Thursday, May 19, 2011

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஜெ. கண்டனம்.


புதுச்சேரி அரசில் அதிமுகவுக்கு இடமளிக்காததற்கு முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து என்.ஆர்.காங்கிரஸ் 20 இடங்களிலும், அதிமுக 10 போட்டியிட்டன. இதில் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில் ரங்கசாமிக்கு காரைக்காலில் சுயேட்சையாக வென்ற வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்தார். இதையடுத்து அதிமுகவை ஒதுக்கிவிட்டு தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.

இதற்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு ரங்கசாமி துரோகம் இழைத்துவிட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டோமே தவிர, வேறு எந்த வகையிலும் அந்தக் கட்சிக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. வென்றால் ஆட்சியில் பங்கு தருவோம் என்றும் கூறவில்லை என்றனர்.

25 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

மாநில சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி என்ற அதிகாரமில்லாத பதவியில் முடக்கி வைக்கப்பட்டிருந்தார்.

அதே போல திமுக ஆட்சியில் மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு 'டம்மி போஸ்ட்' என்பது குறிப்பிடதக்கது.

2 நாளில் சிறைத்துறையிலிருந்து உளவுப் பிரிவுக்கு வந்த ராஜேந்திரன்:

சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற அதே தினமே இவர் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக அதிகாரமற்ற பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டார். ஆனால், நேற்று இவருக்கு மிக மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பை தந்துள்ளார் ஜெயலலிதா.

திமுக ஆட்சியிலும் இவர் நடுநிலையோடு செயல்பட்டதால் இந்தப் பரிசு அவருக்குத் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அதிகாரிகள் மாற்றங்கள் குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் நேற்றிரவு வெளியிட்ட உத்தரவு விவரம்:

மாநில உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி டி.ராஜேந்திரன் (சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர்) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கூடுதலாக கவனித்து வந்தார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி எஸ்.ஜார்ஜ் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.

ஒதுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன்-ஜாங்கிட்:

மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்பார். மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபி ஆஷீஸ் பெங்ரா மாற்றப்பட்டு உள்ளார்.

மத்திய போலீஸ் பயிற்சி பள்ளி சிறப்பு அதிகாரியாக உள்ள கூடுதல் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் நாகர்கோவிலில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜாபர்சேட்டுத்து மண்டபம் அகதி முகாம்:

கூடுதல் டிஜிபி எம்.எஸ்.ஜாபர்சேட் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டு இருக்கிறார்.

மேற்கு மண்டல ஐ.ஜி. பி.சிவனான்டி திருச்சியில் உள்ள மாநில போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்பார்.

சென்னை கூடுதல், இணை கமிஷனர்கள்:

மாநில நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. தாமரைக்கண்ணன் சென்னை நகரின் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள ஐ.ஜி. ஷகீல் அக்தர் மாற்றப்பட்டார்.

சென்னை தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள கூடுதல் கமிஷனர் எம்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.

மாநில தலைமையக ஐ.ஜி. அபய்குமார் சிங் சென்னை நகரின் தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன் சென்னை தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு இணை கமிஷனர் பெரியய்யா மாற்றப்பட்டு உள்ளார்.

மத்திய அரசு பணியில் உள்ள டி.ஐ.ஜி. கே.சங்கர் மத்திய சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆயுதப்படை டி.ஐ.ஜி. என்.கே.செந்தாமரைகண்ணன் வடசென்னை இணை கமிஷனராக பொறுப்பேற்பார். வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி பணிமாற்றப்பட்டு உள்ளார்.

ஈரோடு அதிரடிப்படி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.வி.கருப்பசாமி சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஆகிறார். மைலாப்பூர் துணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் மாற்றப்பட்டார்.

சென்னையில் உள்ள மாநில ஓ.சி.ஐ.யு. பிரிவு சூப்பிரண்டு திருநாவுக்கரசு தியாகராயநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தியாகராய நகர் துணை கமிஷனர் சண்முகவேலு மாற்றப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன் சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆகிறார். அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் மாற்றப்பட்டு உள்ளார்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பேற்பார். புளியந்தோப்பு துணை கமிஷனர் என்.பாஸ்கரன் மாற்றப்பட்டார்.

ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்ட் அவினாஷ்குமார் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகிறார். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமார் மாற்றப்பட்டு உள்ளார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.எஸ்.அன்பு பூக்கடை துணை கமிஷனராக பொறுப்பேற்பார். பூக்கடை துணை கமிஷனர் பி.பகலவன் மாற்றப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.கண்ணன் திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் என்.எம்.மயில்வாகனன் மாற்றப்பட்டு உள்ளார்.

பவானீஸ்வரி துணை கமிஷனர்:

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.பவானீஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஆகிறார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமி மாற்றப்பட்டார்.

