Saturday, May 14, 2011

மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா.


மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதி அளிக்கிறேன் என்று ஜெயலலிதா கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இறுதிக் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேட்டி கண்டது.

கேள்வி: தேர்தல் முடிவு குறித்து பல கருத்து கணிப்புகள் வெளியாகின. ஆனால், இந்த பரிமாணத்தில்தான் இருக்கும் என்று சொன்ன ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட காரணம் என்ன?.

பதில்: நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்தது. தி.மு.க. ஆட்சியை மக்கள் வெறுத்தார்கள். அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த பொதுமக்கள் காத்திருந்தார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. ஆகவே, கருத்து கணிப்பு என்ன சொன்னாலும், மக்கள் இந்த முடிவுடன் இருக்கிறார்கள். உறுதியாக இருக்கிறார்கள். எக்காரணத்திற்காகவும் இந்த முடிவை மாற்ற மாட்டார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. அதனால்தான், யார் எதைப்பற்றி சொன்னாலும் நான் கவலைப்படவில்லை.

கேள்வி: இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களுடைய அரசியல் பயணம் என்பது புதுடெல்லியை நோக்கி இருக்குமா?.

பதில்: அதை இப்போதே எப்படி சொல்ல முடியும். இன்றுதான் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வரவில்லை. அடுத்த பணி ஆட்சி அமைப்பதாகும். அதன்பின்னர், தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகம் சீரழிக்கப்பட்டுவிட்டது. சீரழிவு என்றால், எல்லாமே நாசம் செய்யப்பட்டுவிட்டது.

சட்டம் ஒழுங்கு சீர்குழைவு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு, விவசாய தொழில் சீரழிவு, நெசவுத் தொழில் அழிக்கப்பட்டது. பொதுவாக தொழில் துறையை பலவீனமடையச் செய்தது. மக்களுக்கு வாழ்வாதாரமே இல்லாமல் செய்தது. வேலை இல்லா திண்டாட்டம் பெருகியது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாநிலத்தையே கடனாளியாக்கி விட்டார்கள். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மாநில கடன் சென்றுவிட்டது என்று செய்திகள் வருகின்றன. 2006 ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில், ஏதோ கற்காலத்திற்கே சென்றுவிட்ட சூழல் ஏற்பட்டுவிட்டது.

அதனால், நாம் இப்போது மேற்கொள்ள வேண்டிய பணி சாதாரணமானது அல்ல. மிகவும் கடினமான பணி. ஆகவே, தமிழ்நாட்டையே மீண்டும் நிர்மாணிக்க வேண்டும்.

இப்போது தமிழ்நாடு இருக்கின்ற அவலநிலையில் இருந்து அதை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மக்களுக்காக இதை ஏற்று நிறைவேற்றி ஆக வேண்டும்.

கேள்வி: இந்த சிறப்பு பேட்டி வழியாக, தமிழக மக்களுக்கு, இந்திய மக்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?.

பதில்: இப்படிப்பட்ட ஒரு உறுதியான தேர்தல் முடிவுகளை தந்த தமிழக மக்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தலைவணங்கி தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகம் என்பதே மக்கள் ஆட்சிதான். மக்கள் விரும்பினால் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும் என்பதை தமிழக மக்கள் மீண்டும் இன்று உலகத்திற்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். ஆகவே, இன்று தேர்தல் வெற்றி என்று சொல்லி, பலர் பாராட்டு தெரிவித்தாலும், இது உண்மையிலேயே மக்கள் வெற்றிதான். மக்களுடைய உறுதிக்கு கிடைத்த வெற்றி.

ஆகவே, தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புகின்ற செய்தி, கடந்த 5 ஆண்டுகாலமாக எவ்வளவோ அல்லல்பட்டுவிட்டீர்கள். துன்பப்பட்டுவிட்டீர்கள். எத்தனையோ முறை நீங்கள் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். அதையெல்லாம் துடைத்துவிடுங்கள். துயரத்தை மறந்துவிடுங்கள். இனி சிரித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதை நான் உறுதியளிக்கிறேன் என்று கூற விரும்புகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

அதிமுகவின் வன்முறை ஆரம்பம் : நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் தாக்குதல்.


மைலாப்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை மந்தைவெளியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆட்டோ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த சில மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இநத் சம்பவத்தில் எஸ்.வி.சேகர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், அலமாறி கண்ணாடிகள் சேதமாகின. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்துவிட்டனர் என்றும், இந்த சம்பவம் இரவு 10.30 மணிக்கு நடந்தது என்றும் எஸ்.வி.சேகர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களுக்குத்தான் தோல்வி : நடிகை குஷ்பு.


தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான் என்று நடிகை குஷ்பு கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு 13.05.2011 காலை வெளியானது. வாக்கு எண்ணிக்கையையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அலுவலங்களில் தொண்டர்கள் காலை முதலே குவிய தொடங்கினர்.

திமுக தலைவர் கலைஞர் இல்லமான கோபாலபுரத்தில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும், மீண்டும் வரும் என்றார்.

புதிய ஆட்சிக்காக பழைய தலைமை செயலகம் புதுப்பொலிவு பெறத் தொடங்கிவிட்டது.

பழைய தலைமை செயலகத்தில் புதிய அமைச்சர்களுக்கு அறைகள் தயாராகின்றன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது என்று தெரிந்ததும், பழைய தலைமை செயலகத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

இதற்கிடையே, கோட்டையில் உள்ள கேண்டீன் முன்பு அ.தி.மு.க. ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அரசு ஊழியர்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

அமைச்சர்களுக்கான அறைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. ஏ.சி. மிஷின்கள் துடைக்கப்பட்டு பளிச்சிடுகின்றன. அமைச்சர்களின் கார்களில் உள்ள சுழல் விளக்கு, முகப்பு விளக்குகள், கார்களில் உள்ள இருக்கைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் தலைமை செயலாளர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் பழைய தலைமை செயலகத்தில் இருந்து புதிய தலைமை செயலகத்திற்கு மாற்றப்பட்டன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில், முதல் அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் பழைய தலைமை செயலகத்திலேயே செயல்படும் என்றும், சட்டசபை கூட்டமும் அங்கேயே நடைபெறும் என்றும் தெரிகிறது.

அமைச்சர்கள் பயன்படுத்திய அரசு கார்கள் பழைய தலைமை செயலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தன. மொத்தத்தில் பழைய தலைமை செயலகம் புதிய ஆட்சிக்காக புதுப்பொலிவு பெறத் தொடங்கிவிட்டது.

ஈழத்தமிழர்கள் விவகாரம்: முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் செயல்பட முடியும் : ஜெயலலிதா.


தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இறுதிக் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேட்டி கண்டது.

கேள்வி: உலகத் தமிழர்கள் அனைவரும் இன்றைக்கு உங்களிடம் இருந்து ஒரு துணையை, ஒரு பாதுகாப்பை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு உங்கள் நம்பிக்கை வார்த்தைகள் என்ன?.

பதில்: இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதை பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் இலங்கை அரசுதான். ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.

மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசு. மத்திய அரசு என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

இந்திய அரசு 2 வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, இனப்படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்தபடியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக. இலங்கை அரசு பணியவில்லை என்றால், இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைகள் கொண்டுவர இந்தியா மற்ற நாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக இலங்கை அதிபர் பணிந்தாக வேண்டும். இலங்கை அரசு பணிந்தாக வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Friday, May 13, 2011

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி படுதோல்வி.


திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோல்வி அடைந்தது.

1.சீர்காழி (தனி), 2. அரக்கோணம் (தனி), 3.கள்ளக்குறிச்சி (தனி), 4.உளுந்தூர்பேட்டை, 5. திட்டக்குடி (தனி), 6. ஊத்தங்கரை (தனி), 7. அரூர் (தனி), 8. சோழிங்கநல்லூர், 9. காட்டுமன்னார்கோயில் (தனி), 10. செய்யூர் (தனி).

ஜெயலலிதாவிற்கு சில கோரிக்கைகள் : நெடுமாறன்.


தமிழகத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் மக்கள் அமைதிப் புரட்சி செய்துள்ளனர் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும், தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும், இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.

பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை. திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர்.

திருமங்கலம் சூத்திரத்தை செயற்படுத்த விடாமல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன.

மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமும் திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் அளித்த இந்த தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டும் அதே வேளையில் புதிய அரசை அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முதல் கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

ஐ நா. விசாரணைக் குழுவினால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இராசபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும்,

இலங்கையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிர்களையும் உடைமை களையும் பாதுகாப்பதற்கு ஐ. நா. படையை அங்கு அனுப்பி வைப்பதற்கும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான அவசர நடவடிக்கைகளைத் தலையாய கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.