Monday, April 11, 2011

தமிழ்நாட்டுக்கும்,தமிழக மக்களுக்கும் இது வாழ்வா? சாவா? தேர்தல்; ஜெயலலிதா பேட்டி.

தமிழ்நாட்டுக்கும்,தமிழக மக்களுக்கும் இது வாழ்வா? சாவா? தேர்தல்; ஜெயலலிதா பேட்டி

சென்னையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு போயஸ் கார்டனுக்கு திரும்பிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வீட்டு வாசலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:-அ.தி.மு.க.வுக்கு இது வாழ்வா? சாவா? தேர்தலா?

பதில்:-இது எங்களுக்கு அல்ல, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் தான் வாழ்வா? சாவா? தேர்தல். எனவே தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும்.

கேள்வி:-உங்களை ஊழல்வாதி என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?

பதில்:-ஏற்கனவே இதுபற்றி நான் பலமுறை விளக்கி சோர்ந்துவிட்டேன். தி.மு.க. ஆட்சியில் என் மீது வேண்டுமென்றே போடப்பட்ட பொய் வழக்குகள் தான் அவை. அதனால் தான் 13 வழக்குகளை நான் சந்திக்க நேர்ந்தது. நானும் ஊழல்வாதி அல்ல, அ.தி.மு.க.வும் ஊழல் கட்சி அல்ல.

கேள்வி:-மத்திய நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி தமிழகத்தின் நிதிநிலைமை நல்ல நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறாரே?

பதில்:-முழுமையான தகவல்கள் தெரியாமல் அவர் பேசியிருக்கிறார். தமிழகத்தில் தொழில்துறை, விவசாயம் போன்ற அனைத்துமே சீரழிந்து இருக்கிறது.

கேள்வி:-நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினர் மீது ஊழல் வழக்குகள் போடுவீர்களா?

பதில்:-தேர்தல் முடிந்து முதலில் முடிவுகள் வெளிவரட்டும். ஊழல் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்தபின் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி:-6-வது முறை முதல்-அமைச்சராக வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

பதில்:-அது அவரது விருப்பம். ஆனால் மக்கள் அவர் 6-வது முறையாக முதல்-அமைச்சராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தே.மு.தி.க.வினருக்கு தோல்வி பயம்: ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி பிரசாரம்; நடிகர் வடிவேலு ஆவேசம்

தே.மு.தி.க.வினருக்கு தோல்வி பயம்: ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி பிரசாரம்; நடிகர் வடிவேலு ஆவேசம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு சுறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்துக்காக நேற்று சிதம்பரத்தில் தங்கியிருந்த முதல்-அமைச்சர் கருணாநிதியை, நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தனக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக கருணாநிதியிடம் கூறினார்.

பிறகு மிரட்டல்களுக்கு பயப்படாமல் பிரசாரத்தை தொடருவேன் என நிருபர் களிடம் தெரிவித்தார். அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நடிகர் வடிவேலு பிரசாரத்தை தொடர்ந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம் பகுதியில் அவர் பொது மக்களை பார்த்து கையசைத் தவாறே சென்றபோது மர்ம மனிதர்கள் அவரை நோக்கி செருப்பு மற்றும் கல்லை வீசிவிட்டு தப்பினர்.

இதில் வேனில் இருந்த திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்கம் தலையில் படுகாயமடைந்தார். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கல்வீச்சில் காயமடைந்த தங்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். கல்வீச்சு சம்பவம் குறித்து திருக்கோவிலூரில் நிருபர்களிடம் வடிவேலு கூறியதாவது:-

திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வேனில் வந்து கொண்டிருந்தேன். இரவு 10 மணிக்கு மேலாகி விட்டதால் தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளரை ஆதரித்து பேசாமல் கையை அசைத்தபடியே வந்தேன். அப்போது என்மீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதை நான் பிடித்து தூக்கி யெறிந்து விட்டேன்.

அடுத்து என்னை நோக்கி வீசப்பட்ட கல்லை தடுக்க முயன்ற தி.மு.க. வேட்பாளர் தங்கத்துக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இந்த காயம் எனக்கு ஏற்பட்டதாகவே கருதுகிறேன். தே.மு.தி.க.வினர் தோல்வி பயத்தால் இதுபோல் செயல்படுகின்றனர். இதுமாதிரியான தாக்குதல்களால் எனது பிரசாரத்தை தடுத்து நிறுத்த முடியாது.

