Friday, May 13, 2011

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: ராமதாஸ்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் உரிமைகள், சமூக நீதி, கல்வி, மது ஒழிப்பு ஆகியவற்றுக்காக பாமக தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளது. அந்த நம்பிக்கையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம்.

எனினும், மாற்றம் வேண்டும் என்று கருதியதால் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரத்தில், தமிழக மக்களின் நலனுக்காகவும் உரிமைக் காகவும் பாமக தொடர்ந்து பாடுபடும்.

பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

கொளத்தூர்: மு.க.ஸ்டாலின் வெற்றி.


கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 68,784 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி 65,965 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2,819 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு படுதோல்வி.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு படுதோல்வி:    தங்கபாலுவும் வெற்றி வாய்ப்பை இழந்தார்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த தோல்வியை மக்கள் அளித்துள்ளனர். தமிழர்கள் அளித்துள்ள தீர்ப்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்த போது மிக, மிக கறாராக நடந்து கொண்டது.

திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி 63 தொகுதிகளை தி.மு.க.விடம் இருந்து பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி பிரச்சினையால் பிரசாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.

மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாப்பூரில் திடீர் வேட்பாளர் ஆனது காங்கிரசாரிடம் மட்டுமின்றி மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது இன்று தேர்தல் முடிவு மூலம் தெரிய வந்தது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் உள்ளது.

குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, ஓசூர், பட்டுக்கோட்டை ஆகிய 5 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு “கை” கொடுத்துள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி 23,789 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் திடீர் வேட்பாளராகி போட்டியிட்டார். ஆனால் மயிலாப்பூர் மக்களை அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தோல்வியை தழுவி உள்ளார். அவரைப் போலவே பீட்டர்அல்போன்ஸ், ஞானசேகரன், யசோதா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். காங்கிரசை தமிழக வாக்காளர்கள் ஒதுக்கி விட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து.

தேர்தல் முடிவு குறித்து கருணாநிதி கருத்து

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தி.மு.க. கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தேர்தல் முடிவு குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கேட்டபோது, தமிழ்நாட்டு மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.

Thursday, May 12, 2011

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு அமைதிப் புரட்சி.

ஜி. சுந்தரராஜன்



நடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக அமைந்திருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால், தேர்தல் என்றால் தொடர் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், டிஜிட்டல் பேனர்கள், பட்டாசு, சாரம் ஆகியவை இல்லாமல் குறுகிய இடைவெளியில் மக்களுக்கு அதிக அளவு பாதிப்பு இல்லாத தேர்தலாக அமைந்தது, மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்துள்ளது.

இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தனித்துவம் உண்டு. எந்தக் கட்சித் தலைவரும் எல்லாத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்யவில்லை. ஓரளவுக்கு மிக அதிகமான தொகுதிகளில் பிரசாரம் செய்தவர் என்கிற பெருமை துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கக்கூடும்.

ஏப்.13-ம் தேதி தமிழகம் முழுவதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற்றது. அதுவும் அதிக அளவு மக்கள் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலைப் பொறுத்தவரை திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் நாளன்று அமைதி காத்தனர்.

ஆளும் கூட்டணியினர் தேர்தல் நாளன்று மக்களைச் சந்தித்து வாக்களிக்க அழைக்காததால், எந்தக் கிராமத்திலும் எவ்வித சண்டை சச்சரவின்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. மக்கள் சுதந்திரமாக வாக்களித்ததைக் காண முடிந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் முன்பே திமுக, பாமக ஏஜெண்டுகள் பூத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் நடைபெற்றது.

ஏப்.13-ம் தேதி வாக்குப்பதிவு நாளனறு காலை 8 மணிக்குத் தொடங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட நேரம் காலதாமதமாக 8 மணியைக் காட்டியதால் 10 முதல் 20 நிமிடங்கள் வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகளைவிட வாக்காளர்களே வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குக் கிராமங்களில்கூட மக்கள் மத்தியில் விழிப்புணர்வு காணப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து முடியும்வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது இந்தத் தேர்தலில்தான் என்பதை வாக்குச்சாவடிகளில் இருந்த பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். தேநீர் அருந்தவோ, சாப்பிடவோகூட நேரமில்லாமல் இடைவெளி இன்றி இந்தத் தேர்தலில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அமைதியாக வாக்களித்தனர் என வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய பூத் ஏஜெண்டுகள் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு நேரம் முடிந்தபின்னும் வாக்குச்சாவடிக்குள் இருந்த வாக்காளர்கள் டோக்கன் பெற்று, மாலை 6,7 மணி வரை வாக்களித்தனர்.

கிராமப்புறங்களில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலின்றி இத்தேர்தலில் சுதந்திரமாகவும், சுயமாகவும் வந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியாலோ அல்லது அதிருப்தியாலோ எந்தக் கட்சியினரும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அழைத்து வரும் செயலில் ஈடுபடவில்லை.

எந்தத் தேர்தலிலும் இல்லாமல் இத்தேர்தலில் சற்று வித்தியாசமாகத் தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்புடன் மக்கள் தானாகவே சென்று அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கிராமப்புறங்களிலும் சரி, நகர்ப்புறங்களிலும் சரி புதிய வாக்காளர்கள், அதாவது முதன்முறையாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினர் மிகப்பெரிய அளவில் வாக்களிக்க வரிசையில் வந்து நின்றது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததுபோலவே இந்த இளைய தலைமுறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் தேர்தலில் பங்கு கொண்டனர் என்பதுதான் இந்தத் தேர்தலில் காணப்பட்ட மிகப்பெரிய மாற்றம்.

