Wednesday, April 13, 2011

வாக்குச்சாவடிக்குள் அலைக்கழிக்கப்பட்ட ரஜினி.



நடிகர் ரஜினிகாந்த் இன்று பகல் 10.45 மணிக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்கு சாவடிக்கு காரில் வந்தார். அந்த கல்லூரி வளாகத்தில் வேறு, வேறு இடங்களில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 167, 168, 169 ஆகிய எண் கொண்ட அந்த மூன்று வாக்குச்சாவடிகளும் பொது வாக்குச்சாவடிகளாகும்.

நடிகர் ரஜினி வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி 169-வது எண் ஓட்டுச் சாவடியாகும். இது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி போர்டிகோ பகுதியில் இருந்தது.

ரஜினியின் காரும் மிகச்சரியாக அந்த வாக்குச்சாவடி அருகில் வந்து நின்றது. கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி அந்த ஓட்டுச்சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167-வது ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169-வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர்.

இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169-வது வாக்குச்சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப்போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை போட்டோ கிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார். மின்னல் வேகத்தில் வாக்களித்த அவர் அதே வேகத்தில் புறப்பட்டார்.


கூடலூர் மசினகுடியில் வாக்காளர்கள் அதிருப்தி-'49 ஓ'வுக்கு வாக்களித்தனர்.


யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், அதை தெரிவிக்கும் 49 ஓ படிவத்தை வாக்குச் சாவடியில் சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பெருமளவிலானோர் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இன்று நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிக அளவில் மசினகுடியில்தான் இதை வாக்காளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பகுதி கூடலூர் தொகுதிக்குட்பட்டதாகும். இங்குள்ள மக்கள் யானைப் பாதை மற்றும் புலிகள் சரணாலயத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள் அதிருப்தியுடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மசினகுடி பகுதி மக்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறி 49 ஓ படிவத்தை வாங்கி அதை நிரப்பித் தந்தனர்.

பெருமளவில் வாக்காளர்கள் 49 ஓ படிவத்தைக் கொடுத்து வருவதால் மசினகுடியில் பரபரப்பு நிலவுகிறது.

மக்களை மதிக்காத தேர்தல் ஆணைய எஜமானர்கள்.


தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி... கோபத்தில் வாக்களிக்க மறுத்த மக்கள்!

இது மக்களுக்கான தேர்தல்... மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்...

தேர்தல் பார்வையாளர்கள் செய்த அனாவசிய கெடுபிடி காரணமாக பல வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க மனமின்றி கோபத்துடன் சென்றனர் வாக்களர்கள்.

இந்தியாவில் வேறு எந்தத் தேர்தலின்போதும், எந்த மாநிலத்திலும் காட்டாத கெடுபிடிகளை தமிழகத்தில் மட்டும் காட்டி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். இவர்களின் தொல்லையால் ரொக்கமாக ரூ 10 ஆயிரம் கூட வெளியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

இன்னொரு பக்கம், இன்று வாக்குப் பதிவு ஆரம்பித்த பிறகு வாக்குச் சாவடிகளின் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் போலீசாரும் தேர்தல் பார்வையாளர்களும் காட்டும் கெடுபிடியால் வாக்குவாதம் முற்றி சண்டையாகும் அளவுக்குப் போகிறது.

சென்னை மற்றும் புறநகர் வாக்குச்சாவடிகள் பலவற்றில் வாக்களிக்க வந்த மக்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கெடுபிடிகளால் கடுப்பாகி வாக்களிக்காமலே சென்ற கொடுமையும் இன்று காலையில் நடந்தது.

வாக்களிக்க வரும் பெண்கள் மற்றும் ஆண்களை நான்கைந்து இடங்களில் சோதனை செய்கின்றனர்.

"கிட்டத்தட்ட குற்றவாளிகளைப் போலவே நடத்துகின்றனர். இது மக்களுக்கான தேர்தல்... மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்...", என்றார்கள் இந்தக் கெடுபிடியால் மகா கோபத்திலிருந்த வாக்காளர்கள்.

பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளதால், பயணிகளும், மார்க்கெட்டுக்கு வருவோரும் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். வாகனத்தில் சற்று தூரமாக வரும்போதே, போலீசார் விசிலை ஊதி போ போ என விரட்டும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது.. அந்த வாகன ஓட்டிகள் வேறு எங்குதான் செல்வார்கள்?!


தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு விறு விறு-மக்கள் பெரும் ஆர்வம்.


தமிழகத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காண முடிந்தது.

முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.

காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


தொடங்கியது வாக்குப்பதிவு-பயப்படாமல் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்.


தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்றுகாலை 8 மணிக்குத் தொடங்கியது.

மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. வாக்காளர்கள் பயமில்லாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக பிரவீன்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 141 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மொத்தம் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2,37,04,802. பெண் வாக்காளர்கள் 2,34,10,716, திருநங்கைகள் 1169.

மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்காக 62461 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 66799 வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் உடனே மாற்று எந்திரத்தை பொருத்தி இயக்குவதற்காக குறிப்பிட்ட அளவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். உள்ளூர் போலீசார் தவிர வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள 24 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான 9 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷனால் நேரடியாக கண்காணிக்கப்படும்.

மனசாட்சிப்படி ஓட்டுப் போடுங்கள்.

வாக்காளர்கள் அனைவரும் மனசாட்சிப்படி கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப்போடும் போது நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. வாக்குச்சாவடிக்குள் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவும், ஓட்டுப்பதிவை படம்பிடிக்காது.

எனவே, வாக்காளர்கள் பயமில்லாமல் ஓட்டுப்போடலாம். எனவே, நாம் ஓட்டுப்போடுவதை கேமரா மூலம் பார்த்து கட்சிக்காரர்கள் மிரட்டுவார்கள் என்றோ, தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், அவருக்கு ஓட்டுப்போடவில்லை என்பதை தெரிந்து கொண்டு தங்களை புறக்கணிப்பார் என்றோ வாக்காளர்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஓட்டுப்போடும்போதும், பதிவான வாக்குகளை எண்ணும்போதும் யார்-யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கு முன்பு வாக்குச்சீட்டுகளை மொத்தமாக போட்டு கலக்கிவிட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அதனால் வேட்பாளருக்கு எந்த பகுதியில் வாக்குகள் அதிகமாக கிடைத்திருக்கிறது.

எந்த பகுதியில் கிடைக்கவில்லை என்பது கண்டுபிடிக்க முடியாது. அதுபோல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எந்த பகுதியில் பதிவானது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு வழிமுறைகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. அதன்படிதான், இந்த முறை ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

முறைகேடு நடந்தால் தேர்தல் ஒத்திவைப்பு.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற முறைகேடுகள் நடப்பதை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதுபோல முறைகேடுகள் நடக்கும் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் முடிந்தாலும், அளவுக்கு அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்தால் குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும். ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகள் நடந்தாலும் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 1123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவின்போது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து யாரும் வாக்களிக்கவில்லை என்று தெரியவந்தால் அதுபற்றி வாக்குச்சாவடி அதிகாரி மண்டல தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பார். உடனே அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ஏன் அந்த பகுதி மக்கள் வாக்களிக்க வரவில்லை என்ற காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

அவர்களை யாராவது மிரட்டியிருந்தால், போதிய பாதுகாப்பு இருப்பதால் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று சொல்லி ஓட்டுப்போட வைப்பார்கள். தேர்தலை புறக்கணித்தால் அதற்கான காரணம் கண்டறியப்படும்.

கோட்டையில் கன்ட்ரோல் ரூம்.

ஓட்டுப்பதிவின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதுபற்றி உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதற்கு வசதியாக சென்னை கோட்டையில் முதல் தளத்தில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. 16 அதிகாரிகள் இங்கு பணியில் இருப்பார்கள்.

