Friday, April 8, 2011

ஐபிஎல் - 4 திருவிழா இன்று துவக்கம் : சென்னையில் முதல் போட்டி.


இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல்லின், நான்காவது போட்டித் தொடர் இன்று சென்னையில் விமரிசையாக தொடங்குகிறது.

இதுவரை நடந்த 3 சீசன்களிலும் வீரர்களும், அணிகளும் பட்டையைக் கிளப்பி கிரிக்கெட் ரசிகர்களை துள்ளலில் ஆழ்த்தின. முதல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது கோப்பையை ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸும் கைப்பற்றின. கடந்த முறை நடந்த 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியனானது.

இந்த நிலையில் நாளை 4வது போட்டித் தொடர் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டித் தொடர்கள் இந்தியாவிலும், 3வது தொடர்தென் ஆப்பிரிக்காவிலும் நடந்தது. இந்த முறை மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

நாளை முதல் வரும் மே மாதம் 28-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கின்றன. இம்முறை ஏற்கனவே இருக்கின்ற 8 அணிகளோடு புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய அணிகள் விளையாடுகின்றன.

10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகியவை இன்னொரு அணியிலும் உள்ளன.

ஒவ்வொரு அணியும் தத்தமது லீக் பிரிவில், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த கட்டத்துக்கு செல்லும். முதலிடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் தோற்கும் அணி 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும்.

இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும். சென்னை, மும்பை அணிகளை தவிர மற்ற அணிகள் பெரும்பாலான வீரர்களை மாற்றம் செய்துள்ளன. கடந்த 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் தற்போது வெவ்வேறு அணிகளில் விளையாடுகின்றனர்.

அதிக ஏலத்தொகைக்கு போன கம்பீர் கடந்த 3 சீசனிலும் டெல்லிக்கு விளையாடினார். ஆனால் இம்முறை கொல்கத்தாவுக்காக விளையாடுகிறார். இதேபோல ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய யூசுப் பதான் தற்போது கொல்கத்தா அணியில் உள்ளார். சென்னை அணியில் இருந்த முத்தையா முரளிதரன் தற்போது கொச்சி அணியில் உள்ளார்.

கேப்டன்களைப் பொறுத்தவரை, சென்னை (டோனி), மும்பை (டெண்டுல்கர்), ராஜஸ்தான் (வார்னே) ஆகிய அணிகளில் மாற்றம் இல்லை. மற்ற அணிகளில் கேப்டன்கள் மாறியுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் தற்போது புனே வாரியர்ஸுக்கு வந்துள்ளார். கொல்கத்தா நைட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி நீக்கப்பட்டு கெளதம் கம்பீர் கேப்டனாகியுள்ளார். கொச்சி அணிக்கு மஹேளா ஜெயவர்த்தனே கேப்டனாகியுள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த கும்ப்ளே இந்த முறை இல்லை. டேணியல் வெட்டோரி புதிய கேப்டனாகியுள்ளார்.

இதுவரை டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டனாக இருந்த கில்கிறைஸ்ட் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு மாறியுள்ளார்.

4-வது ஐபிஎல் திருவிழாவின் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 6 மணி முதல் இரவு 7.20 மணி வரை நடக்கிறது.

அதன் பின்னர் 8 மணிக்கு முதல் போட்டி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதவுள்ளன.

உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் ஐபிஎல் வெடி நாளை முதல் வெடிக்கப் போகிறது. சரவெடியாக தொடர்ந்து 50 நாட்கள் பட்டாசு கிளப்பப் போகும் இந்த மத்தாப்புப் போட்டிகளைக் காண ரசிகர்கள் ரகளையாக தயாராகியுள்ளனர்.

செட் மாக்ஸ் டிவியில் இந்தப் போட்டிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பில் கண்டுகளிக்கலாம்

கருணாதி-குடும்பம் பற்றி விமர்சனம்: ஜெயலலிதா-விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு.

