Thursday, April 7, 2011

திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்-கோவையில் ஜெயலலிதா பேச்சு.


இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்..

கோவை கூட்டத்தில் ஜெயலலிதா மேலும் பேசியதாவது:

இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல்.

நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக்காரக் கும்பலுக்கு, குடும்ப ஆட்சிக்கு தமிழக மக்கள் என்ன தண்டனை தரப் போகிறார்கள் என்பதை நாடே உற்றுப் பார்க்கிறது.

சட்டம் ஒழுங்கு, மின்சார உற்பத்தி ஆகியவை தான் ஒரு மாநிலத்திற்கு மிகவும் முக்கியம். இவை இரண்டையும் சீர்குலைத்தவர் கருணாநிதி. தொழில்கள் நலிவுற்று, விவசாயம் சீர்குலைந்து, விலைவாசி விஷம் போல ஏறி விட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தவர்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், திமுக அமைச்சர்களும்தான்.

மதுரையில் தா.கிருட்டிணன் கொலை, மதுரை பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு, துணைவேந்தர் மீதான தாக்குதல், அரசு அதிகாரிகளைப் பழிவாங்குதல் எனபல நடவடிக்கைகள்.

நில அபகரிப்பு, ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா மீது என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்.

வீரபாண்டி ஆறுமுகம், கொலைக் குற்றவாளியை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறினாரே. அப்போது அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா. ஹார்லிக்ஸ் திருட்டு குறித்து நான் புகார் கூறியது குறித்து நடவடிக்கை எடுத்தாரா.

இப்படி எதற்குமே திராணியற்ற முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகிறார். இதற்கு அவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. கருணாநிதி ஆட்சியி்ல எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகள் பெருகி விட்டன.

மின்தேவைக்கும், உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்பற்றாக்குறை மாநிலமாக தமிழகத்தை ஆக்கியதுதான் கருணாநிதி சாதனை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அஞ்சும் நிலை. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போது போகும், எப்போது நிம்மதி கிடைக்கும் என்று அனைவரும் ஏங்கும் நிலைக்கு தமிழகத்தை சீரழித்து விட்டார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பேச்சில் பாதி, அவர் ஊர் ஊராக போய் பிரசாரம் செய்யும்போது எழுதி வைத்து வாசித்ததே என்பது குறிப்பிடத்தகக்து.

Wednesday, April 6, 2011

அ.தி.மு.க.அணி கூட்டம் விஜயகாந்த் புறக்கணிப்பு.


ஜெயலலிதாவின் கோவை பொதுக் கூட்டம்-புறக்கணித்தார் விஜய்காந்த்!

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் புறக்கணித்துவிட்டார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தொகுதிப் பங்கீடு, இடங்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவும் விஜய்காந்தும் நேரில் சந்தித்துப் பேசவே இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர் தான் பேசி 41 தொகுதிகள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் வந்து 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடனே வெளியேறிவிட்டார் விஜய்காந்த் .

இந் நிலையில் இடையே ஏற்பட்ட கலாட்டாவில் இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதாவை விஜய்காந்த் மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தனது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டு பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சமமாக விஜய்காந்துக்கு இடம் தர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அதே போல மரியாதை தரத் தெரியாத ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜய்காந்தும் விரும்பவில்லை.இந் நிலையில் பிரச்சாரத்தின்போது அதிமுக கொடிகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்களை திட்டி, அந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானார் விஜய்காந்த்.

இதேபோல திருச்சி பகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் பெயரைச் சொல்லியோ அவரது கட்சி பெயரைச் சொல்லியோ வாக்கு கேட்கவில்லை.

மேலும் ஜெயா டிவியில் விஜய்காந்தின் பிரச்சாரத்தையோ கேப்டன் டிவியில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தையோ காட்டுவதும் இல்லை.

இதற்கிடையே ஜெயலலிதாவும், விஜய்காந்தும், இடதுசாரித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய முடியுமா என திமுக கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவதோடு, ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் பிரச்சனைகள் நிலவுவதை 'ஹை-லைட்' செய்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதாவை சமீபத்தில் ஓடிப் போய் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விஜய்காந்தும் நீங்களும் நாங்களும் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துவதே மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவும் என்று கூற, எனக்கு டூர் இருக்கே, நேரம் இல்லையே என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.

