Thursday, May 12, 2011

ஆதிவாசிகள் நிலத்தை குத்தகைக்கு விட்டதால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசிய பெண்கள் ; அலறியடித்து ஓட்டம்.

ஆதிவாசிகள் நிலத்தை குத்தகைக்கு விட்டதால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசிய பெண்கள்; அலறியடித்து ஓட்டம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்குலோயா பகுதியில் ஜாடிகள் தயாரிக்க உதவும் களிமண் அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அரக்குலோயா தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. விவேரி சோமா அந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டார். இதற்கு ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விவேரி சோமா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். ஏற்கனவே அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பெண்கள் சாணத்தை எடுத்து சரமாரியாக வீசினார்கள்.

இதை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ. தனது பாதுகாவலர்களுடன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் பெண்கள் விடவில்லை. எம்.எல்.ஏ.வின் காரை அடித்து நொறுக்கினர்.

இதனால் அவர் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிவாசிகள் கூறும் போது, தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. விவேரிசோமா ஊழல் பேர் வழி. நாங்கள் வாழும் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்க முயன்று வருகிறார். அவர் இனியும் இங்கு வந்தால் வெட்டிக் கொல்வோம் என்றனர்.

ஜொள்ளு விட்ட கிரிக்கெட் வீரர்கள் - சியர் லீடர்.


தன்னிடமும், பிற சியர்லீடர் அழகிகளிடமும் ஜொள்ளு விட்டு, முத்தமிட, கட்டியணைக்க முயன்ற ஐபிஎல் வீரர்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல், பிளாக்கில் எழுதிய தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சியர்லீடர் அழகியை ஐபிஎல் நிர்வாகம் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டது.

ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை விட ஒவ்வொரு அணியின் சியர்லீடர் அழகிகள் தான் அனைவரையும் கவருகிறார்கள். இப்படி சியர்லீடர்களாக செயல்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகுப் பெண்கள் ஐபிஎல் சியர்லீடர் குழுக்களில் இணைந்து செயல்படுகின்றனர்.

இவர்களிடம் வீரர்கள் ஜொள்ளு விட்டது குறித்து பிளாக்கில் எழுதப் போய் சிக்கலில் மாட்டி, வேலையை இழந்து நாடு திரும்பிள்ளார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப்ரியலா பாஸ்குவாலோட்டோ.

இவர் ஆஸ்திரேலிய வீரர்களின் சேஷ்டைகள் குறித்து பிளாக்கில் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார். மேலும் தன்னிடமும், பிற அழகிகளிடமும் ஜொள்ளு விட்டவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் புகார் கூறவே, தற்போது கேப்ரியலா நீக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து கேப்ரியலா தனது பிளாக்கில் கூறுகையில், ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இரவில் பார்ட்டி நடப்பதுண்டு. .அப்போது கிரிக்கெட் வீரரர்கள், எங்களிடம் வழிந்து வழிந்து பேசுவார்கள்.

தென் ஆப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் தனது காதலி அருகில் இல்லாவிட்டால் மற்றவர்களிடம் வழிவார். ஆஸ்திரேலியர்கள்தான் மிகவும் சேஷ்டை பிடித்தவர்கள். குறிப்பாக ஐடன் பிளிஸ்ஸார்ட், டேன் கிறிஸ்டியன் ஆகியோரைச் சொல்லலாம்.

ஒரு முறை போட்டி முடிந்ததும் ஒரு வீரர் எங்களை அணுகி உங்களையெல்லாம் முத்தமிட விரும்புகிறேன். அவர்களில் குறிப்பாக 3 பேரிடம் மட்டும் அவர் அதிகமாகவே ஜொள்ளு விட்டார். இத்தனைக்கும் அந்த வீரருக்கு அவரது ஊரில் அழகான கேர்ள் பிரண்ட் இருக்கிறார். இருந்தாலும் எங்கள் அத்தனை பேர் மீதும் அவர் வெறியாக இருந்தார்.

என்னைப் பார்த்து என்னுடன் வா, பேசலாம் என்று கூட கேட்டார். நான் போகவில்லை.

இந்திய வீரர்கள் அப்படி இல்லை. சில வீரர்கள் மிக நன்றாகப் பழகுகிறார்கள். கேப்டன் டோணி, ஹோரித் சர்மா ஆகியோர் அமைதியானவர்கள். சச்சின் டெண்டுல்கர் இதுபோன்ற இடங்களுக்கு வருவதே இல்லை என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

கேப்ரியலாவின் இந்த பிளாக் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி விட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் இதுகுறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கேப்ரியலாவை நீக்கி விட்டது ஐபிஎல் நிர்வாகம். மேலும் அவரை தென் ஆப்பிரிக்காவுக்கும் அனுப்பி வைத்து விட்டது.