ஒரு அதிகாரி மூன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை அவ்வப்போது தெரிவிப்பார். தேர்தல் பணி தொடர்பாக உடனுக்குடன் தகவல் கிடைக்க வசதியாக வாக்குச்சாவடி அதிகாரி முதல் தலைமை தேர்தல் அதிகாரி வரை சி.யு.ஜி. முறையில் இயங்கக்கூடிய 61 ஆயிரம் செல்போன் `சிம்' கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் கடந்த மார்ச் 4-ந் தேதி நடந்தது. இதில் வக்கீல்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். அப்போது அவர்களது விரலில் மை இடப்பட்டது. அந்த மை 40 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். அதனால் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்காமல் போகலாம். எனவே, பார் கவுன்சில் தேர்தலில் ஓட்டுப்போட்டவர்களை சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இப்போது இந்த வழக்கு முடிந்துவிட்டது. எனவே, பார் கவுன்சிலில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது பூத் சிலிப்புடன் வரும் வக்கீல்களை ஓட்டுப்போட அனுமதிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் மீனவர்களுக்கு அளித்த நிதியுதவி.

ராமேசுவரம் மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர்ர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் முறையாக அனுமதி பெற்று அறிவித்திருக்கலாம். பொதுவாக பேரிடர் நிவாரண உதவிக்கு தேர்தல் கமிஷனும் அனுமதி அளித்துவிடும் என்றார் அவர்.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று வைக்கப்பட்டு அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்படும். மே 13ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சில மணி நேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும். பிற்பகல் வாக்கில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது தெரிய வரும்.

வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு.

தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் வன்முறையில் ஈடுபட்டு மின்னணு இயந்திரங்களை கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள வாக்கு இயந்திரத்தை யாராவது அபகரிக்க முயன்றாலோ, வன்முறையில் ஈடுபட முயன்றாலோ உடனடியாக சுட்டுத் தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

13 அடையாள ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்.

வாக்காளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டி வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்களிக்க வரும்போது தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் ஸ்லிப்புகளையும் உடன் கொண்டு வர வேண்டும். அது இல்லாதவர்கள் வாக்குச் சாவடிகளில் வந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 13 ஆவணங்கள்:

பாஸ்போர்ட்

ஓட்டுநர் உரிமம்

வருமான வரி அடையாள அட்டையான பான்கார்டு

மாநில மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம் ஆகியவற்றால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.

28.2.2011 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவசாய அடையாள அட்டை.

28.2.2011 வரை வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முன்னாள் படைவீரர்கள் ஓய்வு ஊதிய குறிப்பேடு, ஓய்வு ஊதிய ஆணை போன்ற ஓய்வு ஊதிய ஆவணங்கள் மற்றும் முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வு ஊதிய ஆணை, விதவை ஓய்வு ஊதிய ஆணை.

புகைப்படத்துடன் கூடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை.

புகைப்படத்துடன் கூடிய பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள்

28.2.2011 அன்று அல்லாத அதற்கு முன்பு உரிய அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றுகள்.

புகைப்படத்துடன் கூடிய ஆயுத உரிமம்

புகைப்படத்துடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான சான்றுகள்

புகைப்படத்துடன் கூடிய தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை

மத்திய தொழிலாளர் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.


2011 தேர்தல் அடையாளம் காட்டிய ஆளுமை ; வடிவேலு.


உயிருனும் மேலான உடன்பிறப்புக்களே.. ரத்ததின் ரத்தங்களே.. நாமம் வாழ்க என பேச்சை ஆரம்பிக்கும் அரசியல்வாதிகளை பிரதியெடுக்காமல், என்ணன்னே நல்லாருக்கீங்களா..அப்பத்தா நல்லாருக்கீங்களா.. அக்கா தங்கச்சீங்கள்ளாம் நல்லாருக்கீங்களா என அடித்தட்டு மக்கள் அறிந்த மொழியில் பேச்சை ஆரம்பித்த நாள் முதல், வழிநெடுக வடிவேலுவை பார்க்க காத்திருக்கும் கூட்டம் நாளுக்கு நாள் ஏறுமுகம் தான்.

