Tuesday, April 19, 2011

புற்றுநோய் பற்றி புத்தகம் : இந்தியருக்கு புலிட்சர் விருது.


அமெரிக்காவில் வசிக்கும் இந்திய டாக்டர் சித்தார்த்த முகர்ஜி புற்றுநோய் பற்றி எழுதிய புத்தகத்துக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது கிடைத்து உள்ளது.

தி எம்ப்ரர் ஆப் ஆல் மலெடிஸ்- ஏ பயோகிராபி ஆப் கேன்சர் என்பது அந்த புத்தகத்தின் பெயர் (நோய்களின் சக்கரவர்த்தியான புற்றுநோயின் சரித்திரம் என்று இதை தமிழில் சொல்லலாம்) இந்த புத்தகத்துக்கு நாவல் அல்லாத பிரிவில் இந்த விருது கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த விருதுடன் 10 ஆயிரம் டாலர் பரிசுப் பணம் தரப்படுகின்றது.

இந்தியாவில் பிறந்த முகர்ஜி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவர் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பட்டப்படிப்பு படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவியின் மார்பகங்களை அறுத்து எடுத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள்.

கோடை விடுமுறைக்காக மீனாட்சி, பல்லடம் மூலப்பாதையில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றிருந்தார். அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த மீனாட்சி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது மீனாட்சியின் 2 மார்பகங்களையும் யாரோ மர்ம மனிதர்கள் கூர்மையான ஆயுதத்தால் அறுத்து எடுத்துச் சென்று விட்டனர். இந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தர விட்டார். பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கதுரை மேற்பார்வையில் 3 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர்கள் தவமணி (பல்லடம்), சுந்தரமூர்த்தி (காமநாயக்கன் பாளையம்), ரமேஷ் (மங்கலம்) ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

பல்லடம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள், பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் என 60 பேரிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் மாணவியின் மார்பகங்களை அறுத்து எடுத்து கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 2 பேர் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள பூலுவப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் மீனாட்சி (வயது 18). குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

Monday, April 18, 2011

4 லட்சம் பேர் வாக்களிக்காத - கன்னியாகுமரி மாவட்டம்.


கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நூற்றுக்நூறு எழுத்தறிவு பெற்ற மாவ்டடமான குமரியில் 4 ல்டசம் பேர் வாக்களிக்கவேயில்லை.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 424 வாக்கள்ர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 804 பேர் வாக்களிக்கவில்லை.

இத்தனை பேர் வாக்களிக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் ஏராளமானோர் கேரளா, குஜராத் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும், வளைகுடா நாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறையின்போது மட்டும் தான் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

இதுதவிர ஏராளமானவர்கள் கேரள மாநிலத்தில் கட்டுமானப் பணி செய்து வருகின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை. அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில்,

கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 63.7 சதவீத வாக்குகளும், 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 64.50 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஆனால் இந்த தேர்தலில் 68.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.

லோக்பால் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குழு வழக்கு.

லோக்பால் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்  குழு வழக்கு


லோக்பால் சட்டவரைவை உருவாக்கும் கூட்டுக்குழுவில் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறுவது குறித்து வழக்குரைஞர்குழு வழக்கு தொடர்ந்துள்ளது .

எம்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 5பேர் அடங்கிய லோக்பால் சட்ட வரைவு குழுவில் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முடியும் என்றும், அப்படிப்பட்டை குழுவில் சமூக உறுப்பினர் எவரும் பங்கேற்க முடியாது என்றும், மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

லோக்பால் கூட்டுக்குழுவில் சமூகப் பிரதிநிதிகளாக இடம் பெற்றுள்ளவர்களில் தந்தையும் மகனுமான சாந்தி பூஷனும், பிரசாந்த் பூஷனும் இடம் பெற்றுள்ளதையும் எதிர்த்தும்,லோக்பால் சட்ட வரைவை கலைக்கவும் இம்மனுவில் தெரிவித்துள்ளனர்.


