Monday, May 16, 2011

புற்றுநோய் தாக்கும் அபாயம் : வயர்லெஸ் - செல்போன்கள் மூளையை பாதிக்கும்.

புற்றுநோய் தாக்கும் அபாயம்: வயர்லெஸ் இண்டர்நெட்- செல்போன்கள் மூளையை பாதிக்கும்; பள்ளிகளில் தடை செய்ய ஐரோப்பிய நிபுணர்கள் சிபாரிசு

உலக நாடுகளில் இண்டர்நெட், செல்போன்களின் பயன்பாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவில் செல்போன்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவழ்கிறது. தற்போது வயல்லெஸ் இண்டர்நெட் இணைப்புகளும் வந்து விட்டது.

செல்போன்கள், வயர்லெஸ் இண்டர்நெட், கார்டுலெஸ் போன்கள் உடல்நலத்துக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாக ஐரோப்பிய நிபுணர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றை பயன்படுத்தும்போது அதில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோமேக்னடிக் கதிர்வீச்சுக்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்றும் மூளையை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

எனவே அவற்றை பள்ளிகளில் பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடை செய்து மாணவர்களையும் சிறுவர்களையும் காப்பாற்றுங்கள் என்று ஐரோப்பிய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள், புகை பிடித்தல், பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதும் உடல்நலத்துக்கு கேடு என்று தெரிவித்துள்ளனர். இவற்றை யெல்லாம் விட வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்புகளும், செல்போன்களும்தான் ஆபத்தானவை என்றும் கூறி உள்ளனர்.

ஆனால் லண்டனைச் சேர்ந்த லேபெர்க்கிலி என்பவர் மொபைல் போன்களால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆராய்ச்சி நடத்தியபோது, அவற்றால் ஏற்படும் பாதிப்பு மிக மிக குறைவு என்று தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியவர் ஐ.பெரியசாமி குறைந்த ஓட்டில் தோற்றவர் பரிதி இளம்வழுதி.

தி.மு.க. வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியவர் ஐ.பெரியசாமி குறைந்த ஓட்டில் தோற்றவர் பரிதி இளம்வழுதி

சட்டசபை தேர்தலில் 2 தொகுதியில் மட்டுமே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 5 தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் 20 தொகுதியில் 5 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் 4 தொகுதியில் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைத்துக் கொண்டனர்.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அ.தி.மு.க. வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனைவிட 50,224 ஓட்டு அதிகம் பெற்றுள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதி வாரிய அமைச்சர் ஐ.பெரியசாமி 53,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பெரியகருப்பன் ஆகியோர் 3 ஆயிரம் ஓட்டுக்கு குறைவாகவும், மைதீன்கான் சுப.தங்கவேலன் ஆகியோர் ஆயிரம் ஓட்டுக்கு குறைவாகவும் பெற்று வெற்றி பெற்று உள்ளனர்.

மைதீன்கான் 605 ஓட்டுகளும், சுப.தங்கவேலன் 921 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தி.மு.க.வில் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர்களாக உள்ளனர்.

பரிதி இளம் வழுதி 202 ஓட்டும், பூங்கோதை 299 ஓட்டும் மதிவாணன் 724 ஓட்டு வித்தியாசத்திலும் தோல்வி அடைந்து உள்ளனர்.

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் பொன்முடி விழுப்புரத்தில் 12,092 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவி உள்ளனர்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள் :

வீரபாண்டி ஆறுமுகம் 35,074 ஓட்டு வித்தியாசத்திலும்,

பொங்கலூர் பழனிசாமி 27,796 ஓட்டு வித்தியாசத்திலும்,

கே.பி.பி.சாமி 27,291 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்து உள்ளனர்.

உறவினர்களிடம் தோற்ற வீரபாண்டி ஆறுமுகம், மகன்


தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முக்கிய அமைச்சர்களில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 35,079 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வீரபாண்டி ஆறுமுகம் தனது சகோதரரின் மகளிடம் தான் தோற்றார். அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயலட்சுமி பழனிச்சாமி தான் அவரது அண்ணன் மகள் ஆவார்.

விஜயலட்சுமிக்கு 1,05,502 ஓட்டுகளும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு 70,423 ஓட்டுகளும் கிடைத்தன. இந்த இரண்டு குடும்பத்துக்கும் இடையே 30 ஆண்டு காலமாக அரசியல் பகை இருந்து வருகிறது. விஜயலட்சுமி 3-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 3 முறை அமைச்சராக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒரு முறையும், ஜெயலலிதா அமைச்சரவையில் 2 முறையும் மந்திரியாக இருந்துள்ளார்.

இதே போல வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரனும் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட அவர் 26,498 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ராஜேந்திரன் சேலம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.கே. செல்வத்திடம் தோற்றார். இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மற்றொரு சகோதரரின் மகன் ஆவார்.


பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : டெல்லியில் பா.ஜனதா மறியல் போராட்டம்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: டெல்லியில் பா.ஜனதா    மறியல் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் பாரதீய ஜனதா மறியல் நடத்தியது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி டெல்லியில் அக்ஷர்தாம், மோதி நகர், கான்பூர், எம்.பி. ரோடு உள்பட பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஜய்கோயல், விஜேந்தர் குப்தா உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் நேற்று மாலை 5 இடங்களில் கண்டன பேரணி நடந்தது. பாரதீய ஜனதா மறியல் காரணமாக டெல்லியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக மீனவர்கள் படுகொலை ; இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கண்டனம்.

தமிழக மீனவர்கள் படுகொலை; இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கண்டனம்

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு, இலங்கை தூதரிடம் பா.ஜனதா தலைவர் சுஷ்மாசுவராஜ் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மாசுவராஜ், தமிழ்நாட்டுக்கு வந்திருந்து பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

இந்த நிலையில், இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாசம் நேற்று டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இலங்கையில் தமிழ் அகதிகளை மறுகுடியமர்த்தும் பிரச்சினை குறித்தும் அவருடன் சுஷ்மா பேச்சு நடத்தினார்.

இதுபற்றி `டுவிட்டர்' இணையதளத்தில் சுஷ்மாசுவராஜ் கூறி இருப்பதாவது-

"எனது வீட்டில் இலங்கை தூதர் கரியவாசத்தை சந்தித்தபோது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையை எழுப்பினேன். அதற்கு பதில் அளித்த கரியவாசம், இந்திய மீனவர்களை கொல்வதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் எனது கவலையை இலங்கை அரசின் மேல் மட்ட தலைவர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இந்த பிரச்சினையில் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்''.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை அன்று பூடானில் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி ஜி.எல்.பெரிஸ்சை மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசினார்.

30 நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மீனவர்கள் பிரச்சினையில் இரு தரப்பு பிரதிநிதி குழுவினரின் கூட்டத்தை விரைவில் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

நெய்வேலி தி.மு.க. நகர செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு.


இன்று காலை கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தேர்தல் முடிவைத் தொடர்ந்து விஷமிகள் யாரோ இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தி.மு.க. செயலாளர் புகழேந்தியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நெய்வேலி முழுவதும் பரவியது. தொண்டர்கள் புகழேந்தி யின் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் உருவானது.

மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். மேலும் தொ.மு.ச. அலுவலகம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

“செக்ஸ்” தொல்லையால் காதலனை கொன்றேன் ; கள்ளக்காதலி வாக்குமூலம்.

“செக்ஸ்” தொல்லையால்  காதலனை கொன்றேன்; கள்ளக்காதலி வாக்குமூலம்

சென்னை தண்டையார் பேட்டை ரெட்டிசுழி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (26). எலக்ட்ரிஷியன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்யாவின் மனைவி இந்திராவுக்கும் (28) கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்திரா, சரவணனுடன் தொடர்வை துண்டித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன் நேற்று இந்திரா வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். இந்த மோதலில் சரவணனை கத்தியால் குத்தி இந்திரா கொலை செய்தார்.

தனது வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்ய சரவணன் வந்ததாகவும் அப்போது மின்சாரம் தாக்கி அவர் இறந்து போனதாகவும் இந்திரா போலீசில் கூறினார். சந்தேகம் அடைந்த தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு விசாரணை நடத்தியதில் இந்திரா கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து போலீசில் இந்திரா அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனக்கும், சரவணனுக்கும் 2 1/2 வருடமாக தொடர்பு இருந்தது. எனது பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் நிலையில் இருந்ததால் சரவணனுடன் உள்ள தொடர்பை துண்டிக்க நினைத்தேன். ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சென்றேன்.

சரவணன் மீண்டும் அங்கு வந்து எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். கடந்த 10 நாட்களாக அவரது தொல்லையை தாங்க முடியவில்லை. நேற்று வீட்டுக்கு வந்து முன்புபோல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்தேன். நீ வேறு யாருடன் தொடர்பு வைத்து உள்ளாய் என்று கூறி தகராறு செய்தார்.

ஒரு கட்டத்தில் என்னை கத்தியால் குத்த முயன்றார். உடனே நான் அந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தினேன். அவரது வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. நான் ஒருமுறைதான் குத்தினேன். அதில் அவர் இறந்து விட்டார். காயம் தெரியாததால் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறி தப்ப முயன்றேன்.

இவ்வாறு இந்திரா கூறினார். கைதான இந்திரா ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குஷ்பு அரசியலில் அனுபவம் இல்லாதவர் : நான் ஜெயலலிதாவை மதிப்பவன் : எஸ்.வி.சேகர்.


தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. என்று நடிகை குஷ்பு கூறினார்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த மைலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எம்ஏ எஸ்.வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக் குத்தான் தோல்வி என்று கூறியுள்ளாரே?

பதில்: குஷ்பு அரசியலுக்கு புதுசு. அனுபவம் இல்லாதவர் மக்கள் தீர்ப்பை எப்போதும் கவுரவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் இப்போது அ.தி.மு.க.வில் இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?

பதில்: நான் எப்போதும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் மதிப்பவன். 2 பேருமே எனக்கு நண்பர்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் அரசியல் பகையை மறந்து நண்பர்களாக இருப்பது போல, நானும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அ.தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன். தற்போது அதற்காக வருத்தப் படவில்லை என்றார்.