Thursday, May 5, 2011

ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.

ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மக்கள் வரியாக செலுத்தும் பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது.

எனவே ஊழலை ஒழிக்க வேண்டும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர வேண்டும்.

கறுப்பு பணத்தை வைத்திருப்போர் மீது தேச துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்து, வரும் ஜுன் மாதம் 4-ந் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

எங்களுடைய இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.

Wednesday, May 4, 2011

பாகிஸ்தான் நம்பிக்கையான நட்பு நாடு இல்லை : அமெரிக்க புலனாய்வுக்குழு தலைவர் குற்றச்சாட்டு.

தகவல்களை கசிய விட்டது:    பாகிஸ்தான் நம்பிக்கையான    நட்பு நாடு இல்லை;    அமெரிக்க புலனாய்வுக்குழு    தலைவர் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க புலனாய்வு குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க எம்.பி.க்கள் கூட்டத்தில் அமெரிக்க புலனாய்வு குழு தலைவர் லியோன் பனெட்டா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் எங்களது எல்லாவிதமான தகவல்களையும் கசிய விட்டது. இதனால் நாங்கள் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தகவல் எதையும் பாகிஸ்தானிடம் தெரிவிக்க வில்லை. நாங்கள் எந்த முடிவு எடுத்து பணியை செய்ய ஆரம்பித்தாலும் பாகிஸ்தான் அதற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் பின்லேடன் மீதான தாக்குதலை மிகவும் உஷாராக மேற்கொண்டோம்.

பாகிஸ்தான் தகவல்களை கசிய விடும் என்ற பயத்தின் காரணமாகவே தாக்குதல் தொடர்பாக நாங்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தோம். பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடு இல்லை. என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும். தீவிரவாதம் தொடர்பாக நாங்கள் அந்த நாட்டுடன் எந்த ஒப்பந்தமும் வைத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடனான உறவு தொடரும்.

எங்களது எதிரிகள் இன்னும் அந்த நாட்டில் தான் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆபரேஷன் “ஜெரோனிமா” பெயர் உருவான கதை.

ஆபரேஷன் “ஜெரோனிமா” பெயர் உருவான கதை

பின்லேடன் மீது நடத்திய வேட்டைக்கு ஆபரேஷன் ஜெரோனிமா என்று பெயர் சூட்டி இருந்தனர். அதிபர் ஒபாமாதான் இந்த பெயரை தேர்வு செய்து இருந்தார்.

“ஜெரோனிமா” என்பது அமெரிக்காவை சேர்ந்த புரட்சி வீரனின் பெயர். ஜெரோனிமாவுக்கும் பின்லேடனுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. பின்லேடனை போலவே ஜெரோனிமாவும் அமெரிக்காவின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவன்.

அமெரிக்காவில் வெள்ளைகாரர்கள் குடியேறுவதற்கு முன்பு அங்கு ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களை கொன்று குவித்து விட்டுதான் வெள்ளைக்காரர்கள் குடியேறினார்கள். அவர்களில் தப்பி பிழைத்த மக்கள் ஆங்காங்கே வசித்து வந்தனர். அவர்களில் அபேச்சே எனும் ஒரு கூட்டத்தில் தலைவனாக இருந்தவன் ஜெரோனிமா.

1829-ம் ஆண்டு பிறந்த அவன் அமெரிக்காவுக்கு எதிரான பழங்குடி மக்களை திரட்டி அமெரிக்காவுக்கு எதிராக போராடினான். துப்பாக்கி படை ஒன்றை உருவாக்கி அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்தான். 5 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படை அவனை பல ஆண்டுகளாக பிடிக்க முடியவில்லை.

மெக்சிகோ பகுதியில் உள்ள குகைகளுக்குள் பதுங்கி தப்பி வந்தான். கடைசியாக 1886-ம் ஆண்டு அமெரிக்க படை சுற்றி வளைத்தது அடுத்து சரண் அடைந்தான். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவன் 1909-ம் ஆண்டு தனது 79 வயதில் மரணம் அடைந்தான்.

ஜெரோனிமா போலவே பின்லேடனும் அமெரிக்காவுக்கு தண்ணீ காட்டி வந்ததால் பின்லேடனை பிடிக்க நடத்திய இந்த வேட்டைக்கு ஜெரோனிமா பெயரை சூட்டினார்கள்.

தாமதமாக வந்த கலெக்டரை கண்டித்த வேட்பாளர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் வாக்கு எண்ணிக்கைக்கான ஆலோசனைகள், கருத்துகள் பற்றி இன்று கலந்துரையாடலுக்காக வேட்பாளர்கள் வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு. ராஜேந்திரன் தகவல் அனுப்பியிருந்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக மாவட்ட ஆட்சியர் வரவில்லை. மதியம் 11 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிர்மல் ஜோஷி குமாருடன் அரங்கிற்க்கு வந்து கூட்டத்தை தொடங்கினார்.

