Sunday, May 1, 2011

எழுச்சி பெறுகிறது ஏற்றுமதி !


சென்ற நிதி ஆண்டில் (2010-11) இந்தியாவின் ஏற்றுமதி 37 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 24,600 கோடி டாலர் ஆகும். இது ஒரு சாதனை எனலாம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ஏற்றுமதி 49.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மதிப்பு, 2,900 கோடி டாலர்.

மத்திய அரசு, 2010-11-ம் ஆண்டுக்கு நிர்ணயித்த இலக்கே 22,000 கோடி டாலர்தான். இந்த இலக்கையே எட்டிப்பிடிக்க முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கு இருந்தது. காரணம், இதற்கு முந்தைய ஆண்டு, 2009-10 நிதி ஆண்டில், இந்தியாவின் ஏற்றுமதி 17,800 கோடி டாலராக மட்டுமே இருந்தது.

சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருந்ததால், மத்திய அரசு பல ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதன் பயனாகவே அது சாத்தியமானது.

ஆக, வரலாற்றில் முதன்முறையாக, ஏற்றுமதி 20,000 கோடி டாலரைத் தாண்டியது மட்டுமல்ல; 24,600 கோடி டாலர் அளவையும் எட்டியுள்ளது.

அதிக அளவில் ஏற்றுமதியான பொருள்கள் பொறியியல் உற்பத்திப் பொருள்கள், ரசாயனம், மருந்து வகை, மின்னணுப் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், தோல் பொருள்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எனலாம்.

அண்மைக்காலமாக, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அரசின் ஊக்குவிப்பு, சலுகைகள் தவிர, வேறு சில முக்கியக் காரணங்களும் உள்ளன.

உதாரணமாக, மருந்துகள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்களின் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய மதிப்பீடு உலக அளவில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

இரண்டாவதாக, இந்தியாவில் பல்வேறு பொருள்களின் உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு பயன்படுத்தப்படுவதில்லை என்ற உண்மை, வெளிநாட்டு இறக்குமதியாளர்களை உரிய முறையில் சென்றடைந்துள்ளது. இது ஒரு நல்ல திருப்பம்.

மூன்றாவது, காஷ்மீர் மற்றும் லக்னௌ போன்ற வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கலை அழகு மிளிரும் நேர்த்தியான கம்பளங்கள், தரைவிரிப்புகள் (கார்பெட்) ஆகியவை ஏற்கெனவே இருந்தவைதான். ஆனால், அவை வெறும் நுகர்பொருள்களாக, பயன்பாட்டுப் பொருள்களாக அறியப்பட்டிருந்தன. இவற்றை இப்போது கலைபொருள்களாக வெளிநாட்டுச் சந்தைகளில் அறிமுகம் செய்த பெருமை புதிய தலைமுறை ஏற்றுமதியாளர்களுக்கு உண்டு.

இவையெல்லாமாகச் சேர்ந்து, கடந்த காலங்களைவிட இப்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் மீதுள்ள நன்மதிப்பு, நல்லெண்ணம் உலக அரங்கில் உயர்ந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சர்வதேசப் பொருளாதார மந்த நிலையிலிருந்து, மெல்ல மெல்ல மீட்சி அடைந்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவை ஓரளவு மட்டுமே அதிகரித்து வருகிறது. எனவே, இவ்விரு சந்தைகளை மட்டுமே நம்பியிராமல், இந்திய ஏற்றுமதியாளர்களின் பார்வை ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம்.

வேளாண் சார்ந்த பொருள்களான தேயிலை, காப்பிக்கொட்டை, புகையிலை, மசாலாப் பொருள்கள், முந்திரிப் பருப்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி மதிப்பு முதல்முறையாக, 1,200 கோடி டாலரைக் கடந்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் அம்சம் என்னவெனில், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதுதான்.