கலைஞர் மீண்டும் முதல்-அமைச்சராகும் வகையில் அவரது திட்டங்களை பேசி மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். ரிஷிவந்தியம் தொகுதியில் திட்டமிட்டபடி எனது பிரசாரம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வீச்சில் காயமடைந்த தி.மு.க.வேட்பாளர் தங்கம் கூறியதாவது:-

தேர்தலில் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் அணியினர் இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு பொதுமக்கள் முடிவு கட்டுவார்கள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனது அரசியல் பணி முடிந்து விடாது. பொதுமக்களை தொடர்ந்து சந்திப்பேன்.

இவ்வாறு கூறினார். கல்வீச்சு சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலைஞர் தான் முதலமைச்சர் : சேலத்தில் நடிகர் நெப்போலியன் பிரசாரம்.

கலைஞர் தான் முதலமைச்சர்:மக்கள் தெளிவாக உள்ளனர்; சேலத்தில் நடிகர் நெப்போலியன் பிரசாரம்

சேலம் வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தை ஆதரித்து நடிகரும், மத்திய மந்திரியுமான நெப்போலியன் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இவரது பேச்சை திரளானோர் வந்து கேட்டு ரசித்தனர். அவர் பேசும் போது இடைஇடையே பாட்டுப்பாடினார். இதை பொதுமக்கள் கேட்டு ரசித்தனர். இந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
கலைஞர் மட்டும் தான் சொன்னதை செய்வார். இது மக்களுக்கு தெளிவாக தெரியும். தலைவர் கலைஞரை முதல்அமைச்சராக்க மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். இதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். இதனால் மீண்டும் தலைவர் கலைஞர் ஆட்சி அமைவது உறுதி. இலவச திட்டங்களை தலைவர் கலைஞர் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குகிறார் என்கிறார்.

2ரூபாய்கு 1கிலோ அரிசி எப்படி தரமுடியும் என ஜெயலலிதா கூறி கலைஞர் அறிவித்த திட்டங்களை எல்லாம் கிண்டல் அடித்தார். ஆனால் இன்று நான் ஆட்சிக்கு வந்தால் 20கிலோ அரிசி இலவசமாக தருவேன் என்கிறார்.

இது மட்டும் எப்படி முடியும். ஏழைகள் நலன் காக்க பல திட்டங்களை தந்தவர் தலைவர் கலைஞர். அவர் முதலமைச்சராக உதய சூரியன், கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் : வேன் மீது கல்வீச்சு : அதிமுக பிரமுகர்கள் கைது.


வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிமுக பிரமுகர்கள் கைது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வடிவேலு ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மிரட்டல் குறித்த புகாரை அடுத்து நடிகர் வடிவேலுவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம் தொடர்வது பற்றி திமுக தலைவர் கலைஞருடன் வடிவேலு சிதம்பரத்தில் ஆலோசனை மேற்கொண்டார். வெடிகுண்டு மிரட்டல் குறித்து வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், கலைஞர், பொதுமக்கள் தயவால் எனக்கு எந்த பயமும் இல்லை. ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த டெபாசிட் இழப்பார். வெடிகுண்டு மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்படமாட்டேன். உச்சக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.

இதனிடையே வடிவேலுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கருப்புசாமி, கந்தசாமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது


வடிவேலு வேன் மீது கல்வீச்சு: வேட்பாளர் காயம்.


விழுப்புரம் மாவட்டம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் வடிவேலு வேன் மீது கல்வீசப்பட்டது. இதில் தடுக்க முயன்ற தி.மு.க., வேட்பாளர் மண்டை உடைந்தது.

திருக்கோவிலூர் தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் செருப்பு மற்றும் கற்களை வீசினர். இதில் வடிவேலுவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. வேட்பாளர் தங்கம் மீது கல்விழுந்ததில் அவரது மண்டை உடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வேட்பாளர் தங்கம் கூறியதாவது, பிரச்சார வேன் மீது திடீரென கல் வீசப்பட்டது. தொடர்ந்து கல் வீசப்பட்டதால் வடிவேலுவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவரை மறைத்து நின்றேன். அப்போது என் மீது கல் பட்டுவிட்டது. இதனால் எனக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. இதனை தேமுதிகவினர்தான் செய்துள்ளனர். தண்டாச்சிபுரம் என்ற இடத்தில் டீ கடை வைத்துள்ள தேமுதிகவைச் சேர்ந்த அடியாட்கள் 10 பேர் ஒன்றாக கூடிக்கொண்டு கல் மற்றும் செருப்புகளை வீசினார்கள் என்றார்.

