Tuesday, May 10, 2011

10 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன் வேட்டைக்கு அனுமதி கொடுத்தார் முஷாரப்?


பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பின்லேடனை வேட்டையாடுவது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், இதுதொடர்பாக அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பாகிஸ்தானில் அதிபராக இருந்த முஷாரப்பும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலிலிருந்து தப்பி டோரா போரா மலைப் பகுதியை விட்டு பின்லேடன் இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இந்த ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் பின்லேடன் எங்காவது தென்பட்டால் அவனை அமெரிக்கப் படையினர் வேட்டையாடுவார்கள், அதை பாகிஸ்தான் அனுமதிக்கும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாம். அதன் அடிப்படையில்தான் தற்போது பின்லேடனை 'சோலோ'வாக வந்து வேட்டையாடி விட்டுப் போயுள்ளது அமெரிக்கா என்கிறார்கள்.

இந்த ரகசிய ஒப்பந்தம் காரணமாகவே இப்போது அமெரிக்காவுக்கு எதிராக பெரிய அளவில் குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த ரகசிய ஒப்பந்தப்படி, பாகிஸ்தான் மண்ணில் பின்லேடனோ அல்லது அல் ஜவாஹிரியோ இருப்பது தெரிய வந்தால் அங்கு அமெரிக்கப் படைகள் நுழைந்து இருவரையும் தனியாகவே வேட்டையாடும். இதை பாகிஸ்தான் அனுமதிக்கும். எதிர்ப்பு தெரிவிக்காது. அதன்பின்னர், இஸ்லாமிய நாடுகள் மத்தியில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவை எதிர்த்து பாகிஸ்தான் குரல் கொடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஓய்வு பெற்ற பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளதாக அந்த மீடியா செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து ஒரு மூத்த அமெரிக்க முன்னாள் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி கூறுகையில், புஷ்ஷுக்கும், முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த ரகசிய ஒப்பந்தம் குறித்து அதிபர் ஒபாமாவுக்கு நன்றாகத் தெரியும். மேலும் ஒசாமா எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதும் முன்பே அமெரிக்காவுக்குத் தெரியும். நல்ல சமயத்திற்காக நாங்கள் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ரகசிய ஒப்பந்தத்தின்படியே தற்போது அத்தனையும் நடக்கிறது. எங்களது தாக்குதல் குறித்து வெளியுலகில் குய்யோ முறையோ என்று பாகிஸ்தான் கூச்சல் போடுவதும் கூட இந்த ரகசிய ஒப்பந்தத்தின்படிதான். இது குறித்து சர்தாரிக்கும், கிலானிக்கும் கூட நன்றாகத் தெரியும் என்றார் அவர்.

மொத்தத்தில் ஒசாமா பின்லேன் வேட்டையில் இன்னும் வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கும் ரகசியம் எத்தனையோ...

மும்பை தாக்குதலுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் இக்பால் உள்ளிட்ட அந்த நாட்டைச் சேர்ந்த 4 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008, நவம்பரில், மும்பையில் தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்க போலீசார், சிகாகோவில் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.

ஹெட்லி கொடுத்த தகவலின் பேரில், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு உதவிய மேலும் நான்கு பேர் மீது அமெரிக்க கோர்ட்டில், கடந்த மாதம் 25ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்ததாக சஜத் மிர் என்பவன் மீதும், தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாக அபு குவாபா என்பவன் மீதும், தாக்குதல் சம்பவத்துக்காக நிதி உதவி செய்த மேஜர் இக்பால் என்பவன் மீதும், மஜார் இக்பால் என்பவன் ஹெட்லிக்கு உடந்தையாக இருந்ததற்காகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்ட ஹெட்லிக்கு உதவியாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் சமீர் அலி என்பவரும், மேஜர் இக்பால் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் இன்டர்போல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பின்லேடனை வளர்த்து விட்டது அமெரிக்காதான் : பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றச்சாட்டு.