கருணாதி - குடும்பம் பற்றி விமர்சனம் : ஜெயலலிதா - விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு; இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
கருணாதி-குடும்பம் பற்றி விமர்சனம்:    ஜெயலலிதா-விஜயகாந்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு;    இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு

தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி. மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் அந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியது. இதையடுத்து மத்திய தேர்தல் கமிஷன் ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் விதியை மீறி தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்தது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆதாரமில்லாமல் பொய்யான, கற்பனையான குற்றச்சாட்டு கூறி உள்ளீர்கள். ஊழல்வாதி, சினிமா துறையை சுரண்டிவிட்டார். தமிழகத்தை சுரண்டிவிட்டார் என தொடர்ந்து அவதூறாக விமர்சனம் செய்வதாக உங்கள் மீது தி.மு.க. முக்கிய நிர்வாகி பொன் முத்துராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார். இதற்கான விளக்கத்தை இன்று மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசை விஜயகாந்திடம் கொடுப்பதற்காக நேற்று இரவு 10.20 மணி அளவில் புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி கல்யாணசுந்தரம் சென்றார். ஆனால் ஓய்வெடுப்பதாக கூறி விஜயகாந்தை தேர்தல் அதிகாரி சந்திக்க தே.மு.தி.க.வினர் மறுத்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து நோட்டீசை தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவிடம் தேர்தல் அதிகாரி கொடுத்தார். இதுபோல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும் தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பிரசாரத்தின் போது தி.மு.க. தலைவரையும், அவரது குடும்பத்தையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மத்திய தேர்தல் கமிஷன் 2 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினர்.

தேர்தல் ஆணையத்திடம் ஜெ., கேப்டன் 2 நாள் அவகாசம்.

இந்த புகார் குறித்து நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் நோட்டீசுக்கு பதில் அளிக்க அவர்கள் இருவரும் இன்னும் 2 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாக பிரவீன் குமார் தெரிவித்தார்.

ம.தி.மு.க. ஆதரவு : மதுரையில் கருணாநிதி பேட்டி.

ம.தி.மு.க.வும் ஆதரவு:    தி.மு.க. கூட்டணி    வெற்றி பெறும்    மதுரையில் கருணாநிதி பேட்டி


முதல் அமைச்சர் கருணாநிதி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: மிக துல்லியமாக உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் எங்கள் அணி வெற்றி பெறும்.

கே: தி.முக. கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு தருவது ஏன்?

ப: கழக அரசின் சாதனைகள். குறிப்பாக தமிழகத்தில் ஏழைகள் குடிசைகள் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு அறிவித்து 20 லட்சம் குடிசைகளை அகற்றி அவற்றுக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டன. அந்த திட்டத்தின்படி இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் காங்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளையும் கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் கட்டி முடிப்பார்கள் என்ற எண்ணம் ஏழை எளிய மக்களிடம் இருப்பதுதான் ஒரு காரணம்.

கே: சட்டசபை தேர்தலில் மின் பற்றாக்குறையை ஒரு காரணமாக வைத்து எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்து வருகிறதே?

ப: மின் பற்றாக்குறை என்பது தொடர்கின்ற நிகழ்வு. தொழிற்சாலைகள், வீட்டு பயனாளிகளுக்கு தேவைப்படுகின்ற மின் சாரத்தை உற்பத்தி செய்ய முற்படும்போது மேலும் சில தொழிற்சாலைகள் வரத் தொடங்குகின்றன. தொழிற்சாலைகள் வளர, வளர மின்தேவையும் அதிகப்படுகின்றது. அதற்கேற்ப மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடையில் அ.தி.முக. அரசு தமிழகத்தை ஆளும் நிலை ஏற்பட்டபோது மின்உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்துள்ளது.

மின் உற்பத்திக்கான திட்டங்கள் கழக ஆட்சியில் தயாரிக்கப்பட்டு தற்போது நல்ல முறைக்கு வரும் நிலை உருவாகி உள்ளது. மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தால் அந்த திட்டங்கள் வரிசையாக நிறைவேறும் போது மின் தட்டுப்பாடு அறவே அகற்றப்படும்.