ஒற்றுமையில்லாத இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடத்திலும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சம், 'ஆர்எஸ்எஸ் சார்பு அதிபுத்திசாலி' பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்டது. அவரது கடுமையான முயற்சியாலும் இடதுசாரி தேசியத் தலைவர்கள் சிலரது தலையீட்டினாலும், வற்புறுத்தலாலும் விஜய்காந்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் தோன்ற ஒப்புக் கொண்டார்.

இதன்படி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில்யில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஜய்காந்த் வரவில்லை. தேமுதிக சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே பங்கேற்றார்.

மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கிய நிலையில் ஊட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவும் வர தாமதமாகிவிட்டது. இதனால் அவர் வரும் முன்பே கூட்டம் தொடங்கிவிட்டது. கூட்டம் தொடங்கிய பின்னரே ஜெயலலிதா வந்து சேர்ந்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் ராஜா எம்.பி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஜெயலலிதா ஒரே மேடை ஏறி, அதில் வைகோ பெயரை ஜெயலலிதா கூறியதும் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்ய, ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது. கூட்டத்தில் அதிகமான மதிமுக கொடிகள் இருந்ததற்காக அதிமுக நி்ர்வாகிகளைக் கூப்பிட்டு ஜெயலலிதா கடிந்து கொண்டதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்றைய கூட்டத்தில் அதிமுக கொடிகளை விட குறைவான அளவிலேயே மற்ற கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் இருக்குமாறு அதிமுக நிர்வாகிகள் பார்த்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கும் தேமுதிகவுக்கும் உரிய மரியாதையை ஜெயலலிதா தர மாட்டார் என்பதாலேயே விஜய்காந்த் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அன்று சோனியாவுக்கு ஜெ 'நோஸ்-கட் - இன்று விஜய்காந்த்.

2001ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது காங்கிரஸ். அப்போது விழுப்புரத்தில் ஜெயலலிதாவும் சோனியாவும் கூட்டாக பேச பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சோனியா விழுப்புரம் வந்து இரண்டு மணி நேரம் காத்திருக்க, ஜெயலலிதா வரவேயில்லை. சோனியாவை கேவலப்படுத்தினார். இந் நிலையில் இன்று நீண்ட கோரிக்கைகளுக்குப் பின் விஜய்காந்துடன் கூட்டத்தில் பேச ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில், விஜய்காந்த் திடீரென வராமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக.

திருத்துரைப்பூண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதில் அதிமுகவினர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், விஜயகாந்த் இன்று கோவையில் அதிமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும்
கூட்டத்தில் பங்கேற்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் அங்கு பங்கேற்காமல், திருத்துரைப்பூண்டியில் பிரச்சாரம் செய்துள்ளார்.

அவர் திருத்துரைப்பூண்டிக்கு வருவது எங்களுக்குத் தெரியாது. எங்களை கலந்து ஆலோசிக்காமல் அவர் பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் தான் அவரது கூட்டத்தை புறக்கணித்தோம் என்றன

நடிகை சுஜாதா காலமானார்.


பிரபல நடிகை சுஜாதா சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள். 1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம்.

கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு : வைகோ பங்கேற்றார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், இன்றும், (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நீரி நிறுவனத்தின் ஆய்வில் வைகோ பங்கேற்றுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அந்த ஆலையை மூடுமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், மாத்தூர் ஆகியோர் முன்னிலையில் 25.2.2011 அன்று விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.

வைகோ, தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்துகின்ற கழிவுகள் குறித்து "நீரி'' நிறுவனம் ஆய்வு நடத்தி முழுமையான அறிக்கையை 8 வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், 6 மற்றும் 7ந் தேதிகளில் நீரி' நிறுவன அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, நீரி நிறுவனத்தின் ஆய்வு வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு முன்தகவல் தந்து நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வைகோ, 6ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்கு வரும்படி நீரி நிறுவனத்தின் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.


வைகோ, நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை இன்று ஆய்வு செய்கின்றனர். வைகோ வந்துள்ளார்.