வியாசர்பாடி கல்லூரி மாணவர் தற்கொலை: மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்.

வியாசர்பாடி கல்லூரி மாணவர் தற்கொலை:    மாணவ- மாணவிகள்     திடீர் போராட்டம்;    கை, கழுத்தை பிளேடால் கீறினர்; போலீசார் மீது கல்வீச்சு-தடியடி

செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரை சேர்ந்த தனபாலின் மகன் இளையராஜா (20). வியாசர்பாடி அம்பேத்கார் கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இளையராஜாவுக்கு கல்லூரி வருகை பதிவேட்டில் நாள் குறைவாக இருந்ததால் கல்லூரி இறுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இளைய ராஜா கடந்த 11-ந் தேதி இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் காலை கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகள் இளையராஜா தற்கொலை குறித்து அறிந்ததும் ஆவேசமானார்கள். மாணவ-மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இறந்து போன மாணவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், கல்லூரி நிர்வாகிகள் சந்திரசேகர், சத்தியமூர்த்தி, ரமேஷ் கண்ணன், நீலகண்டன், பிரேமா ஆகிய 5 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும் கல்லூரியை பல்கலைக் கழகத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நிவாரண உதவி கிடைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். இதனை ஏற்று மறியலை மாணவர்கள் கைவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள், இறந்து போன இளையராஜா குடும்பத்துக்கு நிவாரண உதவி கிடைக்க வில்லை என்பதை அறிந்ததும் ஆவேச மானார்கள். 9 மணி அளவில் கல்லூரி முன்பு எருக்கஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கோஷமிட்டனர். மாணவர்களுடன் இளையராஜாவின் பெற்றோர் தனபால்- முனியம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டனர். பெரும்பாலான மாணவர்கள் ரோட்டில் படுத்து உருண்டனர். சில மாணவர்கள் பிளேடால் கை, கழுத்தில் அறுத்துக் கொண்டனர். அப்போது ரத்தம் வழிந்து ஓடியதால் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் கோபி மனோகரன், மற்றும் 100-க்கும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மாணவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள்.

ஆனால் மாணவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து சேர், டேபிள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் வளாகத்திற்குள் நிறுத்தியிருந்த கல்லூரி பேராசிரியர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீது பெரிய கற்களை போட்டு உடைத்தனர். அப்போது சில மாண வர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதில் 5-க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைந்தது.

நேரம் செல்ல செல்ல மாணவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இயல வில்லை. போராட்டம் பெரிய கலவரமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். உடனே மாணவ-மாணவிகள் நாலா புறமும் சிதறி ஓடினர்கள். அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் கல்லூரிக்குள் புகுந்து தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதனால் அவர்களுடன் மாணவர் இளையராஜாவின் பெற்றோரும் கைதானார்கள்.

சென்னையில் 2013-ல் 6 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் ஓடும்.

சென்னையில் 2013-ல் 6 நிமிடத்துக்கு ஒரு    மெட்ரோ ரெயில் ஓடும்;    1,276 பேர் பயணம் செய்யலாம்

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, முதலாவதாக வண்ணாரப் பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மற்றொரு பாதையும் அமைக்கப்படுகிறது.

இவற்றின் மொத்த நீளம் 45 கிலோ மீட்டர். இதில் 24 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், மீதம் உள்ள பகுதி உயர்த்தப்பட்ட பாதையாகவும் அமைகிறது.சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை செல்லும் மெட்ரோ ரெயில் பாதையில், கோயம்பேடு பஸ்நிலையம் அருகில் இருந்து அமைக்கப்படும் உயர்த்தப்பட்ட பாதை பணி வேகமாக நடந்து வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து செயின்ட்தாமஸ் மவுண்டுக்கு அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி வேகமாக முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே, 2013-ல் கோயம்பேட்டில் இருந்து செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2014-ல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர் கோயம்பேடு வழியாக செயின்ட்தாமஸ் மவுண்டு வரை மெட்ரோ ரெயில் ஓடும்.