புதிதாகப் பொருளாதார வளர்ச்சியும், வாங்கும் சக்தியும் பெற்றுவரும் நாடுகளான கஸக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில் பல்வேறு பொருள்களின் தேவை முதல்முறையாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் முனைப்புக் காட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு சலுகைகளையும், ஊக்குவிப்புகளையும் வழங்கி வருவது வரவேற்கத்தக்க விஷயம். அதேநேரம், இப்போது ஒரு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வரிச்சலுகைகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்வது, வரிச்சலுகை "பாஸ்' புத்தகத்திட்டம். இத்திட்டம் நடப்பாண்டு ஜுன் மாதம் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. நீண்டகாலமாக, சிறிய சிறிய மாற்றங்களுடன் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு உறுதுணையாக உள்ள இத்திட்டத்தை, உலக வர்த்தக நிறுவனம் கடுமையாக எதிர்க்கிறது. இது சம வாய்ப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் வாதம்.

இந்நிலையில், இந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில், இத்திட்டத்துக்கு மாற்றாக, வேறு சலுகை அளிப்பது அவசியமாகும். இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகம் விரைந்து செயல்பட்டு, ஏற்றுமதியாளர்களின் நலனைக் காத்திட வேண்டும்.

மொத்த ஏற்றுமதியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. மூலதனம் குறைவாக உள்ள இந்த நிறுவனங்களால், தங்களது தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக போதிய நிதி ஆதாரத்தைத் திரட்டுவது மிகவும் கடினம். அதேநேரம், இந்நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தையில், போட்டிகளைச் சமாளித்து, விற்பனை செய்ய வேண்டுமானால், தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்.

இதைக் கருத்தில்கொண்டு, இப்போது ஜவுளித்துறையினருக்குத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்ற நிதி உதவித் திட்டத்தை, ஜவுளி அல்லாத பிற துறைகளைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் அறிமுகம் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்திட, முதல்கட்டமாக ரூ. 2,500 கோடி ஒதுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டுக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும், உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக அமையும்.

இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருள்களின் தரத்தை உயர்த்தும் வகையில் நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றைச் செய்துகொள்ளத் தேவையான நிதியைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கடன் தொகையில் 5 சதவீதம் அரசு மானியமாகவும் வழங்கப்படும். ஜவுளித்துறையில், நல்ல பலனை அளித்துள்ள இத்திட்டம், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

நாட்டின் மொத்தத் தொழில் உற்பத்தியில் 45 சதவீதம் இந்த வகை நிறுவனங்களின் மூலம் தான் கிடைக்கிறது என்பது கவனத்துக்குரியது.

இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 60 லட்சம் ஆகும். இவை உற்பத்தி செய்யும் பொருள்களின் எண்ணிக்கை 6,000-க்கும் மேல். இப்பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு உத்தேசத் திட்டம் உறுதுணையாக அமையும் என நம்பலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அதிகரித்தவண்ணம் உள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய லாபம் குறைகிறது. எப்படியென்றால், நாம் ஏற்றுமதி செய்திடும் பொருள்களுக்கு விலை வெளிநாடுகளிலிருந்து நமக்கு டாலரில்தான் வருகிறது. டாலர் மதிப்பு குறைவதால், நமக்குக் குறைந்த அளவிலான ரூபாய்தானே கிடைக்கும்? மாறாக, டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது, நமக்கு ரூபாய் தொகை கூடுதலாகக் கிடைக்கும்.

பொதுவாக, டாலர் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் குறைந்தால், பாரத ரிசர்வ் வங்கி தலையிட்டு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது வழக்கம்.

அதாவது, பணச் சந்தையிலிருந்து, ரிசர்வ் வங்கி கணிசமான அளவில் டாலரை கொள்முதல் செய்து, வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பைத் தாங்கிப் பிடிக்கும். இதனால், டாலருக்குச் சந்தையில் கிராக்கி ஏற்படும்; மதிப்பு உயரும். இது காலங்காலமாக நடைபெற்று வருவதுதான். ஆனால், கடந்த பல மாதங்களாக பாரத ரிசர்வ் வங்கி, ஏனோ அப்படிச் செய்வதைத் தவிர்த்து வருகிறது.

அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகள் அதிக அளவில் நாட்டுக்குள் வருவதுதான் டாலர் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம். பிரேசில் போன்ற சில நாடுகள், தங்கள் நாட்டு ஏற்றுமதியைக் காப்பாற்றுவதற்காக, அன்னிய முதலீடுகள் தேவைக்குமேல் வருவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ""பிரிக்ஸ்'' எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதுசமயம், மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முடிவு சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

மேற்கூறிய 5 நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், கடன், மானியம் போன்ற நிதி தொடர்பான பரிவர்த்தனைகளில் டாலருக்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட அந்தந்த நாட்டு நாணயத்திலேயே பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என்பதே அது. கருத்தளவில் உருவாகியுள்ள இந்த முடிவில், முழு விவரங்கள் இன்னும் தீர்மானமாகவில்லை.

