Thursday, March 31, 2011

தமிழக அரசியல் இயக்கங்கள் – ஒரு பார்வை.

கை.அறிவழகன்.


தமிழகத் தேர்தல் களம் களை கட்டத் துவங்கி இருக்கிறது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடித் திருப்பங்கள், கட்சி அலுவலக உடைப்புகள், கொடும்பாவி எரிப்பு, நடிகர்களின் நகைச்சுவை, துதிபாடல்கள், நெடுஞ்சான் கிடையாகக் காலில் விழும் அரசு அலுவலர்கள், உளவுத் துறை வேலைகளுக்காக நடுவண் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர்க்கும் சேட்டுகள், தமிழகமெங்கும் மண்டல வாரியாகக் குத்தகை எடுத்துக் கொண்டு தேர்தல் பரப்புரை செய்யும் மு.க வின் வாரிசுகள், வாரி இறைக்கப்படும் இலவச அறிவிப்புகள், குழுச் சண்டைகள் என்று வழக்கமான தேர்தல் திருவிழா எல்லைகளைத் தாண்டி தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், அவற்றில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்கள் என்று இம்முறை வெயில் சூட்டையும் தாண்டி பற்றி எரிகிறது தமிழகம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமாக அரசியல் கட்சிகள் இரண்டே அணிகளாகத் தான் மோதிக் கொள்வது வழக்கம், இந்தத் தேர்தலிலும் அந்த வழக்கம் மாறாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை, ஆதியிலிருந்தே நமக்கு உண்டு, இல்லை என்ற தீர்க்கமான மனநிலை இருக்கிறது போலும், சினிமா என்றால் நீ சிவாஜியா?, எம்ஜியாரா? ரஜினியா? கமலா? அரசியல் என்றால் நீ எம்ஜியாரா? கலைஞரா? அல்லது ஜெயலலிதாவா? கலைஞரா? என்கிற ரீதியில் தான் நம்மைப் பழக்கி வைத்திருக்கிறோம், அல்லது வைத்திருக்கிறார்கள், இதைத்தாண்டி, இந்த அரசியல் கொள்கை நலம் வாய்ந்ததா? இந்த மனிதர் நேர்மையானவரா? இந்தக் கட்சியின் கடந்த ஆட்சியில் என்ன மாதிரியான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன? நமது தொகுதியின் வேட்பாளர் தொகுதியின் வளர்ச்சியில் அல்லது மக்கள் நலத் திட்டங்களில் உண்மையில் அக்கறை உள்ளவரா? என்பது மாதிரியான கேள்விகளைக் கேட்டு, அலசி ஆராய்ந்து நமது முந்தைய தலைமுறை வாக்களித்த மாதிரித் தெரியவில்லை, இதன் பின்புலமாக ஒரு நம்பிக்கை சார்ந்த பாரம்பரியம் இருக்கிறது, அரசியல் விழிப்புணர்வும், உரிமைகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாத ஒரு சமூகத்தை, மனுதர்மத்தில் உருவாக்கப்பட்ட உயர்சாதி மக்களைத் தவிர்த்த ஒட்டுமொத்த சமூகத்தை, ஏறத்தாழ ஒரு மிகப்பெரிய எழுச்சிக்கும், போராட்டத்துக்கும் வழிவகை செய்த தந்தை பெரியாரின் திராவிட இயக்கம், உழைக்கும், எளிய மக்களின் மீது காட்டிய உயரிய அன்பும், உண்மையான அக்கறையும் கேள்விகள் எதுவும் கேட்காமல் திராவிட இயக்கங்களுக்கு வாக்களிக்க மக்களைத் தூண்டியது.

தேசியம், தேச நலன் என்று பேசிக் கொண்டு முதலாளித்துவத்தை மறைமுகமாகத் துதிபாடிய காங்கிரஸ் இந்திய விடுதலைக்குப் பின்னர் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்தது தமிழகத்தில் நிகழ்ந்தது, ஏறத்தாழ காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் ஒரு சட்டமன்ற இடத்தைக் கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது, ஆயினும், தமிழகத்தில் காங்கிரஸ் பெருமளவில் வளர்ந்து வருவதைப் போலவும், அதற்கு லட்சக் கணக்கில் உறுப்பினர்கள் இருப்பதைப் போலவும் அதன் தலைவர்கள் அவ்வப்போது படம் காட்டுவது இயல்பு.

சரி, நாம் செய்திக்கு வருவோம், ஒரு சிக்கலான காலகட்டத்தில் மட்டுமல்லாமல் மிக முக்கியமான காலகட்டத்திலும் தமிழக நடுத்தர மற்றும் உழைக்கும் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், நம்மைச் சுற்றி ஒரு மாய வலை பின்னப்பட்டிருக்கிறது, இனம், இனநலன் என்று ஒருபக்கம் நாடகமாடியபடியே இன்னொருபுறம் இனத்தையும் அதன் உயிர்ப் பொருட்களையும் வேரறுக்கும் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் இந்தத் தேர்தலில் என்ன செய்ய வேண்டும்?, யாருக்கு வாக்களிக்க வேண்டும்?, யாரை வேரறுக்க வேண்டும்? என்ன மாதிரியான திட்டங்களை ஆதரிக்க வேண்டும்? இனி வரும் ஆட்சியாளர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்? நம் முன்னே தொடர்ந்து எழுகிற இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் தேடித் பயணிக்க வேண்டியிருக்கிறது. நாம் இதற்கான விடைகளைத் தேடித் புறப்படும் முன்னதாக நமக்கு முன்னதாக நின்று கொண்டிருக்கும், வாக்குக் கேட்கும் கட்சிகளைப் பற்றிய ஒரு குறிப்புத் தேவைப்படுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம்:


தெரிந்தோ தெரியாமலோ திராவிடக் கட்சிகளின் மூலமாக, ஆணி வேராக நிலைத்திருக்கும் இந்தக் கட்சியின் கடந்த காலச் செயல்பாடுகள், கொள்கைகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் கருணாநிதி என்கிற ஒற்றை அச்சில் தான் சுழன்று கொண்டிருக்கிறது.

கடந்த கால ஆட்சியில் இந்தக் கட்சியின் நேர்மறையான தாக்கங்கள்:

1) ஏழை எளிய உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது.

2 ) ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டம் உண்மையில் பல்வேறு உழைக்கும் தரப்பு மக்களின் உயர் ஆதரவைப் பெற்றுத் தந்திருக்கிறது.

3) மக்களோடு அல்லது கட்சித் தொண்டர்களோடு நெருக்கமான உறவையும், அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் பலவற்றில் தலையிட்டுத் தீர்வுகள் காணும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் இருப்பது.

4) அறிவார்ந்த சமூகம் அல்லது இளைய தலைமுறை என்னதான் இலவசத் தொலைக்காட்சி குறித்த எள்ளல்களையும், குறைகளையும் கூறினாலும் மக்களிடத்தில் அது ஒரு மிகப்பெரிய தாக்கம் விளைவித்திருக்கிறது என்பதை ஊரகப் பகுதி மக்களோடு உரையாடும் போது காணமுடிகிறது.

5) பெண்கள் திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களின் உதவித் தொகைத் திட்டம், அரசினால் ஊக்குவிக்கப்படும் மகளிர் தன்னுதவிக் குழுக்கள் போன்றவை இந்த அரசின் பால் பெண்களைப் பெரும் அளவில் கவர்ந்திழுத்திருக்கிறது.

6) முதியோர் உதவித் தொகை, இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஐம்பத்தெட்டு வயதான முதியவர்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் போன்றவை வயதான பெண்களையும், முதியவர்களையும் பெருமளவில் தி.மு.கவின் பால் நகர்த்த உதவியாக இருக்கும்.

7) மாநிலம் முழுவதும் நடந்தேறி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய ஆதாரப் பூர்வமான விளக்கங்கள், குறிப்புகள் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் நேர்மறை விளைவுகளைக் கொடுக்கக் கூடியவர்கள்.

8) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பல்வேறு விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும், ஊரகப் பகுதி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பையும், பயனாளிகளையும் பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

9) தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுக்கச் செயல்படுத்த முடியாத ஒரு அரைகுறை பகுத்தறிவுக் கட்சியாக இருந்தாலும், இன்னும் குறைந்த பட்சப் பகுத்தறிவுக் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டிருப்பது பெரியார் தொண்டர்களையும், திராவிடர் கழக உறுப்பினர்களையும் தி.மு.கவின் பக்கம் இன்னும் வைத்திருக்கிறது.

10) தன்னிச்சையாகவும், சர்வாதிகாரத் தொனியிலும் முடிவுகளை எடுக்காமல் குறைந்த பட்ச ஜனநாயக முறைப்படி முடிவுகளை எடுப்பதும், அவற்றை முறையாக ஊடகங்களில் கொண்டு சேர்ப்பதும் நடுநிலையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் ஒரு கட்சியாக எப்போதும் வைத்திருக்கிறது.

