Friday, May 6, 2011

ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு : தமிழக அரசு விளக்கம்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலம் மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

15.09.10 முதல் வேலைவாய்ப்பு அலுவலகப் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக உயிர்ப்பதிவேட்டின் விபரங்கள் இணையதளத்தில் ஏற்றம் செய்யப்பட்டது. பின்னர் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்துள்ள சுமார் 70 இலட்சம் மனுதாரர்களின் பதிவு விவரங்கள் இணைய தளத்தில் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல், மனுதாரர்கள் வசிக்கும் இடத்திலேயே இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் நீண்டதூரம் பயணம் செய்து சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை தவிர்க்கப் பட்டுள்ளது. மேலும் தற்போது மதுரையில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் துவக்கப்பட்டுள்ளதால் 15 தென் மாவட்ட முதுகலைப் பட்டதாரி மனுதாரர்கள் சென்னைக்கு வராமல் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்திலேயே தங்களது பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் மற்றும் இதரப்பணிகளை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்துறையில் வேலைவாய்ப்பு அலுவலக, பதிவுப்பணிகள் இணையதளம் மூலமாக கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் ஆரம்ப காலத்தில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் அவை உடனுக்குடன் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலமாக சரிசெய்யப்பட்டு வருகிறது. எனினும் இத்திட்டம் முழுமையாகவும், சிறப்பாகவும், மனுதாரர்கள் பயனடையும் வகையில் செயல்படத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

பொதுவாக வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தேவைக்கேற்ப இதர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் மாற்றுப் பணியில் அனுப்பப்பட்டு, அலுவலகப் பணிகள் தொய்வின்றி நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லேடன் கொலையில் இறுதி நேரம் - அவிழும் மர்மங்கள்.


உலகையே பயங்கரவாத செயல்களால் கிடுகிடுக்க வைத்துக்கொண்டிருந்த உலகமகா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏகப்பட்ட மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன. சர்ச்சைகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஒவ்வொன்றாய் முடிச்சு அவிழ ஆரம்பித்துள்ளன. கடந்த 2001ல் அமெரிக்காவில், அதன் பெருமைக்கு காரணமாக நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுர உலக வர்த்தக மைய கட்டடம் மற்றும் வெர்ஜினியாவில் பென்டகன் ராணுவ மையம், பென்சில்வேனியா மற்றும் வாஷிங்டன் போன்ற இடங்களில் நான்கு விமானங்களை மோதி 3 ஆயிரம் பேர் இறந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை உலகமே மறந்திருக்கவில்லை.

இந்த கொடூர தாக்குதல்களுக்கு காரணமான அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பத்தாண்டுக்கு பின் சமீபத்தில், பாகிஸ்தான் மண்ணிலேயே சுட்டுக்கொன்றுள்ளது. இதுவரை வெளிவராத தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன. ராய்ட்டர், சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் விசாரணை செய்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

வெளியிட முடியாது

பின்லேடனை எப்படி அமெரிக்க படை கொன்றது என்பதில் பல மர்மங்கள் நீடிக்கின்றன. சுட்டுக்கொன்ற கையோடு, அவர் உடலை கொண்டு போய் கடலில் வீசி விட்டதும், அவர் உடல் மற்றும் சம்பவ இடங்களில் எடுத்த போட்டோக்களை வெளியிடாததும் புதிராகவே உள்ளது. ‘அவரை தியாகியாக்க கூடாது; சமாதி கட்டி விடுவர் சிலர் என்று தான் உடலை கடலில் வீசினோம்’ என்று சொன்ன அமெரிக்கா, ‘போட்டோவை வைத்து அல்கய்தா பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடும் என்பதால் போட்டோக்களை வெளியிடத் தயாரில்லை’ என்றும் கூறி விட்டது.

ரத்தத்தில் 3 உடல்கள்

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அபோதாபாத் பங்களாவில் நடந்தது என்ன என்பது பற்றி இப்போது தான் பல தரப்பில் இருந்தும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் 40 நிமிடத்தில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர், தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து, பின்லேடன் உடலுடன் ஹெலிகாப்டரில் பறந்தபின், அந்த இடத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் வந்தது.