குறிப்பாக, இதில் ஏற்றுமதியின் நிலை என்ன என்பது குறிப்பிடப்படவில்லை. இத்திட்டத்தின் முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை என்றாலும், அவற்றை வரையும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும்.

உதாரணமாக, இந்த 5 நாடுகளில் ஒன்றான சீனா, தனது நாணயமான யூவான் டாலருக்கு மாற்று நாணயமாக உருவாக்கப்பட வேண்டும் என்று அண்மைக்காலமாக முயன்று வருகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும், வெளியிடப்படாத ரகசிய நோக்கம் இருந்தால் வியப்பில்லை. எனவே, சில நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தமாக இருந்தாலும்கூட, அது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் நன்மை பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

எஸ். கோபாலகிருஷ்ணன்

சைவ கலாசாரம் அழிந்து விடும் அபாயம் - அசைவமாகும் மரபணு காய்கறி , பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை.

விலங்கு மரபணு சேர்ப்பதால் அசைவமாகும் மரபணு காய்கறி - பழங்களுக்கு மத்திய பிரதேச அரசு தடை

சர்வதேச விதை நிறுவனங்கள் இயற்கையான காய்கறி - பழ விதைகளில் விலங்குகளின் உயிரணு மற்றும் சில வைரஸ் கிருமிகளை சேர்த்து மரபணு காய்கறி - பழங்களை உருவாக்குகிறார்கள். மரபணு காய்கறி - பழங்களில் விலங்குகளின் மரபணு சேர்வதால் அவை அசைவமாகி விடுகின்றன.

பெரும்பாலான மரபணு காய்கறி - பழங்களில் தவளை, எலி, கரப்பான் பூச்சி, பூனை, முயல் போன்ற விலங்குகளின் மரபணுக்கள் சேர்க்கப்படுகின்றன.

காய்கறி - பழங்களை எலி, கரப்பான் பூச்சி போன்றவை சாப்பிடாமல் இருப்பதற்காக அந்த மரபணுக்களை சேர்க்கிறோம் என்று அமெரிக்க மரபணு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்த வகை காய்கறி - பழங்கள் சீக்கிரம் கெடாது. மாதக்கணக்கில் புத்தம் புதிதாக காய்த்த காய்கறி - பழுத்த பழம்போல் தோன்றும். இந்த வகை காய்கறி - பழங்களை சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகை பழங்களில் வாஷிங்டன், பிஜி, ஆஸ்திரேலியா என்று ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்கப்படும் இப்பழங்கள் பற்றி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் கிருஷ்ணா மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மரபணு மாற்று தரக்கட்டுப் பாட்டு குழு விஞ்ஞானிகள் பலர் மரபணு கத்திரிக்காயை பாதி அளவு பயிரிட அனுமதிக்கலாம். மேலும் இதுபற்றி சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு மரபணு கத்திரிக்காய் மட்டும் அல்ல, மரபணு காய்கறி - பழங்கள் அனைத்துக்கும் திடீர் தடை விதித்துள்ளது. இதுபற்றி மாநில விவசாய மந்திரி ராம்கிருஷ்ணா குஷ் மரியா, ட்மோ நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரபணு காய்கறி- பழங்களில் பல்வேறு விலங்கு களின் மரபணு சேர்க்கப்படுவதால் அவை அசைவமாகி விடுகிறது. நம் நாட்டில் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் உள்ளனர். இந்த மரபணு காய்கறி - பழங்களை அனுமதித்தால் நம் நாட்டில் உள்ள சைவ கலாசாரம் அடியோடு அழிந்து விடும் அபாயம் உள்ளது.

இதனால் மத்திய பிரதேசத்தில் மரபணு காய்கறி - பழங்கள் பயிரிடுவதற்கும் விற்பதற்கும் தடை விதித் துள்ளோம். மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு பயிர்கள் பற்றி மேலும் பரிசோதனை நடத்துவோம் என்று கூறி உள்ளார்.