எதிர்மறைத் தாக்கங்கள்:

1) கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சி, ஆட்சி, மாநிலம், தேசியம், ஊடகம், திரைப்படம் என்று எல்லாத் துறைகளுக்குள்ளும் நுழைவதை எல்லாத் தரப்பும் கூர்ந்து கவனித்தபடியே இருக்கிறது, ஸ்டாலின் தவிர்த்த எந்த குடும்ப உறுப்பினரையும் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கான தலைவராக ஏற்றுக் கொள்ள கட்சி உறுப்பினர்களே தயங்கினாலும் அவர்கள் மீது கட்டாயமாக அந்தச் சுமை ஏற்றப்படுகிறது.

2) மாநில சுயாட்சி போன்ற தனது நீண்ட காலக் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு, நடுவண் அரசின் ஆட்சியாளர்களோடு இணைந்து தி.மு.க அமைச்சர்கள் அடிக்கிற கொள்ளைகளை தொடர்ந்து ஊடகங்களில் வரும் செய்திகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருப்பது.

3) நீண்ட காலமாக கட்சிக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் உழைக்கும் தொண்டர்களை விடுத்து கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு பதவிகளை அடைவது, அதன் மூலம் தனிப்பட்ட பல்வேறு பயன்களை அனுபவிப்பது.

4) தொலைநோக்குத் திட்டங்களாக இருக்க வேண்டிய கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் கவனம் குறைத்து இலவசங்கள், வாக்கு வங்கி அரசியல் போன்றவற்றில் ஈடுபடுவது.

5) ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் வெளிப்படையான தன்மையை இழந்து, காங்கிரஸ் அரசின் குளறுபடிகளுக்கும், ஏவல்களுக்கும் துணையாக இருப்பது, தொகுதி உடன்பாட்டின் போது நடத்தப்பட்ட நாடகங்கள், அமைச்சர்களைத் திரும்பப் பெரும் ஏமாற்று வேலை, மறைமுக பேரங்கள் இவற்றை மக்கள் அமைதியாக ஊடகங்களின் வழியே பார்த்துக் கொண்டிருப்பது.

6) ஈழப் போராட்டம் அதன் உச்சகட்ட மனித இழப்புகளைச் சந்தித்த போது நடத்தப்பட்ட சொந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், நடுவண் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறாமல் நடத்தப்பட்ட பல்வேறு நாடகங்கள், இவற்றின் மூலம் இளைய தலைமுறைத் தமிழர்களிடையே இழந்து போன மரியாதை, ஆதரவு.

7) தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை எதிர்த்து எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் தொடர்ந்து கடிதம் எழுதுவது, தந்தி அடிப்பது போன்ற மிதமான செயல்களை எந்தக் குற்ற உணர்வும் இன்றி அரங்கேற்றியது.

8) முந்தைய அரசின் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களுக்குக் குறிப்பாக மழை நீர் சேகரிப்பு, கழிவறையைக் கட்டாயமாக்குதல் போன்றவற்றைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அமைதி காத்தது.

9) நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்து, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கத் தவறியது மட்டுமன்றி உள்ளாட்சி நிர்வாகங்களில் நடைபெறும் பல்வேறு மேலாதிக்க ஊழல்களை ஊக்குவிப்பது, கண்டும் காணாமல் இருப்பது.

10) தொடர்ந்து தலித் மக்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த எந்தத் தீவிரமான நடவடிக்கைகளும் எடுக்காதது, தலித் மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பல்வேறு அமைப்புகளை அடித்து நொறுக்கி ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அரசின் அடாவடி.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்:


திராவிடக் கட்சிகளின் முகத்திரையோடு இயங்கி வரும் ஒரு வல்லாதிக்க அரசியல்வாதியாக ஜெயலலிதா அறியப்பட்டாலும், பல்வேறு காலகட்டங்களில் தன்னுடைய இந்துத்துவ உண்மை முகத்தைக் காட்டத் தவறாத ஒரு பார்ப்பனப் பெண்மணியாகவே இவரை அறிய முடிகிறது, உழைக்கும் மக்களையும், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களையும் தன்னுடைய திரை முகத்தின் மூலம் கவர்ந்து கட்டி இழுத்துத் தனது இலவச மற்றும் அதிரடி எளிமை வேடத்தால் ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மாற்றாக ஆட்சியில் அமர்த்திய எம்.ஜி.ஆர் அவர்களின் நேர்மறையான பயன்கள் அனைத்தையும் தனது அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைத்துக் கொண்டு செயல்படுகிற ஜெயலலிதாவைச் சுற்றியே இந்த இயக்கம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த கால ஆட்சியில் இந்தக் கட்சியின் நேர்மறையான தாக்கங்கள்:

1) நிர்வாகச் சீர்கேடுகளைக் களைந்து ஒரு வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க முயற்சி செய்தது.

2) பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டி அவற்றை மிகுந்த கண்டிப்புடன் செயல்படுத்தியது.

3) சரியோ, தவறோ தனது அரசால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுத்த முனைந்தது.

4) தவறான கொள்கைகளையும் சமரசங்கள் இன்றி முன்னெடுக்க விழைந்தது.

5) சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்களை பல்வேறு தடைகளுக்கு இடையே முன்னெடுத்து நிறைவேற்ற முயற்சி செய்தது.

6) தூர்ந்து போன பல்வேறு கண்மாய் மற்றும் ஏரிகளைத் தூர்வாரி நீர்வளத்தைக் காப்பதற்கான தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டியது.

7) மழை நீர் சேகரிப்பு, கட்டாயக் கழிவறைத் திட்டம் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தியது.

8) சிதைந்து போயிருந்த நிதி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தி வரி மற்றும் ஒப்பந்தங்களில் கண்டிப்புடன் செயல்பட்டது.

9) உள்கட்டமைப்பு வசதிகளைப் பரவலாக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்றது.

10) சமூக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டு குற்றங்களின் விகிதத்தைக் குறைத்தது.

இனி எதிர்மறைத் தாக்கங்கள்

1) ஒரு சர்வாதிகாரி போலத் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது.

2) இரண்டாம் கட்டத் தலைவர்களை அடிமைகளைப் போல நடத்தி உள்கட்சி ஜனநாயகம் அறவே இல்லாமல் ஒழித்தது.

3) ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர் போல அன்றி நியமிக்கப்பட்டவர் போல மக்களிடம் நடந்து கொண்டது.

4) இட ஒதுக்கீடு மாதிரியான உணர்வுப் பூர்வமான விஷயங்களில் ஒருதலைப் பட்சமான முடிவுகளை எடுத்துப் பின் எதிர்ப்புக் கண்டு பின்வாங்கியது.

5) பல்வேறு காலகட்டங்களில் தனது இந்துத்துவ ஆதிக்க முகத்தை எவ்விதக் கூச்சமும் இன்றி வெளிப்படுத்திக் கொள்வது.

6) அரசியல் நாகரீகம் இன்றிப் பல்வேறு இடங்களில் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களை அவமதிப்பது.

7) விஜயகாந்த் மாதிரியான புதிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மாலை மரியாதையும், வை.கோ போன்ற நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்களை தொகுதிப் பங்கீட்டில் அவர் நடத்திய விதம் அவரது கட்சித் தொண்டர்களையே முகம் சுளிக்க வைத்தது.

8) அரசு ஊழியர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தியது, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து அவர்களின் ஆதரவை இழந்தது.

9) ஈழ மக்கள் குறித்த பல்வேறு செய்திகளில் இரட்டை வேடம் புனைந்து வாக்கு அரசியல் நடத்தியது.

10) சசிகலா குடும்பத்தினரோடு கூடிக் குலவி கட்சியை அவர்களது கூடாரமாக மாற்றியது. அவர்களில் பலருக்குக் கட்சியில் செல்வாக்கு வழங்கியது.