பின்லேடனின் பங்களாவை சுற்றிவளைத்து, ஒவ்வொரு அறையாக ஆராய்ந்தது. எங்கும் சுவர்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன. ரத்தக்களரியாக பல இடங்கள் காணப்பட்டன. ஒரு அறையில் மூன்று பேர் உடல்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தினர். இருவர், பைஜாமா குர்தாவில் இருந்தனர்; ஒருவர் பேன்ட் டீ ஷர்ட் அணிந்திருந்தார். ராய்ட்டர் செய்தி நிறுவனம் இந்த படங்களை வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு அருகே எந்த ஆயுதமும் காணப்படவில்லை. ஆனால், ஒருவனின் இடதுதோள் பக்கம் ஒரு பொம்மை துப்பாக்கி மட்டும் இருந்தது. குழந்தைகள் விளையாடும் பச்சை நிற பிளாஸ்டிக் துப்பாக்கி அது.

இறந்தது மனைவி அல்ல

பின்லேடனை சுட்டுக்கொன்ற போது, ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார் என்று முன்பு செய்தி வந்தது. அந்த பெண் பின்லேடனின் மனைவி என்றும் கூறப்பட்டது. ஆனால், அது உண்மையல்ல என்று இப்போது அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னி கூறியுள்ளார். பின்லேடன் வீட்டில் 3 பெண்கள், 9 குழந்தைகள் இருந்துள்ளனர். தபால் கொண்டு வரும் ஒரு நம்பிக்கைக்கு உரிய தொழிலாளியும் இருந்துள்ளார். அவர் மனைவியும் அவ்வப்போது அங்கு வருவது உண்டு. இந்த பெண் தான், துப்பாக்கி குண்டுக்கு இரையாகி உள்ளார். கூரியர் தொழிலாளியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காலில் டுமீல்; ஒசாமா என கத்தல்

ஆனால், மனைவி அமல் அல் சபா தப்பி விட்டார். அமெரிக்க வீரர்கள் திடீரென நுழைந்ததை பார்த்த முதல் ஆள் அவர் தான். வீரர்கள் மீது பாய்ந்தபடி, பின்லேடன் பெயரை உச்சரித்தபடி கத்தினார். பின்லேடன் தப்ப வேண்டும் என்பதற்காக அப்படி கத்தியுள்ளார். இதை உணர்ந்த அடுத்தநொடியே அந்த பெண் காலில் சுட்டனர் வீரர்கள். அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அவரை மற்ற வீரர்கள் தூக்கிச் சென்றனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நொடி கூட தாமதிக்கவில்லை

அமெரிக்க வீரர்கள் நுழைந்து விட்டனர்; தன்னை கொன்று விடுவர் என்று எண்ணக்கூட பின்லேடனுக்கு நேரம் வாய்க்கவில்லை. பங்களாவில் அவர் படுக்கை அறை மூன்றாவது மாடியில் தான் உள்ளது. மனைவியின் கதறலை தொடர்ந்து உஷாராகி இருக்க வேண்டும். ஆனால், கண்ணிமைக்கும் நொடிகளில் படுக்கை அறையில் அதிரடிப்படை வீரர்கள் பாய்ந்து விட்டனர்.

பின்லேடனை பார்த்த கணமே, யார் முதலில் சுடுவது என்று நினைக்காமல், அங்கு நுழைந்த மூன்று வீரர்களில் ஒருவர் டுமீல் என்று சுட, அடுத்த நொடிகளில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. நெற்றி, மார்பு பகுதியை குண்டுகள் துளைத்தபடி, பின்லேடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து பிணமானார்.

தப்ப நினைத்தாரா

தொளதொள பைஜாமா, குர்தா அணிந்திருந்தார் பின்லேடன். அவர் பாக்கெட்டில், ஒரு துண்டுச்சீட்டில் 2 டெலிபோன் எண்கள் இருந்தன. 500 யூரோ கரன்சிகள் காணப்பட்டன. அவர் தப்ப நினைத்திருக்கலாம்; அதனால் தான் பாக்கெட்டில் அவசர அவசரமாக பணத்தை அள்ளித் திணித்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்க எம்பிக்களுக்கு சிஐஏ உளவு அமைப்பின் இயக்குனர் லியான் பனட்டா கூறுகையில், ‘பின்லேனை உயிருடன் பிடிக்க முடியும் என்ற சூழ்நிலை காணப்படவில்லை. அவர் நிராயுத பாணியாக இருந்தார் என்றாலும், அவரை பார்த்த மூன்று வீரர்களில் யார் சுடுவது என்று தான் அவர்கள் மனநிலை இருந்தது. அதனால் அவரை சுட்டுக்கொன்றனர் ’என்று தெரிவித்தார்.

