Friday, March 18, 2011

கருணாநிதியா ? அல்லது ஜெயலலிதாவா ? மரியாதை மனிதர்களின் மதிப்பெண் !

விகடன் டீம்


மீண்டும் கருணாநிதியா? அல்லது ஜெயலலிதாவா? இந்த இரட்டைக் கேள்விகளிலதான் அடுத்து வரும் இரண்டு மாதங்கள் காத்திருக்கப் போகிறோம்!

மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கு முன்னால், மதிப்புக்குரிய மனிதர்கள் சிலரின் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ள ஆர்வமானோம்!

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரின் கடந்த கால மற்றும் தற்கால நடைமுறைகளைப் பரிசீலித்து மதிப்பிடுவது மட்டுமே நம் நோக்கம். மாற்று அரசியல், தீவிர இலக்கியம், மனித உரிமைகள், இயற்கை விவசாயம், பெண்கள் பிரச்னைகள் என்று பல்வேறு களங்களில் பணியாற்றும் சிலரிடம் இந்தக் கேள்வித்தாளை நீட்டினோம். அதில் விழுந்த மதிப்பெண்களைக் கூட்டி, சதவிகிதங்களாக ஆக்கினால், கருணாநிதி 45.6 மதிப்பெண்களையும் ஜெயலலிதா 41.1 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்கள்.

''கருணாநிதி ஆட்சியில் நடந்த என்கவுன்ட்டர்கள் மனித உரிமை வரலாற்றில் மறக்க முடியாத, அழிக்க முடியாத கரும்புள்ளிகள். ஜெயலலிதா ஆட்சியும் என்கவுன்ட்டர்களுக்குச் சளைத்தது அல்ல. வாச்சாத்தி கொடுமைகள், சிதம்பரம் பத்மினி பாலியல் பலாத்காரம், தாமிரபரணிப் படுகொலைகள், உத்தப்புரம் பிரச்னை என்று இரண்டு கழகங்களின் ஆட்சிகளும் இதுவரை மனித உரிமைகளை மதித்தது இல்லை. இனிவரும் ஆட்சியிலாவது இந்தப் பிரச்னைகளைக் கவனத்தில்கொள்ள வேண்டும்'' என்றார் எவிடென்ஸ் கதிர்.

''மதிப்பெண் போடும் அளவுக்கு உங்கள் பட்டியலில் உள்ள எந்தத் தலைவரும் நேர்மையானவர் இல்லை'' என்றார் ஓவியா.

''கருணாநிதி, ஜெயலலிதா இவர்களுக்கு மாற்றாக ஓர் அரசியல் தலைமை உருவாக வேண்டும். ஆனால், அது நிச்சயமாக விஜயகாந்த் அல்ல. அப்படி ஒரு மாற்று உருவாகாத வரை, இரண்டு பேரில் யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்புதான் தமிழக மக்களுக்கு'' என்பது தியாகுவின் ஆதங்கம்.

''பிரச்னைகளின் பட்டியலில் தலித் பிரச்னைகளையும் சேர்த்திருக்க வேண்டும்'' என்ற புனித பாண்டியன், ''அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடு, திருநங்கைகளுக்கான நல வாரியம் போன்றவை கருணாநிதி ஆட்சியில் குறிப்பிடத்தக்கவை. ஆனால், உத்தப்புரம் போன்ற பிரச்னைகளில் தலித் மக்களுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கவில்லை'' என்றார்.

அரசியல் ராஜதந்திரம், நிர்வாகத் திறமை, தொண்டர்களுடனான அரவணைப்பு ஆகியவற்றில் கருணாநிதி பாஸ் மார்க் வாங்கினால், துணிச்சலாக முடிவெடுப்பதில் கூடுதல் மதிப்பெண்களைத் தட்டிச் சென்றார் ஜெயலலிதா. எந்த ஒரு பிரச்னையையும் ஆறப்போட்டு, ஊறப்போடுவதே கருணாநிதியின் பலவீனம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

தொண்டர்களிடம் இருந்து அதிகமான இடைவெளி, அசட்டுத் துணிச்சலுடன் கூடிய அவசர நடவடிக்கைகள் இரண்டும் ஜெயலலிதாவின் மைனஸ்கள் என்கிறார்கள். கறை படியாத தன்மையில் 100-க்கு 10 மார்க் வாங்குவதற்குள் திணறிப்போனார்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.

