Wednesday, April 27, 2011

இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'திடீர்' நெருக்கடி.


இலங்கை அரசின் போர்க் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. இந் நிலையில் திமுக இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,

இலங்கை போர் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை திமுக வலியுறுத்துகிறது. தமிழர்கள், சிங்களர்கள் இடையே சமத்துவ நிலை ஏற்பட வழி வகுக்கப்பட வேண்டும்.

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை திமுக உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.

தனி ஈழமே திமுகவின் குறிக்கோள்:

முன்னதாக கூட்டத்தில் பேசிய கருணாநிதி, தனி ஈழமே திமுகவின் குறிக்கோள். இலங்கை போர் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போரில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை தேவை. சர்வதேச ஆணையம் விசாரிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

காங்கிரஸுக்குப் பதிலடியாக இலங்கை விவகாரம்:

சிபிஐ மூலம் மத்திய அரசு திமுகவுக்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருவதைத் தொடர்ந்து பதிலடியாக தற்போது இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது திமுக என்று தெரிகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தீர்மானம் போட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக திமுக போராட்டங்களையும் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சத்ய சாய்பாபா உடல் அடக்கம்.


மறைந்த சத்ய சாய்பாபாவின் பூத உடல் பிரசாந்தி நிலையத்தில் அவர் பக்தர்களை சந்திக்கப் பயன்படுத்திய இடத்துக்கு வெகு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

முழு அரசு மரியாதையைத் தொடர்ந்து வேதிக சம்பிரதாயப்படி 'சாய்' மந்திரங்கள் முழங்க சாய்பாபாவின் சகோதரர் மகன் ஆர்.ஜே.ரத்னாகர் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதன் பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆளுநர்கள் இ.எஸ்.எல். நரசிம்மன் மற்றும் சிவராஜ் வி.பாட்டீல், பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, வெங்கையா நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முன்ளாள் முதல்வர் அசோக் சவாண் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த கடந்த 2 நாட்களாக புட்டபர்த்திக்கு வந்தவண்ணம் இருந்தன

கலைஞர் டிவியை இயக்குவது கனிமொழி தான் : சிபிஐ.


முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கலைஞர் டிவி பங்குதாரரான கனிமொழி மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகிய இருவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது. அதில் முன்னாள் அமைச்சர் ராசா உட்பட ஒன்பது பேர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்), ஐபிசி 420 (ஏமாற்றுதல்), ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்டோருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந் நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் சிபிஐ நேற்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு லைசென்ஸை ஸ்வான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி லஞ்சம் பெற்றதாக ராசாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மீதும் கலைஞர் டிவிக்கு பணம் வழங்கியதாக டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்களின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த 5 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஊழல் தடுப்பு) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப் பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கனிமொழி தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார். கலைஞர் டிவி துவக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றினார். தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார். இப்போதும் அந்தத் தொலைக்காட்சியை இயக்குவதில் ('active brain') முக்கிய நபர் கனிமொழி தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையின் முகப்பில், 'சப்ளிமென்டரி-1'என்று கூறப்பட்டிருப்பதால் அடுத்தடுத்து மேலும் துணை குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இந்த குற்றப் பத்திரிக்கையை ஏற்ற நீதிபதி சைனி, கனிமொழி மே 6ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். சரத்குமார், கரீம் மொரானி ஆகியோ ருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டதோடு, ராஜிவ் அகர்வாலையும், அசீப்பல்வா வையும் செவ்வாக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்னொரு துணை குற்றப் பத்திரிகை அடுத்து மாதம் 30ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

40,000 தமிழரைக் கொன்று குவித்தது இலங்கை! ஐ.நாவின் அறிக்கை முழு விவரம் .


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரில் 40,000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், அனைத்து போர் விதிமுறைகளையும் அந்நாடு மீறிவிட்டதாகவும், போர் தொடர்பாக பொய்யான தகவல்களையே கூறி வந்ததென்றும் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

ஐ.நாவின் அறிக்கை முழு விவரம் :

http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயணம் - இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்ட முயற்சி.

ஐ.நா.அறிக்கை எதிரொலி: ராஜபக்சே தம்பி அமெரிக்கா பயணம்- இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்ட முயற்சி

இலங்கை போர் குறித்த ஐ.நா. விசாரணை அறிக்கை வெளிவந்து இருப்பதை அறிந்து இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிக்கையால் இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர் குற்ற விசாரணை நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு உள்ளது. இதற்காக அதிபர் ராஜ பக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா மற்றும் சில நாடுகளை தங்களுக்கு ஆதரவாக மாற்றும் முயற்சி யில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இறுதிப் போர் குறித்து பொய் தகவல்களைச் சொன்னது... 40,000 தமிழரைக் கொன்றது இலங்கை! - ஐநா.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரில் 40,000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், அனைத்து போர் விதிமுறைகளையும் அந்நாடு மீறிவிட்டதாகவும், போர் தொடர்பாக பொய்யான தகவல்களையே கூறி வந்ததென்றும் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறை களை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

முன்பு வெளிவந்த அத்தனை தகவல்களுமே உறுதியாகியுள்ளது, இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பார்க்கும்போது.


இந்த அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:


இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன் படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.

தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே.

பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்னது நிரூபணமாகியுள்ளது. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதால், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையும், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு.

இப்போது சர்வதேச சமூகம் கேட்பது, என்ன செய்யப் போகிறது இந்தியா?, என்ற கேள்வியைத்தான்!

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்துகிறது இந்தியன் ஆயில்!!


பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, கடந்த ஜுன் மாதம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அப்போதிருந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. கடைசியாக, ஜனவரி மாதம் விலை உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கியதால், மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், அதன்பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் மே 10ம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. எனவே, பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி கேட்டபோது, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ரன்பீர் சிங் புடோலா கூறுகையில், மக்களும், அரசும் அடங்கிய அமைப்பின் ஒரு அங்கமாகவே நாங்கள் உள்ளோம். குறிப்பிட்ட முடிவை எடுத்தால், எங்களுக்கு எதிராக சூழ்நிலை திரும்பி விடும். எனவே, சிறிது காலத்துக்கு இந்த நஷ்டத்தை தாங்கிக்கொள்ளலாம் என்று விலையை உயர்த்தாமல் இருந்தோம். தற்போது, கூடிய விரைவில் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இன்றைய நிலையில், பெட்ரோலை லிட்டருக்கு ரூ.7.50 நஷ்டத்தில் விற்று வருகிறோம். டீசலை 18 ரூபாய் 11 காசுகளும், மண்ணெண்ணெயை 28 ரூபாய் 33 காசுகளும், கியாஸ் சிலிண்டரை 315 ரூபாய் 86 காசுகளும் நஷ்டத்தில் விற்று வருகிறோம்.

இதனால் தினமும் எங்களுக்கு ரூ.297 கோடி நஷ்டம் ஏற்படுறது. மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடிவரை நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதன்மூலம், கடந்த மார்ச் மாதத்துடன், எங்களது கடன் அளவு ரூ.53 ஆயிரம் கோடியாக உயர்ந்து விட்டது என்றார்.

லிட்டருக்கு ரூ. 3 உயரும்.

வரும் மே 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு பற்றி அறிவிக்கப்படும் என்றும், லிட்டருக்கு ரூ. 3 வரை இந்த உயர்வு இருக்கும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.50க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ,கடந்தாண்டு தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற்போது, ரூ.60யை தாண்டிவிட்டது.

இந் நிலையில் மே 10ம் தேதி இரவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வரலாம். இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70 ஆக உயர வாய்ப்புள்ளது.