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் ஆகிறார். அண்ணா நகர் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் மாற்றப்பட்டார்.

தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சுதாகர் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆகிறார். அந்த பதவியில் இருந்த துரைராஜ் மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷி நிர்மல் குமார் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்பார். அந்த பதவியில் இருந்த எஸ்.மனோகரன் மாற்றப்பட்டார்.

ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை கமாண்டன்ட் அனிஷா உசேன் சென்னை போக்குவரத்து போலீஸ் மத்திய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரயில்வே டி.ஐ.ஜியாக பொன்மாணிக்கவேல்:

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் மாநில ரயில்வே டி.ஐ.ஜி.யாக சென்னைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் இருந்த பி.சக்திவேலு மாற்றப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் தரப்பட்ட பொன்மாணிக்கவேலுக்கு இந்த முறை ரயில்வே டிஐஜி பதவியே கிடைத்துள்ளது.

ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை - தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.


சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.

இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந் நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி நில மோசடி : 6 பேர் கைது.

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி நில மோசடி: 6 பேர் கைது

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மதுரை ஆனைïர் மற்றும் அதை சுற்றியுள்ள பார்க் டவுன், கலைநகர், பசுபதி நகர், கார்த்திக் நகர், பாலாஜிநகர், வாசுநகர், அதிசயா நகர், ஜெய்நகர் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 153 ஏக்கர் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் அந்த நிலங்களை சிலர் மோசடி செய்து உள்ளனர்.

அந்த நபர்கள் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு தொடர்ந்து வில்லங்கத்தை ஏற்படுத்திக்கொண்டும், அதை சரி செய்து கொடுப்பதாகவும் கூறி, நில உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக பார்க் டவுன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கணேசன் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையின் தீவிர விசாரணையில் இறங்கின. இந்த 153 ஏக்கர் நில மோசடியில் சென்னை சாந்தோமை சேர்ந்த ஜான்கென்னடி, மதுரை எஸ்.ஆலங்குளம் மருதுபாண்டியர் 2-வது தெருவை சேர்ந்த துரைராஜ், ராமன், ராஜசெல்வராஜ், ராஜவிஜயசிங், ராஜதாமோதரன், ராஜகண்ணபிரான், ராஜசெல்வேந்திரன், கார்மேகம், ஜெயலட்சுமி, அவருடைய மகன் முரளிதர மோகன கிருஷ்ணா, பரவை காளியம்மன்கோவில் தெரு ராஜபூமிநாதன், வலம்புரிநாதன், மதுரை பைபாஸ் ரோடு அலுவலக இணை சார்பதிவாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜான்கென்னடி என்பவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 153 ஏக்கர் நிலங்கள் தங்களது மூதாதையர்களின் வழிவகை சொத்துக்கள் என்றும், அதற்கு தாங்கள் தான் வாரிசுகள் எனவும் கூறி, அவர்கள் போலி ஆவணங்களை பெற்று இருக்கிறார்கள். 153 ஏக்கரின் தற்போதைய மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தனிப்படையினர் மூலம் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தோம்.

இந்த நிலையில் கார்மேகம், ராஜ தாமோதரன், ராஜ கண்ணபிரான், ராஜ செல்வேந்திரன், ராஜபூமிநாதன், வலம்புரிநாதன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவான மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

இம்மாதிரியான மோசடிகள் தமிழ்நாடு முழுவதுமே நடைபெற்று வருகின்றன..... அரசுபதிவாளர்களும், எழுத்தர்களும் இந்த மோசடிகளில் உடந்தையாக உள்ளனர்.. காவல்துறை அதிகாரிகளும் இந்த மோசடி ஆசாமிகளை கைது செய்வதில்லை... புகார்கூறும் பாதிக்கப்பட்டவர்களிடம் புதிது புதிதாக சட்டங்களைக்கூறி காலதாமதம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடமும், குற்றவாளிகளிடமும் தனித்தனியாக பணம் கறந்துவிடுகிறார்கள்.. குற்றவாளி களையும் தப்பவிட்டுவிடுகிறார்கள்....

இந்த விசயத்தில் அரசு முனைப்புடன் செயல்பட்டு, நிலமோசடிகளை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு காவல்துறை அமைப்பை ஏற்படுத்தவேண்டும்..இந்த மோசடிக்கு உடந்தையாக இருக்கும் பதிவாளர்களை வீட்டுக்கு அனுப்ப வழிவகை செய்யவேண்டும். இத்தகைய மோசடியில் கைது செய்யப்படும் பதிவாளர்கள்,உடனடியாக ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.. இந்நிலை மாற சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கூடுதல் விற்பனை வரி ரத்து : கேரளாவில் பெட்ரோல் விலை குறைப்பு.

