Monday, April 25, 2011

இடி தாக்கியதால் அதிசயமா? சித்தம்பலம் குட்டையில் பொங்கி வரும் நீர்க்குமிழி.

இடி தாக்கியதால் அதிசயமா? சித்தம்பலம் குட்டையில் பொங்கி வரும் நீர்க்குமிழி: பல்லடம் பகுதியில் பரபரப்பு

பல்லடம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடி-மின்னலுடன் மழை கொட்டியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின் போது பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் குட்டையில் இடி விழுந்ததாகவும், குட்டையில் இருந்து தொடர்ந்து நீர்க்குமிழிகள் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் தகவல் பரவியது. பொது மக்கள் வந்து ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

சித்தம்பலம் குட்டையில் நீர்க்குமிழிகள் வருவது குறித்து பஞ்சாயத்து துணை தலைவர் வேணுகோபாலிடம் கேட்டபோது கடந்த 10 ஆண்டாக சித்தம்பலம் குட்டையில் தண்ணீர் இல்லை. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது சித்தம்பலம் குட்டை அருகே இடி விழுந்ததுள்ளது. குட்டைக்குள் விழுந்ததாக தெரியவில்லை.

கடந்த ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குட்டை தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் மழை நீர் தேங்கியுள்ளது. 10 ஆண்டாக குட்டையில் தண்ணீர் இல்லாததால் பூமியில் வெடிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த பிளவுகளில் தண்ணீர் இறங்குவதால் குமிழிகள் வெளிவரலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.

இருப்பினும் பொது மக்கள் இடி விழுந்ததால் நீர்க்குமிழி வருகிறது என்று கூறி பார்த்து செல்கின்றனர்.

கார் உரிமையாளர்களே எச்சரிக்கை!

சொந்தமாகக் கார் வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் லண்டனில் உள்ள
குவீன் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை அறிந்தே தீர வேண்டும்.

சொந்தமாக கார் வைத்திருக்கிறவர்கள் போதிய நேரம் இல்லாமையினாலோ, சோம்பேறித்தனத்தாலோ தங்களுடைய காரை தண்ணீர்விட்டுக் கழுவி சுத்தம் செய்வதில்லை. கார் சர்வீஸýக்கு விடும்போது சுத்தமாவதே போதும் என்று இருந்துவிடுகின்றனர். ஆனால் ஆய்வு தெரிவிக்கும் தகவல்கள் வயிற்றைக் குமட்ட வைக்கிறது.

கார் ஸ்டீயரிங் வீலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, பொது கக்கூஸின் பேசினில் இருப்பதைவிட 900% அதிகமாக இருக்கிறதாம். உவ்வே...

காரில்போகும்போதுதான் நொறுக்குத்தீனி தின்பது வழக்கம். தெருவோர பஜ்ஜி கடையிலிருந்து வாங்கும் பண்டங்களையும் சாப்பிட்டுக்கொண்டே ஸ்டீயரிங் வீலில் எண்ணெயைத் தடவுகிறவர்களே அதிகம் (லண்டனிலுமா?).

பொது கக்கூஸில் ஒரு சதுர அங்குலத்துக்கு 80 கிருமிகள் இருந்தால் கார் ஸ்டீயரிங்கில் 720-க்கும் மேல் இருக்கிறதாம். (கிளவுஸ் போட்டுத்தான் இனி ஓட்ட வேண்டும்!)

கார் உரிமையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆண்டுக்கு ஒருமுறைதான் காரின் உள்ளே சுத்தம் செய்கின்றனர். காரில் சாப்பிடுவதால் மட்டும் அல்ல இருமுவதால், தும்முவதால், சளி ஒழுகும்போது மூக்கையும் துடைத்து கர்ச்சீப் இல்லாவிட்டால் கதவு, சீட், டாஷ் போர்டு, ஸ்டீயரிங் வீல், கூரை என்று எங்கு வேண்டுமானாலும் துடைப்பதால் கிருமிகள் பரவுகின்றன.

காரிலேயே டிக்கி என்று அழைக்கப்படும் அதன் பின் பகுதி இருக்கிறதே அதை தெரு குப்பைத்தொட்டி என்றே சொல்லிவிடலாம். அதை பெரும்பாலும் அடைத்தே வைத்திருப்பதால் கிருமிகள் ஆனந்தமாக அங்கே இனப்பெருக்கம் செய்து குடும்பம் நடத்துகின்றன. அதிகமில்லை, ஜென்டில்மென் - ஒன்றரை சதுர அங்குலத்துக்கு 1,000 பாக்டீரியாக்கள்தான் - இருக்கின்றனவாம்.