கைக்கெட்டும் தூரத்தில் துப்பாக்கி

உலகமகா தீவிரவாத அமைப்பின் தலைவனுக்கு பாதுகாவலர்கள் இல்லாமலா இருப்பர் என்ற சந்தேகத்துக்கு சரியான விளக்கம் இதுவரை அமெரிக்க, பாகிஸ்தான் தரப்பில் தரப்படவில்லை. பின்லேடன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவர் படுக்கையில் துப்பாக்கி வைத்திருப்பது இல்லையாம். ஆனால், அந்த அறையில் ஒரு மூலையில் துப்பாக்கி இருந்துள்ளது. பின்லேடனை வீரர்கள் பார்த்த மாத்திரத்தில் அந்த துப்பாக்கியை அவர் எடுத்திருக்க முடியும். இதனால் தான் அவரை சுட்டுக்கொல்ல வீரர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவர் மார்பில் முதல் குண்டு பாய்ந்தது: இரண்டாவது அவர் இடது கண்ணுக்கு மேலே பாய்ந்தது.

5 கம்ப்யூட்டர், டிவிடிக்கள்

பின்லேடன் பங்களாவில் கம்ப்யூட்டர் இணைப்பு மட்டுமில்லை. ஆனால், 5 கம்ப்யூட்டர்கள், 100 ஸ்டோரேஜ் டிவைஸ், டிவிடிக்கள், 5 மொபைல் போன்கள், ஏகே 47 ரகம் உட்பட 5 துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றை பறிமுதல் செய்த அமெரிக்க படையினர் கொண்டு சென்று விட்டனர். இவற்றின் மூலம் பல தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த 80வது நபர் யார்?

பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த சீல் 6 என்ற பிரிவை சேர்ந்தது. ஐந்து ஹெலிகாப்டர்களில் 79 பேர் அபோதாபாத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டனர். 80வது நபர் ஒருவர் உண்டு. அவர் இரண்டு கால் மனிதர் அல்ல; நான்கு கால் சூப்பர்மேன். ஆம், மோப்ப நாய். மனிதனை விட இரண்டு மடங்கு பாய்ச்சல்; எந்த குகையிலும் நுழைந்து மோப்பம் பிடித்து மனிதனை கவ்வி, கடித்து, இழுத்து வந்து விடும்.

ஆப்கன், ஈராக் போர்களில் மட்டும் 400 மோப்ப நாய்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தியது. பின்லேடனை கொல்ல சென்ற படையில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு நாய் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் வேலை சுலபமாக முடிந்து விட்டது. மூன்றாவது மாடியில் படுக்கை அறையில் இருந்த பின்லேடனை சுலபமாக கண்டுபிடித்து விட்டது.

இளம் மனைவி துணிச்சல்

பின்லேடன் இளம் மனைவி பெயர் அமல் அல் சபா; வயது 27. ஏமன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்தவர். 17 வயதில் அவர் பின்லேடனை மணந்தார். ஆரம்பத்தில் பல இடங்களில் பதுங்கியதால், அவரை ஏமனுக்கு போய் தங்கிவிடும்படி அனுப்பிவிட்டார் பின்லேடன். ஆனாலும், பின்லேடன் தீவிரவாத இயக்கத்தில் அல் சபா ஒன்றி விட்டார். இதனால் அவர் மீது பின்லேடனுக்கு தனி அன்பு உண்டு. கடந்த 2005ல் அபோதாபாத் பங்களாவில் தங்கியதில் இருந்து பின்லேடனுடன் அல் சபா தொடர்ந்து தங்கி இருந்தார். பாதுகாப்பு கருதி அவரை அனுப்பிவிட பின்லேடன் திட்டமிட்டாலும் அவரை விட்டு செல்ல மறுத்து விட்டார்.

பாகிஸ்தான் ராணுவம் நடுக்கம்

பாகிஸ்தானுக்குள் அதுவும் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே புகுந்து சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை 40 நிமிடங்களில் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்க ராணுவம் திரும்பி சென்றுவிட்டது. இந்த அதிரடி தாக்குதல் சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகுலையச் செய்துள்ளது. அதற்கே தெரியாமல், ராணுவ அகடமி அருகே இப்படி ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அதனுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