பாட்டாளி மக்கள் கட்சி:


வன்னிய சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக வலம் வரும் ராமதாஸ் குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ இயக்கமாக இருந்தாலும், பல்வேறு காலகட்டங்களில் உழைக்கும் மக்களுக்கான நலத் திட்டங்களில் கவனம் செலுத்தியது, மொழி மற்றும் இனம் சார்ந்த மாநில அரசியலில் அதிகக் கவனம் செலுத்தி இயக்கத்தை ஒரு கட்டுக் கோப்புடன் செலுத்துவது, ஈழத் தமிழர்களின் துன்பத்தில் எப்போதும் அதிகக் கவனமும், உண்மையான அக்கறையும் கொண்டு இயங்கியது போன்ற சில நேர்மறைத் தாக்கங்கள் இருந்தாலும், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அதற்காக எந்த விதமான சமரசங்களையும் மேற்கொள்ளும் கூட்டணிகளை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு இயக்கம் என்கிற எதிர்மறை இந்த இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வைத்திருக்கிறது, தொடர்ந்து சாதிக் கட்சி அரசியல் செய்யும் இயக்கமாகவே தன்னை வைத்துக் கொள்ள விரும்பும் இந்த இயக்கம் மாற்று சமூக மக்களிடையே நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மையைப் பெற முயற்சி செய்யவே இல்லை. ஆயினும் தேர்வு செய்யப்பட தொகுதிகளில் இந்த இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் களப் பணியாற்றி இருப்பதும், மக்களின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதும் இவர்களை ஒரு தவிர்க்க இயலாத அரசியல் இயக்கமாக தமிழக அரசியலில் மாற்றி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

தே.தி.மு.க:


குறுகிய காலத் தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வது என்பது மிகக் கடுமையான ஒரு நிலைதான், ஆனாலும் இந்தத் தடைகளை உடைத்து விஜயகாந்த் என்னும் தனி மனிதர் ஒரு இயக்கத்தைக் கட்டி அமைத்து இருபெரும் திராவிட இயக்கங்களும் இவரது இயக்கத்தை ஒரு அரசியல் ஆற்றலாக உணர வைத்ததே மிகப் பெரிய சாதனை தான். அடிப்படை அரசியல் இயக்கங்களின் வரலாற்றை நன்கு புரிந்து கொண்டவர்கள் பலரைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு அவர்களின் ஆலோசனைப் படி தனது அடிகளை எடுத்து வைப்பதில் விஜயகாந்த் மிகக் கவனமாகவே இருக்கிறார் என்பது இந்தத் தேர்தலில் அவர் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துக் கொனடத்தில் இருந்தே தெரிய வருகிறது, பல்வேறு சமரசங்களைச் செய்து கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கியைத் தனக்கென உருவாக்கி வைத்திருக்கும் விஜயகாந்த் இனி வரும் காலங்களில் எப்படி மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்தப் போகிறார் என்பதில் தான் அவரது அரசியல் எதிர் காலம் அடங்கி இருக்கிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்:


"டான் அசோக்" என்கிற இணையப் பதிவர் இப்படி ஒரு மேற்கோள் காட்டியிருந்தார், "தவறான முடிவெடுக்கும் சரியான தலைவர்கள் காணாமல் போவார்கள் என்பதற்கு வைகோவும், சரியான முடிவெடுக்கும் தவறான தலைவர்கள் நிலைப்பார்கள் என்பதற்கு ராமதாசும் சரியான உதாரணம்",

இதன் முதல் பாதியோடு நான் முழுமையாக உடன்படுவேன், பல்வேறு காலகட்டங்களில் பல தவறான முடிவுகளை எடுத்ததால் ஒரு இயக்கத்தையே அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றவர் வை.கோ என்றால் அது மிகையாகாது, சிறந்த அறிவாற்றலும், சிந்தனைகளும், பேச்சாற்றலும் கொண்டிருக்கும் மிகக் குறைந்த அரசியல் தலைவர்களில் வை.கோவும் ஒருவர் என்பதை அவரது அரசியல் எதிரிகளே கூட ஒப்புக் கொள்வார்கள். ஆனாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவரின் தவறான சில கொள்கை முடிவுகளால் இன்று தேர்தல் அரசியலில் பங்கு பெறவே இயலாத ஒரு நிலை உருவாகி இருப்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று விளங்கவில்லை, இது ஒரு பின்னடைவாக இருந்தாலும், இத்தகைய நெருக்கடிகளை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இன்னும் தீவிரமாக அவர் மக்கள் பணியாற்றுவாரேயானால் அவரது வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் இன்னும் அழிந்து விடவில்லை என்பது மட்டும் உண்மை. இந்தத் தேர்தலில் அவர் பங்கேற்காமல் இருப்போம் என்று சொன்னதாவது அவர் முதன் முதலில் எடுத்த சரியான முடிவாக இருக்கட்டும்

விடுதலைச் சிறுத்தைகள்:


திருமாவளவன் என்கிற ஒரு தனி மனிதனால் துவக்கப்பட்டு, அந்தத் தனி மனிதனின் கால்கள் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களின் கரடு முரடான மண் சாலைகளில் புழுதியோடு பயணித்து வளர்க்கப்பட்டு, அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளாலும், தந்தை பெரியாரின் அடிச் சுவடுகளாலும் முன்னெடுக்கப்பட்டு இன்று தமிழக அரசியல் களத்தில் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்து இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை விமர்சனம் செய்வது என்பது பல நண்பர்களால் எதிர்மறையாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தாலும், வேறு வழியில்லை. இன்றைய தமிழகச் சூழலில் தலித் மக்களின் வாழ்க்கை முன்னிருந்ததை விட மிக அதிகமான தாக்குதலுக்கும், வன்முறைக்கும் ஆளாகிறது என்கிற உண்மை பல்வேறு அமைப்புகளாலும், தனி மனிதர்களாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது, இன்றைய அரசுகளும், அரச இயந்திரங்களும் குறிப்பாக காவல் துறையும் தலித் மக்களின் எதிரிகளாகவே செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு மிக நெருக்கத்தில் நம்மால் பல எடுத்துக் காட்டுகளைக் கண்டறிய முடியும், மிதிவண்டியை ஓட்ட முடியாத, காலணி அணிந்து செல்ல முடியாத, நாற்காலியில் அமர முடியாத, அரசுப் பணியாற்ற முடியாத, பொதுக் கிணற்றில் நீர் எடுக்க முடியாத, குழந்தைகளுக்கு பொது மருத்துவமனைகளில் மருந்துகளை வாங்க முடியாத அடிமைகளாக இன்னும் தமிழகத்தில் எண்ணற்ற கிராம மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான முகவரியாகவும், இவர்களின் அரசியல் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டிய இந்த இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக திராவிட ஆண்டைகளின் எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, தனது இயக்கத் தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் துவக்க காலத்தில் ஒரு அறிவு வழிகாட்டியாக இருந்து செயல்பட்ட திருமாவளவனின் இன்றைய பாதை கருணாநிதியின் ஊதுகுழலாக இருப்பதை தலித் மக்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள், எந்தச் சமரசங்களும் இன்றி தலித் மக்களின் விடுதலையை நோக்கிய பயணத்தில் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்கிற உயரிய தனது நோக்கத்தில் இருந்து அவர் ஒரு தேர்தல் அரசியல்வாதியாக உருமாற்றம் அடைகிறாரோ என்கிற அச்சத்தோடு தான் அவரை நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஆயினும், தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவரும் அவரது இயக்கமும் வீரியத்துடன் பங்காற்றுகிறார்கள் என்பதை தேர்தல் காலத்தில் அவரது இயக்கம் பெரும் வாக்கு விழுக்காட்டில் இருந்து அறிந்து கொள்ள முடியும். தனது சொந்த வாழ்க்கையை, குடும்பத்தை எல்லாம் விடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இரவும் பகலும் தொடர்ந்து இயங்கும்

திருமாவளவனின் அரசியல் பாதையில் துதி பாடல்களும், வழிபாடுகளும் இருக்கக் கூடாது என்பதே ஒவ்வொரு அறிவார்ந்த ஒடுக்கப்பட்ட இளைஞனின் எண்ணமாக இருக்கிறது. இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களை உருவாக்குவதும், அவர்களைத் தனக்கு இணையான வழி நடத்தும் தகுதி கொண்ட தலைவர்களாக உருவாக்குவதும் அவருக்கு முன்னர் இருக்கும் மிகப்பெரிய பணிகளில் ஒன்று. ஈழம் தொடர்பான அவரது நிலைப்பாடுகளில் நிலவும் வெளிப்படையற்ற தன்மையும், காங்கிரஸ் கட்சிக்காகவும், தி.மு.க வுக்காகவும் அவர் செய்து கொள்ளும் சமரசங்களும் அவரது நிலைத்தன்மை குறித்த எதிர்மறை எண்ணங்களை வரும் தலைமுறையிடத்தில் உருவாக்கலாம் அல்லது உருவாக்கி இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

புதிய தமிழகம்:


துவக்கப்பட்ட போது இருந்த தேவைகள் அனைத்தும் இன்னும் அப்படியே இருக்கும் போது இயக்கத்தில் சோர்வடைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்று தான் டாக்டர்.கிருஷ்ணசாமியைச் சொல்ல வேண்டும், அறிவார்ந்த துணிவோடு பல்வேறு தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை வழிநடத்திய இந்த இயக்கம், பாதி வழியில் சோர்வடைந்து நின்று போனதன் காரணம் என்னவென்று கண்டறிய வேண்டும், மீண்டும் ஒரு எழுச்சி பெற்ற இயக்கமாக அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவனின் ஆவலாய் இருக்கிறது. பல்வேறு துணை அமைப்புகளாகச் செயல்படுகிற ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அரசியல் ஆற்றலாக பரிணாமம் செய்வது டாக்டர்.கிருஷ்ணசாமியின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால், அதை அவர் வெற்றிகரமாகச் செய்வாரேயானால் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து செயல்படுகிற காலம் கனியலாம்.

