Wednesday, April 20, 2011

3 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி 16 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.


இந்திய வானவெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு ராக்கெட்டுகளை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது. கடந்த 1994ம் ஆண்டு முதல் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை 44 செயற்கை கோள்களுடன் 17 முறை விண்ணில் அனுப்பியது. அவற்றில் 16 முறை வெற்றியடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 25ந் தேதி அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் குழுவினர் மிகவும் கவனமாக செயல்பட்டு பி.எஸ்.எல்.வி சி16 ராக்கெட்டை உருவாக்கி உள்ளனர்.

இந்த ராக்கெட் இன்று (புதன் கிழமை) காலை 10 மணி 12 நிமிடங்களுக்கு விண்ணில் சீறிப்பாய்கிறது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்தில் இந்த ராக்கெட் அனைத்து ஏற்பாடுகளுடனும் தயார் நிலையில் உள்ளது. அது சீறிப்பாய்வதற்கான கவுண்ட் டவுன்' நேற்று முன்தினம் (திங்கள் கிழமை) அதிகாலை 3 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் நமது நாட்டிலேயே, இஸ்ரோ' விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட 1206 கிலோ எடையுள்ள ரிசோர்ஸ் சாட் 2', இந்தியா ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவான 92 கிலோ எடையுள்ள ழூத்சாட்,' சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட 106 கிலோ எடையுள்ள எக்ஸ்சாட்' ஆகிய 3 செயற்கை கோள்களை ஏந்திச் செல்கிறது. சிங்கப்பூர் செயற்கை கோள் அனுப்புவது இதுதான் முதல் முறை ஆகும்.

இந்தியா ஏற்கனவே ரிசோர்ஸ்சாட் 1 என்ற செயற்கை கோளை கடந்த 2003 ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அதன் ஆயுள் காலம் முடிவடைவதால் ரிசோர்ஸ்சாட் 2 என்ற அதிநவீன 2 வது செயற்கை கோள் இப்போது அனுப்பப்படுகிறது. இது இயற்கை வளங்களை கண்டறியவும், அவற்றின் மேலாண்மை பற்றி ஆராயவும் பயன்படுத்தப்படும்.

இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் 3 அதிநவீன கேமராவும், கனடா நாட்டின் காம்தேவ்' என்ற அதிநவீன கருவியும் கூடுதலாக அனுப்பப்படுகிறது. இவை ஒரு நாளைக்கு 14 முறை வானவெளியில் சுற்றி வந்து கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை அனுப்பும்.

பி.எஸ்.எல்.வி சி16 ராக்கெட் பறக்கத் தயார் நிலையில் இருப்பது பற்றி வானவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.சதீஷ் கூறியதாவது:

கவுண்ட் டவுன் நல்ல முறையில் போய்க்கொண்டு இருக்கிறது. ராக்கெட் பறப்பது தொடர்பான அனைத்தும் முன்னேற்றமான முறையில் உள்ளன. பருவ நிலையும் மிக நன்றாக உள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சரியாக, தயார் நிலையில் இருக்கும் நிலையில், திட்டமிட்டபடி நாளை (அதாவது இன்று) காலை 10 மணி 12 நிமிடங்களுக்கு ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இலங்கை இறுதிப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிப்பு ; ஐ.நா.சபை அறிக்கையில் தகவல்.

இலங்கை இறுதிப் போரில்    40 ஆயிரம் தமிழர்கள்     கொன்று குவிப்பு;    ஐ.நா.சபை அறிக்கையில் தகவல்

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணு வத்துக்கும் இடையே தமிழ்ஈழ இறுதி கட்ட போர் நடந்தது. அப்போது இலங்கை ராணுவத்தினரால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த போர் குற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. சபை ஒரு குழுவை அமைத்தது. அக்குழு ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூனிடம் அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.