தலைவர்களுக்கான மதிப்பெண்களில் தா.பாண்டியனும் வைகோவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். குறைந்தபட்ச அரசியல் நேர்மையோடு செயல்படுவதால், இந்த மரியாதை.

திருமாவளவனும் தனது தொடர்ச்சியான அரசியல் செயல்பாடுகளால் நல்ல இடத்தைப் பெற்றிருக்கிறார்.

கூட்டணி பலம் ஒருபுறம் தி.மு.க-வுக்குத் தெம்பைக் கொடுத்தாலும், குடும்ப அரசியல் ஆதிக்கம் தி.மு.க மீது வெறுப்பை விதைத்திருக்கிறது. அதேபோல் அ.தி.மு.க-வும் தி.மு.க கூட்டணிக்கு எதிராக மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பாதிப் பேர், 'கருணாநிதி அரசு மிக மோசம் என்று கருத்து சொல்லியிருப்பதும், ஒருவர்கூட ஜெயலலிதாவின் கடந்த கால ஆட்சியை ஆதரிக்கவில்லை என்பதும் இரண்டு கட்சித் தலைமைகளும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

ஜெயலலிதாவுக்கு: உங்களின் கடந்த கால ஆட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும், சிறுபான்மையினர் மனதில் அவநம்பிக்கையையும் அச்சத்தையுமே ஏற்படுத்தியுள்ளது. கணிசமான வாக்கு வங்கியாக இருக்கும் சிறுபான்மையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த நீங்கள் முழுமையாக மாற வேண்டும். வைகோ, தா.பாண்டியன் போன்ற ஈழ ஆதரவாளர்கள் உங்கள் அணியில் இருந்தாலும், பொது மக்களோ, தமிழின உணர்வாளர்களோ, உங்களை முழுமையாக நம்பத் தயாராக இல்லை. அதற்குக் காரணம், உங்கள் கடந்த கால நடவடிக்கைகள். 'ஈழப் பிரச்னையில் கருணாநிதிக்கும் ஜெயலிதாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. சட்டம் - ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஜெயலலிதாவால்தான் முடியும் என்கிற சான்றிதழ் கிடைத்திருப்பது உண்மையிலேயே உங்களுக்கு ப்ளஸ்!

கருணாநிதிக்கு: தொண்டர்களுடனான இடைவெளி, சிறுபான்மையினர் விரோதப் போக்கு, தடாலடி முடிவுகள் போன்ற ஜெயலலிதாவின் பல மைனஸ்கள், உங்க ளுக்கு ப்ளஸ்களாக அமைந்திருக்கின்றன. இருந்தாலும், உங்கள் குடும்ப அரசியல் ஆதிக்கமும், அதிகார துஷ்பிரயோகமும், ஸ்பெக்ட்ரம் விவகாரமும், உங்கள் மீதான மதிப்பைக் குறைத்துக்கொண்டே போகின் றன. நதிநீர்ப் பிரச்னை, இலங்கைப் பிரச்னை போன்றவற்றில் உங்களின் தவறான அணுகுமுறையால், தமிழர்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டிஇருக்கிறது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. நீண்ட கால அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை, ராஜதந்திர அணுகுமுறைகொண்ட உங்களைப் போன்ற மூத்த தலைவர்... இன்னமும் முதிர்ச்சியோடும், பொறுமையோடும், நேர்மையோடும் நடந்துகொண்டால், தமிழகம் வளம்பெறும்!

மரியாதைக்குரியவர்களின் மதிப்பெண்கள் இப்படி! மக்களின் மதிப்பெண்கள் எப்படி இருக்குமோ?

மருத்துவர் ராமதாஸுக்கு ஒரு திறந்த மடல்!

