Thursday, May 12, 2011

அல் காய்தாவின் அடுத்த இலக்கு ஒபாமாவின் பாட்டி?


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி உறவுமுறையான ஒருவருக்கு ஆப்ரிக்க அல் காய்தா பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இதையடுத்து கென்யாவில் உள்ள அவரது வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவை அடிப்படையாகக் கொண்ட அல் காய்தா பிரிவான அல் ஷபாப் அமைப்பு, ஷாரா ஒபாமாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் அவரது வீட்டைச் சுற்றிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கென்ய போலீசார் தெரிவித்தனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் ஒபாமா பாட்டியின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது அல் ஷபாபின் எச்சரிக்கை வெளியானதில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர் வீடு உள்ள ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ரோந்துப் பணியில் ஈடுபட போதுமான அதிகாரிகள் உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் 88 வயதான ஒபாமாவின் பாட்டி, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலைப்படவில்லை. கூடுதல் பாதுகாப்பு குறித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

அச்சுறுத்தல் எதுவும் எந்தவிதத்திலும் என்னுடைய வாழ்க்கை பாதிக்காது என ஷாரா ஒபாமா தெரிவித்தார்.

அச்சுறுத்தலால் என்னுடைய நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது. கூடுதல் பாதுகாப்பு வழங்க அரசு முடிவெடுத்தால் அதற்கு நாங்கள் உடன்படுகிறோம் என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணக் கடற்பிரதேசம் திடீரென சிவப்பு நிறமாக மாற்றம்.


இலங்கையில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் திடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக அந்த கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பூரில் 60,000 இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு.


உலகிலேயே அதிக அளவில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் நாடாக சிங்கப்பூர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் வேறு எந்த நாட்டையும் விட சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் அதிக அளவிலான ஆட்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளன.

குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அதாவது 60,000 இந்தியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம்.

2011ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேரை வேலைக்கு தேர்வு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. இதில் 50 சதவீதத்தினர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 20 சதவீதத்தினர், அதாவது 60,000 பேரை இந்தியாவிலிருந்து தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

சிங்கப்பூரில் அனைத்துத் துறைகளிலும் நல்ல வளர்ச்சி இருப்பதால் ஆளெடுப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதே இதற்குக் காரணம். மேலும் பல நிறுவனங்களும் இந்தியர்களை அதிகம் விரும்புகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு வங்கிகளின் பிராந்திய தலைநகராக சிங்கப்பூர்தான் விளங்குகிறது. இது போக முன்னணி நிதி நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், சுகாதாரம், எண்ணை நிறுவனங்கள் என பல தரப்பு நிறுவனங்களும் சிங்கப்பூரில் தான் தங்களது பிராந்திய தலைமையிடங்களை வைத்துள்ளன.

இவை அனைத்தும் தற்போது சிங்கப்பூரில் தங்களது பணிகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளன.

புதிதாக இந்த ஆண்டு தேர்வு செய்யப்படவுள்ள 3 லட்சம் பேரில் 40 சதவீதத்தினர் சிங்கப்பூரிலேயே பணியமர்த்தப்படுவர். மற்றவர்கள் ஆசியா பசிபிக் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 1.6 லட்சம் பேர் பலி.

இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 1.6 லட்சம் பேர் பலி

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2010) நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் 1.6 லட்சம் பேர் இறந்தனர். இது 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 35 ஆயிரம் பேர் அதிகம் ஆகும். அந்த ஆண்டில் 1.25 லட்சம் பேர் பலியாகி இருந்தனர்.

சாலை விபத்துக்களில் 5 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு 10 காரணங்களில் சாலை விபத்தும் ஒன்றாக உள்ளது.

நாட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. 2004-ல் பதிவு செய்யப்பட்ட 720 லட்சம் வாகனங்களில் 71 சதவீதம் இரு சக்கரவாகனங்கள் ஆகும்.

போக்குவரத்து அமைச்சகம் 2009-ல் அளித்த அறிக்கையில் 22.4 சதவீத விபத்துக்கள் ஏற்பட இரு சக்கர வாகனங்களே காரணம் என தெரிய வந்துள்ளது. 20.2 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி காயம் அடைகிறார்கள்.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகமும், சாலை போக்குவரத்து துறையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

சாலை விபத்துக்கள் அதிகரிக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை. இதில் அரசியல்விதிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்தால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கையும், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் 13 ஆயிரம் பேர் பலியாகிறார்கள். சாலை விபத்து இறப்புகளை தடுக்க 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் நேற்று பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளன. “சாலை பாதுகாப்பு 10 ஆண்டு 2010- 2020-ம் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உலகிலேயே அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்த எந்த திட்டத்தையும் அரசு முன்வைக்கவில்லை. உலக நாடுகள் நேற்று சாலை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தபோது இந்தியா அதை வெள்ளிக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்தது. இப்போது அது இந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி இறைச்சி ருசியாக இருப்பது ஏன்?

