Tuesday, May 17, 2011

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ; 10 தீவிரவாதிகள் பலி.

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல்; 10 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது.

இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானில் மிரான்ஷா அருகேயுள்ள மிர்அலி நகரில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை வீசின.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அந்த கட்டிடம் இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. இதில், 10 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தகவலை பாகிஸ்தான் டெலிவிஷன் வெளியிட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் ; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்;  ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா நேற்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை - நடிகர் வடிவேலு வீடு தாக்குதல்.

தாம்பரம் படப்பையில் உள்ள  நடிகர் வடிவேலு பண்ணை  வீட்டில் தாக்குதல்;  ஜன்னல்கள் உடைப்பு

சட்டமன்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதால் சென்னை சாலி கிராமத்தில் உள்ள வடிவேலு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வடிவேலுவின் பண்ணை வீட்டில் திடீர் தாக்குதல் நடந்து உள்ளது. இந்த பண்ணை வீடு தாம்பரம் அருகேயுள்ள படப்பை புஷ்பகிரி பகுதியில் இருக்கிறது. மாமர தோப்புகள் மத்தியில் இவ்வீடு கட்டப்பட்டு உள்ளது. பண்ணை வீட்டில் வேலு என்பவர் காவலாளியாக வேலை பார்க்கிறார்.இவர் தனது குடும்பத்தினருடன் தோப்பில் தனி வீட்டில் வசிக்கிறார்.

நேற்று மாலை இந்த பண்ணை வீட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வந்தனர். வீட்டை அவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி உடைத்தனர். வீட்டில் 6 கண்ணாடி ஜன்னல்களையும் உடைத்து நொறுக்கினார்கள். காவலாளி வேலுவுக்கும் மிரட்டல் விடுத்தனர். அவரிடம் வடிவேலுவின் செல்போன் நம்பரை கொடுக்குமாறு கேட்டனர். அவர் தெரியாது என்றார்.

உடனே மர்ம ஆசாமிகள் வேலுவின் செல்போனை வாங்கி அதில் வடிவேலு நம்பர் இருக்கிறதா என்று தேடி பார்த்தனர். அதில் வடிவேலு எண் இல்லாததால் மீண்டும் அதை வேலுவிடம் கொடுத்தனர்.

வருகிற சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்து விடவேண்டும். இல்லா விட்டால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்று விட்டார்கள். இது குறித்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு தகவல் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

'நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கத்தான் ரஜினி மருத்துவமனையில் உள்ளார்' - சோ.


ரஜினிக்கு ஒன்றுமில்லை. அவர் வழக்கம்போல சுறுசுறுப்பாக இருக்கிறார். என்னைப்போன்ற நண்பர்களின் தொந்தரவை தவிர்க்கவே அவர் இங்கே உள்ளார், என்றார்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியை நேற்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ரஜினியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.

அவர்களுடன் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவும் சென்றிருந்தார்.

ரஜினியை சந்தித்துவிட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், "என்னைப் போன்ற நண்பர்கள் தொந்தரவை தவிர்ப்பதற்காகவே ரஜினிகாந்த் இங்கே வந்திருக்கிறார். மற்றபடி அவருக்கு ஒன்றுமில்லை. ரசிகர்கள் கவலைப்பட்டு மருத்துவமனையை சூழ வேண்டாம். அவர் நலமாக இருக்கிறார். விரைவில் உங்கள் முன் பேசுவார்,'' என்றார்.

பி.இ. விண்ணப்ப விநியோகம் தொடக்கம் : முதல் நாளில் 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை பி.இ. விண்ணப்பங்களை வாங்குவதற்காகக் குவிந்த மாணவர்கள்.


பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமையே 88 ஆயிரத்து 744 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான இடங்களும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.

2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.

மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்த சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் அளித்த பேட்டி:

பொறியியல் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இம்முறை உயரும் என்பதால், கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளன.

விண்ணப்ப விநியோகத்துக்காக தமிழகம் முழுவதும் உள்ள மையங்களுக்கு மொத்தம் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் விண்ணப்பங்கள் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 486 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 400 கல்லூரிகள், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி கோரியுள்ளன. இதில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு விடும்.

வரும் 18, 19, 20 தேதிகளில் ஏ.ஐ.சி.டி.இ., நிபுணர்கள் குழு கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு, அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க உள்ளன.

இதனால் இப்போது பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் அரசு ஒதுக்கீட்டிலான இடங்கள், 1.5 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது. எனவே, இம்முறையும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பி.இ. இடம் கிடைக்கும்.

படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடக்கலை மற்றும் திட்டக் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பி.இ. எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், சிவில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இடங்கள் உயர வாய்ப்பு உள்ளது என்றார் மன்னர் ஜவஹர்.

பி.இ. விண்ணப்பங்கள் மே 31-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜூன் 3-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

கடந்த முறை அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. படிப்புகளில் சேர 1,69,666 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,11,883 பேர் பி.இ. இடம் பெற்றனர். மொத்தம் 8,172 பி.இ. இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். : முதல் நாளில் 9,000 விண்ணப்பம் விற்பனை - ஆண்டுக் கட்டணம் எவ்வளவு?



சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபையிடம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தை பெறும் மாணவி.


தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை (மே 16) மட்டும் 9,000 மாணவ-மாணவியர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு (2010) விண்ணப்ப விநியோக முதல் நாளில் மொத்தம் 6,249 மாணவர்களும், 2009-ம் ஆண்டு விண்ணப்ப விநியோக முதல் நாளில் மொத்தம் 5,000 மாணவர்களும் விண்ணப்பத்தைப் பெற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். (இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம்.) படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 9,000-மாக அதிகரித்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, சேலம்: சென்னை மருத்துவக் கல்லூரிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் நாளான திங்கள் கிழமையன்று மற்ற இடங்களைவிட அதிகபட்சமாக 1,350 பேரும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 1,060 பேரும், கோவையில் 989 பேரும், சேலத்தில் 893 பேரும் விண்ணப்பம் வாங்கியுள்ளனர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பிற இடங்களையும் சேர்த்து மொத்தம் 9,000 மாணவர்கள் திங்கள்கிழமை விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.

கூடுதலாக 5,000 விண்ணப்பங்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க தொடர்ந்து விடுமுறை இன்றி வரும் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும்.

முதல் கட்டமாக 20,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன; முதல் நாளே 9,000 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதால், தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கூடுதலாக 5,000 விண்ணப்பங்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

கட்-ஆஃப் அதிகமாக இருந்தாலும்கூட...

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது தவிர எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 650-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய அதிக கட்-ஆஃப் மதிப்பெண் ஏராளமான மாணவர்கள் எடுத்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 200-க்கு 200 வாங்கி, ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200-ஐ 65 மாணவர்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்கள் முதல் ஒவ்வொரு வகுப்புவாரி மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல்:

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 20-ம் தேதி சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும்; அதாவது ஒரே ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் எடுத்த மாணவர்களை வரிசைப்படுத்த சமவாய்ப்பு எண் வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி தொடங்கும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். - ஆண்டுக் கட்டணம் :

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-லிருந்து ரூ.12,290-ஆகவும் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணம் ரூ.8,495-லிருந்து ரூ.10,290-ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தில் மாற்றம் ஏன்?

எம்.பி.பி.எஸ். படிப்பில் கல்விக் கட்டணம் ரூ.4,000, சிறப்புக் கட்டணம் (மாணவர் அனுமதி மருத்துவப் பரிசோதனைக் கட்டணம் உள்பட) ரூ.950, டெபாசிட் தொகை ரூ.1,000, நூலகக் கட்டணம் ரூ.1,000, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.4,910, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்த்தல் கட்டணம் ரூ.50, எல்ஐசி காப்பீடு கட்டணம் ரூ.170, செஞ்சிலுவைச் சங்க கட்டணம் ரூ.10, இதர கட்டணம் ரூ.100, கொடி நாள் கட்டணம் ரூ.100 என ஆண்டுக் கட்டணமாக மொத்தம் ரூ.12,290 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.3,825-லிருந்து ரூ.4,910-ஆக அதிகரித்துள்ளதாலும் சிறப்புக் கட்டணம் ரூ.500-லிருந்து 950-ஆக அதிகரித்துள்ளதாலும் மற்ற இதர கட்டணங்களாலும் எம்.பி.பி.எஸ். கட்டணம் ரூ.10,495-லிருந்து ரூ.12,290-ஆக உயர்ந்துள்ளது.

பி.டி.எஸ். படிப்புக்கு...

இதே போன்று சென்னை பாரிமுனையில் உள்ள ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ஆண்டுக் கட்டணமும் ரூ.10,290-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கட்டணம், சிறப்புக் கட்டணம் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பு ஆண்டுக் கட்டணமும் ரூ.10,290-ஆக உயர்ந்துள்ளது.

கலந்தாய்வின்போது...

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் பெறும்போது எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மேலே குறிப்பிட்ட ஆண்டுக் கட்டணம் ரூ.12,290-ஐ டி.டி.-யாகச் செலுத்த வேண்டும்; அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்கள் ரூ.10,290-ஐ டி.டி.யாகச் செலுத்த வேண்டும்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு...

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்லூரிக்கு ஏற்ப ஆண்டுக் கட்டணம் ரூ.2.25 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு பி.டி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.85,000-மாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கலந்தாய்வின் போது சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு அனுமதிக் கடிதம் பெறும் மாணவர்கள், ரூ.25,000-த்தை முன்தொகையாக டி.டி. எடுத்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவில் செலுத்த வேண்டும்; பின்னர் சுயநிதி மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடத்தில் அந்த மாணவர் சேரும்போது ஆண்டுக் கட்டணத்தில் முன்தொகையாகச் செலுத்திய ரூ.25,000 கழித்துக் கொள்ளப்படும்.

என்ஜினீயரிங் இடங்கள் 30 ஆயிரம் அதிகரிப்பு.


2011-12ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:

வருகிற கல்வியாண்டிற்கு பி.இ. மற்றும் பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் 5 இடங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 488 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் 460 சுய நிதி பொறியியல் கல்லூரிகள் அடங்கும். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.

கடந்த ஆண்டு கவுன்சிலிங் முடிவில் 8,172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் தங்களது பாடப்பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மனு செய்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள கல்லூரிகள் மூலம் 30 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த ஆண்டில் புதிதாக 120 கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன. இன்னும் 1 மாதத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும். இதன் மூலம் கூடுதல் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 472 கல்லூரிகள் இருந்தன.

இந்த ஆண்டு 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் தலைமுறை மாணவர்கள் 78 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். என்ஜினீயரிங் விண்ணப்பம் வினியோகம் செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.