பாசிலஸ் செரியஸ், ஆர்த்ரோ பாக்டர் என்ற இருவகை பாக்டீரியாக்கள்தான் காரில் அதிகம் காணப்படுகின்றன. இது இருக்கும் பண்டத்தை சமைத்துச் சாப்பிட்டால் நான் ஸ்டாப் (வயிற்றுப் போக்கு) கொண்டாட்டம்தான்!

இதில் ஆர்த்ரோ பாக்டர் மண்ணில்தான் பெரும்பாலும் இருக்கும். கார் போகும்போது எழும் தூசியில் கலந்து காரில் வந்து விழும். மனிதர்களின் தோலிலும் இது இருக்கும்.

காரின் சுகாதாரம் ஒருபுறம் இருக்கட்டும், கார் பராமரிப்பு எப்படி என்றும் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

66% கார் சொந்தக்காரர்களுக்கு காரை வெளியே எடுக்கும்போது ஆயில், வாட்டர் லெவல் பார்க்க வேண்டும் என்ற நினைவே வராது.

கார் பஞ்சராகிவிட்டால் ஸ்டெப்னியைக் கொண்டு டயரை மாற்ற 66% பேருக்குத் தெரியாது.

காரில் காற்று குறைந்தால் காற்று நிரப்ப 30% பேருக்குத் தெரியாது.

காரில் வைப்பர் வேலை செய்யாவிட்டால் அதைப் பழுது நீக்க 50% பேருக்குத் தெரியாது.

நல்ல வேளை, காரை பாதுகாப்பாக ஓட்ட, சிக்னல் போட, ரிவர்ஸ் எடுக்க, ஓவர்டேக் செய்ய, ஆஃப் கிளட்சில் ஓட்ட எத்தனை பேருக்குத் தெரியும் என்று ஆய்வு செய்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும்.

இனி உங்கக் காரை தினமும் குளிப்பாட்டுவீர்களா, அல்லது குறைந்தபட்சம் அதன் முகத்தையும் வயிற்றையுமாவது சுத்தம் செய்வீர்களா?

ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கருத்துக் கணிப்பில் தகவல்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பெரும்பான்மை மக்கள் கருதுவதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும், சிபிஎஸ் நியூஸ் தொலைக்காட்சியும் இணைந்து அண்மையில் தொலைபேசி மூலம் கருத்துக்கணிப்பு நடத்தின.
கடந்த 15-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை நடந்த இந்தக் கருத்துக் கணிப்பில் நாடு முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,224 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயல்பாடு குறித்து 45 சதவீதம்பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இது கடந்த ஜனவரி மாதத்தைவிட குறைவாகும்.

பொருளாதார நெருக்கடிகளை அவர் கையாளுவது குறித்து 57 சதவீதம் பேரும், பட்ஜெட் பற்றாக்குறையை அவர் கையாண்டது குறித்து கிட்டத்தட்ட அதே அளவினரும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்திருக்கிறது.

அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒபாமா போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் செயல்பாடு குறித்து 75 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

எனினும், 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களுக்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கை ரத்து செய்யும் ஒபாமாவின் திட்டத்துக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

எந்த வகையில் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்கிற கேள்விக்கு ராணுவச் செலவுகளைக் குறைப்பதற்கு 45 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். சமூகப் பாதுகாப்புச் செலவுகளைக் குறைக்கலாம் என 17 சதவீதம் பேரும், மருத்துவத் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கலாம் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 70 சதவீதம் அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். லிபியா மீதான தாக்குதலுக்கும் பெரும்பான்மையினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை நாளில் மின்வெட்டு இல்லை: கோடை மழையால் 700 மெகா வாட் மிச்சம்.


தமிழகம் முழுவதும் வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இல்லை. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் 2,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. இதைச் சமாளிக்க சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் மூன்று மணி நேரமும் தினமும் மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு மூலம் 1,600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு பகுதியில் குறித்த நேரத்தில் மின்வெட்டு செய்யப்படுவது வழக்கம். ஆனால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக மின்வெட்டு செய்யப்படும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எந்த இடத்திலும் வழக்கமான அளவான மூன்று மணி நேரம் மின்வெட்டு செய்யப்படவில்லை. அரை மணி நேரம் வரையிலே மின்வெட்டு செய்யப்பட்டது. சென்னையில் மின்வெட்டு இல்லை.