கே: ம.தி.மு.க.வில் 2-ம் கட்ட தலைவர்கள் தி.மு.க. வுக்கு ஆதரவாக பேசி வருகிறார்களே? ம.தி.மு.க. தொண்டர்களுக்கு நீங்கள் என்ன கூறு விரும்புகிறீர்கள்?

ப: பல இடங்களில் ம.தி. மு.க. தொண்டர்கள் தி.மு.க. வுக்கு தங்களது ஆதரவை மானசீக ஆதரவை தருவதாக நானும் அறிகிறேன். திராவிட இயக்கங்கள் ஒன்றாக இருந்து உறுதிபட தனது கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும். இடையே ஏற்பட்ட சில மாறுபாடுகளால் ஒற்றுமை குலைந்து மாற்றாருக்கு இடம் தருவதாக ஆகிவிட்டது. ஒன்றுபட்ட திராவிட இயக்கத்தை காணுகிற சூழல் விரைவில் வரும். அதன் அடையாளம் தான் ம.தி. மு.க.வினர் இந்த தேர்தலில் பல இடங்களில் எங்களை ஆதரிக்கிறார்கள்.

கே: தமிழ்நாட்டை மீட்டெடுப்பேன் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசி உள்ளாரோ?

ப: அவர் முதலில் பெங்களூர் நீதிமன்றத்தில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதற்கு அடையாளமாக இருக்கும் நகைகளை முதலில் மீட்கட்டும்.

கே: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளதே?

ப: தேர்தல் ஆணையம் என்பது தன்னை அரசியல் கட்சியின் அங்கமாக ஆக்கிக்கொள்ளலாமல் நடுநிலையாக பணிபுரிய வேண்டிய ஆணையம். நீதிமன்றத்தைப்போல அந்த ஆணையத்தை அவர்கள் நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்றங்களே சில நேரங்களில் தடுமாறுகிறதை காணும் போது தேர்தல் ஆணையம் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

தேர்தல் ஆணையம் எவ்வளவு கண்டிப்பாக உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மற்ற மாநிலங்களை போல தமிழக அரசும் ரூ.4 கோடி அளவுக்கு பரிசுகள் அறிவித்தது. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியை நாங்கள் பெற்றுள்ளோம். கிரிக்கெட் வீரர்களுக்கோ, கிரிக்கெட் சங்கத்திற்கோ முதல்-அமைச்சர் வெகுமதியை வழங்குவதை போல படம் எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

கே: மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதே?

ப: நான் ஒப்பிட்டு பார்க்கும்போது மத்திய மந்திரி மீது இன்றைய எதிர்க்கட்சியில் உள்ள ஜெயலலிதா மற்றும் அவரது அணியில் உள்ள எல்லோருமே கோபம் காட்டி வருகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தில் இருந்த மதுரை மாவட்டத்தில் இன்றைய மத்திய அமைச்சர் செல்வாக்கு பெறுவதும், மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை, நல்ல காரியங்களை செய்வதும் எதிர்க்கட்சி கூட்டணியினரின் வெறுப்பை வெளிபடுத்துகிறது.அதனால் அவர்கள் மத்திய அமைச்சர் மீது அடிக்கடி பொய் புகார் கூறி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை கொண்டுதான் தேர்தல் ஆணையம் இப்போது செயல்படுகிறது என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது என்பது எனது கருத்து.

கே: ஆளும் கட்சி மீது அதிகாரிகள் அதிக கெடு பிடி செய்வதாக கூறப்படுகிறதே?

ப: அரசியலில் மட்டுமல்ல. அதிகாரிகள் மட்டத்திலும் எட்டப்பர்கள் உண்டு.

கே: கோவையில் நேற்று நடந்த அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ள வில்லையே?

ப: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்துள்ளாரே?
அது மாத்திரமல்ல. அவர் பேசும்போது தி.மு.க. குடும்ப கட்சி என்று கூறி உள்ளார். தி.மு.க. குடும்ப கட்சியாக இருக்கலாம். சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி அல்ல.

கே: மத்திய மந்திரி முக.அழகிரி மாநில அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறதே?

