Friday, April 22, 2011

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நிபந்தனை விதிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை : உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்.


மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு (எம்.சி.ஐ.) அதிகார வரம்பு இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று எம்.சி.ஐ. கடந்த 21.12.10-ல் அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து டி.டி. மருத்துவக் கல்லூரி மற்றும் டி.டி. மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.

அந்த மனு தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் வி.கே. சுப்புராஜ் தனது பதில் மனுவை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ளார்.

அதன் விவரம்:

இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பாணையை எதிர்த்து தமிழக அரசு இந்த நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் அந்த அறிவிப் பாணைக்கு இடைக்கால தடை விதித்து இந்த நீதிமன்றம் கடந்த 6.1.11-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என நிபந்தனைகளை விதிக்க மருத்துவ கவுன்சிலுக்கு அதிகார வரம்பு இல்லை. தமிழ்நாட்டில் தொழில் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தை உயர் நீதிமன்றமும் உறுதிப் படுத்தியுள்ளது. அதனால், மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பாணையைவிட அரசின் நுழைவுத் தேர்வு ரத்து சட்டமே செல்லும் என்று கூறியுள்ளார்.


ஐ.ஐ.டி. நில விவகாரம: முதல்வர் கருணாநிதி விளக்கம்.



சென்னை தரமணியில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு டிட்கோ மூலம் வெளிப்படையான டெண்டர் கோரப்பட்ட பிறகே, டாடா நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம், அந்த நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமலேயே டாடா குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு நீண்ட கால குத்தகைக்கு விட்டிருப்பதாக "தினமணி', "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இதுதொடர்பாக அளித்த பதிலை மேற்கோள்காட்டி முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை இரவு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் : தரமணியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக டிட்கோவிற்கு அரசு முன்மொழிவினை அனுப்பியது. அதனடிப்படையில், தரமணியில் கானகம் மற்றும் திருவான்மியூர் கிராமங்களில் இருக்கக் கூடிய 25.27 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கவும், டிட்கோ மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக இதைச் செயல்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த அரசு தன்னிச்சையாக டாடா நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. டிட்கோ நிறுவனம் வெளிப்படையான டெண்டர் கோரி அதனடிப்படையிலேதான் டாடா நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தது.

ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பித்திருந்த 15 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் தகுதிவாய்ந்தவைகளாகக் கண்டறியப்பட்டன. நிலத்தின் விலை, வழிகாட்டி மதிப்பீடு, சந்தை மதிப்பீடு ஆகியவற்றில் எது அதிகமோ அதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயித்து, அதனடிப்படையிலே விலைப்புள்ளி கோருவது என்று முடிவு செய்யப்பட்டது.

வழிகாட்டி மதிப்பீடான சதுர அடி ரூ.12 ஆயிரம் என்பதை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. தகுதிவாய்ந்த 7 நிறுவனங்களில் டாடா ரியாலிட்டி அண்ட் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனம் மட்டுமே சதுர அடிக்கு ரூ.12 ஆயிரத்து 50 விலைப்புள்ளியைச் சமர்ப்பித்திருந்தது. எனவே டாடா ரியாலிட்டி நிறுவனம் இந்தத் திட்டத்தின் கூட்டு முயற்சி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.1,412 கோடி குத்தகைத் தொகையாக அரசால் பெறப்பட்டு, அந்த நிறுவனத்துக்கு மேற்கண்ட நிலம் குத்தகை அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது. 40 லட்சம் சதுர அடி பரப்புள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் 2012 மே மாதம் முழுமையாக முடிவடையும். 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலை உருவாகும் என்று அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஐ.ஐ.டி.க்குச் சொந்தமான நிலத்தை, அதன் அனுமதியில்லாமல் அரசு எப்படி கையகப்படுத்தியது என்பதைப் பற்றியோ, அரசுக்கு சொந்தமில்லாத நிலத்தை டாடாவுக்கு வழங்கியது பற்றியோ முதல்வர் கருணாநிதி காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.

12-வது ஐந்தாண்டுத் திட்டம்: தனியார் - அரசு கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம - மன்மோகன் சிங்.



நாட்டில், 12-வது ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கும்போது தனியார்-அரசுத்துறை கூட்டு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டமிடல் அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.