தமிழருவி மணியன்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்த அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று இறுதி நேரம்

வரை அரசியல் கட்சித் தலைவர்களையும், வாக்காளர்களையும் ஒரு தெளிந்த முடிவுக்கு வர முடியாமல் திகைப்படையச் செய்வதில், உங்களுக்கு இணை சொல்ல இன்னொ​ருவர் இல்லை!

நீங்கள் அணி மாறுவது குறித்தும் அஞ்சுவது இல்லை; மாறிய பின், முன்பு புகழ்ந்தவர்கள் மீது கடும் விமர்சனக் கணைகளை வீசவும் தயங்குவதும் இல்லை. உங்கள் ஆளுகையில் இருக்கும் வாக்கு வங்கிக்​காக அவர்களும் நீங்கள் எவ்வளவு வசைமாரிப் பொழிந்​தாலும் பொருட்படுத்துவதே இல்லை. ‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர​மாகத் தன்னலம் மட்டுமே உண்டு’ என்ற வாசகத்தை உங்களைப்​போல் வேத மந்திரமாக ஏற்றுக்கொண்டு, செயல்​படுத்துபவர் வேறு ஒருவரும் இல்லை.

கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் உரிய பங்கினை வன்னியர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், சிதறிக்கிடந்த சமுதாய மக்களைச் சலிப்பின்றி சந்தித்து… அவர்களை வலிமைமிக்க ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் நீங்கள். காங்கிரஸிலும், தி.மு.க-விலும் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்​படுத்தப்பட்டவர்களை, உங்கள் தலைமையின் கீழ் ஒன்றிணைத்து, உரிமைக்குப் போராடும் உணர்வை ஊட்டியவர் நீங்கள். உங்கள் வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டது தி.மு.க. மாநிலத்தில் 20 விழுக்காடும், மத்தியில் 2 விழுக்காடும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 1987-ல் உண்ணாவிரதம், ரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல் என்று போராடிப் பார்த்தும் பலன் இல்லாததால், ஏழு நாட்கள் தொடர் சாலை மறியல் நடத்தி, எந்த வாகனமும் சென்னைக்கு வரவியலாத சூழலை உருவாக்கி… துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரைப் பறிகொடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உங்கள் இன மக்களைச் சேர்த்த பின்பு உங்கள் வன்னியர் சங்கம், பாட்​டாளி மக்கள் கட்சியாய் 1989-ல் வடிவெடுத்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சம வாய்ப்பு கிடைப்பதுதான் சமூக நீதி. அதற்காக, நம் தமிழினம் சாதிரீதியாகப் பிரிந்து நிற்பது சரியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ‘வன்னியர் சங்கம்’ என்று எம் தமிழரில் ஒரு பகுதி மக்களைத் தனித்துக் குறிப்பிடுவதுகூட மிகப் பெரும் தவறு என்று உணர்கிறேன். நீங்களும் அப்படி உணர்ந்துதான், பா.ம.க. அமைப்பைக் கட்ட முனைந்தீர்கள் என்று நம்புகிறேன். பா.ம.க-வின் சட்ட திட்டங்​களிலும், கொள்கைகளிலும் ஓர் இடத்தில்கூட வன்னிய சமூகத்தின் பெயரோ, வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை. தலித்கள், முஸ்லிம்கள், பிற்பட்ட பிற இனத்தவர் பா.ம.க-வின் நிர்வாகிகளாகவும் நியமிக்கப்பட்டனர். உங்கள் கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், சிவப்பு வண்ணம் கம்யூனிஸத்தையும் குறிப்பவை என்று நீங்கள் விளக்கினீர்கள். கம்யூனிஸம், சோஷலிஸம், பெரியாரிஸத்தின் பல கொள்கைகளும், அண்ணல் அம்பேத்கரின் லட்சியங்களும் கலந்த கலவைதான் பா.ம.க. என்று தமிழரிடையே தெளிவுபடுத்தினீர்கள்.