ப: அது தாய் நாட்டின் பற்று. தமிழ்நாட்டின் மீது உள்ள பாசத்தை காட்டுகிறது. டெல்லியில் பதவியில் இருந்தாலும் அந்த பதவியை தமிழகத்திற்குதான் பயன் படுத்துகிறார்.

கே: மதுரையில் ஆளும் கட்சிக்கு எதிராக அதிக தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே?

ப: ஆட்சிகள் வரும். மீண்டும் திரும்பி வரும்.

கே: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் எதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுவதாக பாராட்டுகிறார்களே?

ப: தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக நான் கூறவில்லை. சில குறிப்புகளை தெளிவுபடுத்தினேன். எதிர் தரப்பினர் தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

கே: தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மத்தியிலும் எதிரொலிக்குமா?

ப: எதிரொலிக்கும்.

கே: தி.மு.க. தேர்தல் வாக்குறுதியான மிக்சி, கிரைண்டர் அறிவிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது?

ப: நாங்கள் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். சிலர் அதனை காப்பி அடித்து ஜெராக்ஸ் எடுத்து படித்துள்ளார்கள். அதனை எப்படி நம்புவார்கள் என்று எனக்கு தெரியாது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய ஒன்று, இந்து மதத்தினர் தங்களுக்கு சொந்தமான இடத்திலோ புறம்போக்கு இடத்திலோ வழிபாட்டு தலங்கள் கட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவதுபோல கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினர் வழிபாட்டு தலங்ககளை கட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று கட்டிடம் கட்டலாம் என்பதை அரசு பரிவோடு பரிசீலிக்கும். உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்பட்டுள்ள பூலோகமாற்றம் காரணமாக சுனாமி எப்போது வேண்டுமானாலும் வரும் நிலையில் கடலோர மக்களின் உயிர், உடமைகளை பாதுகாக்கும் வகையில் அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்க மீன்வளம் மற்றும் கடலியல் சம்பந்தப்பட்டகுழு அமைத்து ஆய்வு நடத்தி கடலோர மீனவர்கள் பாது காப்பு செயல் திட்டம் வகுக்கப்படும். ஒத்தக்கடை அருகே உள்ள யானைமலையை மத்திய அரசின் தொல்லி யல் துறை எடுத்துக் கொள்ளப்போவதாக வைகோ உள்ளிட்ட சிலர் எதிர்த்து குரல் கொடுத்தபோது அதனை இந்த அரசு மறுத்ததுடன் அப்படி ஒரு திட்டம் இல்லை என்றும், அதனை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளோம்.

கே:- நேற்று கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா முதல்-அமைச்சராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பார் என்று பேசியிருக்கிறாரே?

ப:- பண்ருட்டியை நினைக்கும்போது அவரை பற்றி மறைந்த கோவிந்தசாமி கூறியது நினைவுக்கு வருகிறது. பண்ருட்டி மாதிரி துரோகிகளை நம்பாதீர்கள் என்றார். அதனையும் மீறி நம்புவது எனது தவறு.

கே:- சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் நடந்த வாகன சோதனையில் பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதே?

ப:- எந்த கட்சியின் பணம் என்று அறிவிக்கப்பட வில்லையே?

கே:- தமிழக வாக்காளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:- தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

கே:-தமிழக தேர்தல் களம் எப்படி உள்ளது?

ப:- எல்லாம் சரியாக உள்ளது. சில பத்திரிகைகள்தான் சரியாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மத்திய மந்திரி மு.க.அழகிரி உடன் இருந்தார்.