12-ம் ஐந்தாண்டுத்திட்டத்தை வகுக்கும் திட்டக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது பேச்சு விவரம் : 12-வது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் நமது நாடு சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் கடைசி ஆண்டில் நாம் கடந்த ஆண்டுதான் நுழைந்தோம். 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நாம் மேற்கொள்ளவுள்ள அணுகுமுறை பற்றி விவாதித்து முடிவு செய்ய இது நல்ல தருணம்.

எந்தெந்தப் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும் என்பது பற்றி ஒரு பட்டியலை முதலில் தயாரித்துக்கொண்டு அதிலிருந்து திட்டமிடல் பணிகளை திட்டக்குழு தொடங்க வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் திட்டக்குழு ஓர் அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளது. அதன்படி பார்த்தால், 11-வது ஐந்தாண்டுத் திட்டமானது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் சுமார் 8.2 சதவிகிதம் என்ற நிலையை எட்டியுள்ளநிலையில் முடிவடைகிறது. இது 9 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதைவிட குறைவான அளவே எட்டப்பட்டுள்ளது. இருப்பினும், 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலமானது நாட்டில் கடும்வறட்சியும், உலக பொருளாதாரம் நசிவைச் சந்தித்த காலகட்டத்தினை கடந்து வந்தது என்பதால் இந்த அளவு வளர்ச்சியை எட்டியதை பாராட்டத்தான் வேண்டும்.

பல துறைகளில் முன்னேற்றம் என்பது எட்ட முடியாத சூழ்நிலை நிலவியபோதிலும் சில துறைகளில் நமது நாடு சாதனைகள் படைத்ததை மறக்கக்கூடாது. அதாவது, கல்விநிலையங்களில் புதிதாக படிக்கச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடையிலேயே படிப்பைக் கைவிடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆண், பெண் பிறப்பு விகிதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது. சிசு மரண விகிதம் முன்பைவிட குறைந்துள்ளது. இதுபோன்றவற்றில் நாம் நிர்ணயித்த இலக்கைவிட சாதித்தது குறைவுதான் என்றபோதிலும் பெரிய குறையாக கருதும்நிலை இல்லை. எனவே, எதிர்காலத்தில் இவ்வகையில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்பு நமக்கு இருக்க வேண்டும். அதை செய்துகாட்டுவோம் என நாம் உறுதியேற்க வேண்டியது அவசியம்.

நமது நாட்டின் சமூக, பொருளாதார பிரச்னைகளைத் தீர்க்க நாம் பழைய புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே திட்டமிட வேண்டியதாக இருந்தது. உதாரணமாக, இது வரை 2004-05-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே பல பிரச்னைகள் தொடர்பாக விவாதங்கள் நடத்தி வந்துள்ளோம். அதாவது 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலம் தொடங்கும் முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்தே ஆலோசனைகளை நடத்தியிருக் கிறோம். ஆனால், 2009-10-ம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் இப்போது வந்துவிட்டன. அதை உடனடியாக அனைத்துத் துறைகளுக்கும் தெரிவித்து விடுங்கள். இதன் மூலம் 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் வறுமை ஒழிப்புத்திட்டத்தில் எவ்வளவு சாதனை படைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

சமீபத்திய புள்ளிவிவரங்களைவைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான மதிப்பீடுகளை திட்டக்குழு தயாரிக்க வேண்டும். அதை நாட்டு மக்கள் விவாதிக்க கூடிய வகையில் விரைவில் வெளியிட வேண்டும்.

நாம் இதுவரை சாதித்தவற்றினை நிலைநிறுத்துவதாகவும், அனைத்து தரப்பு நன்மைகளையும் கருத்தில்கொள்வதாகவும், விரைவான முறையில் பலன்தரத்தக்கதாகவும், நிரந்தர வளர்ச்சியை உறுதிசெய்வதாகவும் 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்திற்கான திட்டங்கள் இருக்க வேண்டும். இதற்காக புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது அரசு அமலாக்கிவரும் திட்டங்களில் எந்தெந்தத் துறைகளில் உரிய இலக்குகள் எட்டத்தவறியிருக்கிறோம் என்று பார்த்து அவற்றில் உரிய முன்னேற்றம் காண ஆவன செய்யவேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட திட்டங்களை மறுசீரமைப்பு செய்யலாம் அல்லது திட்ட அமலாக்கத்தை தீவிரப்படுத்தலாம். எந்தெந்த புதிய சவால்களை நாம் இனி சமாளிக்க வேண்டும். அதற்கு என்னென்ன முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்து திட்டமிடுவது அவசியம்.