நீங்கள் முன்வைத்த முழக்கங்கள் எல்லாம் சமூக நலன் சார்ந்தவை. ‘தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு, தமிழினம் வீழ்ந்தால் முட்டுக்கொடு’ என்றும், ‘மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்’ என்றும், ‘புகையிலை ஒழிப்போம், புற்று நோய் தடுப்போம்’ என்றும், ‘வரதட்​சணை ஒழிப்போம், பெண்ணுரிமை காப்போம்’ என்றும் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத பரப்புரையை நீங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவருகிறீர்கள். கட்டுப்பாடற்ற ஊடகங்கள் பெருகி வரும் நிலையில், குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பார்க்கும் வகையில் தொலைந்துபோன நம் தொன்மையான கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில், சமரசம் இல்லாமல் பீடுநடை போடும் ஒரே தொலைக்காட்சி உங்கள் ‘மக்கள் தொலைக்காட்சி’ என்று மலை உச்சியில் நின்று நான் முழங்குவேன்.

தாய்மொழிக் கல்வி குறித்தும், சமச்சீர் கல்வி குறித்தும் தொடர்ந்து ஆரோக்கியமான ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருவது, பாராட்டுக்கு உரியது. வடமாவட்டங்களில் தலித்களும், வன்னியர்​களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் மெச்சத்​தக்கவை. இவ்வளவு பெருமைக்குரிய பணிகளில் ஈடுபட்ட நீங்கள், சந்தர்ப்பவாத சாகசத்தின் சிகரம் தொட்டதில்தான் சரிந்து​விட்டீர்கள். எந்த சிகரத்தில் ஏறி நின்றாலும், பக்கத்தில் செங்குத்துச் சரிவைத்தான் பார்க்க முடியும்.

வன்னியர் சங்கத்தை அரசியல் அமைப்பாக்கிய பின்பு, மக்களிடம் சில வாக்குறுதிகளை நீங்கள் வழங்கியது, உங்கள் நினைவுகளில் மெல்லிய ஞாபக மின்னல்களாய் இப்போதும் கண்சிமிட்டக் கூடும்… இல்லையா? ‘அதிகாரம் சார்ந்த எந்தப் பதவியிலும் நான் என்றும் அமர மாட்டேன். என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையும் அரசியல் வாரி​சாக வளர்க்க மாட்டேன். பொதுவாழ்வில் ஒரு செப்புக் காசையும் சேர்க்க மாட்டேன்’ என்றீர்கள். ‘இன்னொரு பெரியார் உருவாகிறார்’ என்று பலர் வியப்புடன் உங்களைப் பார்க்கத் தலைப்பட்டனர். ஆனால், அன்புமணிக்கு மீண்டும் மாநிலங்களவையில் இடம் கிடைப்​பதற்காக நீங்கள் அணி மாறியதும், கலைஞருக்குக் கடிதம் தீட்டியதும், மகனை மீண்டும் மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்க நீங்கள் தவிப்பதும், துடிப்பதும், உங்கள் சித்திரத்தைச் சிதைத்துவிட்டது. தைலாபுரம் தோட்டமும், தற்போது உங்களுக்கு வாய்த்திருக்கும் செல்வ வளமும் நீங்கள் ஒரு வித்தியாசமான அரசியல் வேள்விக்காரர் என்று மக்களை நம்பத் தூண்டவில்லை.