Thursday, April 7, 2011

தமிழகத் தேர்தல் களத்தில் கிரிமினல் பின்னணியுடன் 125 வேட்பாளர்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் கிரிமினல் பினனணியுடன் கூடிய 125 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளிலுமே கிரிமினல் வேட்பாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக சார்பில் 43 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திமுகவில் 24 பேரும், பாஜகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும் நிறுத்தப் பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக சார்பில் தலா 6 கிரிமினல் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் அதிக அளவிலான கேஸ்களுடன் கூடியவராக திகழ்பவர் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜாதான். இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு என 6 வழக்குகள் உள்ளன. ஆபாசமாக நடந்து கொள்ளுதல், ஆயுதங்களை வைத்து தாக்குதல், மிரட்டுதல் என இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

3 பாஜக, அதிமுக, பாமகவைச் சேர்ந்த தலா 2 வேட்பாளர்கள், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டு களுடன் கூடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாகப்பட்டனம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முருகானந்தம் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் பூம்புகார் தொகுதி வேட்பாளர் மீதும், ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீதும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

கொடிய ஆட்சி வந்துவிடக் கூடாது: மதுரையில் கலைஞர்.


தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர், தி.மு.க.,வை வளர்க்க தானும், முன்னாள் மதுரை மேயர் முத்துவும் அரும்பாடுபட்டதாகவும், தி.மு.க.,வுக்காக பாடுபட்ட பி.டி.ஆர்., தென்னரசு, தமிழ்குடிமகன் உள்ளிட்ட பலர் இந்த மேடையில் இல்லை, ஆனால் அவர்கள் தந்துவிட்டு சென்ற உணர்வு என் உருவத்திலும், அழகிரி, பொன் முத்துராமலிங்கம் உருவில் உள்ளது என்றார்.

மேலும், பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் மதுரையில் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை பற்றி யார் குறைகூறினாலும் கவலைப்படபோவதில்லை. மக்களுக்கு ஆற்றும் பணியை திமுக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இனஉணர்வோடு தான் கொடிய ஆட்சி மலராமல் தடுக்க முடியும் என்றார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது.

தி.மு.க., ஆட்சியில் மதுரை மாநகராட்சியாக மாறியது. மதுரை திண்டுக்கல் சாலையில் மேம்பாலம், மேயர் முத்து மேம்பாலம், மாநகராட்சி கட்டிடம், மதுரை சுற்றுச்சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் கக்கன் சிலை அமைக்கப்பட்டது. மதுரையில் ஐகோர்ட் கிளை ஏற்படுத்தப்பட்டதும் தி.மு.க., ஆட்சியில் தான்.

பதிலுக்கு பதில், தாக்குதலுக்கு தாக்குதல் போன்ற பழக்கம் எனக்கு இல்லை. ‌செல்லும் இடமெல்லாம் ஜெயலலிதா என் மீது குற்றம் சாட்டுகிறார். நம்மை தள்ளிவிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிசெய்கிறார். சென்னை கூட்டத்தில் நதிநீர் பிரச்னை, தமிழை மத்திய ஆட்சி மெட்ழி, முல்லை பெரியாறு பிரச்னை, சேது சமுத்திர திட்டம் போன்று ‌மக்களுக்கு தேவையான திட்டங்களை சோனியாவிடம் கேட்டேன்.

உங்களுக்காக நான் இருப்பவன். பாடுபடுபவன். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பெரும் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். கொடிய ஆட்சியை தடுத்து நல்லாட்சி தொடர முடியும் என்றார்.

ஒற்றுமையுடன், செயல்பட்டு வெல்ல வேண்டும்-சரத்குமார்.


சிறு சிறு குழப்பங்களை விளைவித்து கூட்டணியை சீர்குலைக்க முயல்கிறார்கள் எதிர்த் தரப்பினர். அதற்கு உடன்படாமல், ஒருமித்து செயல்பட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கோவையில் இன்று அதிமுக கூட்டணி சார்பில் வ.உ.சி.மைதானத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசியதாவது...

6 நாட்களில் தேர்தல் வரப் போகிறது. இங்கு புதிய கூட்டணி உருவாகியிருக்கும்போது, புதிய உறவு மலர்ந்திருக்கும்போது, அங்கு சிறு சிறு குழப்பங்களை உருவாக்கி இதை சீர்குலைத்து விடலாமா என்று நினைத்து அது முடியாமல், போன ஏக்கம் எதிர்த் தரப்பிலே இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடம் கொடுத்து விடாதபடி ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டு வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க வேண்டும்.