இதை கண்டித்துள்ளார் கேப்ரியலா. நான் நடந்ததைத்தான் சொன்னேன். உண்மையைச் சொன்னதற்காக எனது வேலையைப் பறித்து விட்டது நியாயமல்ல என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சியர்லீடர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தவர் கேப்ரியலா என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வருமானவரி அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. ஆஜர்.

சென்னை வருமானவரி அலுவலகத்தில்    கனிமொழி எம்.பி. ஆஜர்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி எம்.பி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 6-ந் தேதி இருவரும் ஆஜர் ஆனார்கள். நேற்று அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜரான போது சென்னையில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு முன்பு இன்று ஆஜராக வேண்டியது இருப்பதால் இன்னொரு நாளில் விசாரணைக்கு வருவதாக தெரிவித்தனர்.

இதற்கு அனுமதி வழங்கப்பட்டது, இதைத் தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் இன்று காலை 11.45 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் வித்யா ராமச்சந்திரன் முன்பு ஆஜர் ஆனார்கள். 2007-ம் ஆண்டு டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட போது கனிமொழி காண்பித்த சொத்துக்கணக்கில் கலைஞர் டி.வி. பங்கு குறித்து குறிப்பிட்டிருந்தாரா என்பது குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் சம்மனை அனுப்பி இருந்தனர்.

அதுபற்றி இன்று விசாரணை நடந்தது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கனிமொழி விளக்கம் அளித்தார். கனிமொழி வரும் தகவல் அறிந்ததும் ஏராளமான வெளி மாநில பத்திரிகையாளர்கள், டி.வி. நிறுவனத்தினர் குவிந்து இருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திடீரென கைது செய்யப்பட்ட ராகுல்காந்தி விடுதலை.

திடீரென கைது செய்யப்பட்ட  ராகுல்காந்தி விடுதலை

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விவசாயிகள் நிலம் அதி விரைவு சாலை போடுவதற்காக கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர்களது போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தார். விவசாயிகளோடு அமர்ந்து தர்ணா செய்தார். போலீசார் பல தடவை பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி எடுத்து சொன்ன பிறகும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை.

இதனால் உத்தரபிரதேச மாநில போலீசார் ராகுல்காந்தியை இரவு 11 மணிக்கு கைது செய்தனர்.ராகுல் காந்தியை போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது மர்மமாக இருந்தது. அவர் இன்று மாஜிஸ் திரேட் முன்பு ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க் கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் அங்கும்-இங்குமாக அழைத்து செல்லப்பட்ட அவர் பிறகு கஸ்னா போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டார். அங்கு போலீஸ் காரர்களிடம் அவர், எந்த அடிப்படையில் என்னை கைது செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு போலீசார் எந்த பதிலும் கொடுக்க வில்லை.

இதையடுத்து ராகுல் காந்தியை சொந்த ஜாமீனில் விடுவிப்பதாக போலீசார் கூறினார்கள். அதை ராகுல் ஏற்றுக் கொண்டதால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.ராகுல்காந்தியை உத்தர பிரதேச மாநில போலீசார் தங்களது பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்து சென்றனர். இரவு 2.15 மணி அளவில் அவர் சாரை காலேகான் என்ற பகுதியில் இறங்கி விடப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ராகுல் கைதான பிறகு நிலவிய 3 மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. ராகுலுடன் கைதான காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுனா, காங்கிரஸ் எம்.பி.ராஜ்ப்பர் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது திக்விஜய்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சினைக்காக ஜெயிலுக்கு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாயாவதி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். பட்டா பரகலில் கூடுதல் இழப்பீடு கேட்ட விவசாயிகள் மீது மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது பற்றி தேசிய மனித உரிமைக் கமிஷன் விசாரிக்க வேண்டும். ராகுலை கைது செய்ததற்காக நாடெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

மாயாவதி அரசு எல்லை மீறி நடந்து கொள்கிறது. ராகுல்காந்தி 144 தடை உத்தரவை மீறி விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் போராட்டத்தை தொடங்கிய பிறகே இந்த தடை உத்தரவை அவசரம், அவசரமாக பிறப்பித்துள்ளனர்.

இது கண்டனத்துக்குரியது. நாங்கள் நடத்தியது அமைதியான போராட்டம், விவசாயிகளுடன் அமர்ந்து இருந்த போது ராகுல் "மைக்" கில் கூட பேசவில்லை. விவசாயிகளின் போராட்டம் மாயாவதி அரசின் தோல்வியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக உண்மையிலேயே பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான்.

இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயாவதி அரசு விவசாயிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது. பெண்கள், இளைஞர்கள் மீது வன்முறை நடத்தப் பட்டுள்ளது. இந்தியன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக உள்ளது மாயாவதி தன் சொந்த மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுல்காந்தி, திக்விஜய்சிங் குற்றச்சாட்டுக்களுக்கு முதல்-மந்திரி மாயாவதி பதில அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாக கூறிக்கொண்டு, சட்டத்தை மீறுவோர் யார் என்றாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் போராட்டம் என்று கூறிக்கொண்டு, ராகுல்காந்தி அரசியல் நாடகம் ஆடுகிறார். விவசாயிகளுக்கு குறைவான இழப்பீடு தொகை வழங்கப்பட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இதை கண்டிக்கிறோம் .

ராகுல்காந்தி ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடும் தலைவர் அல்ல. விவசாயிகள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள அவருக்கு எந்த தகுதியும் இல்லை. ராகுல்காந்தி மீது தடையை மீறியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராகுல் போராட்டம் நடத்த வரும் முன்பே தடை உத்தரவு அமலில் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

சிவகங்கை தொகுதி வெற்றி குறித்து விமர்சனம் : ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்.

சிவகங்கை தொகுதி வெற்றி குறித்து விமர்சனம்:    ஜெயலலிதாவுக்கு    காங்கிரஸ் கண்டனம்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள ஒரு புகாரைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது ஒரு பொறுப்பற்ற செயல் என்று நாங்கள் கூற விரும்புகிறோம். அவருடைய அறிக்கையில் அவர் யாரை குற்றம் சாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தேர்தல் கமிஷனையும், தேர்தல் அதிகாரிகளையும் குற்றம் சாட்டுகிறார். அவருடைய அறிக்கையை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது ஜெயலலிதா ஒரு சாட்சியாக வந்து சாட்சியம் அளிக்க விரும்பினால் அதனை நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம் ; அல்கொய்தா மீண்டும் எச்சரிக்கை.

அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம்; அல்கொய்தா மீண்டும் எச்சரிக்கை

பின்லேடன் கொல்லப்பட்டதால் அல்கொய்தா இயக்கத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர். பழிக்கு பழி வாங்க விரைவில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் ஏமன் பிரிவு மீண்டும் ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா மூத்த தலைவர்களில் ஒருவரான நசீர்-அல்-வகிஷி இணையத்தளம் ஒன்றில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்களது புனித போர் ஓய்ந்து விடவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கர்களுக்கு எதிராக மிகப்பெரிய போர் நடத்தப்படும். பின்லேடனை கொன்று விட்டதால் எல்லாம் முடிந்து விட்டதாக அமெரிக்கர்கள் முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் நாங்கள் நடத்தப்போகும் புனிதப் போர் மிகப் பெரியதாகவும் மோசமானதாகவும் இருக்கும். இதற்காக அமெரிக்கா காத்திருக்கிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அதன் பிறகு புனிதப் போர் தாக்குதல்கள் அணிவகுத்து வரும். பின்லேடன் மரணம் மூலம் எங்களது புனிதப் போர் பணி தீவிரம் அடைந்துள்ளது. இவ்வாறு அந்த எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி விலை மீண்டும் உயரும் அபாயம்.


கடந்த மாதம் சற்று விலை குறைவாக இருந்த காய்கறிகள் மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே வாரத்தில் 10 முதல் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக தினமும் 500 லாரிகளில் கோயம்பேட்டுக்கு காய்கறிகள் வரும்.

ஆனால் இப்போது 250 லாரிகளில் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலால் காய்கறி விளைச்சல் குறைவே தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயரும் நிலை உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயரும் என்பது மத்திய, மாநில அரசாங்கத்திற்கு தெரிந்த உண்மை.

அதே நேரம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் விலைவாசியும் கணிசமாகக் குறையும் என்பதும் தெளிவு.

தேர்தல் முடிவிற்கு பின் மத்திய அரசாங்கம் மீண்டும் தனது விளையாட்டை துவங்கவுள்ளது.

மக்களின் முன்னால் அமைதிகாக்கவோ அல்லது வேறு காரணங்கள் சொல்லவோ நமது பிரதமரும் அவர்தம் சகாக்களும் தயாராகிவிடுவார்கள்.

எதிர்கட்சிகளும் போராட்டம், எதிர்ப்பு என்று களம்காணும்.

ஆனால் மக்கள் தம் சட்டைப் பையில் உள்ள காசுகளை செலவழித்து திணறுவர்.

அதற்குள் அடுத்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு வந்துவிடும்.

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கவேண்டும்.