Wednesday, May 11, 2011

' மீண்டும் திமுக ஆட்சி ' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் கணிப்பு.


தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.

கருணாநிதிக்கு ஆதரவு:

யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.

தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் - திவீக் குழு.

இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.

அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்

ஹெட்லைன்ஸ் டுடே:

திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:

ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.

' அதிமுக ஆட்சி ' - சிஎன்என் - ஐபிஎன் கணிப்பு.


தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது. தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.

2 ஜி விவகாரம்...


2 ஜி முறைகேட்டை இந்த தேர்தலை பாதிக்கும் விஷயமாக 6 சதவீதத்தினர்தான் எடுத்துக் கொண்டதாக இந்த கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 2ஜி காரணமாக தனது வாக்கை அதிமுக அணிக்கு போட்டதாக 7 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.

இந்த ஊழலுக்கு யார் முக்கிய காரணம் என்ற கேள்விக்கு 53 சதவீதத்தினர் ஏ ராஜா என்றும், 48 சதவீதத்தினர் கனிமொழி என்றும் கூறியிருந்தனர். 34 சதவீதத்தினர் கருணாநிதியையும் 32 சதவீதத்தினர் தயாளு அம்மாளையும் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிஎன்என் - ஐபிஎன்:

முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்:

நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்ட இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது.

இந்திய பெண்களுக்கு இங்கிலாந்தில் கன்னித்தன்மை பரிசோதனை - அதிர்ச்சித் தகவல்.


லண்டன், 1970- களில் திருமண விசாவில் இங்கிலாந்துக்கு வந்த இந்தியாவைச் சேர்ந்த பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியுள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஆஸ்திரேலியாவின் ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட ஆராய்ச்சியாளர்களான மரிநெல்லா மார்மோ மற்றும் இவான் ஸ்மித் ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.

பிரிட்டனுக்கு திருமண விசாவில் வந்த பெண்களிடம் அவர்களின் கன்னித்தன்மை குறித்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1970-களின் பிற்பகுதியில் இந்த சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தாலும், எப்போது வரை இந்த சோதனை அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

ஹீத்ரு விமானநிலையத்தில் 2 விவகாரங்களில் மட்டும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதை பிரிட்டிஷ் அரசு முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தது.

ஒரு சம்பவம் மட்டும் அல்ல இதுபோன்று ஏராளமானவர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம் என மார்மோ தெரிவித்தார்.

அந்த ஆவணங்கள் செல்லத்தக்கவைதான் என ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ் அரசு, எனினும் மார்மோவும், ஸ்மித்தும் கூறுவது போல நிறைய பேருக்கு இந்த சோதனைகள் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தது.

30 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அது முற்றிலும் தவறானது என இங்கிலாந்து பார்டர் ஏஜன்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

பெயரை வெளியிட விரும்பாத அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பிரிட்டனின் கொள்கைகள் இப்போது பாதுகாப்பளிக்கின்றன என்றார்.

மார்மோவும், ஸ்மித்தும் தங்கள் ஆராய்ச்சியை 2008-ம் ஆண்டில் தொடங்கினர். அவர்களின் ஆய்வில் வெளியான தகவல்கள் கார்டியன் பத்திரிகையில் நேற்று முதலில் வெளியானது.

1976-79க்கு இடைப்பட்ட காலங்களில் தில்லியில் 73 பெண்களும், மும்பையில் 9 பெண்களும் பிரிட்டிஷ் தூதரகங்களில் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். மோசடி செய்து இங்கிலாந்தில் குடியேறுவதைத் தடுக்கவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லா ஓமரைத் தேடி அமெரிக்காவின் அடுத்தகட்ட வேட்டை தொடங்கியது.


பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அல் காய்தா தலைவர் பின்லேடனை வீழ்த்திய அமெரிக்க படைகள் தற்போது ஆப்கன் தலிபான் தலைவர் முல்லா ஓமரைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளன.

ஓமரின் மறைவிடம் என சந்தேகிக்கப்படும் இடங்களில் அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கூட்டுப் படைகள் சோதனைகளை நடத்தி வருகின்றன.

சமீபத்திய நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்தகட்ட வேட்டையை அமெரிக்கப் படைகள் தொடங்கியுள்ளன.

ஆப்கன் எல்லை அருகே பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஓமர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பின்லேடன் கொல்லப்பட காரணமான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையால் அவமானம் அடைந்துள்ள பாகிஸ்தான் உளவுத்துறை, ஓமரை முதலில் கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அபோட்டாபாதில் பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து தகவல்களை சேகரித்தபின்னர் ஓமரின் மறைவிடத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டம் தீட்டி வருகின்றன.

எனினும் அமெரிக்கப் படைகள் தன்னைக் கொன்றுவிடும் என்ற அச்சத்தில் கனரக ஆயுதங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஓமருக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதிகள் மீது ஊழல் புகார்: சுப்ரீம் கோர்ட் ஆவேசம்.


டெல்லி கூடுதல் மாவட்ட பெண் நீதிபதி அர்ச்சனா சின்கா, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜபு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி அர்ச்சனா, சூப்பர் சுப்ரீம் கோர்ட்டாக செயல்படுவதாக கூறிய நீதிபதிகள், அவரை ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம், சஸ்பெண்டு செய்து விடுவோம்' என்று எச்சரித்தனர். நீதிபதி அர்ச்சனா மன்னிப்பு கேட்டதால், அந்நடவடிக்கையை கைவிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கீழ்கோர்ட் நீதிபதிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. அவர்களால் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நீதிபதிகளை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். 80 சதவீத நீதிபதிகள், ஊழல்வாதிகள் என்று பேசப்படுகிறது. இது வெட்கக்கேடானது. இத்தகைய ஊழல் நீதிபதிகளை நீதித்துறையில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது: ராஜபக்சே.


இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்றத்தின் மூலம், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா., பொது செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட மூவர் குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்தது.

இறுதி கட்டப் போரின் போது அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜ பட்ச மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்தப்பட்டால்,அவருக்கு மரண தண்டனைக் கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, இலங்கையிடம் விசாரிப்பதற்காக, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கை செல்ல உள்ளனர்.

இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே குறிப்பிடுகையில்,

இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கு தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம். இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பு .


தமிழகத்தில் அதிமுக முன்னிலை:

சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஊழல் விவகாரங்களால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப் பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120- 130 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102- 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆட்சி மாற்றம்:

கேரளத்தில் ஆட்சி மாற்றம்: 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக்கூடும் சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா:

மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222-234 தொகுதிகளைக் கைப்பற்றி பெற்று அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அசாமில் இழுபறி:

அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அசாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸýக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அசாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும். இதனால், ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரஸýக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் 41- 47 இடங்களிலும், பாஜக 16- 18 இடங்களிலும், அசாம் கணபரிஷத் 13- 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.