Friday, April 29, 2011

சேலம்: லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது.


சேலத்தில் ரூ.8000 லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.

சேலத்தில் நில அளவைகள் துறையில் தனித் துணை ஆட்சியராக இருப்பவர் பொன்னுசாமி. இவருடைய உதவியாளர் பத்மநாபன். இவர்கள் இருவரும், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரிடம் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக லஞ்சம் கேட்டார்களாம்.

இந்நிலையில் ஸ்ரீனிவாசன் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.

அவர்களின் ஆலோசனைப் படி, இன்று காலை தனித் துணை ஆட்சியர் பொன்னுசாமியும் உதவியாளர் பத்மநாபனும் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, சந்திரமௌலி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ஸ்டெர்லைட் விவகாரம் : மதிமுக அறிக்கை.


ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட நீரி நிறுவனம், தனது அறிக்கையை வைகோவுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று, சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைகோ வழக்குத் தொடுத்து இருந்தார். உயர்நீதிமன்றம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு, 2010 செப்டம்பர் 28 ஆம் நாள் ஆணை பிறப்பித்து இருந்தது.

அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. ஆலையை நிரந்தரமாக மூடுமாறு வைகோவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார். நாக்பூர் நீரி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்துக்குத் தர வேண்டும் என்று, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீரி நிறுவனம், ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்கவில்லை.

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் வைகோ தெரிவித்ததாவது:

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 40 நாள்களுக்குப் பின்னர்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு, நீரி நிறுவனம் ஆய்வுக்கு வந்தது. முதல் சுற்று ஆய்வு, ஏப்ரல் 6, 7, 8, தேதிகளில் நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆய்வு, ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு இணங்க, எனக்கும் தகவல் தரப்பட்டு, நானும் ஆய்வின்போது உடன் இருந்தேன். ஆய்வு அறிக்கையை, நீரி தந்தபின், அதனுடைய பிரதிகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் மீதான எனது கருத்துகளை, உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்கு நீதியரசர்கள், ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர், ‘நீரி நிறுவனம் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் உடன் இருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்; அந்த அறிக்கையின் பிரதி, வைகோவுக்கும் வழங்கப்பட வேண்டும்; அதன்பின்னர் வைகோ தன்னுடைய கருத்துகளை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும், வழக்கு ஜூலை மூன்றாம் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மதிமுக சட்டத்துறைச் செயலர்கள் வழக்கறிஞர் தேவதாஸ், தில்லியில் மதிமுக வழக்கறிஞர் பாலாஜியும் உடன் இருந்தனர்.

இவ்வாறு மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்க கூடாது : ராமதாஸ்.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் விளைவிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயால் பொதுமக்களுக்கும் வேளாண் நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அந்த கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வுகளே போதுமானது என்று கூறி மரபணு கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசின் வல்லுநர் குழு முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

விளைச்சலை அதிகரிப்பதற்காக பொதுமக்களின் உடல்நலனுக்கு தீங்கு ஏற்பட அனுமதிக்க கூடாது.

வேளாண் விளைச்சலை அதிகரிக்க முயற்சி என்ற பெயரில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவது என்பது, இந்திய விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெண்சாமரம் வீசும் செயலாகவே இருக்கும்.

இந்தியாவில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் அறிமுகப்படுத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டம்: வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க கனிமொழி - ராசா மறுப்பு.


தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமான வரி கணக்கு விவரங்களைத் தெரிவிக்க முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும், திமுக எம்பி கனிமொழியும் மறுத்துவிட்டனர்.

சென்னையைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணா என்பவர் திருச்சியில் உள்ள வருமான வரித் துறை துணை கமிஷனர் அலுவலகத்தில் தகவலறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், ஆ.ராசா, அவரது மனைவி எம்.ஏ. பரமேஸ்வரி ஆகியோர் 2001ம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்களைக் கோரியிருந்தார்.

