட்டி என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளாக காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரக்குமார் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதால் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் கொட்டுவது குறைந்தது.

ஆனால் தற்போது கோடைக்காலத்தால் திரளான சுற்றுலா பயணிகள் ஏற்காடு வந்து செல்கிறார்கள். இவர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கழிவுகளை அப்படியே ரோட்டிலும், மலைப்பகுதியிலும், மலைப்பாதையிலும் வீசி செல்கிறார்கள். இதனால் ஏற்காட்டின் அழகு கெடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சேலம் வந்து இருந்த நடிகர் விவேக் கூறும்போது, இயற்கை அழகை ரசிக்கலாம் என பலரும் ஏற்காட்டிற்கு வருகிறார்கள். மலைகளையும், இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம் என நினைத்து ஏற்காடு வருபவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருக்கும்.

காரணம் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருட்களாக கிடக்கிறது. இவைகளை போட குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இன்னும் சில நாட்களில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்க இருக்கிறது.

இதனால் ஏற்காடு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கலெக்டரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

ஏற்காடு கோடை விழா 27-ம்தேதி தொடங்குகிறது.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு தேர்தல் காரணத்தால் கோடைவிழா நடக்குமா? நடக்காதா? என பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். இப்போது தேர்தல் நடந்த முடிந்து விட்டது. இதனால் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 27-ம் தேதி தொடங்குகிறது.

பின்னர் விழா 29-ம்தேதி வரை நடக்கும். இந்த விழா குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரக்குமார் தலைமை வகித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ஏற்காட்டில் ரூ.11கோடி செலவில் பொட்டானிக்கல் கார்டன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மலர்கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களை கொண்டு விதவிதமான அலங்கார வடிவங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள் இந்தாண்டும் இருக்கும். ஏற்காடு ஏரி தூர்வாரும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்காட்டில் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்க்க ஏற்காடு டூ ஏற்காடு என்ற பெயரில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு போட்டிகளும் , கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார். இதுதவிர சுற்றுலாத்துறை அமைச்சர் உள்பட பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட உள்ளதாக கலெக்டர் சந்திரக்குமார் தெரிவித்தார்.

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி - ஜெயலலிதா கடும் தாக்கு.


புதுச்சேரி அரசில் அதிமுகவுக்கு இடமளிக்காததற்கு முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து என்.ஆர்.காங்கிரஸ் 20 இடங்களிலும், அதிமுக 10 போட்டியிட்டன. இதில் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் ரங்கசாமிக்கு காரைக்காலில் சுயேட்சையாக வென்ற வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்தார். இதையடுத்து தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.

இதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு ரங்கசாமி துரோகம் இழைத்துவிட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனித்தே ஆட்சி” என்று தன்னிச்சையாக புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, “சொல்வது ஒன்று, செய்வது ஒன்று” என்ற பழமொழி தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறிய ரங்கசாமி, தேர்தலுக்குப் பிறகு அதே துரோகத்தை அதிமுகவுக்கு இழைத்திருக்கிறார்.

நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அதிமுகவுடன் இணைந்து ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்த நான், புதுச்சேரிக்கு சென்று என்.ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய ஆதரவு அளிக்குமாறு புதுச்சேரி வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொண்டேன்.

இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்தும், கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்தும் தான் புதுச்சேரி மக்கள் அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தனர். அதிமுக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது.

கழகக் கூட்டணி வெற்றி பெற்றதும், புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் என்.ஆர்.ரங்கசாமி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் நான் தெரிவித்திருந்தேன். ஆனால், ரங்கசாமி அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு வாழ்த்து தெரிவிக்கக்கூட மனமில்லை.

நன்றி மறந்து நாணயமற்ற முறையில் நடந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி. எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை என்ற வள்ளுவரின் வாய்மொழியை இந்தத் தருணத்தில் நான் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுக ஆதரவுடனும், செல்வாக்குடனும் வெற்றி பெற்றுவிட்டு ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும்போது ஒரு வார்த்தை கூட எனக்குத் தெரிவிக்காமல், கழக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினரின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான செயல் ஆகும்.

நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி. முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் ரங்கசாமி. கூட்டணிக் கட்சியுடனேயே நாணயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ள ரங்கசாமி மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்?. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஏமாற்று நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது, ஆளும் கட்சியினால் ஏற்படும் அவதியை எடுத்துக் காட்டுவது, ஆளும் கட்சியின் சட்ட திட்டங்களும், நிர்வாக முறைகளும் நாட்டை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது, உரிமையும், உடமையும் பறிபோகும் போக்கில் ஆளும் கட்சி நடந்து கொள்ளும் போது அதனைக் கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது போன்றவை தான் எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதற்கிணங்க, ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக புதுச்சேரியில் செயல்படும் என்பதையும், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டோமே தவிர, வேறு எந்த வகையிலும் அந்தக் கட்சிக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. வென்றால் ஆட்சியில் பங்கு தருவோம் என்றும் கூறவில்லை என்றனர்.

மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள்: ரூ.5,700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.

மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள்: ரூ.5,700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு


மத்திய அரசுக்கு, மத்திய உற்பத்தி மற்றும் சேவை வரிகள் மூலம் பெருமளவு வருமானம் கிடைத்து வருகிறது. இதில் பல கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது.

இது குறித்து உற்பத்தி வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது

இந்தியா முழுவதும் மத்திய உற்பத்தி வரி, சேவை வரிகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இது பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு 1,190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன்படி உற்பத்தி வரி ஏய்ப்பாக ரூ.1,356 கோடியும், சேவை வரி ஏய்ப்பில் ரூ.4,353 கோடியும் ஆக மொத்தம் ரூ.5,700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறது என்று கணக்கிட்டு இருக்கிறோம்.

இந்த வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடும் தண்டனைகள் அளிக்கக்கூடிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டு இருக்கிறோம் என்று அவர் கூறினார்.