அப்போது கீ்ழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேட்சை வேட்பாளர் எழுந்து, எங்கள வரசொல்லிட்டு நீங்க ( கலெக்டர்) லேட்டா வந்தா என்ன அர்த்தம். எப்ப பாத்தாலும் நீங்க லேட்டாவே வர்றிங்க. எங்களுக்கென்ன வேற வேலை இல்லன்னு நினைக்கறிங்களா என எல்லோர் முன்பும் மைக்கில் கேள்வி கேட்க முகம் கருத்து விட்டது மாவட்ட ஆட்சியர்க்கு.

வேட்பாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குணிந்துக்கொண்டார். அந்த சுயேட்சை வேட்பாளர் மேலும் சங்கடப்படுத்தாமல் அமர்ந்துவிட்டார். அவரின் இந்த கேள்வி அங்கிருந்த அதகாரிகளை அதிர்ச்சியுற வைத்துவிட்டது. இருந்தும் அவரின் கேள்வியில் நியாயம்மிருந்தததால் அதிகாரிகள் அவரை மறைமுகமாக பாராட்டினர்.

கனிமொழிக்கு சம்மன் : அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலைஞர் தீவிர ஆலோசனை.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகை ஏப்ரல் 25-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றது.

2-வது குற்றப்பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி எம்.பி., சரத்குமார் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரிம்முரானி ஆகியோர் மே 6-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இதுபற்றி ஆலோசிக்க 27-ந் தேதி தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சரின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நேற்று தீவிர ஆலோசனை நடந்தது. காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனை மதியம் 1.20 மணி வரை நடந்தது.

இந்த ஆலோசனையில் முதலமைச்சர் கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட நிபுணர்கள் பி.எஸ்.ராமன், சண்முகசுந்தரம், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். வீட்டில் இருந்த கனிமொழியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

6-ந் தேதி கோர்ட்டில் ஆஜராவது தொடர்பாக சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் பரவியதும் சி.ஐ.டி. காலனி வீடு அருகே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்தனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியில் வந்த கி.வீரமணியிடம் இதுபற்றி கேட்டபோது, இது வழக்கமான சந்திப்பு தான், வேறு ஒன்றுமில்லை என்றார். ஆனால் வேறு யாரும் பத்திரிகையாளர்களுடன் பேசவில்லை.

இரண்டாவது பசுமைப் புரட்சியை நோக்கி பிகார் : அப்துல்கலாம்.


நாட்டில் 2-வது பசுமைப் புரட்சி பிகார் மாநிலம் பலிகஞ்சில் ஏற்படும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் தெரிவித்தார்.

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பலிகஞ்ச்சில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதுகுறித்து மேலும் கூறியது:

பலிகஞ்ச் விவசாயிகள் இரண்டாவது பசுமைப்புரட்சியை படைக்கும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் விவசாய உற்பத்தி இரண்டு மடங்கு ஆகியுள்ளது. 1999-ம் ஆண்டு இப்பகுதி விவசாயிகள் 2.4 ஹெக்டேர் நிலத்தில் கோதுமை, நெல் பயிரிட்டனர். 2004-ம் ஆண்டில் பயிரிடப்படும் நிலம் 2 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

இந்த சமயத்தில் வீரிய விதை, சத்தான உரம், புதிய விவசாயக்கொள்கை ஆகியவற்றை கடைப்பிடித்து நெல், கோதுமை பரியிட்டு 5 ஆண்டுகளில் உற்பத்தியை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக்கி சாதனை படைத்துள்ளனர். பலிகஞ்ச் விவசாயிகளின் இந்த முயற்சி தொடரவேண்டும். இதன்மூலம் பிகாரை நாட்டின் பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும்.

இம்மாநிலத்தில் மொத்தம் 56 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிலேயே உணவு தானியங்கள் பயிரிடப்படுகின்றன. இம்மாநிலத்தின் சராசரி நெல் உற்பத்தி ஹெக்டேருக்கு 1.45 டன்னாகவும் கோதுமை 2.19 டன்னாகவும் உள்ளது. ஆனால் பலிகஞ்ச் விவசாயிகள் நெல் ஹெக்டேருக்கு 4டன்ஆகவும் கோதுமை ஹெக்டேருக்கு 6 டன் ஆகவும் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளனர்.