அதில், இறுதி கட்ட போரில் இனப்படு கொலை நடந்துள்ளது. இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கான தமிழர்களை ஈவுஇறக்கமின்றி கொன்று குவித்துள்ளனர். என கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு இலங்கை அரசு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது. அது போன்று நடைபெறவில்லை என மறுப்பு கூறியது. இதற்கிடையே இறுதி கட்ட போரின் போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே, வெளியான சாவு எண்ணிக்கையை விட மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. 75 ஆயிரம் முதல் 77 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.


வெடித்து சிதறிய ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு வீரியம் அதிகரிப்பு ; “ரோபோ” கண்டுபிடித்தது.

வெடித்து சிதறிய ஜப்பான் அணு உலையில் கதிர்வீச்சு வீரியம் அதிகரிப்பு; “ரோபோ” கண்டுபிடித்தது

ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 28 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியேறியது.

எனவே, அவற்றை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெடித்து சிதறிய 4 அணு உலைகளில் 2 மற்றும் 4-வது உலைகளில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கவச உடை அணிந்து கதிர்வீச்சை தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 1 மற்றும் 3-வது அணுஉலைகளில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டது. அந்த அணுஉலைகளின் கட்டிட மேற்கூரை முழுவதும் தகர்ந்தது. எனவே, அதில் இருந்து தான் அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேறி வருகிறது.

எனவே, கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஊழியர்கள் பயன் படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அணுஉலை வெடித்த ஒரு மாதத்துக்கு பிறகு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவை கண்டறிய அமெரிக்கா அதி நவீன “ரோபோ”வை அனுப்பியது.

அது 1 மற்றும் 4-வது அணு உலைக்குள் சென்று அங்குள்ளதட்பவெட்பநிலை, அழுத்தம் மற்றும் கதிர்வீச்சு அளவை கணக்கிட்டு ஆய்வு செய்தது. அதன்படி இந்த அணு உலைகளில் கதிர்வீச்சு அளவு மிகவும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, அங்கு அதிநவீன முறையில் கதிர்வீச்சு பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கதிர்வீச்சு பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதமர் நேட்டோகான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

எதிர்க்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சியின் எம்.பி. மசாஷிவாகி பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பினார். அப்போது இந்த விவகாரத்தில் பிரதமர் நேட் டோகான் மற்றும் டோக்கியோ மின்வாரியம் (டெப்கோ) நடவடிக்கை திருப்தி இல்லை என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் நேட்டோகான், நடந்த தவறுக்கு நாட்டு மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். மேலும் அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


மே 18 துக்க நாள் : நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு


முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள். ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது.

தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.

உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.

முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் அட்டைக்கு நீடிக்கிறது தடை.



தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகும் புதிய ரேஷன் அட்டை தரப்பட வில்லை.அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக இருந்தாலும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் காரணம் காட்டி அவை கொடுக்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. "நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது புதிய சலுகைகள், அறிவிப்புகள் வெளியிடக் கூடாது' என்பது விதியாகும். இந்த விதியுடன் புதிய ரேஷன் அட்டையும் சேர்ந்து கொண்டுள்ளது.

அதாவது, நடத்தை நெறிமுறைகள் அமலான காலத்தில் இருந்து அது முடியும் வரை புதிய ரேஷன் அட்டைகள் எதுவும் கொடுக்கக் கூடாது.

இதன்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் மனுக்கள் நடத்தை விதிகளால் முடங்கியுள்ளன. இதுகுறித்து உணவுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கூறுகையில், ""மார்ச் 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வீடுகளை மாற்றிக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்றவர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் என பலரும் புதிய ரேஷன் அட்டையைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நடத்தை நெறிமுûறையைக் காரணம் காட்டி புதிய அட்டையைக் கொடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள மனுக்கள் தேங்கி உள்ளன.