நீங்கள் ஆரம்பத்தில் லட்சியப் பதாகையுடன்தான் தேர்தல் களத்தில் தனித்து நின்றீர்கள். 1989-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 32 தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும், 15 லட்சம் வாக்குகளுக்கு மேல் உங்கள் கட்சி பெற்றது ஒரு சாதனை! 1991 சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் உங்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுப் பேரவைக்குள் நுழைந்தார். உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேற்றுமை உருவானதும், அவரும் நெல்லிக்குப்பம் வி.கிருஷ்ணமூர்த்தியும் கட்சியைக் கைப்பற்ற 5.12.93 அன்று பண்ருட்டியில் சிறப்புப் பொதுக் குழுவைக் கூட்டி, நீங்கள் நியமித்த தலைவர் தீரனையும் பொதுச் செயலாளர் தலித் எழில்மலையையும் நீக்கினர். ஆனால், நீங்கள்தான் கட்சி என்பதை நிரூபித்தீர்கள். 1996-ல் சட்டமன்றத்தில் உங்கள் கட்சியின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இன்று விஜயகாந்த்துக்கு வந்து சேர்ந்த கூட்டணி ஞானம், உங்களுக்கு 1998 தேர்தலில் வந்து சேர்ந்தது. அரசியல் சதுரங்கத்தில் கூட்டணி போட்டுக் காய்களை வெட்டும் கலை உங்கள் கைவசமானது. அன்று முதல் இன்று வரை நீங்கள் ஆடும் அரசியல் ஆட்டம், திடீர்த் திருப்பங்கள் கொண்ட திரைப்படங்களைவிட, பார்வையாளர்களின் கூடுதல் கவனத்தைக் கவர்ந்துவிட்டது!

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அணி மாறுவது இயல்புதான். ஆனால், அணி மாறுவதையே ஓர் அரசியல் சாகசமாக்கியவர் நீங்​கள் ஒருவர்தான்! 1998-ல் அ.தி.மு.க. அணி. 99-ல் தி.மு.க. அணி. 2001-ல் அ.தி.மு.க. அணி. 2004-ல் தி.மு.க. அணி. அடிக்கடி அணி மாறியதில் உங்களுக்கே சலிப்பு வந்துவிட்டது போலும். 2006-ல் தி.மு.க. அணியிலேயே நின்றுவிட்டீர்கள். ஒரே இடத்தில் இருப்பது உங்கள் இயல்புக்கு விரோதம் என்று நீங்கள் உணர்ந்ததும், 2009-ல் அ.தி.மு.க. அணிக்கு மாறினீர்கள். உங்கள் இலக்கணப்படி 2011-ல் திரும்பவும் தி.மு.க. அணிக்குத் திரும்பிவிட்டீர்கள். தேசிய அளவில் பி.ஜேபி. கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் அடுத்தடுத்து இடம் பிடித்து, மத்திய அமைச்சரவையில் 10 ஆண்டுகள் தலித் எழில்மலை முதல் மகன் அன்புமணி வரை அமைச்சர்களாக நீடித்து, அடையவேண்டிய ஆதாயங்களையும் அடைந்துவிட்டீர்கள். ஆனால், ஒரு நல்ல செய்தி, நீங்கள் ரயில்வே துறையில் அமைச்சர்களாக்கிய ஏ.கே.மூர்த்தியும், வேலுவும் தமிழகம் பயன் பெறுகிறாற்போல் தங்கள் பதவியைப் பயன்​படுத்தினார்கள். உங்கள் மகன் அன்புமணி புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை, உயிர் காக்கும் மருந்துகளின் விலைக் குறைப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னேற்றம், உயர் கல்வி நிலையங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ்., ஏ.ஐ.எம்.எஸ். ஆகியவற்றில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, உயிர்காக்கும் ’108’ ஆம்புலன்ஸ் என்று நேர்த்தியான நிர்வாகத் திறனோடு மிக இளம் வயது அமைச்சராய் சாதனைகளை நிகழ்த்தினார். ஆனால், ‘சாதனைகள்’ அவற்​றோடு மட்டும் நின்றுவிடவில்லை என்று கேள்வி!

பழையனவெல்லாம் போகட்டும், உங்கள் நிகழ்கால நடவடிக்கைகளுக்கு வருவோம். கலைஞரோடு கூட்டணி அமைந்து, உங்க​ளுக்கு 31 தொகுதிகள் கிடைத்ததும் கோபாலபுர வாசலில் நின்றபடி ‘இது வெற்றிக் கூட்டணி’ என்று வாய் மலர்ந்தீர்கள். 2009 – நாடாளுமன்றத் தேர்தலின்போது போயஸ் தோட்டத்தில் ‘அன்புச் சகோதரி’யை சந்தித்துவிட்டு, ‘இது வெற்றிக் கூட்டணி’ என்று நீங்கள் ஆரூடம் கணித்தீர்களே… அதுதான் பொய்த்துப்போனது. ஓ… இதுவும் பொய்த்துப் போகுமோ?