அஞ்சா செஞ்சனின் கணிப்பு எப்போதும் அடித்தட்டு மக்களின் எண்ணவோட்டங்களை நாடிபிடித்து சரியாக விக்கெட்டை வீத்தும் பாணி.. அதை அப்படியே ஊர் ஊராய் பரப்பி கட்சிக்கு ஓட்டுக்களை அறுவடை செய்யும் போர்வாளாய் வடிவேலு சுழன்றதில் கலைஞர், அம்மா, விஜயகாந்த் முதல்.. சாணக்கியம் சதிவேலை என திரியும் சோ வரை ஆடிப்போய் உள்ளார்கள். திமுக’வின் எதிரணியில் ஒரு மாதத்திற்கு முன்பு வீசிய நம்பிக்கை காற்று இப்போது காற்று போன டியூபாக அமுங்கி கிடக்கிறது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால்: வட போச்சே...

எம்ஜியாருக்கு பிறகு மிகவும் எதார்த்தமாக, மக்களின் நெஞ்சை தொடுவதாக தனக்கேயுரிய நகைச்சுவை மிளிர வடிவேலு தனக்கென ஒரு ராஜபாட்டையில் போய்கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 15 மணிநேரம் ஆதித்யா மற்றும் சிரிப்பொலியில் அவரை ஒலிபரப்பிய அலைவரிசைகள் இன்று அதன் பலனை அறுவடை செய்கிறார்கள், ஆச்சரியத்துடன்.

தேர்தலில் தென்மாவட்டங்களில் அழகிரி இழக்க இருந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளித் தரும் வேலையை வடிவேலு கச்சிதமாக செய்தாலும்.. முதல் நாள் காட்டிய அதே பணிவோடுதான் அய்யா அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி தளபதி தலைவர் கலைஞர் என ஒரு நம்ம்பிக்கைகுறிய தளபதியாக வடிவேலு இந்த ஒரு மாதத்திற்குள் பரிணமித்துள்ளார்.

ஒரு காமெடியன், ஒரு காமெடியனா.. கேவலம் ஒரு காமெடி நடிகன் காமெடி பீஸ் போன்ற ஏளன பார்வையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விஜயகாந்தை அவர் நாக் அவுட் செய்ததில் விசயகாந்தின் வாக்குகள் அவுட். 108 அப்போ இருந்திருந்தா எங்கப்பாவ காப்பாத்தி இருப்பேன்னு அவர் கண்ணீர் சிந்துனப்போ.. கூட்டத்துல பல பேராலா அந்த வலிய உணர முடிஞ்சது. 108 உயிர் காக்கும்ன்னு மேடைக்கு மேடை எல்லோரும் சொன்னாலும், அதுக்கு தன் சொந்தவாழ்க்கை இழப்பை கண்ணீருடன் மக்களிடம் எடுத்துச்சென்ற லாவகம் கலைஞரே வியந்து பாராட்டிய ஒன்று.

Leaders raise up to the situations. Circumstance brings best out of the great leader. விசயகாந்த என்னும் இலக்கை நோக்கி எறிந்த அம்பு இத்துனை வீரியம் வாய்ந்ததென அழகிரியே நினைத்திருக்க வாய்ப்பில்லை. இவன் காமெடியன்.. பிரச்சாரத்தேடு இவன் வேலை முடிந்தது எனும் கருத்தோட்டம் கொண்ட பொதுமக்களின் சிந்தனையை தவிடுபொடியாக்குகிறது அவரின் அடுத்த அஸ்திரம் “தொகுதிக்கு என்ன வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க.. நான் தலைவர் கலைஞரிடம் சொல்லி அதை நிறைவேத்தறேன்.. ஆனா விஜயகாந்த் அந்தம்மாக பக்கம் ஒக்காந்து பேசமுடியுமான்னு நீங்களே சொல்லுங்கன்னு அவர் மக்கள கேக்க அவங்க முடியாது என பதில் குரல் எழுப்ப.. இது இவன்கண் விடல் எனபதில் அழகிரி, ஸ்டாலினைவிட திறமைசாலி.