நாம் தமிழர்:


நம்மைப் போலவே ஈழத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிரையும் கண்டு குருதி கொதித்து, உறக்கம் இழந்து தவித்து, அழுதவர்களை ஒருங்கிணைத்து ஒரு இயக்கமாக உருவாக்கி இருக்கும் அண்ணன் சீமான் அவர்களின் மீது தணியாத அன்பும், மதிப்பும் என்னைப் போலவே பலருக்கு இருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் நாம் அவரை விமர்சனம் செய்தாலும் அது குடும்பங்களில் நிகழும் குட்டிச்சண்டை என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறது, அப்படி என்றால் என்னதான் சிக்கல், அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளில் சிக்கல், ஒரு அரசியல் இயக்கமாக நாம் பயணம் செய்யும் போது நமக்கு அருகில் இருக்கும் மக்களை அவர்களின் அன்றாட வாழ்வின் சிக்கல்களை உணர்ந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து, என்ன மாதிரியான நீண்ட காலத் திட்டங்களால் நமது இலக்கை அடைய முடியும் என்கிற உறுதியான கொள்கைகளோடு பயணிக்கும் போது மட்டுமே ஒரு தெளிந்த அரசியல் இயக்கமாகச் செயல்பட முடியும், எல்லா நேரங்களிலும் ஒலிபெருக்கியில் முழங்குவதால் மட்டுமே விடுதலையும், அரசியல் இயக்கமும் வளரும் என்று நம்புவதும், உணர்வுப் பூர்வமான விஷயங்களை உட்புகுத்தி வளரும் தலைமுறை இளைஞர்களை வன்முறை மற்றும் பிறழ்வு மனநிலையை நோக்கி நகர்த்தும் தனது செயல்களை மாற்றி அமைத்துக் கொண்டு, நாளொரு வசனமும், பொழுதொரு ஆதரவும் தேடித் திரிபவர்களாக பல இளைஞர்களை மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் இயக்கம் குறித்த முன்னோடிகளின் கருத்தாக இருக்கிறது. நீண்ட காலச் செயல் திட்டங்களையும், அடிப்படை அரசியல் நுட்பங்களையும் அறிந்து தனக்கு அருகில் இருக்கும் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனின் குரலாக அவரது குரல் ஒலிபெருக்கிகளில் முழங்கத் துவங்குமேயானால் அதை விட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது. நடிகர்களையும், வல்லாதிக்க மனநிலை கொண்டவர்களையும் முன்னிறுத்துவது, முன்னுக்குப் பின் முரணான செய்திகளைச் சொல்வது போன்ற முந்திரிக் கொட்டை மனநிலையில் இருந்து அமைதியாகவும், அறிவார்ந்த வகையிலும் புதிய தலைமுறைத் தமிழர்களை அவர் வழி நடத்துவாரா??

கம்யூனிஸ்ட்டுகள்:


களப் பணியாற்றவும், எளிய மக்களின் குரலாகவும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் இயக்கங்கள் திராவிடக் கட்சிகளின் தோள்களை மட்டுமே நம்பிக் கொண்டிருப்பதில் இனியும் பயனில்லை, ஏனென்றால் திராவிடக் கட்சிகள் கம்யூனிசக் கொள்கைகளுக்கு எதிராகத் திரும்பி நடை போடத் துவங்கி நீண்ட காலமாகிறது, மக்கள் மன்றத்தில் தனியாகத் தேர்தலைச் சந்திக்கும் நேர்மை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருந்தும் அவை துணிவற்ற இயக்கங்களாகவே தமிழகத்தில் இருக்கிறது என்பதை அவர்களின் தேர்தல் காலச் செயல்பாடுகள் உறுதி செய்கின்றன. தனித்த மக்கள் இயக்கங்களாக நாம் வளர முடியும் என்கிற அடிப்படை நமபிக்கையை நோக்கி இனி அவர்கள் நடை போடுவது தான் கட்சிக்கும், மக்களுக்கும் நலம் தரும். வழக்கமான சில குறைகளைத் தவிரத் தொடர்ந்து ஒலிக்கும் அவர்களின் குரல் தமிழக அரசியல் அரங்கில் இன்னும் வலிமையாக ஒலிக்க வேண்டும் என்பது தான் பொதுவுடைமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிற ஒவ்வொரு எளிய மனிதனின் ஆவல். வரும் காலங்களில் நமது நம்பிக்கையைக் காப்பாற்றுவார்களா காம்ரேடுகள்???

காங்கிரஸ்:


தமிழ்நாட்டில் இருந்து பெருந்தலைவர் காமராஜருக்குப் பின்னர் ஏறத்தாழ துரத்தப்பட்டிருக்கும் காங்கிரஸ், தொடர்ந்து நடுவண் அரசில் தனக்கு இருக்கும் அதிகார ஆற்றலை மையமாக வைத்து திராவிடக் கட்சிகளைத் தனது பகடைக் காயாக மாற்றி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை, தேசிய அரசியல் அல்லது ஆசிய மண்டல அரசியல் என்ற பெயரில் தீவிரவாத ஒழிப்பு என்கிற முகமூடி போட்டுக் கொண்டு உலகின் மிக உயர்ந்த நாகரீகத்தையும், பண்புகளையும் கொண்ட மக்கள் குழுவைத் தனது கொடுமையான கரங்களால் கண்ணெதிரில் அழித்துத் துடைத்து எடுத்ததை இனி வரும் தலைமுறைத் தமிழர்களில் யாரும் அத்தனை எளிதில் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். எந்தக் கட்சி என்ன கூட்டணி வைத்திருந்தாலும் காங்கிரஸ் இயக்கம் தமிழ் மண்ணில் இருந்து துரத்தப்பட வேண்டும், இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, குறைந்த பட்சம் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அதற்கு எதிரான பரப்புரைகளை நாம் செய்தே ஆகவேண்டும், இன்னும் தீவிரமாக நமது அறிவாயுதங்களைப் பயன்படுத்தி காங்கிரஸ் இயக்கத்தை துரத்தி அடிப்பதில் தான் நமது பண்பாடும், மொழியும் காக்கப்படும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டே ஆக வேண்டும், இது தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு இளைஞனுக்கும் முன்னிருக்கும் கடும் சவால் மட்டுமல்ல, மனிதனாக ஒரு சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதி என்றே நான் கருதுவேன். எத்தனை அறிவார்ந்த தலைவர்களாயினும் அவர்களின் அடிப்படைத் தத்துவம், பொருளாதார மற்றும் அரசியல் நலன்களுக்காக எத்தகைய கொடுஞ்செயல்களையும் புரியத் தயாராய் இருப்பதை ஒரு போதும் நாம் மன்னிக்கவும் சமரசம் செய்து கொள்ளவும் முடியாது. காங்கிரஸ் கட்சியை தமிழகத்தை விட்டுத் துரத்துவதே ஈழத்தில் இறந்து போன எம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முதியவர்களுக்கும் நாம் செலுத்துகிற வணக்கமும், அஞ்சலியும்.

நமக்கான அரசியல் இயக்கங்களையும், எதிர்காலத்தையும் நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு மிகச்சிறந்த காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம், மிகச் சிறந்த விழிப்புணர்வை உண்டாக்குவதில் ஒவ்வொரு அறிவுத் தளங்களில் இயங்கும் இளைஞனுக்கும் கடமையும், உரிமையும் இருக்கிறது. இனி தமிழ் மக்களின் எதிர்காலம், வளர்ச்சி, இயக்கம் அனைத்தும் அவர்கள் தேர்வு செய்யப் போகும் உறுப்பினர்களின் கைகளில் இருந்து துவங்கும், அது தனித் தமிழ் தேசியமாகட்டும் அல்லது உலகப் பொது உடைமை ஆகட்டும். நமது எண்ணங்களும், சிந்தனைகளுமே தத்துவங்கள், நமக்கான தத்துவங்களே நமக்கான விடுதலை. நாம் எவற்றில் இருந்தும் விடுதலை பெறுவோம், அழகான ஒரு உலகத்தை நம் தலைமுறைக்குக் கொடுப்போம்.


பின்குறிப்பு – காங்கிரஸ் கட்சியின் கொடி விரைவில் கிடைக்காத காரணத்தால் அதன் இலங்கைக் கிளைக் கொடியைப் பதிவு செய்கிறோம்.

Wednesday, March 30, 2011

சேலம் - நாமக்கல், இடையே இரயில் வெள்ளோட்டம்.

சேலம், நாமக்கல், கரூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக சேலம்-கரூர் இரயில் இருந்து வந்தது. இதற்க்காக அகல இரயில் பாதை அமைத்திட 1996-97ஆம் ஆண்டு இரயில்வே துறை அனுமதி வழங்கி பணிகள் நடைபெற்று வந்தது.

சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 53கிலோ மீட்டர் தூரம் ஒரு பிரிவாகவும், நாமக்கல்லில் இருந்து கரூருக்கு 32கிலோ மீட்டர் தூரம் ஒரு பிரிவாகவும், மொத்தம் 85கிலோ மீட்டர் தூரம் புதிய அகல இரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த இரயில் வழித்தடத்தில் குறுக்கிடும் பாதைகள், ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றின் மீது இரயில்வே பாலங்கள் கட்டப்பட்டன.

