Wednesday, May 18, 2011

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம் ஒருவாரத்தில் தயார் ஆகும் ; இரவு - பகலாக பணி தீவிரம்.

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம்    ஒருவாரத்தில் தயார் ஆகும்;    இரவு-பகலாக பணி தீவிரம்

தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்ததையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை சீரமைக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பணிபுரியும் அறைகள் தயார் ஆகி விட்டன. ஒரு சில சிறிய வேலைகள் நடந்து வருகின்றன. இது தவிர கோட்டையின் மற்ற பகுதிகள் வண்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகளில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 33 அமைச்சர்கள் கடந்த 16-ந் தேதி சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கம் தயார் ஆகி வருகிறது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கைகள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. பணியாளர்கள் கூடுதல் எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இருப்பதால் சட்டசபை கூடம் உருவாகும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இருக்கைகளை அமைப்பதற்கான படிக்கட்டுகள், மின்சார வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு-பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது.

சட்டசபை அரங்கத்தை அமைக்கும் வேலையை ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். 22-ந் தேதிக்குள் பெரும்பாலான பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு முடிவடைந்தால் 23-ந் தேதி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற துறை அலுவலகம் ஏற்கனவே புதிய சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. அதுவும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படுகிறது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சட்டசபை தொடர்பான அனைத்து பணிகளும் 24-ந் தேதிக்கு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. 25-ந் தேதி முதல் புனித ஜார்ஜ் கோட்டை சட்டசபை கூடுவதற்கு முழுமையாக தயார் ஆகிவிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சட்டசபை இட மாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது ; சென்னை ஐகோர்ட்டு மறுப்பு.

சட்டசபை இட மாற்றத்திற்கு  தடை விதிக்க முடியாது;  சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னையை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்தில் செயல்படும் தமிழக சட்டசபை மற்றும் தலைமை செயலக அலுவலகங்கள் அனைத்தும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

இதற்காக ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த நூலகம் காலி செய்யப்பட்டது. இந்த இடமாற்றத்தின் மூலம் பொது மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த இட மாற்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டார்.

இம்மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டனர்.

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இட மாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்.


மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார்.

‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.

நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை வந்து கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுகிறது.

அழகிரி ஆதரவாளர் பொட்டுசுரேஷ் வீடு மீது தாக்குதல்

மதுரையில் முக்கிய திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ். நடிகர் வடிவேலு வீடு மற்றும் பண்ணை வீடு மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வேளையில் பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தல் சமயத்தில் அழகிரி பின்னால் சென்று போட்டோ பிடித்த மதுரை கலெக்டர் சாகாயம் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

கலைஞருக்கு பழ.நெடுமாறன் எழுதிய பகிரங்கக் கடிதம்.


மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள்.

6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள்.

உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை.

ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி விட்டதே!

கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.

1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடைய வில்லையே, அது ஏன்?

நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸூக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.

ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரஸையும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்'' ’’ என்று கூறியுள்ளார்.


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம்.


தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இந்தியா சார்பில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்து பேசினார். வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுடன், பிரதிநிதிகள் குழுவினருடன் பெரீஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் தாக்குதல்களுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், "அனைத்து மீனவர்களும் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும், இலங்கையும் ஒப்புக்கொண்டு இருப்பதாக'' குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து உடன்பாடு ஏற்பட்டு இருப்பதுடன், விரிவுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் சட்டபூர்வ உரிமை கோரிக்கைக்கு பலமான ஆதரவை இலங்கை மீண்டும் உறுதி செய்து இருப்பதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரின்போது அகதிகளாக இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தங்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, நெருக்கடி நிலை சட்டங்களை விரைவில் வாபஸ் பெற்று மனித உரிமைகள் மீறல் குறித்த விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், இந்தியா தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பணியில் இலங்கை அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருவதாக, பெரீஸ் மீண்டும் உறுதி அளித்தார்.

இது தொடர்பாக தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தை மற்றும் அதிகார பகிர்வு திட்டத்தின் மூலம் உறுதியான விரைந்த தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபையின் நிபுணர் குழு குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தவும் அந்த குழு சிபாரிசு செய்து இருந்தது.

இலங்கை மந்திரி பெரீசின் 3 நாள் இந்திய பயணம் நேற்று முடிவடைந்த நிலை குறித்து, ஐ.நா. சபையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அரசின் நிலை குறித்து இந்தியாவிடம் தெரிவித்தாரா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

பாரதிதம்பி.
மே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைக் காட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைக்காட்சிகள் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் தமது ஸ்டுடியோக்குள் அழைத்துவந்து நேரடி ஒளிபரப்பு செய்தன.

பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார்.

இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.

’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?

ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக்கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!

இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?

சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.

ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா

’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.

போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.

நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.

நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

Barathi Thambi

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .


சேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.

இதேபோல் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் நடைபெறுகிறது.

கடந்த ஆட்சியில் 2மணிநேர மின்வெட்டு சீராக இருந்தது. மின் பற்றாக்குறை அதிகம் இருந்த காலத்தில்கூட 3மணிநேர மின்வெட்டுதான் நடைமுறையில் இருந்தது. இதுபோல் 6மணி நேர மின்வெட்டெல்லாம் நினைத்து பார்க்காத ஒன்று. மின்வெட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.

காலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.

10.30மணி முதல் 11மணி வரை .,

மதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,

மாலை4.30மணி முதல் 5மணி வரை .,


இரவு 8.30மணி முதல் 9மணி வரை.,

இரவு 10.30மணி முதல் 11மணி வரை.,

இரவு 1.30மணி முதல் 2மணி வரை.,


இப்படி தினமும் சேலத்தில் 6மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

மின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா?

அல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.

மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.

ஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.

இப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்

இது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்!!.