மனுக்கள் சரியாக இருந்து, தளத்தணிக்கை முடிவுற்ற குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆணையம் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தினால் மட்டுமே அந்த அட்டைகள் கொடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

தத்கால் அட்டையும் இல்லை

வீட்டு முகவரிக்கென பிரத்யேகமான தத்கால் ரேஷன் அட்டைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரேஷன் அட்டைக்கு பொருட்களை வாங்க முடியாது.

வேறு ஊர்களுக்கு இருந்து சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வரும் குடும்பங்கள் தங்களது வீட்டின் முகவரிச் சான்றாக இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உணவுத் துறை அறிவித்து அது செயல்பாட்டில் உள்ளது.

இந்த புதிய திட்டத்துக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வகையான அட்டைக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

உணவுத் துறை கடிதம் எழுதுமா?

புதிய ரேஷன் அட்டைகளைப் பெற இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொது மக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உணவுத் துறை கடிதம் எழுதியதன் பேரில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருந்தபோதே புதிய அட்டைகள் கிடைப்பதற்கு வழிவகுக்கப்பட்டது.

ஆனால், புதிய அட்டைகளைப் பெற இரண்டு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழலில் கூட்டுறவு, உணவுத் துறை உயரதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உரிய அனுமதி பெற்று புதிய ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

பிரவீண் குமார் பதில்

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் கேட்ட போது, ""தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது. அட்டைகளை வழங்குவதற்கு உரிய அனுமதி கேட்டு உணவுத் துறை கடிதம் எழுதும் பட்சத்தில் அது தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆணையத்தின் உத்தரவைப் பெற்று புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


ஜெயலலிதாவின் கோரிக்கைகளை நிறேவேற்றிய பிரவீண்குமாருக்கு அதிமுக நேரில் நன்றி.




தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 94 மையங்களில் எண்ணப்பட உள்ளன. வாக்குப் பதிவு நடந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர், வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல சிறிது தாமதம் ஏற்பட்டது.

எனினும், வாக்குப் பதிவு நடந்த இரண்டு நாட்களுக்குள் அங்கு துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டனர்.

இந் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், மைத்ரேயன் ஆகியோர் புனித ஜார்ஜ் கோட்டையில் பிரவீண் குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதற்கு பிரவீண் குமாருக்கு அவர்கள் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.


ரஸ்னாவை ' உறிஞ்ச ' வரும் கோக கோலா புது பிராண்ட் !!


பவுடர் வடிவில் உள்ள குளிர்பானங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் கோககோலா நிறுவனம் புதிய குளிர்பானத்தை ரூ 5-க்கு அறிமுகப்படுத்துகிறது.

பவுடர் வடிவிலான குளிர்பானங்களுக்கு இந்தியாவில் ரூ 300 கோடி அளவுக்கு மார்க்கெட் உள்ளது.

இதில் இன்றைய தேதிக்கு நம்பர் ஒன்னாகத் திகழ்வது ரஸ்னாதான். இந்த நிறுவனத்துக்குப் போட்டியாக, 2001-ம் ஆண்டு சன்பில் என்ற புதிய பானத்தை அறிமுகப்படுத்தியது கோககோலா. ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதை நிறுத்திவிட்டது. காரணம் இந்த பிராண்ட் போதிய வரவேற்பை மக்களிடம் பெறவில்லை.

இந்த நிலையில் சரியாக ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு புதிய பிராண்டை களத்தில் இறக்குகிறது கோககோலா. பான்டா ருசியில் வரவிருக்கும் இந்த பவுடர் பானத்துக்கு 'பான்டா பன் டைம்' என பெயரிட்டுள்ளனர்.

ரூ 5 விலை கொண்ட இந்த பவுடர் பானம், நடுத்தர மற்றும் ஏழை மக்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்படுகிறது. முன்பு சன்பில் அறிமுகப் படுத்தப் பட்டபோது ஏற்பட்ட தவறுகள் நேராமல் இந்த புதிய பிராண்டை மார்க்கெட் செய்வதற்கான தீவிர வேலைகளில் இறங்கியுள்ளது கோக கோலா நிறுவனம்.