மேலும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்தது. சுமார் 700கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் நிறைவடைந்து, சேலம் - நாமக்கல் இடையே இரயில் முதல் சுற்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக 28-03-2011 அன்று நடைபெற்றது. விரைவில் சேலம்-கரூர் இரயில் பயண்பாட்டிற்கு வரும்.

என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - விஜயகாந்த். - வடிவேலுவின் எதிர்கேள்வி.

நான் வேட்பாளரை அடித்துவிட்டதாக ஊரெல்லாம் அவதூறு பரப்புகிறார்கள். அட ஆமாய்யா... நான் என் ஆளைத்தான் அடிச்சேன். என் கையில் அடிவாங்குபவன் நாளை மகாராஜா ஆவான், என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தர்மபுரி தொகுதியில் வேட்பாளர் ஏ.பாஸ்கரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசும் போது, தர்மபுரி தொகுதி வேட்பாளர் பாஸ்கர் பெயரை பாண்டியன் என்று கூறி விட்டதாகவும், அதை சுட்டிக் காட்டிய வேட்பாளர் பாஸ்கரை அவர் அடித்ததாகவும் தொலைக்காட்சிகளில் வீடியோவுடன் தகவல் வெளியானது.

அவரது இந்த செயலுக்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணி பிரச்சாரங்களிலும் இந்த செயல் பிரதானமாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் விஜயகாந்த் தனது உதவியாளரை மைக்கை சரி செய்து கொடுக்காததால் அடித்ததாக மற்றொரு செய்தி வெளியானது. ஆனால் இதை விஜயகாந்த் மறுத்தார்.

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பெருமாளை ஆதரித்து அவர் பேசும் போது இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

விஜயகாந்த் கூறுகையில், "நான் வேட்பாளரை அடித்ததாக தொலைக் காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர். அட ஆமாய்யா, அடிச்சேன். என் ஆளைத்தானே அடித்தேன். என்னைப்பற்றி என் கட்சிகாரர்களுக்குத்தான் தெரியும்.

தப்பு நடந்தால் தட்டி கேட்பது இந்த விஜயகாந்த்தின் புத்தி. என் கையில் இன்று அடிவாங்கியவன் நாளை மாகாராஜா ஆவான். நான் சினிமாவில் காசு பார்த்து விட்டு அரசியலுக்கு வந்தவன்.

அரசியலில் காசு பார்க்க வரவில்லை. சாதி, மதத்தை வெறுக்கின்றவன் நான். காய்கறி, பெட்ரோல் விற்கிறவன் சாதியை பார்த்தா விற்கிறான்? இங்கு கூடி இருக்கிற நீங்கள் எந்த ஜாதி என எனக்குத் தெரியாது", என்றார்.

நான் அவனில்லை.... - சொல்கிறார் பாஸ்கரன்!

இதற்கிடையே, விஜயகாந்திடம் அடிவாங்கிய அனுபவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, "தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார். மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்த போது பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார்.

ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். நான் கட்சி துண்டை கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி...", என்றார்.

என் ஆளைத்தானே அடித்தேன் என்று விஜயகாந்தே ஒப்புக் கொண்ட பிறகும், பாஸ்கரன் என்னமாய் சமாளிக்கிறார் பாருங்கள்!

வடிவேலுவின் எதிர்கேள்வி

என்னிடம் அடி வாங்கினவங்க எல்லாம் மகாராஜா ஆகிவிடுவாங்க என விஜயகாந்த் கூறுகிறார். அப்புறம் எதுக்கு கட்சி.

கட்சியை கலைத்துவிட்டு உங்க கல்யாண மண்டபத்துக்கு முன்னாடி அனைவரையும் வரிசையா நிற்க வைத்து, ஒவ்வொருவரையும் முதுகில் நாலு குத்து, மூக்கில் நாலு குத்து, மூக்கை உடைத்து எல்லாரையும் மகாராஜாவாக ஆக்கிவிடு.

எதுக்கு எலெக்ஷன். டோட்டலா அந்த கூட்டணியை கலைங்க. கூட்டணி தலைவர்களை வரவழைத்து அவர்கள் வாயில குத்து. குத்தி மகராஜாவாக ஆக்கிவிடு. இவர்கிட்ட அடிவாங்கியவர்களெல்லாம் மகாராஜா ஆகிவிடுவார்களாம். நான் செய்ற காமெடியெல்லாம் அந்த அணியில் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இவ்வாறு வடிவேலு பேசினா

6 மந்திரிகள் அவுட்... 7 பேர் டவுட்!

கடந்த ஐந்து வருடங்களாக மடிப்புக் கலையாத சட்டையோடு, சைரன் ஒலித்த காரில் அமைச்சர் என்ற அந்தஸ்தோடு பந்தாவாக வலம் வந்தவர்கள்...இன்று கொளுத்தும் வெயிலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், இடுப்பு வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு மக்களிடம் ஓட்டுக்காக கையேந்தி, தெருத் தெருவாக நடந்துகொண்டு இருக்கிறார்கள்!

தி.மு.க. அமைச்சரவையில் மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி இருவருக்கு மட்டும்தான் இந்த முறை ஸீட் இல்லை. மற்ற அனைவருமே களத்தில்! இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

அமைச்சர்களாக இருந்தவர்கள் போட்டியிடும் தொகுதிகளை ஜூ.விநிருபர்கள் அலசி ஆராய்ந்து கொடுத்திருக்கும் முதல் கட்ட சர்வே இதோ...

வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி): 'வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியில் நின்றால், அல்வா கொடுத்துவிடுவார்கள்’ என சங்ககிரிக்கு வந்திருக்கிறார் ஆறுமுகம். இதுநாள் வரை அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததால், எளிதில் ஜெயித்தார். இந்த தடவை அப்படி இல்லை. சித்தப்பாவை 'விடாது கருப்பாக’த் துரத்திக்கொண்டே வந்திருக்​கிறார் அ.தி.மு.க-வின் விஜய​லட்சுமி பழனிசாமி. இருவரும் வன்னியர். ஆனால், சங்ககிரி தொகுதியில் கவுண்டர்கள் அதிகம் என்பதால், அவர்களது வாக்குகள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

நில அபகரிப்பு, ஆறு கொலைகள் விவகாரம், கடந்த ஐந்து வருடங்களில் கட்சிக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டதெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வீரபாண்டியாரை மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது. அண்ணன் மகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், சித்தப்பா ரொம்பவே மெனக்கெட வேண்டும்!

துரைமுருகன் (காட்பாடி): கருணாநிதியின் இடது கரமான துரைமுருகனுக்கு மீண்டும் காட்பாடி. அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை முடிந்த வரை காட்பாடிக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். மக்கள் யாரும் எளிதில் நெருங்க முடியாதவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு... ஒரு புதுமுகம். மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். இதுதான் துரைமுருகன் பலம். செல்வாக்கான ஆளைப் போட்டு இருந்தால் திணறி இருப்பார். ஆனாலும், குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெறக்கூடும்!.

பொன்முடி (விழுப்புரம்):அதிரடி அமைச்சர் பொன்முடி நிற்பது, விழுப்புரத்தில். எதிர்ப்பாளர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். அவரும் அதிரடிப் பேர்வழிதான். யாருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசுவதும், கட்சிக்காரர்​களிடம்கூட நெருங்கிப் பழகாமல் விலகி இருப்பதும் பொன்முடியின் பலவீனம். வன்னியர் எதிர்ப்பாளர் என்ற இமேஜும் உண்டு. பெரும்பாலான வாக்காளர்கள் வன்னியர்கள் என்பதும், தி.மு.க-வில் இருக்கும் வன்னியர்களே பொன்முடிக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதும், அவரை டேமேஜ் பண்ணிவிடும்போலத் தெரிகிறது. ஆனால், அவரோ தன் பண பலத்தை நம்புகிறார்!

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி): பன்னீருக்கு தொடர்ந்து மூன்று முறை வெற்றியைத் தந்த தொகுதி குறிஞ்சிப்பாடி. தொகுதிக்கு நிறையவே செய்திருக்கிறார். தொகுதியில் அதிகப்​படியாக வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தை​களும் கை கோத்து இருப்பது பன்னீருக்குக் கூடுதல் பலம். எதிர் அணி வேட்பாளரான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலிப் பகுதியில்தான் செல்வாக்கானவர் என்பதால், குறிஞ்சிப்பாடியில் பன்னீருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை!