இதே ஆண்டில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரை அமைக்கப்படும் பாதையிலும் மெட்ரோ ரெயில் ஓடும். 2015-ல் 4 நிமிடத்துக்கு ஒரு ரெயில் ஓடும் வசதி ஏற்படும். 2016 முதல் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் ஓடும். இதுதவிர புதிய பாதைகளும் உருவாக்கப்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கப்படுகிறது.


கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதா? சீமான்.


நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,

''இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் ஸ்ரீலங்கா அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேளி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் ஸ்ரீலங்கா அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்த பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது.

மார்சுகி தாருஸ்மான் தலைவராகவும், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா.நிபுணர் குழு, பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள அறிக்கை, உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனப் படுகொலைப் போரை நடத்திய ஸ்ரீலங்கா அரசிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைப்பது, கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதற்கு நிகரானது.

தமிழர்களுக்கு எதிரான அந்தப் போரில் மிகப் பெரிய அளவிற்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதெனவும்,

போர்ப் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நிபுணர் குழு, இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட ஸ்ரீலங்கா அரசிடம் விசாரணைப் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒப்படைக்குமாறு கூறுகிறது?

ஸ்ரீலங்கா அரசு செய்த மிகப் பெரிய போர்க் குற்றம், தங்களோடு இருந்த மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க, துப்பாக்கிகளை மெளனிக்கின்றோம் என்று அறிவித்துவிட்டு, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட 300 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்ததும், அதன் பிறகு, மே 18ஆம் தேதி ஒரே நாளில் முள்ளி வாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததும்தான்.

சரணடைய வந்த புலிகளின் அமைப்பினரை கொன்றதற்கும், இறுதிக் கட்டப்போரில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்களை கொன்று குவித்ததற்கும் உத்தரவிட்டது ஸ்ரீலங்கா அரசுதானே?

ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புச் செயலராக உள்ள அதிபர் ராஜவின் தம்பி கோத்தபய ராஜபட்சா அல்லவா? உலகம் அறிந்த இந்த உண்மைக்கும் பிறகும் விசாரணை பொறுப்பை ஸ்ரீலங்கா அரசிடம் வழங்கு என்று பரிந்துரைப்பது அங்கு நடந்த உண்மைகளை வெளிக்கொணரவா? அல்லது தமிழினப் படுகொலையை புதைக்கவா?

ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக ஆதாரப்பூர்வமான குற்றச்சாற்றுகளை பட்டியலிட்டுள்ள நிபுணர் குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாற்றுகளையும் பட்டியலிட்டுள்ளது வருத்தத்திற்குரியது. தங்களோடு இருந்த மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாற்றை நிபுணர் குழு வைத்துள்ளது.

தமிழினத்தையே அழித்தொழிக்கும் திட்டத்தோடு செயலாற்றிவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் ராணுவத்தை, தமிழர்களை கேடயமாகக் கொண்டு எவ்வாறு தடுத்திட முடியும்? கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்துவரும் ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு அப்படிப்பட்ட மனிதாபிமானம் உண்டென்று ஐ.நா.நிபுணர் குழு நம்புயுள்ளது வியப்பைத் தருகிறது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் ஒரே கோரிக்கை, இலங்கையின் பூர்வீகக் குடிகளாக தமிழ் மக்களை திட்டமிட்டு அழித்தொழித்த ஸ்ரீலங்கா அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும் என்பதே. ஆனால் ஐ.நா. அதனைச் செய்யுமா என்ற சந்தேகம் நிபுணர் குழு பரிந்துரையால் ஏற்பட்டுள்ளது.


இலங்கை இனப் பிரச்சனை தொடர்பில், அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான ஸ்ரீலங்கா அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது.

இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடு்ப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது ஸ்ரீலங்கா அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாற்றி்ற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும். என்று குறிப்பிட்டுள்ளார்.

www.nakkheeran.in