திட்டங்களை அமலாக்குவதற்கு தேவையான நிதியாதாரங்களை திரட்டுவதுதான் தற்போது பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனவே, கிடைக்கும் நிதியாதாரத்தை திறமையான முறையில் பயன்படுத்த நன்கு திட்டமிடவேண்டியது அவசியம். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தனியார்-அரசு கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளும்வகையில் திட்டம் வகுக்க வேண்டும்.

மின்சார உற்பத்தி, நகரமயமாக்கல், தண்ணீர் பிரச்னை ஆகியன எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னைகளாக இருக்கக்கூடும். எனவே, இந்தப் பிரச்னைகளை சமாளிக்க உரிய கொள்கைத் திட்டங்களை வகுக்க திட்டக்குழு சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிதியமைச்சரின் யோசனைகளை பரிசீலிக்க வேண்டும்

12-வது ஐந்தாண்டுத்திட்ட இலக்கு 9 முதல் 9.5 சத வளர்ச்சி விகிதத்தை எட்டுவதாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பேசியவர்களின் கருத்துக்கள் அனைத்தையும் திட்டமிடலின்போது திட்டக்குழு பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக நிதியமைச்சர் கூறிய யோசனைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படை கட்டுமானத்துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல யோசனைகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

சில முக்கிய பிரச்னைகள் குறித்து மாநில அரசுகளுடன் திட்டக்குழு ஆலோசனை நடத்தி முதலில் புதிதாக அணுகுமுறை ஆவணத்தை தயாரிக்க வேண்டும். அதை மத்திய அமைச்சகங்களுக்கு சுற்றுக்கு விட வேண்டும். அதன் பின் அணுகுமுறை பரிந்துரை அறிக்கை தயாரித்து அதை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்குத் தர வேண்டும். அதன் பின்னர் அந்த அறிக்கை தேசிய மேம்பாட்டு கவுன்சிலின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். இந்த கவுன்சிலின் கூட்டம் வரும் ஜூலை மாதம் நடைபெறக்கூடும் என பிரதமர் இறுதியாக ஆற்றிய தொகுப்புரையில் குறிப்பிட்டார்.

மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலம் மிகவும் மோசமானது : அத்வானி.


இப்போது நடைபெற்று வரும் மன்மோகன் சிங்கின் ஆட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகமோசமான ஆட்சி என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் வியாழக்கிழமை தேர்தல் கூட்டத்தில் அவர் பேசியது: 2008-ம் ஆண்டில் ஆட்சிக்கு ஆதரவாக எம்.பி.களை விலைக்கு வாங்கி லஞ்ச, ஊழலை பெரிய அளவில் தொடங்கியது மன்மோகன் அரசு. தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல் செய்து, எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு. அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்தபோது நான் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் மிகமிக மோசமாக ஆட்சி நடத்துகிறார்.

1952-ம் ஆண்டில் இருந்து நான் நமது நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை கவனித்து வருகிறேன். இதுவரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிதான் என்றார் அத்வானி.

ஐ.நாவை மிரட்டும் இலங்கை !


இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது தொடர்பான அறிக்கை திட்டமிட்டப்படி எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வெளியிடப்படும் என்று ஐ.நா.சபை கூறியுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஐ.நா.சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பு இயக்குநர்,

அறிக்கையில் இலங்கை அரசு தரப்பின் கருத்தை சேர்ப்பது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் அறிக்கை வெளியே வராமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. சீனா மற்றும் ரஷ்யா மூலம் இலங்கை அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசு எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அறிக்கை வெளியிடுவதில் இருந்து ஐ.நா. பின்வாங்கப் போவதில்லை என்றார்.

ஐ.நா. சபை அறிக்கையை வெளியிடக் கூடாது என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டால் அது ஜக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகளை மிக மோசமாக பாதிக்கும் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பெரிஸ், ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டால் அது ஜக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடு களை மிக மோசமாக பாதிக்கும். அறிக்கை வெளியிடப்படுவது அடிப்படையில் தவறானது. அதில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் அடிப்படையிலான விஷயங்களை ஆரய நடவடிக்கை எடுப்பதும் தவறானது.