இதுகுறித்து வடிவேலு கூறுகையில், இதற்கு எல்லாம் பயந்து நான் பிரச்சாரத்தை நிறுத்தப்போவதில்லை. தோல்வி பயம் காரணமாக எதிரணியினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வீசப்படும் என்று போனில் மிரட்டினார்கள். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு. இதுதொடர்பாக போலீசார் மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர் என்றார்.


விஜயகாந்த் சாதாரண அச்சாணி: வடிவேலு
.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன்முடியை ஆதரித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,

அ.தி.மு.க. கூட்டணியில் புதியதாக ஒருவரை அந்த கூட்டணியில் சேர்த்து உள்ளார்கள். அவரை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறு கிறார்கள். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

அ.தி.மு.க. மிகப்பெரிய கட்சி எம்.ஜி.ஆரின் உண்மை யான தொண்டர்கள் விஜயகாந்தை ஏற்றுக் கொள்கிறார்களா. நடிப்பதற்கு படம் இல்லை என்பதற்காக கட்சி ஆரம் பித்துவிட்டார். வேட்பாளர்களை அடிக்கக் கூடிய ஒரே தலைவர் விஜயகாந்த்தான்.

எம்.ஜி.ஆருக்கும், விஜயகாந்த்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா. என்னைக் கூட வந்த புதிதில் கருப்பு நாகேஷ் என்று கூறினார்கள். ஆனால் நான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்று கூறி அப்படியெல்லாம் பெயர் வைக்க கூடாது என்று தெரிவித்தேன். எனக்கு இருக்கின்ற அறிவுகூட உங்களுக்கு இல்லை.

இந்தியாவின் மிகப்பெரிய அரசியல்வாதி கலைஞர் மிகப்பெரிய அரசியல் விஞ்ஞானி கருணாநிதி. விஜயகாந்த் சாதாரண அச்சாணி என்றார்.


Sunday, April 10, 2011

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை.

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்க வெளிநாட்டு இலாகா ஆண்டுதோறும் உலக நாடுகள் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிடும். அதுபோல ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் சீனாவில் மனித உரிமை நிலைமை மோசமாகி வருவதாகவும், மனித உரிமைக்காக போராடுபவர்களை சீன அதிகாரிகள் தன் விருப்பம் போல கைது செய்து வருவதாகவும், புகழ் பெற்ற கலைஞர்களை கூட விடாமல் கைது செய்து வருவதாகவும், பேச்சு உரிமை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. மனித உரிமை பிரச்சினைகளை எழுப்புகிறோம் என்ற பெயரில் எங்கள் நாட்டு உள்விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்கக்கூடாது என்றும் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து போதனை செய்வதையும் அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.


உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றது போல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்; நடிகை குஷ்பு பேச்சு.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்றது போல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்; நடிகை குஷ்பு பேச்சு
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை ஆதரித்து சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் அருகில் நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டாக்டர் கலைஞர், சோனியாகாந்தி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெற்றிக்கூட்டணியில் மாம்பழம் சின்னத்தில் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். வருகிற 13-ந் தேதி அவரை ஜெயிக்கவைக்கவேண்டும். 6-வது முறையாக வெற்றிக் கூட்டணியில் கலைஞர் போட்டியிடுகிறார். அவரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும்.

கடந்த வாரம் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி தலைமையில் யுவராஜ்சிங், காம்பீர் ஆகியோர் எப்படி பக்கபலமாக இருந்து அணியை வெற்றி பெற செய்தார்களோ, அதேபோல் தேர்தலில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். இந்த அணி நிச்சயம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவார். அதற்கு இந்த தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் அறிவுச் செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.

ஜெ., மீது வழக்கு தொடருவேன் : வீரபாண்டி ஆறுமுகம் பரபரப்பு பேட்டி


"பொது வாழ்வுக்கு தகுதியில்லாதவர் ஜெயலலிதா. தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும் அவதூறு பரப்பும் அவர் மீது, நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன்,'' என, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சேலத்தில், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, அவரது கட்சி வேட்பாளர்கள் மன சாட்சியை அடகு வைத்து விட்டு, தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும், உண்மைக்கு மாறான பொய் பிரசாரங்களை செய்து வருகின்றனர். சங்ககிரி மற்றும் வீரபாண்டி அ.தி.மு.க., வேட்பாளர்கள், தேர்தல் விதிமுறைக்கு மாறாக, எனக்கும், தி.மு.க.,வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், "சிடி' ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக, கடந்த 8ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டரிடத்தில் மனு அளித்துள்ளேன்.