சிங்கமுத்து ஓட்டம் - பிரச்சார கலாட்டா!


சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! - பிரச்சார கலாட்டா!

தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி தரக்குறைவாகப் பேச முயன்ற சிங்கமுத்துவை திமுகவினர் உதைக்க முயன்றதால், பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து.

அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்ததற்காக நடிகர் வடிவேலுவின் உருவ பொம்மையை தேமுதிகவினர் சிலர் திருச்செங்கோட்டில் எரித்தனர்.

சிங்கமுத்து...

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சிலி, பனையபுரம் இடங்களில் நேற்று இரவு 9 மணிக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் நடிகர் வடிவேலுவையும், குஷ்புவையும் மோசமாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் முதல்வர் கருணாநிதியைப் பற்றி பேச முற்பட்டார்.

அப்போது திமுகவைச்சேர்ந்த கலைச்செல்வன், "டேய் கலைஞரை பற்றி பேசுனா கொன்னுடுவேன். என்று சொல்லிவிட்டு கொடிக் கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சிங்கமுத்துவை அடிக்க வந்தார். அவருடன் மேலும் சில திமுகவினரும் வந்தனர்.

உடனே அதிமுகவினர் புடை சூழ அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து. அதன் பின்னர் அதிமுகவினர் கலைச்செல்வனை தாக்கினர். கலைச்செல்வனும் பதிலுக்கு தாக்கினார்.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கலைச்செல்வன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடிவேலு பொம்மை...

இதே நேரம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகர் வடிவேலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செங்கோடு - மௌசி பகுதியில் தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்துடன் வடிவேலுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் வருவதற்குள் தேமுதிகவினர் ஓடிவிட்டனர்.


டிவி குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? சிந்தியுங்கள்-சிங்கமுத்து

டிவி குட்டி போடுமா அல்லது ஆடு குட்டி போடுமா என்று தேர்தல் பிரசாரத்தின்போது கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.

கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி உயர்வு பிரச்சனைகளே திமுக ஆட்சியை அகற்றப் போதுமானவை. திமுக தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் இவற்றை வைத்து என்ன செய்வது?

விவசாயிகளுக்கு தருவதாகச் சொன்ன 2 ஏக்கர் நிலம் தந்தபாடில்லை. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீரும் கொடுக்கவில்லை.

ஏனென்றால் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தால், யாரும் விற்க முன்வரமாட்டார்கள். அதுவே தண்ணீர் இல்லாமல் நிலங்கள் எல்லாம் வறண்டுவிட்டால், வந்த விலைக்கு வாங்கலாம். அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்று செயல்படுகின்றனர்.

இலவச டிவி கொடுத்தோம், டிவி கொடுத்தோம் என்கிறார்களே, அதனால் என்ன பயன்? ஜெயலலிதா ஆடு தருவதாக அறிவித்துள்ளார். 'டிவி ' குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? என்பதை உணரந்து வாக்களிக்க வேண்டும்.

அன்மையில் திமுக எம்.பி.க்கள் கூட்டணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். இலங்கையில் தமிழ் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்காக ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.


'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!

திமுகவுக்கு ஆதரவாகவும், தேமுதிக மற்றும் அதன் தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு,

'தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளேன் இது எனக்கு கிடைத்த பெருமை' என தெரிவித்தார். மதுரையில் இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

இந்த சிரிப்பலை கலைஞர் அவர்களை மீண்டும் முதல்வராக்கும் ஆதரவு அலையாக வீசுகிறது. மனிதருக்கு அடிப்படை தேவையான உண்ண உணவு, குடியிருக்க வீடு, உடுத்த உடை, இந்த மூன்றையும் கலைஞர் ஒரு சேர தருகிறார். கலைஞர் சொன்னா அது வரும். மத்தவங்க வரும்னு சொன்னா.... என்று நான் சொல்லி முடிப்பதற்கும், 'வராதுனு' மக்களே அதை திருப்பி சொல்றாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு கலைஞர் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்கு.

நான் ஆட்சிக்கு வந்தா பலசரக்கு வீடு தேடி வரும்னு சொல்லிட்டிருக்கிற விஜயகாந்த், இன்றைக்கு பிரச்சாரத்திறே பல சரக்குகளை அடிச்சிட்டு வர்றாரு. அவர் ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் பேசினால் அவர்களுக்குள் பிரச்சினை தான் வரும் என்றார்.