பெரிய கருப்பன் (திருப்பத்தூர்): அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், 'தான் உண்டு தனது சொந்த வேலை உண்டு’ என்று இருப்பவர். அதற்காக தொகுதி மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி? கடந்த ஐந்து வருடங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தவிர வேறு எந்த சிறப்புத் திட்டத்தையும் பெரிய கருப்பன் கொண்டுவரவில்லை. அ.தி.மு.க - வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன். 1991-96-ல் இங்கே வெற்றி பெற்று அமைச்சராக இருந்த இவர், தன்னை வளப்படுத்திக்கொண்டதோடு, கட்சியினரையும் சாதிக்காரர்களையும் கை தூக்கிவிட்டார். அதுதான் இப்போது ராஜ கண்ணப்பனைக் கை தூக்கிவிடும் சக்தியாக மாறி இருக்கிறது. பெரிய கருப்பன் மறுபடியும் சட்டமன்றத்துக்குப் போவது கொஞ்சம் கஷ்டம்தான்!

தமிழரசி (மானாமதுரை): தான் பெரிதும் எதிர்பார்த்த சோழவந்தான் தொகுதியை பா.ம.க. தள்ளிக்கொண்டு போனதால், மானா மதுரையில் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறார் தமிழரசி. தொகுதி மாறி வந்ததுதான் அவருக்கு ஏழரை. வழக்கமாக காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதி என்பதால், ஸீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த காங்கிரஸார் ஏக அதிருப்தியில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான குணசேகரனுக்கும் சொந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட அதிருப்திகள். அதை எல்லாம் தாண்டி, கூட்டணி பலத்தோடு தொகுதியை ரவுண்டு வருகிறார் குணசேகரன். இருக்கும் நிலைமையைப் பார்த்தால், தமிழரசிக்கு மானாமதுரை மல்லி மணக்காது!

பொங்கலூர் பழனிசாமி (கோவை தெற்கு): கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமி, தொகுதிக்கு 'ஆஹோ... ஓஹோ’ என்று செய்துவிடாவிட்டாலும், மக்கள் டென்ஷனாகும் வகையில் எந்த வம்பையும் இழுக்கவில்லை. தொகுதிக்குள் இருந்து யார் போன் பண்ணினாலும், தானே அட்டெண்ட் செய்து பொறுப்பாகப் பதில் சொல்வதில் ஆரம்பித்து, சிம்பிளாக நடந்துகொள்வதன் மூலம் சம்பாதித்துவைத்த நல்ல பேர்தான் அவருக்கு இப்போது ரொம்பவே கைகொடுக்கிறது!

இளித்துரை ராமச்சந்திரன் (குன்னூர்): நீலகிரி மாவட்டம் குன்னூரில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு ஆரம்பமே ஆறுதல் தருவதாக இருக்கிறது. குன்னூரின் பலம் வாய்ந்த தி.மு.க. புள்ளியான முபாரக்குக்கு ஸீட் கிடைக்காததால், அவரது ஆதரவுப் பட்டாளம் கடும் அதிருப்தியில் சோர்ந்துகிடக்கிறது. ஆனால், அவர்களிடம் வெள்ளைக் கொடி நீட்டி வழிக்குக் கொண்டுவந்திருக்கும் ராமச்சந்திரன், கூடவே தன் மீது மாளாத வருத்தத்தில் இருந்த படுக இனத் தலைவர்களிடமும் சமரசம் செய்திருக்கிறார். இதன் மூலம் ராமச்சந்திரனின் பாதை தெளிவாக இருக்கிறது!

எ.வ.வேலு (திருவண்ணாமலை): வேலுக்கு எதிராக நிற்பது அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன். இருவருமே மக்களுக்கு நன்கு அறிமுகமனாவர்கள். தொகுதியில் இருக்கும் அடிப்பொடிகளில் தொடங்கி, அத்தனை பேரையும் தெரிந்துவைத்து இருப்பது, வேலுவின் பிளஸ். வன்னியர் எதிர்ப்பாளர் என்பது அவருக்குக் கெட்ட பெயர். தொகுதியில் அதிகம் இருக்கும் முதலியார்களைப்பற்றி இவர் ஏதோ ஒரு கமென்ட் அடித்ததாகவும், அதனால் அவர்கள் கோபம்கொண்டு கூடிப் பேசி வருவதாகவும் தகவல். தலித் வாக்குகள் பெரும்பாலும் விஜயகாந்த் பக்கம் இருக்கின்றன. இதைவைத்துப் பார்க்கும்போது வேலு வெல்வது டவுட். எனவே, அனைவரையும் குறிவைத்து விலைக்கு வாங்கி வருகிறார்கள் தி.மு.க-வினர்!

ஐ.பெரியசாமி (ஆத்தூர் - திண்டுக்கல்): எதிர்க் கட்சியில் இருக்கும் ஆட்களைக்கூட பெயர் சொல்லிக் கூப்பிடுவதுதான் ஐ.பெரியசாமியின் வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே, தொகுதியில் ரேஷன் கார்டு, டி.வி. என பெண்டிங்கில் இருந்த அத்தனையும் அள்ளி வழங்கி, நல்ல பெயரைத் தக்கவைத்துக்கொண்டார் ஐ.பி. எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு அவரின் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதால், பெரியசாமியின் வெற்றி உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்!

மதிவாணன் (கீழ்வேளூர்): புதிய தொகுதியான கீழ்வேளூரில் பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன். அவரை எதிர்த்து நிற்பவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாலி. திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுவதால் ஒட்டுமொத்த உடன்பிறப்புகளும் திருவாரூரே கதியெனக் கிடக்கிறார்கள். மதிவாணனைக் கண்டுகொள்ளக்கூட, தொகுதிக்குள் ஆள் இல்லை. கம்யூனிஸ்ட்கள் அதிகம் உள்ள தொகுதி என்று சொல்லக்கூடிய பட்டியலில் இந்தத் தொகுதியும் உண்டு. தே.மு.தி.க-வுக்கும் இங்கே குறிப்பிட்ட அளவு செல்வாக்கு உண்டு. ஆகவே, மதிவாணணுக்கு பால் பொங்குவது கஷ்டம்!

சுப.தங்கவேலன் (திருவாடானை): திருவாடானை தொகுதி தனக்குத்தான் என முடிவு செய்த தங்கவேலன், கடந்த ஆறு மாதங்களாக அரசின் நலத் திட்டங்கள் அத்தனையும் திருவாடானைத் தொகுதியிலேயே செயல்படுத்த ஆரம்பித்தார். எதிர்த்து நிற்கும் தே.மு.தி.க. வேட்பாளர் முஜிபுர் ரகுமான் வெளியூர்க்காரர் என்பதால், அதையே சாதகமாக்கி பிரசாரத்தில் குதித்திருக்கிறார் தங்கவேலன். தொகுதி முழுக்க வைட்டமின் 'ப’வும் நிறையவே போகிறது. எனவே, கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு பிடி கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் தங்கவேலன். 'அதற்காக’ ஓட்டு போட்டால் மட்டும்தான், இவரால் தேற முடியும்!

மைதீன்கான் (பாளையங்கோட்டை): கடந்த இரண்டு முறை டி.பி.எம்.மைதீன்கான் வெற்றி பெற்ற தொகுதி இது. 'தமிழக அமைச்சர்களில் எளிதாக அணுகக்கூடியவர் யார்?’ என்று போட்டிவைத்தால், மைதீன்​கானுக்கே முதல் இடம். தொகுதி வளர்ச்சிக்காக தனது மேம்பாட்டு நிதியுடன், கனிமொழி, சண்முகசுந்தரம், திருச்சி சிவா போன்ற ராஜ்ய சபா எம்.பி-க்களின் நிதியையும் பெற்றுத் தந்து நிறையத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் மைதீன்கான். பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நிற்பதும், வேட்பாளர் முஸ்லிம் அல்லாதவராக இருப்பதும் அ.தி.மு.க. அணியில் தோல்விக்கு முழுக் காரணமாக இருக்கும்.

பூங்கோதை (ஆலங்குளம்): ஆலடி அருணாவின் வாரிசு என்ற ஒரே தகுதியுடன் கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்கோதை, அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்க​மானவர். அது மட்டுமே போதும் என்று நினைத்ததால், கட்சிக்காரர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, இங்கு இருக்கவில்லை என்ற வருத்தம் மக்களிடம் பரவலாக இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் கடையம் போன்ற தி.மு.க. ஆதரவு ஏரியாக்கள் உள்ளே வந்து இருப்பது மட்டும்தான் பூங்கோதைக்கு கை கொடுக்கும். எதிர் அணியில் நிற்பவர், பூங்கோதையைவிட வீக்கான வேட்பாளர். இருவருமே நாடார்கள். எனவே, வாக்குகள் பிரியும். மற்ற சாதியினர் பூங்கோதைக்கு எதிராக இருக்கிறார்கள். உழைத்துக்கொண்டே இருந்தால் மட்டும்தான் தேறலாம். இல்லை என்றால் டவுட்!