நாங்கள் இதையும் எதிர்க்கிறோம். எங்களது மாநிலத்தில் மரபணு பயிர்களை பரிசோதனை செய்வதற்கு கூட அனுமதி தர மாட்டோம். இப்பயிர்களை பரிசோதனை செய்தால் நம் நாட்டில் இயற்கையான பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

மரபணு பயிர் விளைவித்த நிலத்தில் வேறு பயிர்களை விளைவிக்க முடியாது. இதனால் நான் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமே சுக்கு சமீபத்தில் அனுப் பிய கடிதத்தில் எங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் மரபணு பயிர்களை பயிரிட தயாராக இல்லை.

அதை எங்கள் மாநிலத்தில் பயிரிட வைக்கும் முயற்சியை கைவிட்டு விடுங்கள். நாங்கள் மக்கள் நலனுக்கு உகந்த இயற் கையான காய்கறி - பழங் களை மட்டுமே பயிரிடுவோம்!! என்று குறிப்பிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வு : 70 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.



மின்சாரத் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வால் விசைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் திருத்தணி பகுதியில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருத்தணி பகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம், அத்திமஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, மத்தூர், புச்சிரெட்டிப்பள்ளி, வீரமங்களம், சுற்றுப்புற கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

இத் தொழிலை நம்பி 70 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதி விசைத்தறிகளில் காட்டன் ரக வேட்டிகள், புட்டா, கோர்வை, கட்டம், பிளைன் ரக காட்டன் சேலைகள் மற்றும் லுங்கிகள், தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி-சேலை திட்டத்துக்கான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையும், மின்வெட்டு காரணமாகவும் விசைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டியால், நூல் விலை உயர்வை காட்டி உற்பத்தியான ஜவுளிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்க முடியவில்லை.

தினசரி 12 மணி நேர சுழற்சி முறையில் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. ஒரு விசைத்தறியில் 12 முதல் 15 மீட்டர் வரை நெசவு செய்யப்படுகிறது. ஒரு தறி இயக்கினால் ரூ. 75 முதல் ரூ. 100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அறிவிக்கப்பட்ட மின் தடை 3 மணி நேரம், அறிவிக்கப்படாத மின் தடை 6 மணி நேரம்.

இதனால் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கஞ்சி தொட்டி திறக்கும் நிலை: தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடால் 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. மின் வெட்டால் 70 ஆயிரம் விசைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் வருமானம் இழப்பு ஏற்ப்பட்டு கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை ஏற்படும் என நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நெசவாளர் ஒருவர் கூறும்போது: நூல் ஏற்றுமதி செய்யப்படுவதால் நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், லுங்கிகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மின்வெட்டு காரணமாக தறி ஒன்றுக்கு 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. விசைத்தறி உபத் தொழிலான பாவு ஓட்டுவதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. டப்பா மிஷினில் நூல் சுற்றுவோர் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏற்படும் மின்வெட்டால் ஒரு நாளைக்கு ரூ. 40 கூட வருமானம் வருவதில்லை.

நூல் விலையை குறைக்க வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். மத்திய, மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கண்காணிப்பு தீவிரம்: ஐ.ஜி.


தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கடற்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கடலோர காவல் படையின் (கிழக்கு மண்டல) கமாண்டர் ஐ.ஜி. எஸ்.பி. சர்மா தெரிவித்தார்.

இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் ரகசிய கண்காணிப்பு- பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் அவர் சனிக்கிழமை பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும்போது நமது கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவளத் துறையினர் மூலம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தவறுதலாக நமது கடல் எல்லையைத் தாண்டி மீன்வளம் செறிந்த பகுதிகளைத் தேடி செல்லும் நமது மீனவர்களை கடலோர காவல் படையினர் எச்சரித்தும் வருகின்றனர்.

இதே போல நமது கடற்பகுதிக்குள் ஊடுருவும் இலங்கை மீனவர்கள் மீதும் கடலோர காவல் படை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாள்களில் மட்டும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்த 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை- தமிழகம் இடையே கடலோரப் பகுதியில் நமது மீனவர்களை காக்கும் வகையில் கடலோர காவல் படையின் கப்பல்கள், ரோந்து படகுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரகசிய கண்காணிப்பும் முக்கிய அம்சமாகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை, வருமுன் காக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவே மிகவும் அவசியமாகிறது. புலனாய்வு தகவல்களைப் பெறுவதற்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. கடல்சார் துறை, கடலோர பாதுகாப்பிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.