என்ன காரணம்? கோடை மழை பெய்து வருவதே மின்வெட்டு செய்யப் படாததற்குக் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "கோடை மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவுக்கு மின்மோட்டார்களை பயன் படுத்தவில்லை. இதன்மூலம், 700 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மின்சாரம், வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக செய்யப்படும் மின்வெட்டு கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இல்லை' என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடருமா? மின்வெட்டு இல்லாத நிலை தமிழகத்தில் தொடர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு, தமிழகம் முழுவதும் கோடை மழை தொடர வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

"தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை நீடிக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மின்வெட்டு இல்லாத நிலை மேலும் சில நாட்களுக்கு மாநிலத்தில் நீடிக்கும் எனத் தெரிகிறது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு தேதி அறிவிப்புக்கு அமைச்சர் எதிர்ப்பு.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முறையே மே 14, 25 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபிதா அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறையே தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர்,

தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மூலமாக தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். இதுவே வழக்கமான நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித் துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.

தொடரும் மோதல்:


நடத்தை நெறிமுறைகளால் மக்கள் நலப் பணிகள் தடைபடுவதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நலத் திட்டப் பணிகளை அமைச்சர்கள் பார்வையிடவும், அரசு வாகனங்களைப் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், பள்ளித் தேர்வு முடிவு தேதியை தங்களை கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித் துறை தன்னிச்சையாக அறிவித்துள்ளது என்ற அந்தத் துறை அமைச்சரின் திடீர் புகாரால் கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெயர் - “கெட்-அப்”பை மாற்றி சென்னையில் 7 வருடம் வேலை பார்த்த ஜான் டேவிட்: ஆஸ்திரேலியா தப்பி விட்டதாக வதந்தியை பரப்பினார்.


பெயர்,“கெட்-அப்”பை மாற்றி சென்னையில் 7 வருடம் வேலை பார்த்த ஜான் டேவிட்: ஆஸ்திரேலியா தப்பி விட்டதாக வதந்தியை பரப்பினார்

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே பல்கலைக்கழகத்தில் படித்த சீனியர் மாணவரான ஜான் டேவிட் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இக்கொலை வழக்கில் கடலூர் செசன்சு கோர்ட்டு ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜான் டேவிட் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 2004-ம் ஆண்டு ஜான் டேவிட்டுக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.

இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் என்றும், ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்வதாகவும் பரபரப்பான தீர்ப்பை கூறியது. ஜான் டேவிட்டை உட னடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர்.

ஜான் டேவிட்டை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ராமநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஜான் டேவிட்டை பிடிக்க தமிழகம் முழுவதும் வலை விரித்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.

ஜான் டேவிட் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அடையாறில் அவர் தங்கி இருந்த இடம், வேலை செய்த நிறுவனம் ஆகியவற்றை சுற்றி வளைத்தனர். போலீஸ் பிடி இறுகியதால் வேறு வழியின்றி கடலூர் மத்திய சிறையில் நேற்று மாலை ஜான் டேவிட் சரண் அடைந்தார். உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2004-ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்டிருந்த இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டதும் கடலூர் சிறையில் இருந்து ஜான் டேவிட் விடுதலையானார். அப்போது அவர் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காட்சி அளித்தார். அதன் பிறகு அவர் பாதிரியாராக மாறி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் பிறகு ஜான் டேவிட் பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டதாக வெளியான தகவல்கள் வதந்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஜான் டேவிட் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டே இதனை பரப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் ஜான் டேவிட் என்ற பெயருடனும், தமிழகம் முழுவதும் தெரிந்த அதே முகத்துடனும் வெளியில் சுற்ற முடியாது, பொது மக்களுடன் இணைந்து வாழ முடியாது என்பதை அவர் உணர்ந்தார்.

தனது “கெட்-அப்”-ஐ மாற்றி புது வாழ்க்கையை தொடங்க ஜான் டேவிட் திட்டமிட்டார். அதன்படி, தனது தாடி- மீசையை எடுத்த ஜான் டேவிட், தலையில் தொப்பி, அணிந்து கண்ணாடி போடத் தொடங்கினார். பின்னர், சென்னைக்கு வந்த அவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பி.பி.ஓ. நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். இப்பணியில் சேர ஜான் டேவிட்டின் நுனி நாக்கு ஆங்கிலம் பெரிதும் உதவி உள்ளது.