கூடுதல் விற்பனை வரி ரத்து: கேரளாவில் பெட்ரோல் விலை குறைப்பு


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியதால், கேரளாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.39 உயர்ந்தது. இதன்மூலம், கேரள அரசுக்கு விற்பனை வரி மூலம் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.131 கோடியே 94 லட்சம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில், முதல்-மந்திரி உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் முதலாவது மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், கூடுதலாக கிடைக்கும் விற்பனை வரி வருவாயை ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் இருபத்து இரண்டு காசுகள் குறைந்தது.

ரூ.30 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்.


கடந்த 2 ஆண்டுகளில் வருமானவரி சோதனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், கறுப்பு பணம் பற்றிய தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுதிர் சந்திரா,

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில், வருமானவரி சோதனை மற்றும் ஆய்வு மூலம் ரூ.30 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனையிலும், ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இதன்மூலம், நாங்கள் சாதாரண மக்களை குறிவைக்காமல், பெரிய மனிதர்களை குறிவைத்து செயல்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கறுப்பு பணம் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காமல், எங்கள் அதிகாரிகள், அலுவலகத்தை விட்டு வெளியே செல்வது இல்லை. தனிப்பட்ட பகை காரணமாக, எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிக கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம். அனைவரும் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் வருமான வரித்துறை ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரீபண்ட்' கொடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில், முதல் 45 நாட்களில் வருமான வரி வசூல், கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 3 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, முதல் 45 நாட்களில் ரூ.9 ஆயிரம் கோடி மட்டுமே வசூலானது. ஆனால், தற்போது ரூ.28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.

கறுப்பு பணம் குறித்த தகவல் பரிமாற்றத்துக்கு தனிப்பிரிவு உருவாக்கி உள்ளோம். வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருக்கும் நாடுகளை அடையாளம் கண்டுள்ளோம். அத்தகைய 14 நாடுகளுடன் ஒப்பந்தம் போடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எந்த நாடாவது தகவல் அளிக்க மறுத்தால், அந்நாட்டை ஒத்துழைப்பு அளிக்காத நாடு' என்று அறிவிப்பதற்கும் ஒப்பந்தத்தில் வழி உள்ளது என்றார்.

அத்தியாவசிய பொருள் விலை உயரும் : பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் ; “கோப்மா” சங்கம் கோரிக்கை.

அத்தியாவசிய பொருள் விலை உயரும்:    பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்;    “கோப்மா” சங்கம் கோரிக்கை


கோவை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோப்மா சங்க தலைவர் மணிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோப்மா சங்க தலைவர் மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கடந்த 12 மாதங்களில் 9 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி ஏழை மக்களுக்கு கிடைத்திருக்கும் இரண்டு சக்கர வாகன போக்குவரத்து வசதியைக் கூட அனுபவிக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டி பெட்ரோலிய நிறுவனங்கள் தமக்குள் போட்டி போட்டு பெட்ரோல் விலையை சகட்டுமேனிக்கு உயர்த்தியுள்ளதற்கு கோப்மா சங்கம் மிக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அதிகப்படியான நுகர்வோர்கள் உள்ள அமெரிக்கா தேசத்தில் கூட இந்தியாவை காட்டிலும் பாதிக்கு பாதி விலை குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில்ஏழை-எளிய அடித்தட்டு மக்களின் மீதே வரிச்சுமையையும், பெட்ரோல் விலை உயர்வையும் அடிக்கடி ஏற்றி விடுகின்றனர்.

ஏறிய எந்த பொருட்களின் விலையும் இந்தியாவில் குறைவதே இல்லை. இந்தியாவில் விற்கக்கூடிய பெட்ரோல் விலையில் மத்திய-மாநில அரசுகள் 51 சதவீதம் வரை விலையில் பாதியை வரியாகவே மக்களிடமிருந்து பெறுகின்றனர்.

பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தரப்படுகின்ற அபரிமிதமான சலுகைகளாலும், ஊதிய உயர்வாலும் மற்றும் நிர்வாக குறைபாட்டால் மட்டுமே நஷ்டம் ஏற்படுகிறது. இந்திய திருநாட்டில் மாதம் ஐந்தாயிம் ரூபாய் ஊதியம் பெற்று குடும்பத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற பலகோடி மனிதர்களை இந்திய அரசு சிறிதாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெட்ரோலிய நிறுவனங்களில் நஷ்டம் ஏற்படுவது உண்மையென்றால் அரசு பெட்ரோல் கொள்முதலில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டால் நாட்டில் ஏழை எளியோர் பயன்படுத்தப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பது அரசுக்கு தெரியாதா? மக்களால் பயன்படுத்தப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அரசு லாப-நஷ்ட கணக்கு பார்க்க கூடாது.


ஆகவே அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டில் அரசே வைத்துக் கொளள் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மணிராஜ் கூறியுள்ளார்.