இது நாட்டின் 7,500 கிலோ மீட்டர் தூர கடல் எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை கண்காணிக்கவும் உதவுகிறது. நாட்டின் வணிகப் போக்குவரத்தில் 90 சதவீதம் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது.

கடல்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க... லட்சத்தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரித்தது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து, இப்போது சோமாலியா கரையோரம், அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதிகளிலும் கடல் சார் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்திய கப்பல்களை சுற்றி வளைப்பதோடு ஊழியர்களை பிணையக் கைதிகளாக பிடிப்பதிலும் கடற்கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடற்கொள்ளையர்களுக்கும், சில தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. சாதாரண வள்ளங்கள் முதல் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் வரை நமது கடற்பகுதியில் ஏராளமான மீன்பிடி கலன்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படுவதில்லை. எனினும், நமது கடற்பகுதியில் ஊடுருவும், சந்தேகத்துக்கு இடமான அன்னிய மீன்பிடி கப்பல்கள், படகுகளைக் கண்டவுடன் தகவல் கொடுக்குமாறு ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் மீனவ மக்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பு: இதுதவிர செயற்கைக்கோள் உதவியுடன் கூடிய நீண்ட தூர தடம் அறியும் சாதனங்கள் (எல்.ஆர்.ஐ.டி.), சென்சார் கருவிகள், ஏரேஸ்டட்ஸ் சாதனங்கள், ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் நவீன ரேடார்கள் உதவியுடன் ஒருங்கிணைந்த சங்கிலித் தொடர்போன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் கடலோர காவல் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஐ.ஜி. எஸ்.பி.சர்மா.

இதில், மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என். விட்டல், சென்னை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கான பயிற்சி அகாதமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் கவுதம் பானர்ஜி, இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் (தென் மண்டலம்) தலைவர் பிரதிப்தா கே. மொஹபத்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ரூ. 214 கோடி கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது ? ஜெயலலிதா.


மும்பையைச் சேர்ந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.214 கோடி கடனைவட்டியுடன் உடனடியாகத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சிபிஐ-யின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதல் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி.யில்தான் இது முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது.

அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுகவுக்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை அலைக்கற்றை ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக திமுக முக்கிய பங்காற்றுகின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில்தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின் ஆவணங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் இப்போது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன்.

கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி.யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?

20 சதவீத பங்குளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி.யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?

கலைஞர் டிவியில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தராததையடுத்தே கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

புதிதாக தொடங்கப்பட்ட கலைஞர் டி.வி.யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

அலைக்கற்றை வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியுடன் டிபி ரியாலிட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உத்தரவாதமற்ற கடனாக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

திடீரென இந்தக் கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

எனவே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. முன்னாள் அமைச்சர் ராசாவும் கருணாநிதி குடும்பத்தினரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

எனவே கனிமொழியை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சிபிஐ தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை. நீதியை நிலைநாட்ட வேண்டுமானால் கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

கல்பாக்கத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு.


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இயக்குநர் பல்தேவ்ராஜ். இவர் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த அணுமின்நிலையத்தில் புதிய இயக்குநராக சுபாஸ் சந்திரசேதல் பொறுப்பேற்கிறார்.

இவர்கள் இருவரும் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கல்பாக்கத்தில் பாவினி அதிவேக ஈனுலை ரூ.5,627 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிந்து 2012-ல் இந்த ஈனுலை மின் உற்பத்தியை தொடங்கும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ரூ.4.45-க்கு எங்களால் வழங்க முடியும். இவையல்லாமல் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் இங்கு அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்தை தொடர்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு அதுபோல் ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.