அந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலருக்கு அறிவுரை வழங்கவே வழங்கப் பட்டது. அதை மக்கள் பாவனைக்கு வெளியிடவேண்டியதன் அவசிம் என்ன என்றார்.

பான் கி மூனுக்கு அறிவுரை வழங்க தயாரிக்கப்பட்ட இவ் அறிககையை விசாரணை அறிக்கையாக ஐ.நா மாற்றியுள்ளதாக குற்றம் சுமத்திய பீரிஸ், இது அறிவுரை அறிக்கையே என பான் கி மூன் பலமுறை தெரிவித்துள்ளதாகவும் பெரிஸ் குறிப்பிட்டார்.

இவ் அறிக்கைக்கு பதில் அளிப்பது பற்றி கேள்விக்கு, அது மிகவும் கடுமையானது என்றும், ஏழு மாதங்காளக் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு சில நாட்களில் பதில் அளிப்பது சாத்தியமில்லை எனவும், இதற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாவும் பெரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவுக்கு மும்பை மருத்துவர் கண்டனம்.


மலிவான மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்லாதீர்கள் என்று அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா பேசியிருப்பதற்கு பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமாகாந்த் பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் கழகத்தின் தலைமை நிர்வாகியான பாண்டே, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தவர்.

ஒபாமா பேசியிருப்பதற்கு தனது கருத்தை தெரிவித்துள்ள பாண்டே, ரூபாயைவிட டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கிறதே தவிர, மருத்துவச் சிகிச்சையின் தரத்தில் எந்தவிதக் குறைவும் இல்லை. இந்திய டாக்டர்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக சிகிச்சை தருவதிலும், நோயைக் கண்டறிவதிலும் வல்லவர்கள்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் 5% பேர்தான் அமெரிக்கர்கள். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், வளைகுடா நாடுகள் உள்பட, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்தான் அதிகம் பேர் வருகின்றனர். ஒபாமா எச்சரித்தாலும் சிகிச்சைக்காக அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு வருவது குறையாது என்றார்.

மன்மோகன்சிங் ஆவேசம் : மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா - ஊழலை ஒழித்தே தீர வேண்டும்.

மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா    ஊழலை ஒழித்தே தீர வேண்டும்:    மன்மோகன் சிங் ஆவேசம்

இந்திய “சிவில் சர்வீஸ் தினவிழா” இன்று டெல்லியில் நடந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரிக்கும் பணியில் மந்திரிகளும், அதில் இடம் பெற்றுள்ள குழு உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதை தயாரித்து கொடுத்ததும் மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். ஊழல் விவகாரம் இப்போது நாட்டில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

நமது சட்டமும், நடைமுறைகளும் ஊழலை கட்டுப்படுத்தும் அளவுக்கு போதுமான பலம் கொண்டதாக இல்லை என்று மக்கள் கருதுகின்றனர். இதை வைத்து எதையும் செய்ய முடியாது என்ற உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் விஷயத்தில் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களிடையே சகிப்பு தன்மை எதிர் மறையாக மாறும் நிலை உருவாகி உள்ளது.

ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கையும், உறுதியான நடவடிக்கையும் இப்போது தேவை என்று அவர்கள் கருதுகின்றனர். ஊழலை ஒழிப்பது என்பது கடும் சவாலாக இருக்கலாம். ஆனால் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை ஒழித்தே தீரவேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு நீங்களும் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்), முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் நேர்மையுடனும், அச்சமில்லாமலும் நடந்து அரசியல் தலைமைகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உரிய ஆலோசனைகளை தர வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் சக்தியை புதுப்பித்து கொண்டு ஊழலுக்கு எதிராக போராட முன் வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களையும், இதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அரசு பணிகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வெளிப்படை தன்மைகள் இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான சட்டம், நடைமுறைகளை இன்னும் வலுவாக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற் கொண்டு உள்ளது. ஊழல் விவகாரங்களை வெளிகொண்டு வருபவர்களை பாதுகாக்க ஏற்கனவே பாராளுமன்றத்தில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பணிகளில் இருப்பவர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நீங்கள் நேர்மையான பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் தான் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருக்கிறீர்கள். உங்கள் பணி நன்றாக அமைந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்.

இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.