அடையாறு வால்மீகி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜான் டேவிட் குடியேறினார். அவரது தந்தை மாரிமுத்து, தாய் எஸ்தர் லட்சுமி ஆகியோர் மட்டும் அடிக்கடி சென்னை வந்து அவரை பார்த்துச் சென்று உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜான் டேவிட் அங்கு நல்ல பிள்ளையாக பெயர் எடுத்துள்ளார். ஜான் மாரிமுத்து என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து ஜான் டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். பாஸ்போர்ட் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஜான் டேவிட் வெளிநாடு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட போலீசார், அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதை முதலில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ஜான் டேவிட்டை கைது செய்ய தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்தனர். அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த டேவிட்டின் போட்டோவும், போலீசார் வசமிருந்த போட்டோவும் ஒன்றாக இருந்தது.

இதையடுத்தே ஜான் மாரிமுத்து என்ற பெயரில் பணிபுரிந்து வருவது ஜான் டேவிட்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். சென்னையில் வைத்து ஜான் டேவிட்டை எப்படியும் கைது செய்துவிட வேண்டும் என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் அவர் உஷாராகி சரண் அடைந்து விட்டார். இதற்கிடையே ஜான் டேவிட்டின் வக்கீல் ஆறுமுகராஜ் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வெளிப்படையான ஊழல் வெட்கக்கேடானது : அத்வானி குற்றச்சாட்டு.

மத்திய அரசின் வெளிப்படையான ஊழல் வெட்கக்கேடானது; அத்வானி குற்றச்சாட்டு

2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பி.க்களுக்கு வெளிப்படையாகவே லஞ்சம் கொடுத்தது முதல் மத்திய அரசின் அனைத்து ஊழல்களும் வெட்கக் கேடானவை என பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, இணைய தளத்தில் தன்னுடைய பிளாக் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் விமர்சன கட்டுரையை எழுதி வருகிறார். நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

அந்த கட்டுரையில் அத்வானி கூறியுள்ளதாவது:-

2004-ம் ஆண்டு மே மாதம் முதல் நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்து வருகிறார். 2008-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் தான் மிக தீவிரமான கட்டத்தை அவர் எதிர் நோக்கினார். பெரும்பான்மையை இழந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பி.க்களை வெளிப்படையாகவே விலைக்கு வாங்கியது மிகவும் வெட்கக் கேடான செயலாகும். அப்போது, தங்களுக்கு அளித்த பணத்தை பாராளுமன்றத்திலேயே பா.ஜனதா எம்.பி.க்கள் கொண்டு வந்து கொட்டினார்கள். இதை, `விக்கிலீக்` இணைய தளமும் தற்போது வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. சதீஷ் சர்மா வீட்டில் இரண்டு பெட்டி நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 கோடி பணத்தை அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து வந்து காட்டி இருக்கின்றனர். அதை விக்கி லீக் அம்பலப் படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சியில் போலவே, இரண்டாவது ஆட்சியிலும் ஊழல்கள் தொடருகின்றன. மன்மோகன் சிங் அரசின் தொடர்ச்சியான ஊழல்களும், சுப்ரீம் கோர்ட்டின் கிடுக்கிப்பிடி கேள்விகள் மற்றும் கண்டனங்களும் நாள் தோறும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகின்றன.

ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலையில் நிகழ்ந்த கதிர்வீச்சு சம்பவத்துக்கு பிறகும் அதில் இருந்து பாடம் படிக்க மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் அனைவருமே பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி எதுவும் பேசுவதில்லை. மாறாக, புதிய அணுமின் உலைகள் அமைப்பது பற்றிய பாதையிலேயே செல்கின்றனர். மராட்டிய மாநிலம் ஜெய்தாபுரில் அணுமின் நிலையத்தை அமைப்பதில் சுற்றுச் சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் பிடிவாதம் காட்டுகிறார். ஜப்பானில் ஏதாவது சுற்றுச் சூழல் ஆர்வலர் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது. பூகம்ப அபாய பகுதியில் அந்த அணுமின் நிலையம் அமைந்திருக்கிறது.

இதை எதையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க அணுமின் நிறுவனங்களின் வர்த்தக நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது.

இவ்வாறு அத்வானி குறிப்பிட்டுள்ளார்.