கீதாஜீவன் (தூத்துக்குடி): அரசு நலத் திட்டங்களைத் தொகுதிக்காக நிறைய செயல்படுத்தி இருக்கிறார் கீதா ஜீவன். அப்பா பெரியசாமியின் தலையீடு நிறைய இருப்பதுதான் அவருக்கு மைனஸ். அதேபோல, அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ஜெனிஃபர் சந்திரனை அறிவித்தார்கள். பிறகு பால் என்பவரைக் கொண்டுவந்தார்கள். அவரையும் மாற்றி செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த காமெடி, கீதா ஜீவனுக்கு சாதகம். ஜெனிஃபருக்கு ஸீட் அறிவித்து பிடுங்கிக்கொண்டதால், மீனவர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தி தி.மு.க-வுக்கு சாதகமாகி, கீதா ஜீவனை வெற்றிக் கோட்டுக்கு அருகே கொண்டுபோய் உள்ளது!

சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி): சுற்றுலா வளர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கும் தொகுதி. நம்பிக்கையை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார். எதிர்ப்பு என்று பெரிய அளவில் ஏதும் இல்லை. அ.தி.மு.க-வில் தளவாய் சுந்தரத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவை எல்லாம் சுரேஷ்ராஜனுக்குப் பலமாக... கன்னியாகுமரியில் காற்று தி.மு.க. பக்கமே வீசுகிறது!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை): சாத்தூரில் இருந்து தொகுதி மாறி அருப்புக்கோட்டையில் வேட்பாளர் ஆகி இருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இவரை எதிர்த்து நிற்பது அ.தி.மு.க-வின் மாநில நிர்வாகியான வைகை செல்வன். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இருந்தே, தொகுதி முழுக்க பணத்தை அள்ளி இறைக்கிறார் அண்ணாச்சி. மாவட்டம் முழுக்க செய்திருக்கும் நலத் திட்டங்களுடன் அண்ணாச்சி கொடுக்கும் பணத் திட்டங்களும் சேர்ந்து இருப்பதால் வெற்றி உறுதி என்று நினைக்கிறார். ஆனால், சாந்தமாக தொகுதிக்குள் வலம் வரும் வைகை செல்வனின் தேவாங்கர் சமூகத்தினரது வாக்குகள் முழுமையாகப் போனால், இரட்டை இலைக்கு வெற்றி கிடைக்கவும்கூடும். மற்ற சமூகத்து வாக்குகளை அள்ள பகீரத வேலைகளில் இறங்கி இருக்கிறார் சாத்தூரார்!

தங்கம் தென்னரசு (திருச்சுழி): குற்றச்சாட்டுக்கள் எதிலும் சிக்காமல் இருக்கிறார் தங்கம் தென்னரசு. அதே நேரத்தில், தொகுதிக்கு புதிதாக திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு. எதிர்த்து நிற்பவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இசக்கி முத்து. ஓர் இடைத் தேர்தலின்போது தனியாக நின்றே இந்தக் கட்சி 20 ஆயிரம் வாக்குகளை அள்ளிய வரலாறும் உண்டு. அகமுடையர் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் அந்த சமூகத்தவரை நிறுத்தி இருந்தால், தங்கம் வெற்றி சந்தேகத்துக்கு உரியதாக மாறி இருக்கும். எதிர் வேட்பாளரின் பலவீனம் இவரை இம்முறை ஜெயிக்கவைத்துவிடும்!

கே.என்.நேரு (திருச்சி மேற்கு): திருச்சி மேற்குத் தொகுதியில் களம் இறங்குகிறார் கே.என்.நேரு. கூட்டணி இழுபறியில் அ.தி.மு.க. திணற... அப்போது இருந்தே, சட்டென்று வேலைகளை ஆரம்பித்துவிட்டார் நேரு. இவரது பலமே சுறுசுறுப்புதான். நள்ளிரவு 12 மணிக்கு கட்சியின் முக்கியப் பிரமுகர்களுடன் பிரசார வியூகம்பற்றி ஆலோசனை நடத்துகிறார் என்றால், அதிகாலை நேரத்தில் கட்சிக்காரர்கள் யாரையாவது தொலைபேசியில் விரட்டுகிறார். நேருவுக்கு எப்போதும் ஒரு ராசி உண்டு. ஒரு தேர்தலில் வெற்றி என்றால், அடுத்த தேர்தல் அவரது காலை வாரிவிட்டுவிடும். பெரிய அரசியல் பின்புலன் இல்லாத நபர்களிடம் தோற்ற அனுபவமும் அவருக்கு உண்டு. இந்த முறை தனது உழைப்பு மற்றும் பண பலம் மூலமாக வெற்றியை அடையலாம்!

என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்): வனத் துறை அமைச்சரான என்.செல்வராஜ், மணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர். செல்வராஜின் மகன் கருணைராஜா, முத்தரையர் சங்க செயல்​பாடுகளில் பெரும் ஈடுபாடுகொண்டவர். ஆகவே, அந்த வாக்குகள் செல்வராஜ் பக்கம் சாயவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், நேருவும் இவரும் தனித் தனி கோஷ்டியாக செயல்படுபவர்கள் என்பதால், அதுவே தலைவலி. அதனால், நேரு கோஷ்டி ஆட்களை சமாதானப்படுத்தி தேர்தல் வேலை செய்யவைப்பதில் முனைப்பாக இருக்கிறார். எதிர் அணி வேட்பாளர் சரி இல்லை என்பதால், செல்வராஜ் வெல்வார்!

உபையதுல்லா (தஞ்சாவூர்): தொடர்ந்து மூன்று முறை தொகுதியின் எம்.எல்.ஏ.வான உபையதுல்லா எளிமையானவர். மக்களிடம் நல்ல பெயர் நல்ல பெயர் இருந்தாலும், மாவட்டச் செயலாளர் பழனிமாணிக்கத்துக்கும் இவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். அதுதான் உபையதுல்லாவுக்குப் பிரச்னையாக இருக்கும். ஆனால், நல்ல மனிதர் என்ற இமேஜ் இவரை கை தூக்கிவிடலாம்!

வெள்ளகோயில் சாமிநாதன் (மடத்துக்குளம்): தொகுதி மாறி மடத்துக்குளத்துக்கு வந்து இருக்கிறார் சாமிநாதன். தொகுதிக்குப் புதியவர். முழுக்க முழுக்க பணத்தையே நம்பி களத்தில் குதித்திருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேலு, தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எளிமையானவர் என மக்களிடம் பெயரெடுத்தவர். தொகுதி முழுக்க சண்முகவேலுக்கு சொந்த பந்தங்கள் அதிகம். சுத்தி வளைத்துப் பார்த்தால், சண்முகவேலுவின் கைதான் ஓங்கி இருக்கிறது!

கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்): கே.பி.பி. சாமிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் கே.குப்பன். முன்னாள் எம்.எல்.ஏ-வான குப்பன், தற்போது திருவொற்றியூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர். சாமியைவிட செல்வாக்கு​கொண்டவர். கடந்த ஐந்து ஆண்டு​களில், தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை சாமி வலை வீசிக் கொண்டுவந்து குவித்து இருந்தாலும், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அமைச்சர் சாமியின் தம்பி சாமியாடிய விவகாரங்களைப் பயத்துடன் மீண்டும் நினைத்துப் பார்த்தபடி, பொது ஜனம் இலைத் தரப்பை இரு கரம் கூப்பி வரவேற்கிறார்கள். மணலி, சேக்காடு, எண்ணூர் என இதுவரை சாமிக்கு சர்வ பலத்தைக் கொடுத்த மீனவ ஏரியாவாசிகளும், இப்போது தி.மு.க-வின் மீது திடீர் கோபம்கொண்டு சாமிக்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்கி உள்ளனர்!

க.அன்பழகன் (வில்லிவாக்கம்): 88 வயதுக்காரர் பேராசிரியர் க.அன்பழகன், தி.மு.க-வின் பொதுச் செயலாளர். தமிழக நிதி அமைச்சர். இந்தப் பெருமைகளை உடைய பேராசிரியர், இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் அ.தி.மு.க-வின் ஜே.சி.டி.பிரபாகரனை எதிர்த்துக் களம் இறங்கி இருக்கிறார். இதற்கு முந்திய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பேராசிரியர் 336, 409 என்கிற ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார். அதனால்தான், தனக்கு சேஃப்டியான தொகுதி இது என்கிற வகையில் வில்லிவாக்கம் வந்து இருக்கிறார். ஆனால், வில்லிவாக்கமும் அவருக்கு சாதகமாக இல்லை!

ஜே.சி.டி.பிரபாகரன் 1980-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். இவரது ஆளுமையைவைத்து 'வில்லிவாக்கம் எம்.ஜி.ஆர்' என்று மக்கள் செல்லமாக அழைப்பார்கள். தொகுதிக்குள் ஒன்றரை மாதங்கள் பாத யாத்திரை சென்று மக்கள் குறை கேட்டவர். கடந்த 27 ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள், சமூகப் பணிகள் எனத் தொகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறவர். இவருக்குக் கை கொடுப்பவர் - தே.மு.தி.க. கவுன்சிலர் பிரபாகரன். கடந்த உள்ளாட்சியில் தி.மு.க. முக்கியப் பிரமுகரை வீழ்த்தி இவர் ஜெயித்தார். இதை எல்லாம் வைத்து அன்பழகன் அவுட் என்கிறார்கள்!