அழகிரிக்கு நார்த அலர்ஜி, ஸ்டாலின் தெற்குல கால் வைக்க முடியாது. கலைஞர் தமிழ்நாடு முழுவதும் தனிஆளாய் போராட வேண்டிய நிலையில் வடிவேலுவின் entry kept the momentum going for DMK. நாடறிந்த முகம், மக்களின் நாடித்துடிப்பறிந்து பேசியது, கூட்டத்தை பேசவைப்பது மிகப்பெரும் தலைவர்களுக்கே கைவந்த கலை.. ஆனால் வடிவேலுவோ.. வரும்... வராது என மக்களை கோரஸ் பாட வைத்து திமுக ஒரு மக்கள் கட்சி என்ற redefined, refined ideology’ஐ மக்கள் மனதில் ஆழமாக பதித்திவிட்டார்.

திமுக தலைமையும் அவரை அரவணைத்து, கலைஞரும் வடிவேலும் சந்திப்பு, ஆலோசனை என தினமும் அவரை தலைமையின் நம்பிக்கைகுறீய போர்வாள் என்ற செய்தியை ஊடகத்தில் வெளியிட்டபடியே இருக்க.. மக்கள் மனதில் நம்பிக்கை பிறக்கிறது.. ஓ வடிவேலு எந்த நேரத்திலும் தலைவரை சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.. இவர் தேர்தல் நேர பிரச்சார கூத்தடி அல்ல என்ற எண்ணம் subconscious ஆக மனதில் உள்ளிறங்குகிறது.

ஒரு கைபுள்ளயாக, புலிக்கேசியாக, வண்டு முருகனாக, நாய் சேகராக நம்மை சிரித்துவைத்துக் கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் வளர்ச்சி இந்த தேர்தலின் ஒரு இனிய அதிர்ச்சி. Leaders are made, unless your father is a MLA, MP, CM or PM. :) Finally, விஜயகாந்த் என்ற ஆளுமையின் புனிதபிம்பத்தை சுக்கு நூறாக உடைத்ததில் ஆரம்பிக்கிறது ரீலுக்கு ரீல் அடிவாங்கும் இந்த கைப்புள்ளயின் அரசியல் வெற்றிப்பயணம். Comedy is a serious business. You bet. Hats off வடிவேலு அவர்களே. ம்ம்ம் கிளப்புங்கள்.

ன்றி - eyilnadu.blogspot.com



நாடு திரும்ப இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தரவு.


இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 4-வது ஐ.பி.எல்.,போட்டியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு விளையாட்டுதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அணி வரும் மேமாதம் முதல் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஸ்காந்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்றது. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் 4-வது ஐ.பி.எல் . கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் இரண்டு முன்னாள் கேப்டன்களான குமார் சங்ககாரா டெக்கான் சார்ஜஸ் அணியிலும், மகேளா ஜயவர்த்தனே கொச்சி டஸ்கர்ஸ் அணியிலும் விளையாடி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது இலங்கையின் மற்ற வீரர்களும் ஐ.பி.எல்.,போட்டியில் விளையாடி வருகின்றனர். வரும் மே 8-ம் தேதி வரை ஐ.பி.எல்., போட்ட நடைபெற உள்ளது. மேலும் மே மாதம் 11-ம் இலங்கை அணி இங்கிலாந்திற்கு புறப்பட இருப்பதால் இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியிலிருந்து விலகி விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மகிநாதாநந்தா அல்துகாமகே உத்தரவிட்டுள்ளார்.

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை நாட்டு பிரதிநிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.