பின்லேடனை வளர்த்து விட்டது யார்? பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

தலிபான் மற்றும் அல்-காய்தா இயக்கங்களுக்கு 90-களின் தொடக்கத்தில் அமெரிக்கா ஆதரவளித்ததை சுட்டிக் காட்டியிருக்கும் பாகிஸ்தான், "ஒசாமா பின் லேடன் விவகாரத்தில் எங்களை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது' என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்க படைகளின் தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதுபற்றி, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அந்நாட்டு பாராளுமன்றத்தில் 09.05.2011 அன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பின்லேடன் கொலை மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அதை வெற்றியாக அறிவிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. பாகிஸ்தானில் எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்கள் மூலம் பலரின் சாவுக்கு காரணமாக இருந்தவர், பின்லேடன். அவரது சாம்ராஜ்யம் அழிக்கப்பட வேண்டும்.

தீவிரவாத எதிர்ப்பு போரில், பாகிஸ்தான் ராணுவம் 30 ஆயிரம் பேரை இழந்துள்ளது. இருப்பினும், இப்போருக்கு தேசிய முக்கியத்துவம் அளிக்கிறது. தனது மண்ணில் தீவிரவாத செயல்களை அனுமதிக்காது. பாகிஸ்தான் மக்களை போல, எந்த நாட்டு மக்களும் இத்தனை சவால்களை சந்தித்து இருக்க மாட்டார்கள்.

பின்லேடனை கொல்வதற்காக, பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க படைகள் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த தாக்குதல் பற்றி ராணுவ அதிகாரி ஜாவீது இக்பால் விசாரணை நடத்துவார். பாகிஸ்தான் ராடார்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அமெரிக்கா தனது தொழில்நுட்ப திறமையை காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள், ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ நடத்தப்பட்டால், அதற்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். முழுபலத்துடன் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான கொள்கையை வகுக்க, வருகிற 13 ந் தேதி பாராளுமன்ற கூட்டு கூட்டம் நடைபெறும்.

பின்லேடன் விவகாரத்தில், பாகிஸ்தானை திறமையற்றதாக கருத முடியாது. பின்லேடன் மறைந்து வாழ நாங்கள் உடந்தையாக செயல்பட்டதாக கூறுவது முட்டாள்தனமானது. அல் கொய்தாவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பாகிஸ்தான் மீதோ, அதன் உளவுப்படை மீதோ குற்றம் சாட்டுவது வஞ்சகமானது. சொல்லப்போனால், எங்கள் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. துப்பு கொடுத்ததால்தான், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி, பின்லேடனை கொல்ல முடிந்தது.

பின்லேடனின் இருப்பிடத்தை உலக நாடுகளின் உளவுத்துறைகளாலேயே கண்டுபிடிக்க முடியாதபோது, ஐ.எஸ்.ஐ.யின் பங்கு பாராட்டத்தக்கது. ஐ.எஸ்.ஐ., இந்த நாட்டின் சொத்து. தீவிரவாத எதிர்ப்பு போரில் அதன் பங்கு மகத்தானது. இந்த போரில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைத்தும் இணக்கமாக செயல்படுகின்றன.

அல் கொய்தா உதயமானது, பாகிஸ்தானில் அல்ல. பின்லேடனை பாகிஸ்தானுக்கோ அல்லது ஆப்கானிஸ்தானுக்கோ நாங்கள் அழைத்து வரவில்லை. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் விடுதலை இயக்கம் தோன்றியது. அதுவே, பின்னர் அல் கொய்தாவாக மாறியது. எனவே, பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம். மற்றவர்களின் தவறுகளுக்கும், தவறான கொள்கைகளுக்கும் எங்களை குற்றம் சாட்டுவது சரியல்ல.

அதே சமயத்தில், அமெரிக்காவுடனான உறவுக்கு நாங்கள் உயர் முக்கியத்துவம் அளிக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரியின் பாகிஸ்தான் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

வல்லரசு நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தானின் உறவு நன்றாக இருக்கிறது. இந்தியாவுடனான பாகிஸ்தானின் நல்லுறவு, இருநாட்டு மக்களுக்கும் பலனளிக்கும். இவ்வாறு கிலானி பேசினார்.

2ஜி விசாரணையை ஜூலை 31-க்குள் முடிக்க சிபிஐ திட்டம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த வழக்கில், மேலும் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், கனிமொழி உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிபிஐ அமைப்பில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 10 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன.