பலம்வாய்ந்த ராணுவம் என்று மார்தட்டிக் கொண்டு இருந்த பாகிஸ்தானுக்கு இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போய்விட்டது. அதனுடைய உளவுத் துறை எப்படி இதை முன்கூட்டியே அறிந்து கொள்ள இயலவில்லை என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் அதிரடி தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், உள்நாட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நம்பிக்கை குறைவும் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவமும் உளவுத் துறையும் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எதைச் சொன்னாலும் அது பெரும் சர்ச்சை ஏற்படும் என்பதால் இறுகிய மனதுடன் மவுனம் சாதித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம், ராணுவத்தின் பலவீனத்தையும் அரசு நிர்வாகத்தின் பலவீனத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

அபோதாபாத் தாக்குதல் சம்பவத்தை முன்கூட்டியே தெரியாமல் செயலிழந்து போய்விட்ட ராணுவம், உளவுத் துறையின் செயல்பாட்டை பாகிஸ்தான் எம்.பி.க்கள் கடுமையாக குறை கூறியுள்ளனர். இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர்.


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பேசுகையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே ராணுவ அகாடமி இருக்கும் பகுதியில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். அதுகூட அந்த நாட்டின் ராணுவத்துக்கு தெரியவில்லை என்று சொல்வது நம்பும்படி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ராணுவம் ஊடுருவி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் மக்களிடையே அச்சத்தையும் அதே நேரத்தில் அந்த நாட்டின் ராணுவம், உளவுத் துறை, ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கனிமொழி ஒரு பெண்; ஆகவே அவருக்கு முன் ஜாமீன் வேண்டும் : ராம்ஜெத்மலானி.


2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். அவர் கனிமொழிக்கு முன் ஜாமீன் கேட்டு வாதம் செய்து வருகிறார்.

அவர், ’’கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவிகிதம்தான் பங்கு இருக்கிறது.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை இவர் கவனிப்பதில்லை. நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத்குமாரே கவனித்து வருகிறார்.

கலைஞர் டிவியின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொருப்பில் இருந்து விலகிவிட்டார். அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாதான் பொறுப்பு.

எனவே, கனிமொழியை இந்த வழக்கில் கைது செய்யக்கூடாது’’என்று வாதிட்டு வருகிறார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முன் ஜாமீன் கேட்க மாட்டேன் என்று கனிமொழி கூறியது குறிப்பிடத்தக்கது.

குளிர்சாதன பெட்டியில் காதலி பிணம் : குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியதால் கொன்றேன் ; யோகா மாஸ்டர் வாக்குமூலம்.

குளிர்சாதன பெட்டியில் காதலி பிணம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியதால் கொன்றேன்;  யோகா மாஸ்டர் வாக்குமூலம்

பெங்களூர் அருகே கனகபுரா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ் சந்திரதாஸ் (31). யோகா மாஸ்டர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு கைக் குழந்தை ஒன்று உள்ளது. லோகேஷ் சந்திரதாஸ் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்தார், அப்போது அவர் கூறியதாவது :-

“நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகேசில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தமர் பெரா ஆப்ரகாம் என்ற பெண்ணுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அங்கு உல்லாசமாக வாழ்க்கை நடத்தினோம்.

பின்னர் நான் அங்கிருந்து பெங்களூர் வந்துவிட்டேன். இங்கு ஜோதி என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருடன் எனக்கு திருமணம் நடை பெற்றது. எங்களுக்கு ஒரு மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தமர் பெரா திடீரென்று பெங்களூர் வந்தார். எனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த அவர் என்னிடம் தகராறு செய்தார்.

என்னை கைவிட்டுவிட்டு எப்படி வரலாம் என்று என்னிடம் சண்டையிட்டார். இது என் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. என் மனைவியும் தகராறு செய்தார். அமைதியாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த தொடர்பை பயன்படுத்தி தமர் பெரா தேடி கண்டுபிடித்து வந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாரே என்று எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

உடனே பெராவை ஒரு அறையில் தள்ளி அடைத்தேன். அங்கு கையில் கிடைத்த இரும்பு கம்பியை பயன்படுத்தி பெராவை தாக்கினேன். இதில் அவர் சரிந்து விழுந்தார்.உடனே கதவை பூட்டி விட்டு என் மனைவியையும் குழந்தையும் நாகரபாவியில் உள்ள அவளது உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டேன். பிறகு மீண்டும் எனது குடியிருப்புக்கு திரும்பி வந்து பார்த்தேன்.

பெரா இறந்துபோய் இருந்தார். பெரா இறந்தது என் மனைவிக்கு தெரியாது. உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டேன். அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தேன். ஆனால் முடியவில்லை. எனவே உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு ரூ.30 ஆயிரம் செலவில் பெரிய குளிர்சாதன பெட்டியை வாங்கினேன்.பின்னர் அதனுள் பெராவின் உடலை வைத்தேன்.