நாட்டுக்கோழி இறைச்சி ருசியாக இருப்பது ஏன்?; கால்நடை அதிகாரி தகவல்

பிராய்லர் கோழிகறியைவிட நாட்டுக்கோழியின் கறிக்கு அதிக மவுசு உள்ளது.

தொழில்ரீதியாக கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நோய்த்தடுப்பு முறைகளும் கச்சிதமாக பின்பற்றப்படுகிறது.

கிராமப்புறங்களில் சாதாரணமாக நாட்டுக்கோழிகள் வளர்ப்பது சகஜமாக உள்ளது. நாட்டு கோழிகளை சமைப்பதால் ஏற்படும் மணமும், ருசியும் இறைச்சி சாப்பிடும் நான்வெஜ் பிரியர்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.

இதனால் நாட்டு கோழிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயங்குவதில்லை. இயற்கையிலேயே நாட்டு கோழி கறியின் சதைப்பகுதியில் உள்ள திசுக்கள் ருசியாக இருக்கும்படி அமைந்துள்ளன.

மேலும் வெளியே சென்று குப்பைகளை கிளரியும் நிலக்கழிவுகளையும் பச்சை புல்லுடன் சேர்த்து சாப்பிடுவதால் நாட்டுக்கோழியின் கறி சமைக்கும்போது வாசனையை பரப்புகிறது.

இதனால் நாட்டுக் கோழிக்கறி தனி மவுசுடன் மற்ற கோழிகளின் இறைச்சியை விட முதலிடம் பெறுகிறது. நாட்டுக்கோழி கிலோ ரூ.250. இதனால் பெரும் கிராக்கியுடன் விற்கப்படுகிறது.

ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்ததால் கர்ப்பிணி மனைவியை கொன்ற தொழிலாளி ; ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு.

ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்ததால்    கர்ப்பிணி மனைவியை கொன்ற தொழிலாளி;     ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பழையாகரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நகை தொழிலாளி. இவரது மனைவி சுரேகா. இவர்களுக்கு காவ்யா (5), ஸ்வீட்டி (3) என்ற மகள்கள் உள்ளனர். இதனால் பிரகாஷ் ஆண் குழந்தை பெற விரும்பினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுரேகா 2 முறை கருதரித்தார். அப்போது அங்குள்ள பவன் நர்சிங் ஹோமில் ஸ்கேன் செய்த போது பெண் குழந்தை என்பது தெரிந்தது. இதனால் 2 முறை கருக்கலைப்பு செய்தார். சில மாதங்களுக்கு முன்பு சுரேகா மீண்டும் கர்ப்பமானார். அங்குள்ள பவன் நர்சிங்ஹோமில் ஸ்கேன் செய்தபோது மீண்டும் பெண் குழந்தை வயற்றில் இருப்பது தெரியவந்தது.

இதையறிந்ததும் பிரகாஷ் கடும் ஆத்திரம் அடைந்தார். சுரேகாவை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டினார். இதையடுத்து அங்குள்ள டாக்டரிடம் சென்றார். சுரேகா 6 மாத கர்ப்பிணி என்பதால், கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதனால் பிரகாசுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. 3 தடவை கருத்தரித்தும் உன்னால் ஆண் குழந்தை பெற முடிய வில்லையே. நீ இனி உயிரோடு இருக்ககூடாது என்று கூறி சுரேகாவின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் இறந்து போனார்.

இதுபற்றி பழையாகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்கேன் மூலம் பெண் குழந்தை கண்டு பிடித்து கூறியது பவன் நர்சிங்ஹோம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் பவன் நர்சிங் ஹோமை சீல் வைத்தனர்.

வைட்டமின் மருந்துக்கு பதில் பினாயில்.

வைட்டமின்  மருந்துக்கு பதில் பினாயில்

மகாராஷ்டிராவில் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் சேர்க்கப்பட்ட 7 பெண்களுக்கு வைட்டமின் மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் கொடுக்ககப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது.

பினாயில் வழங்கப்பட்ட அனைவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . வைட்டமின் மருந்து தருவதற்கு பதிலாக பினாயில் கொடுத்த செவிலியர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.