கல்பாக்கம் அணுமின்நிலையம் கடல் மட்டத்தில் இருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளது. அதிவேக ஈனுலை(பாவினி) நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால் நிலநடுக்கம் போன்ற சமயங்களில் கடல் நீர் உள்ளே சென்று இப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

இங்கு மின்சாரத் தடை ஏற்பட்டால் மொபைல் ஜெனரேட்டர்கள் உள்ளன. மின்தடை ஏற்படும் பகுதியில் மொபைல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் கொடுக்க முடியும். இங்குள்ள சென்னை அணுமின் நிலையத்துக்கும் இந்த மொபைல் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இப்பேட்டியின்போது பாவினி அணுமின்திட்ட இயக்குநர் பிரபாத்குமார், சென்னை அணுமின்நிலைய இயக்குநர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


பிளஸ் - 2 மாணவி கற்பழிப்பு : தனியார் கம்பெனி ஊழியர் சிக்கினார்.

பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: மர்ம சாவு; தனியார் கம்பெனி ஊழியர் சிக்கினார்

கோவையை அடுத்துள்ள துடியலூர் நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகள் தீபிகா (வயது 16). பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஆர்.வி. நகர், கூடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்காக ஆர்.வி.நகரில் வசிக்கும் தனது பாட்டி கனகலதா வீட்டில் தீபிகா தங்கி இருந்தார். தீபிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான சதீஷ் குமாருக்கும் (24) கடந்த சில மாதங்களாக பழக்கம் இருந்து வந்தது.

முதலில் அத்தை மகன் என்ற உறவு இருப்பதாக நினைத்து சதீஷ்குமாருடன் தீபிகா பழகியுள்ளார். கனகலதா வீட்டுக்கு சதீஷ்குமார் அடிக்கடி வந்து தீபிகாவை சந்தித்து பேசி வந்தார். இதனை கனகலதா கண்டித்தார். மேலும் உறவு முறையில் சதீஷ்குமார் அத்தை மகன் அல்ல என்றும் அண்ணன்-தங்கை உறவுதான் வரும் என்றும் தீபிகாவிடம் கனகலதா கூறி எச்சரித்திருந்தார்.

இருந்த போதிலும் தீபிகாவும், சதீஷ்குமாரும் நெருங்கி பழகி வந்தனர். நேற்று இரவு ஒரு அறையில் கனகலதாவும் மற்றொரு அறையில் தீபிகாவும் இருந்தனர். இன்று அதிகாலை தீபிகாவின் பாட்டி கனகலதா அந்த அறைக்கு சென்றார். அங்கு தீபிகா பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த நேரத்தில் சதீஷ்குமார் கனகலதாவை தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதை பார்த்த கனகலதா சத்த மிட்டார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் இது தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் டி.எஸ்.பி. மாடசாமி, இன்ஸ் பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வில்லியம்ஸ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபிகாவின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தீபிகா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை உறுதி செய்ய சதீஷ்குமாரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

சதீஷ்குமாரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சதீஷ்குமாரை மேட்டுப் பாளையம், கோவில் பாளையம், கோவை பகுதியில் தேடி வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் கோவில் பாளையத்தில் தனது நண்பர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரது நண்பர் உதவியுடன் பெரியநாயக்கன் பாளையத்துக்கு போலீசார் வரவழைத்தனர். அங்கு அவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது போலீசாரிடம் சதீஷ்குமார் கூறியதாவது:-

நேற்று இரவு நான் தீபிகாவின் பாட்டி கனகலதாவுக்கு தெரியாமல் தீபிகா அறைக்கு சென்றேன். அங்கு தீபிகாவுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் பேசினார். இது தீபிகாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. என்னைவிட்டு வேறு பெண்ணிடமும் பழகுகிறாயா? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். அவரை சமாதானம் செய்த நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்.

நடுஇரவில் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தீபிகா வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்தேன். நீ உடனே வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தீபிகா கூறினார். இதனால் பயந்து போன நான் சற்று நேரம் கழித்து தீபிகா வீட்டுக்கு சென்றேன். அங்கு தீபிகா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

பின்னர் தீபிகா தூக்கில் தொங்கிய கயிற்றை அறுத்து கீழே இறக்க முயன்றேன். அந்த நேரத்தில் தீபிகாவின் பாட்டி அங்கு வந்ததால் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் தீபிகாவின் சாவில் மர்மம் நீடிக்கிறது. உண்மையில் தீபிகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தீபிகா கொலை செய்யப்பட்டார? அல்லது தற்கொலை செய்து கொண்டாராப என்பது தெரிய வரும் என்று கூறினார். தீபிகாவுக்கு 16 வயதே ஆவதால் அவரை கற்பழித்ததாக சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.