உடல் அழுகி துர்நாற்றம் வீசினால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்தேன். இந்த நிலையில் பெராவின் உடலை அப்புறப்படுத்துவற்கு பல முறை முயற்சித்தேன். ஆனால் என்னால் மட்டும் அதை தனியாக செய்ய முடியவில்லை.

இதற்கிடையே ஒரு பெண்ணை கொன்று விட்டோமே குற்ற உணர்வு என்னை துன்புறுத்தியது.உடனே கொலை செய்தது பற்றி என் மனைவியிடம் தெரிவித்தேன். பின்னர் என் மனைவியும் அவரது குடும்பத்தாரும் என்னை போலீசில் சரண் அடையும் படி அறிவுறுத்தினர். அதன்படி நான் போலீசில் சரண் அடைந்தேன், இவ்வாறு கூறி உள்ளார்.

அதிகாலையில் 2 ரொட்டி துண்டுகள், டிபனுக்கு 2 சப்பாத்திகள் : ஆ.ராசா, கல்மாடியின் ஜெயில் வாழ்க்கை.

அதிகாலையில் 2 ரொட்டி துண்டுகள், டிபனுக்கு 2 சப்பாத்திகள்: ஆ.ராசா, கல்மாடியின் ஜெயில் வாழ்க்கை

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, சுரேஷ்கல்மாடி ஆகியோர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அரண்மனை போன்ற வீடுகள், ஆடம்பர விருந்துகள், எடுபிடிக்கு பலபேர், சொகுசு மெத்தையில் ஹாயான தூக்கம் என அத்தனை வசதிகளையும் அனுபவித்து பழக்கப்பட்ட இவர்களின் வாழ்க்கை முறை திகார் ஜெயிலில் அடியோடு மாறிவிட்டது.

இரவில் ஒரு போர்வையின் மீது மட்டுமே படுத்து உறங்குகிறார்கள். சிறைக்குள் இந்த வி.வி.ஐ.பி.க்களின் ஒவ்வொரு பொழுதும் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சி கூடம், நூலகத்துக்கு அனுப்புவதில்லை.

காலை 6.30 மணிக்கு ஒரு கப் டீயும், 2 ரொட்டி துண்டுகளும் கிடைக்கும். பொத்தானை அமுக்கினால் வந்து நிற்கும் ஏவலாளை அனுப்பி வேண்டியதை வாங்கி சாப்பிட்டு பழக்கப்பட்ட இவர்கள் 2 ரொட்டி துண்டுக்கும், ஒரு கப் டீக்கும் வரிசையில் நிற்க வேண்டும்.

காலை 9 மணிக்கெல்லாம் குளித்து தயாராகிவிட வேண்டும். இரண்டே இரண்டு சப்பாத்திகள் டிபனுக்கு கிடைக்கும். கொஞ்சம் சாதம், பருப்பு, காய்கறி பொரியல் கிடைக்கும். அதை மதிய உணவாக காலை 9 மணிக்கே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

நண்பகலில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் மாலை 3 மணி வரை சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்கள் படிக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம். மாலை 3 மணிக்கு 2 பிஸ்கட்டும் ஒரு கப் டீயும் வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்கள். இந்த ஜெயில் அனுபவம் வி.வி. ஐ.பி.க்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழிக்கு சம்பந்தம் இல்லை : ராம் ஜெத்மலானி வாதம்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜரானார். கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

கனிமொழி சார்பில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம். ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.

அவர், ‘’ஸ்பெக்ட்ரம் விவகாரம் முழுக்க முழுக்க ஆ. ராசா சம்பந்தப்பட்டது தான். இந்த விவகாரத்தில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

அதே போல் கலைஞர் டிவியில் கன்மொழி மட்டும்தான் பங்குதாரர். வேறு யாரும் பங்குதாரர் இல்லை’’ என்று கனிமொழி கூறினார்.

கனிமொழி கோர்ட்டில் ஆஜர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜரானார். கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்று கனிமொழியை குற்றம்சாட்டி இரண்டாம் முறையாக குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இதையடுத்து மே 6 ல் ஆஜர் ஆகும்படி கனிமொழிக்கு, நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதை ஏற்று, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று முன்தினம் டில்லிக்கு சென்றார் கனிமொழி.

இன்று காலை பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக கனிமொழி ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகியுள்ளார்.