பரிதி இளம்வழுதி (எழும்பூர்): ஐந்தாவது முறை எழும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. இந்த முறை ஆறாவது தடவை... தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் மக்கள் நலப் பணிகளுக்காக செலவிட்டவர். சாலை வசதி, புதிய கட்டடங்கள் என்று மக்கள் பணியை ஏகத்துக்கும் செய்திருந்தாலும், ஒரு சில கட்சி நிர்வாகிகளின் குறைகளைக் கேட்கவில்லை என்கிற புலம்பல் உட்கட்சியில் ஒலிக்கிறது. பரிதியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் நிற்பவர் தே.மு.தி.க-வின் புரசை கு.நல்லதம்பி. இவருக்கும் நடிகர் விஜயகாந்த்துக்கும் 30 வருடப் பழக்கம். ரசிகர் மன்றத்திலும், கட்சியிலும் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்னால், 15 சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து, இவருக்கு சைக்கிள் கடை வைத்துத் தந்ததே விஜயகாந்த் தானாம். ஆனால், இவருக்குப் பரிதியை எதிர்கொள்ளும் அளவுக்கு படை, பண பலம் இல்லாததால், பரிதியின் பக்கம் வெற்றிக் காற்று!

தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்): கடைசி நிமிஷம் வரையில்கூட, 'முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதி இது’ என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென்று கருணாநிதி திருவாரூருக்கு இடம்பெயர, இங்கே தா.மோ.அன்பரசனுக்கு உறுதியானது. குரோம்பேட்டை தாண்டி சாலையில் வரும்போது, எதிர்ப்படும் மேம்பாலங்கள், பழைய மகாபலிபுர ரோட்டைத் தொடும் துரைப்பாக்கம் ரேடியல் மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலம்... இரண்டையும் கடக்கும் பல்லாவரம்வாசிகள் உதயசூரியன் சின்னத்தை மறக்க மாட்டார்கள் என்று தி.மு.க-வினர் சொல்லி ஓட்டு சேகரிக்கிறார்கள். தர்ஹா ரோடு சுரங்கப் பாதை, மீனம்பாக்கம் பி.வி.நகர் சுரங்கப் பாதை... இரண்டையும் கட்டி முடித்ததும் இவர்களே. ஆனால், மக்கள் வசிக்கும் சில இடங்களை தொல்பொருள் துறை கைப்பற்றி, அங்கே எல்லாம் புதிய கட்டடம் எதுவும் கட்டக் கூடாது. பூமியைத் தோண்டக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது. அந்த உத்தரவைத் திரும்பப் பெறவைப்பதாக அன்பரசன் மக்களிடம் உத்தரவாதம் தந்திருந்தார். ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஓர் அறிவிப்பும் வரவில்லை. அன்பரசனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தன்சிங் போட்டியிடுகிறார். முன்னாள் பல்லாவரம் நகரசபைத் தலைவர். இவருக்கும் செல்வாக்கு இருக்கிறது. கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகளை வாங்கினார். அந்த வகையில், இந்த ஓட்டுகள் மீண்டும் தன்சிங்குக்கு சாதகமாக விழும் என்று எதிர்பார்கிறார்கள். இது தா.மோ.அன்பரசனை டவுட் பட்டியலில் சேர்க்கவைக்கிறது!


ஜூனியர் விகடன்

போதை பொருள் கடத்தலில் தொடர்பா? - திரிஷா ஆவேசம்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சிக்கிய நைஜீரிய போதை மருந்து கும்பலுக்கும் தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிரபல நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் மற்றும் நண்பர்களும் இதில் சிக்கினர்.

இந்த நைஜீரிய போதை மருந்து கும்பலின் செல்போனில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகைகளின் நம்பர்களும் இருந்ததாக போலீசார் தகவல் வெளியிட்டனர். தொடர்ந்து த்ரிஷாவிடமும் போனில் விசாரணை நடத்தினர்.

இதனால் அவருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் என செய்திகள் பரவின. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய கும்பலுடன் என்னைத் தொடர்புபடுத்துவதா என ஆவேசமாகக் கேட்டுள்ளார் நடிகை த்ரிஷா

ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி.

சினிமாவில் நிலைத்து நிற்பதுதான் முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும் புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இது வரை அமைந்துள்ளன. குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும் மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள் செய்கிறேன். ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது.

அது எனக்கு நிறைவேறி உள்ளது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள் பெற முடியும். நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

என்னைப் பற்றி ஆதார மில்லாமல் வரும் புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை வழிவாங்க யாரோ இதனை கிளப்பி விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை.

தொடர்ந்து அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து இருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தாய் பக்கபலமாக இருப்பார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவார்

ஹசன்அலி ஜாமீனும் - பாஜக கருத்தும்.

ஹசன் அலியை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கறுப்புப் பண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலிக்கு மும்பை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மார்ச் 11-ல் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி ரத்து செய்து, அவரது காவலை நீட்டித்தது.

இந் நிலையில், ஹசன் அலி சார்பில் அவரது வழக்கறிஞர் லலித், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஜாமீன் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது

மனுவை விசாரித்த நீதிபதிகள், நியாயமான காரணங்கள் இல்லாததால் முந்தைய உத்தரவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.


கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

"கறுப்புப் பண விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியாகச் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ளது' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சீதாராமன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி மீதான விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரும்கூட மத்திய அரசு துரிதமாகச் செயல்படவில்லை.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்தப் பணம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் பல ஆண்டுகளுக்கு வரியே விதிக்காமல் மத்திய பட்ஜெட்டை தயாரிக்க முடியும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு அரசியல் அடைக்கலம் அளிக்கப்படுவதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு.

திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிராகவும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்து வருகிறார்.சென்னையை அடுத்த தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூஷூ வந்திருக்கு. அது வந்திட்டு என்ன சொல்லுது. நாடு சரியில்ல...ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு. விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார், நான் நாட்டு மக்களுக்கு விடுதலை வாங்கித்தரப்போறேன்னு சொல்லுது.

என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு. நீ விடுதலை வாங்கித்தர்றதுக்கு.

அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு. நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு. மக்களும் கலைஞரும் ஒண்ணுதான். அது ரெண்டும் கலைஞர்கிட்ட வந்தாச்சு.

இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க. சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க. அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல. சீட்டிங் அணி. காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ. பிளடி ஃபூல்.

யார ஏமாத்துற நீ. மொதல்ல என்ன சொன்ன நீ. 30,40 சீட்டுக்கு எல்லாம் எலும்ப பொறுக்குற நாய் நான் இல்லன்னு சொன்னீல்ல. இப்ப 41 எலும்ப வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்ன? நீதான சொன்ன. 30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு.

கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க. அதுக்கு நீ என்ன சொல்லுற. இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற. என்ன கக்கூஸ் போற அவசரமா?

எம்.ஜி.ஆரின் நிறமும் கிடையாது. குணமும் கிடையாது. அப்புறம் எதுக்கு எம்.ஜி.ஆருன்னு சொல்லிக்கிட்டு திரியற. நீ இந்த மக்களுக்கு என்னத்த புடுங்க போற? என்று விஜயகாந்தை விளாசி எடுத்தார்.

விஜயகாந்த் எப்போதும் நிதானமின்றி இருப்பதால், பிரச்சாரத்தில் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாது. ஏதோ ஒரு பிரச்சனையை பற்றி எப்போதாவது நிதானமாக அவரால் பேச முடிகிறதா. அவருக்கு பெயர் கேப்டன் என்று சொல்கிறார்கள். தான் என்ன பேசினோம் என்பதை காலையில் பேப்பரில் பார்த்துதான் தெரிந்துகொள்வார்.

எம்ஜிஆருக்கு மாற்றாக விஜயகாந்த்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நேற்று கட்சியை ஆரம்பித்துவிட்டு இன்று முதல் அமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படலாமா? முதல் அமைச்சராக வர ஆசையாக இருந்தால் ஒரு 5 கோடி, 10 கோடி செலவு செய்து முதல் அமைச்சராக நடிக்க வேண்டியதுதானே.

எம்ஜிஆர் போல நடிக்கணும் என்றால் அவரைப்போல ஒரு கண்ணாடியும், தொப்பியையும் போட்டு படத்துல நடிக்க வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் ரோட்ல வந்து எம்ஜிஆர் மாதிரியே தொப்பியை வாங்கி மாட்டிக்கிட்டு, கண்ணாடிய மாட்டிக்கிட்டு, கையில கர்ச்சிப்பை வச்சிக்கிட்டு அசிங்கமா இல்லையா.

இப்படி பேசியதால் என்னுடைய உருவபொம்யை எரிக்கச் சொல்லி மகிழ்கிறார். ஆனால் விஜயகாந்த்துக்கு எதிரான எனது விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றார்.