இம்மாநிலத்தில் உணவு உற்பத்தியை இரண்டு மடங்கு ஆக்க பலிகஞ்ச் மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுடன் இங்குள்ள ராஜேந்திரா விவசாயப் பல்கலைக்கழகம் மற்றும் உள்ள பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படவேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் புகுத்தவேண்டும். இதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இந்தத்திட்டத்தை இங்குள்ள 38 மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே உணவு உற்பத்தியில் நமது இலக்கை அடைய முடியும். நெல், கோதுமை உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும். பலிகஞ்ச் விவசாயிகள் புதிய திட்டங்களை விவசாயத்தில் அமல்படுத்தி 2016-2020-ம் ஆண்டில் 2-வது பசுமைப் புரட்சியை படைக்க வேண்டும். இதன் மூலம் 2020-ம் ஆண்டில் உணவு உற்பத்தியை 23 கோடி டன்னில் இருந்து 34 கோடி டன்னாக உயர்த்த முடியும்.

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம், வீரியவிதைகள், தரமான உரம், நீர் ஆதாரம் ஆகியவற்றை அடங்கிய அறிவுசார்ந்த விவசாயமாக 2-வது பசுமைப்புரட்சி அமைய வேண்டும். விவசாய விளை பொருளுக்கு சரியான விலை, உணவு பதப்படுத்துதல் வசதி, சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்க வேண்டும். விவசாய தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.

விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து நமது விவசாயிகள் செயல்படவேண்டும். அப்போது மட்டுமே அதிக வீரியம் உடைய விதைகளை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து 2 தடவை தகவல் கொடுத்த இந்திய உளவுத்துறை ; அமெரிக்கா அலட்சியம் செய்தது.

பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து    2 தடவை தகவல் கொடுத்த    இந்திய உளவுத்துறை;    அமெரிக்கா அலட்சியம் செய்தது

பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் கண்டு பிடித்தது. ஆனால் அதற்கு முன்பே இந்தியா கண்டு பிடித்து 2 தடவை அமெரிக்காவுக்கு தகவல் சொன்னது. ஆனால் அவர்கள் இந்திய உளவுத்துறை தகவலை அலட்சியம் செய்து விட்டனர் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

முதலில் 2007-ம் ஆண்டு மத்தியில் இந்திய உளவுத்துறை பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை கண்டு பிடித்தது. அப்போது பெஷாவர் நகரில் தலிபான் தீவிரவாதிகள் கூட்டம் நடந்தது. இதில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனுக்கு அடுத்த இடத்தில் இருந்த தலைவரான அல் ஷ வாகிரி கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அல்ஷவாகிரி இஸ்லாமாபாத் நகருக்கு வந்து அங்கிருந்து ஏதோ ஒரு இடத்துக்கு சென்றார்.

இதை இந்திய உளவுத்துறை தெரிந்து கொண்டது. அவர் இஸ்லாமாபாத்துக்கு பின்லேடனை சந்திப்பதற்காக தான் வந்து இருக்க வேண்டும் என்று இந்திய உளவுத்துறை கருதியது. எனவே பின்லேடன் இஸ்லாமாபாத் நகரத்துக்கு அருகில் தான் எங்கோ தங்கி இருக்கிறான். என உறுதி செய்த இந்திய உளவுத்துறை அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது. ஆனால் இதை அமெரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.

அடுத்து 2008-ம் ஆண்டு இந்திய உளவுத்துறைக்கு இன்னொரு முக்கிய தகவல் கிடைத்தது. பின்லேடன் மிகவும் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையில் இருக்கிறார். அவருக்கு சாதாரண ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க முடியாது என்று தகவல் கிடைத்தது. எனவே பாகிஸ்தானில் ஏதேனும் பெரிய நகரில் அவர் தங்கியிருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கருதினார்கள்.

மேலும் இதுபற்றி தகவல் திரட்டிய போது ராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதியில் தான் பின்லேடன் தங்கி இருக்கிறார் என்று தெரிய வந்தது. எனவே இதுபற்றியும் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போதும் அமெரிக்கா அலட்சியப்படுத்தியது. பின்லேடன் எங்காவது மலை பகுதியில் அல்லது பழங்குடி மக்கள் கிராமத்தில் தான் வசிக்க வேண்டும் என்று அமெரிக்கா கடைசி வரை கருதியது.

எனவே இந்தியா சொன்னது போல அவர் நகர பகுதியில் தங்கி இருப்பார் என்பதை நம்பவில்லை. இதனால் தான் அலட்சியப்படுத்தி வந்தனர். கடைசியில் அவர் அபோதாபாத் நகரில் ராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதியிலேயே 5 ஆண்டுகளாக வசித்து வந்துது இப்போது உறுதியாகி உள்ளது.