இந்த மனு டெல்லி திகார் சிறையில் உள்ள ராசாவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ராசாவின் சார்பில் முத்துகுமாரசாமி என்பவர் அளித்த பதிலில், தனிப்பட்ட விவரங்களை மனுதாரர் கோரியுள்ளதால், அவற்றை வழங்க முடியாது. தகவலறியும் உரிமைச் சட்டத்திலிருந்து இந்த விவரங்களை வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதைக் காரணம் காட்டி கோபாலகிருஷ்ணாவின் தகவல் கோரும் மனுவை வருமான வரித்துறை நிராகரித்துவிட்டது.


அதே போல கனிமொழியின் வருமான வரி விவரங்களைக் கோரி கோபால கிருஷ்ணா சென்னை வருமான வரி அலுவலகத்தில் மனு செய்தார்.

ஆனால், வருமான வரி விவரங்கள் ரகசியமானவை என்பதால் அதை வெளியில் சொல்லக் கூடாது என்று கனிமொழி ஆட்சேபம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து அந்த விவரத்தை அளிக்க முடியாது என்று வருமான வரித்துறை கூறிவிட்டது.

கங்கையை சுத்தப்படுத்த ரூ 7000 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


கங்கையை சுத்தப்படுத்தும் ரூ 7000 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்துக்களின் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை நதியில் பல்வேறு மனித சடலம் உள்பட பல கழிவுகள் சேருவதால் மாசடைந்து வருகிறது.

புனித நதியான கங்கையை தூய்மை படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டில், 'தேசிய கங்கை நதி கழிமுக ஆணையம்' அமைக்கப்பட்டது. ஆணையத்தின் தலைவராக பிரதமர் நியமிக்கப்பட்டார்.


கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதற்கான திட்டம், செலவு, கண்காணிப்பு, ஒருங்கிணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ரூ.7 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் கங்கை நதியை தூய்மைப் படுத்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த 8 ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றத்தை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழானது ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு.

தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் 6000 வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:

"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.

தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.

இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.

இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.

கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.

இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போது மானதாக உள்ளது.

முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசை யிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.

கேரளாவில்...

கேரள தேர்தலைப் பொறுத்தவரை இந்த முறை காங்கிரஸ் வெல்வது உறுதியாகி விட்டது. ஆனாலும் இடதுசாரி கூட்டணி 45 முகல் 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 92 வரையிலான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அஸ்ஸாமில் தொங்கும் சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இரண்டுமே சமபலத்தில் உள்ளன. இங்கு ஆட்சியை நிர்ணயிக்கப் போவது பாஜகதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தை தாக்கி பிரச்சாரம் செய்ததால் ரஜினி படத்தில் நீக்கப்பட்டீர்களா? வடிவேலு பதில்.


திமுக தலைவர் கலைஞரை, நடிகர் வடிவேலு 29.04.2011 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடன் இருந்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு,

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக்கணிப்புகளை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பயன் அடைந்தோர் பட்டியல் அதிகமாக இருப்பதால், கலைஞர் அய்யாவின் வெற்றி உறுதி.

மக்களின் எழுச்சியை நான் பார்த்தேன். பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் நுழைந்து போகும்போது மக்கள் ஆரவாரம் செய்தனர். குழந்தைகள் முட்டையை கையில் எடுத்து வந்து காட்டியது போன்றவைகளையெல்லாம் பார்க்கும்போது பயன் அடைந்தவர்கள் ஓட்டே திமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை பெற்று தரும். ஏழை எளிய மக்கள் தங்களது நன்றி கடனை செலுத்தியுள்ளனர்.

இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக கலைஞர் அய்யாவை இன்று நான் சந்தித்தேன் என்றார்.

கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில்: ராணா படம், கானா படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப் படவில்லை. மே 13 ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

கேள்வி: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்ததுதான் அதற்கு பின்னடைவு என்று கூறுகின்றீர்களா?

பதில்: பொறுத்து இருந்து பாருங்கள். கலைஞரிடம் தோற்பதற்கு காத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்பது அப்போது தெரியும் என்றார்.