இதனிடையே, நாட்டிலேயே மிகப் பெரிய ஊழலான 2ஜி வழக்கின் விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் காரணமாக மன்னார் வளைகுடாவில் 2 தீவுகள் கடலில் மூழ்கியது.

புவி வெப்பமடைதல் காரணமாக மன்னார் வளைகுடாவில் 2 தீவுகள் கடலில் மூழ்கியது

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் அமைந்துள்ளது. அதில் மிக சிறிய தீவின் பரப்பளவு 0.6 ஏக்கர் ஆகும். மிகப்பெரிய தீவின் பரப்பளவு 321.2 ஏக்கர். இந்த தீவுகளின் இருப்பிடத்தை வைத்து தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, மண்டபம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் மண்டபம் பிரிவில் பூமரிச்சான் தீவும், தூத்துக்குடி பிரிவில் விலங்கு சல்லி தீவும் இடம் பெற்று இருந்தன. இந்த 2 தீவுகளும் கடலில் மூழ்கியுள்ளன.

புவி வெப்பமடைதலால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த 2 தீவுகளும் கடலில் மூழ்கி விட்டன என மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா வார்டன் சுந்தரகுமார் கூறினார்.

பவள பாறைகள் தீவுகளுக்கு தடுப்பு அமைப்பாக செயல்பட்டு வந்தது. சட்ட விரோதமாக பவளப்பாறைகளை வெட்டியதால்தான் தீவுகள் மூழ்கி விட்டன என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேம்பாட்டு திட்ட பிரதிநிதி தீபக் சாமுவேல் கூறினார்.

கடந்த நூற்றாண்டில் பருவ மாற்றத்தினால் கடல் நீர்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 1.8 மி.மீ. உயர்ந்துள்ளது. இது எதிர்காலத்தில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால் இப்போதுள்ள நிலையில் தீவுகள் மூழ்கியது பருவ மாற்றம் காரணமாக இருக்க முடியாது என்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி ஸ்ரீதர் கூறி உள்ளார்.

பெண்ணாக பிறந்ததால் சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூரன்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நகரந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ரூபினி, விஜயலட்சுமி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த சுமதி, பிரசவத்துக்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு 3வதாகவும் பெண் குழந்தை பிறந்தது.

லோகநாதன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி சுமதியை குழந்தையுடன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும், மீண்டும் பெண் குழந்தையை பெற்று விட்டாயே? என மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

நேற்று 3 மணியளவிலும் கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகநாதன், பச்சிளம் குழந்தையின் காலை பிடித்து தூக்கி சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தையைக் கண்டு அதிர்ந்த சுமதி அழுதபடியே குழந்தையை பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

இது குறித்து சுமதி வடவணக்கம்பாடி போலீசில் தனது கணவர் லோகநாதன் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோகநாதனை இன்று மதியம் கைது செய்தனர்.

மும்பை தாக்குதல் : அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்.

மும்பை தாக்குதல் :அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்

பல பயங்கரவாதிகள் மீதான வழக்கு விசாரணை சிகாகோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமெரிக்கா இன்று 2 வது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்துள்ளது.

இதில் கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உதவியது தெரியவந்துள்ளது .அதில் மும்பை தாக்குதலில் ஈடுப்பட்டதாக டேவிட் ஹெட்லி உள்ளிட்ட 5 பேர் மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த ஆதாரங்கள் அடங்கிய முழு விபரங்களையும் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகின்றது .

தற்போது மும்பை தாக்குதலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் 5 பேரின் புகைப்படத்துடன் முழு விபரத்தவும் இந்தியா வெளியிட்டுள்ளது அதில் மாஜித் இக்பால் ,ஷாஹித் மஜீத் ,அபு கஹபா,லஷ்கர் மற்றும் ஐ.எஸ்.ஐ., அதிகாரி மேஜர் இக்பால் ஆகிய 4 பயங்கரவாதிகள் பெயரும், ஒரு ஐ.எஸ்.ஐ., அதிகாரியின் பெயரையும் வெளியிட்டுள்ளது .மேலும் அமெரிக்க குற்றப்பத்திரிகையிலும் இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.