இந்த ஐந்து ஆண்டு கால கருணாநிதி குடும்ப ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, விவசாயிகளுக்குப் பாதிப்பு, மாணவர்களுக்குப் பாதிப்பு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு, தொழிற்சாலைகளுக்குப் பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல துயரங்கள். இதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் கடந்த 10 நாட்களாக நான் தென் மாவட்டங்களில், தென்காசி வேட்பாளரான நான் பிரசாரம் செய்யும்போது, எங்கு போனாலும் இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டி மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். ராசாதான் அந்த ஊழலுக்குச் சொந்தக்காரர். அந்த ஊழல் கட்சிக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. இருவரும் சொந்தக்காரர்கள்.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் இன்று தேர்தலை சந்திக்கிறது திமுக. இது மிகப் பெரிய அவமானம். பக்கத்து வீட்டுக்கு போலீஸ் வந்தாலே அவமானப்படுவோம் நாம். ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை செய்து விட்டு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்க வருகிறார்கள்.

ஊழல் தொடர்பாக முதல்வரின் மனைவியை விசாரிக்கிறார்கள், மகளை விசாரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்கிறார் ப.சிதம்பரம். அதை வழிமொழிகிறார் சோனியா.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்காக ஒன்று திரண்டு, ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். மக்களை பணத்தைக் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் ஏமாளிகள் அல்ல, ஏமாறும் நிலையில் மக்கள் இன்று இல்லை.

ஏப்ரல் 13ம் தேதி சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாக மலரப் போகிறது. இது நமக்கான தேர்தல் அல்ல, மாறாக வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக வாழ வித்திடும் நாளாகும்.

இளம் தலைமுறையினர் சரியான பாதையில் போக வேண்டும் என்றால் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும், அது புரட்சித் தலைவியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் மட்டும் வரவில்லை

திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்-கோவையில் ஜெயலலிதா பேச்சு.


இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்..

கோவை கூட்டத்தில் ஜெயலலிதா மேலும் பேசியதாவது:

இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல்.

நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக்காரக் கும்பலுக்கு, குடும்ப ஆட்சிக்கு தமிழக மக்கள் என்ன தண்டனை தரப் போகிறார்கள் என்பதை நாடே உற்றுப் பார்க்கிறது.

சட்டம் ஒழுங்கு, மின்சார உற்பத்தி ஆகியவை தான் ஒரு மாநிலத்திற்கு மிகவும் முக்கியம். இவை இரண்டையும் சீர்குலைத்தவர் கருணாநிதி. தொழில்கள் நலிவுற்று, விவசாயம் சீர்குலைந்து, விலைவாசி விஷம் போல ஏறி விட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தவர்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், திமுக அமைச்சர்களும்தான்.

மதுரையில் தா.கிருட்டிணன் கொலை, மதுரை பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு, துணைவேந்தர் மீதான தாக்குதல், அரசு அதிகாரிகளைப் பழிவாங்குதல் எனபல நடவடிக்கைகள்.

நில அபகரிப்பு, ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா மீது என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்.

வீரபாண்டி ஆறுமுகம், கொலைக் குற்றவாளியை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறினாரே. அப்போது அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா. ஹார்லிக்ஸ் திருட்டு குறித்து நான் புகார் கூறியது குறித்து நடவடிக்கை எடுத்தாரா.

இப்படி எதற்குமே திராணியற்ற முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகிறார். இதற்கு அவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. கருணாநிதி ஆட்சியி்ல எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகள் பெருகி விட்டன.

மின்தேவைக்கும், உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்பற்றாக்குறை மாநிலமாக தமிழகத்தை ஆக்கியதுதான் கருணாநிதி சாதனை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அஞ்சும் நிலை. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போது போகும், எப்போது நிம்மதி கிடைக்கும் என்று அனைவரும் ஏங்கும் நிலைக்கு தமிழகத்தை சீரழித்து விட்டார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பேச்சில் பாதி, அவர் ஊர் ஊராக போய் பிரசாரம் செய்யும்போது எழுதி வைத்து வாசித்ததே என்பது குறிப்பிடத்தகக்து.