அதேபோல, தேர்தல் என்று சொன்னாலே, வாக்குச்சாவடியிலிருந்து சற்று தூரத்தில், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின், சுயேச்சைகளின் ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலுடன் பூத் சிலிப்பும் கையுமாக நின்று கொண்டிருப்பார்கள். இந்த முறை அந்தத் தொந்தரவே கிடையாது.

அப்படியே சிலர் வாக்காளர் பட்டியலுடன் நின்று கொண்டிருந்தாலும்கூட, வாக்காளர்கள் அவர்களைச் சட்டையே செய்யாமல் வாக்குச்சாவடிக்குள் தேர்தல் ஆணைய பூத் சிலிப்புடன் நுழைந்தது, ஓர் இன்ப அதிர்ச்சி.

ஆளும்கட்சியினர் வழங்கிய இலவசம் மற்றும் திட்டங்களால் வாக்களித்தார்களா அல்லது ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி ஆகியவற்றால் ஆட்சி மாற்றம் தேவை என்பதால் அதிக அளவு ஆர்வத்துடன் வாக்களித்தார்களா என்பது மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் 600 பேர் சாவு.


ஜெனிவா,லிபியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு சென்ற கப்பல் உடைந்ததால் அதில் இருந்த 600 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராகப் புரட்சி நடந்து வருகிறது. புரட்சியாளர்களை ஒடுக்க கடாபி அரசு ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களையும், புரட்சியாளர்களையும் பாதுகாக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் லிபிய ராணுவம் மீது விமானம் மூலம் குண்டு வீசுகிறது. அங்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் குழப்பமான சுழ்நிலை நிலவுகிறது. உயிருக்கு பயந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

லிபியாவில் புரட்சி நடப்பதற்கு முன்பு அங்கு சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை செய்து வந்தனர். புரட்சி வெடித்த பின்னர் இங்குள்ள ஆப்பிரிக்க மக்கள் பாதுகாப்புக்காகவும், நல்ல வேலை தேடியும் அருகில் உள்ள இத்தாலி நாட்டுக்கு கப்பலில் திருட்டுத்தனமாக செல்கின்றனர். லிபிய ராணுவம் பலரை துப்பாக்கி முனையில் கப்பலில் ஏற்றி நாடு கடத்துவதாகவும் கூறப்படுகிறது. இப்படி அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றுவதால் கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை 600 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு சிறிய கப்பல் இத்தாலிக்கு சொந்தமான லம்பிடிசா தீவை நோக்கி சென்றது. நடுக்கடலில் சென்றபோது கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த சிறிய கப்பல் பாரம் தாங்காமல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 600 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டானர். இதில் பலர் சோமாலியா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களில் 3 படகுகள் கடலில் மூழ்கி 800 பேர் வரை இறந்துவிட்டனர். கடத்தல்காரர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அதிகான மக்களை சிறிய கப்பலில் ஏற்றி வருவதால் விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை 5 கப்பல்களில் 2400 பேர் இத்தாலியின் லக்பிடிசா தீவுக்கு வந்துள்ளனர்.

இது பற்றி லிபியா அதிபர் கடாபியின் அதிகார பூர்வ பேச்சாளர் கூறியது:

லிபிய அதிபர் கடாபியின் அரசை கவிழ்ப்பதற்காக புரட்சிக்காரர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவுகின்றன. அதன் விளைவாகத் தான் ஐரோப்பிய நாடுகளுக்குள் இங்கிருந்து மக்கள் ஊடுருவுகின்றனர். எங்கள் நாட்டின் கடற்கரை பகுதி தினசரி நேட்டோ விமானங்களால் குண்டு வீசி தாக்கப்படுகிறது. இதனால் எங்கள் நாட்டில் இருந்து கப்பலில் செல்பவர்களை தடுக்க முடியவில்லை என்றார் அவர்.

உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து குதித்து தமிழக வாலிபர் தற்கொலை.


துபாயில் உலகின் உயரமான கட்டடத்திலிருந்து குதித்து சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. 2,716 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 160 மாடிகளைக் கொண்டது. இதில் 45 மற்றும் 108 மாடிகளில் வீடுகளும், மற்ற 158 மாடிகளிலும் கார்ப்ரேட் நிறுவன அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில் அராப் டெக் என்ற கட்டுமான நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதியமான் கண்ணன் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவன அலுவலகம் 120வது மாடியில் உள்ளது.

அதியமான் தன் சொந்த ஊருக்கு வர விடுமுறை கேட்டார். ஆனால் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் விரகத்தி அடைந்த அவர் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு 147வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவரது உடல், சிதறியது. 39 மாடிகள் வரை சுவரில் மோதியவாரே வந்த அவரது உடல் 108வது மாடியின் பால்கனியில் வந்து விழுந்தது. போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு விசாரணையும் முடிந்த பிறகே அவரது உடலை இந்திய தூதரகம் மூலம் அராப் டெக் நிறுவனம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் உயரமான கட்டிடத்தில் நடந்துள்ள முதல் தற்கொலை சம்பவம் இதுவாகும்.