"சிடி'க்கும், எனக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை. தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்கிறது என்றால், உடனடியாக இரண்டு வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு இல்லாவிடில், சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வேன். ஏற்கனவே, இதுபோல் பிரசாரம் நடக்க உள்ளது குறித்து, கடந்த 28ம் தேதி, கலெக்டரிடம் புகார் செய்துள்ளேன்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்ததாக கூறுகிறார். அவர் பிழைப்பு தேடி வந்த இடம் அது. கலைத்துறையில் அவர் எப்படியெல்லாம், யாருடனெல்லாம் நடித்தார் என்பதை கூறும் கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கி விடவேண்டாம். 14 வயதில் பள்ளி படித்துக் கொண்டிருந்தபோதே, தமிழ் மொழி பாதுகாவலராகவும், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி, தமிழுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி.

அவரைப் பற்றி அவதூறு பரப்பினால், மானமுள்ள எந்த தி.மு.க.,வினரும் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க மாட்டான். இரண்டு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி நில ஊழல் வழக்கில், தான் கையெழுத்திடவில்லை எனக் கூறி ஏமாற்றினார். 64 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து மீளமுடியாமல் உள்ளார். தமிழகத்தை ஆளும் யோக்கியதை அவருக்கு இல்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க.,வை புறக்கணித்து, சேலத்தில், 11 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். வெற்றியை தாங்க முடியாததால் தான் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னை, ஆறு பேர் கொலையில் எனக்கும், இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. ஆனால், அதை தொடர்புபடுத்தி பொய் பிரசாரம் செய்கின்றனர். உண்மையை கூற வேண்டுமென்றால், குப்புராஜுக்கும், அவரது மகன் சிவகுருவுக்கும் சொத்தில் பாகப்பிரிவினை ஏற்பட்டு, 10 ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் சிவில் வழக்கு இருந்தது. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பால், கொலை நடந்ததாக சிவகுரு வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

சம்பவம் நடப்பதற்கு முன்னால், தந்தை சொத்து தராமல் ஏமாற்றி விட்டார். அந்த பிரச்னையில் எனக்கு உதவ வேண்டும் என, வக்கீல் அய்யப்பமணியை தொடர்பு கொண்டுள்ளார். வீடு ஒன்றை தாதகாப்பட்டியில் உள்ள சேலம் மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் சுகுமாறனிடம் விற்று, அந்த பணத்தை மருமகனிடம் கொடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து கொலை சம்பவம் நடந்துள்ளது. அய்யப்பமணியிடம் என்ன செய்வது, எந்த வக்கீலை பார்ப்பது என்று கேட்டுள்ளார், அவரும் ஒரு வக்கீலை கூறியுள்ளார். அதன்பின், சிவகுரு, நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவருக்கு அதில் தொடர்பு இருக்கும் நிலையில், அதை மறைத்து விட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். நான் சிறையில் சென்று பார்த்தது தவறு என்கின்றனர். நீதிமன்றத்தில், எப்.ஐ.ஆர்., இருக்கும் நிலையில், அவர் குற்றவாளியாகிவிடமாட்டார்.

தர்மபுரி பைத்தூரில், மூன்று மாணவியர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் ஜெயகுமாரும், செங்கோட்டையனும் போய் அவர்களை பார்த்துள்ளனர். அதற்கு யார் அனுமதி கொடுத்தது ஜெயலலிதா தானே. பொது வாழ்வுக்கு தகுதியில்லாதவர் ஜெயலலிதா. தி.மு.க., தலைவர் மீதும், என் மீதும் அவதூறு பரப்பும் அவர் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இவ்வாறு பேட்டியின்போது அமைச்சர் கூறினார்.

என் மீது அவதூறு அ.தி.மு.க., வக்கீல் பதில் : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறிய குற்றச்சாட்டு குறித்து, அ.தி.மு.க., சேலம் வடக்கு தொகுதி செயலரும், வக்கீலுமான அய்யப்பமணி கூறியதாவது: ஆறு பேர் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, 2010 அக்., 24ம் தேதி கவர்னருக்கு மனு அனுப்பி உள்ளேன். அந்த கொலைக்கு எனக்கும் சம்பந்தமில்லை. பார் கவுன்சில் தேர்தலில் ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வாங்கியிருந்தேன். அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் தேர்தலில் வெற்றி பெற்றதை பொறுக்காமல், என் மீது அவதூறு பரப்புகின்றனர். நானும் சட்டப்படி அவர்களை சந்திப்பேன். இவ்வாறு அய்யப்பமணி கூறினார்.