உங்கள் பிரச்சாரத்தில் கல் வீசியிருக்கிறார்களே என ஒரு நிருபர் கேட்டதற்கு அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி கோட்டையில், தி.மு.க அணிக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு அலையை திசை திருப்பும் முயற்சியில் இப்படியெல்லாம் நடக்கு. எத்தனை கல்லடி வீசினாலும், என் சொல்லடியை தடுக்க முடியாது என்றார்.

நடிகர் சிங்கமுத்து பற்றி ஒருவர் கேட்க வர, சட்டென நிறுத்திய வடிவேலு 'பேட்டி நல்லா தானே போய்க்கிட்டு இருந்தது. திடீர்னு 'நரகலை' ஏன் இழுக்கிறீங்க... என்றார்.


பொய் பேசும் விஜயகாந்த்!

வேட்பாளரை அடித்துவிட்டு, அதைப் பற்றிக் கேட்டபோது அடித்ததை ஒப்புக் கொண்டு, என்னிடம் அடி வாங்கினால் மகாராஜா ஆவார்கள் என்று கூறிய தேமுதிக தலைவர் விஜய்காந்த், இப்போது 'பல்டி' அடித்துள்ளார்.

எனது உதவியாளரை தலையைப் பிடித்து உள்ளே தள்ளியதைத் தான் வேட்பாளரை அடித்தார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

என்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். என்னை பற்றி என்ன பிரச்சாரம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால் செய்தால் எனக்கு சந்தோஷம் தான் என்றார்.

ஜெ ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது வேதனைகள் மட்டும் தான்-ப.சிதம்பரம்.


ஜெயலலிதா ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது வேதனைகள் மட்டும் தான் அதிகம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாரை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தேர்தல் அறிக்கை என்றால் முன்பெல்லாம் கட்சி அலுவலகங்களில் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், 2006ல் புதுமையான தேர்தல் அறிக்கையை தெளிவாகவும், துணிவாகவும் திமுக வெளியிட்டது.

இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் இலவச நிலம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என ஏராளமான திட்டங்கள் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் இருந்தது.

அப்போது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, இந்த அறிக்கை குறித்து கேலியும், கிண்டலும் செய்தார்.

ஆனால், ஆட்சிக்கு வந்த உடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றியது. சொன்ன திட்டங்கள் போக சொல்லாத ஏராளமான திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால், முதல் வரிசை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது.

இப்போதும் பல்வேறு திட்டங்களுடன் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. கடந்த முறை கேலி செய்தவர்கள் இப்போது அந்த அறிக்கையை காப்பியடித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியின்போது ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது, சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது, திருமண உதவித் தொகையை ரத்து செய்தது, கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதித்தது போன்ற வேதனைகள் தான் நினைவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதே மக்களுக்கு நன்மை தரும் என்றார்.

நக்கீரன் 2ம் கட்ட கருத்துக் கணிப்பு.

நக்கீரன் இதழ் நடத்தியுள்ள 2ம் கட்ட கருத்துக் கணிப்பின்படி 117 தொகுதிகளில், திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல் முடிவுகளை மிகச் சரியாக வெளியிட்டு வரும் இதழ் நக்கீரன்.

நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள், வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் 93,600 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

அந்தக் கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

234ல் பாதி தொகுதிகளான, 117 தொகுதிகளின் முடிவை இப்போது நக்கீரன் வெளியிட்டுள்ளது.

முடிவுகள் விவரம்:

இதன் படி திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

திமுக கூட்டணியில் திமுக 45 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 38 இடங்களி்லும், தேமுதிக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களி்லும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், மனித நேய மக்கள் கட்சி 1 இடத்திலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் முன்னணியில் உள்ளன.

மேலும் 117 தொகுதிகளின் முடிவுகள் அடுத்த இதழில் வெளியிடப்படும் என்று நக்கீரன் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவான அலையும் இல்லை, எதிரான சுனாமியும் இல்லை என்றும் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக நக்கீரன் கூறியுள்ளது.