தைலாபுரம் தோட்டத்தில் கூடிய பா.ம.க. பொதுக் குழு, ‘கலைஞரை ஆறாவது முறை முதல்வராக்க உறுதிபூண்டு இருப்​பதாக’வும், ‘கலைஞர் ஆட்சிக்கு 5 ஆண்டு​கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்​போவ​தாக’வும், ‘யார் முதல்வராக வேண்டும் என்பதுதான் முக்கியம்’ என்றும் தீர்மானம் தீட்டியிருக்கிறது.

2006-ல் ஐந்தாவது முறை ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஏழை – அடித்தள மக்க​ளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஏராள​மான வளர்ச்சித் திட்டங்களை நடை​முறைப்​படுத்தியதாகவும் பொதுக் குழு பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது. எனக்கு ஓர் ஐயம்… தி.மு.க-வுடன் இருந்த உறவை 2008-ல் முறித்துக்கொண்டு அன்புச் சகோதரியுடன் ஐக்கியமானபோது, ‘கலைஞர் அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் தங்களால் தர முடியும்?’ என்ற கேள்விக்கு ‘பூஜ்யம்’ மதிப்பெண் போட்டீர்களே… அன்று சொன்​னது உண்மை இல்லையா? வெறுப்பிலும் விரக்தியிலும் வெளிப்படுத்திய மதிப்பீடா? இன்று மட்டும் நீங்கள் உண்மை சொல்வதாக நாங்கள் எப்படி நம்ப முடியும்?

‘லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெறும். தேர்தல் முடிந்​ததும் தமிழக அரசியலிலும், தி.மு.க. ஆட்சி​யிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்’ (27.04.09) என்றீர்கள். நீங்கள் இடம் மாறப்​போவதைத்தான் சூசகமாக அப்படிச் சொன்​னீர்களோ!

‘டாஸ்மாக் நிறுவனம் 12,300 கோடி லாபத்தில் இயங்குவதாக தி.மு.க. அரசு சொல்கிறது. அது ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம்’ (9.1.11) என்று உண்மை உரைத்தீர்கள். இரண்டு முறை பல அமைப்புகளுடன் சென்று கலைஞரிடம் மதுவிலக்கு வேண்டி கோரிக்கை வைத்தீர்​கள். படிப்படியாக மதுக் கடைகளை மூடுவதாக முதல்வர் அறிவித்தார். நீங்கள் சந்தித்துவிட்டு வந்த பின்புதான் ஆறு புதிய சாராய ஆலைகளுக்கு நம் முதல்வர் அனுமதி வழங்கினார்! ஆனால், ‘மதுவை ஒழிப்போம்; மக்களைக் காப்போம்’ என்று முழங்கும் நீங்கள், கலைஞரை முதல்வராக்க முடிவெடுத்துவிட்டீர்கள். நன்றாகத்​தான் அரசியல் நடத்துகிறீர்கள், ஐயா மருத்துவரே!

பென்னாகரம் இடைத்தேர்தலில் வன்னியர் சக்தியை ஒன்றுதிரட்டி 41 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் நீங்கள் பெற்றது, பெரிய சாதனை. தி.மு.க. வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘பணநாயகம் வெற்றி பெற்று ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது. தேர்தலை வணிகச் சந்தை​யாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும்…’ என்று அழகாகச் சொன்னீர்கள்.

ஆங்கிலப் படைப்புலக மேதை கோல்ட் ஸ்மித் பற்றி ஒரு விமர்சகன், ‘இவன் தேவனைப்போல் எழுதுகிறான். ஆனால், சாத்தானைப்போல் பேசுகிறான்’ என்று குறிப்பிட்டான். அது ஏனோ இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

உங்கள் மகன் அன்புமணி விழுப்புரத்தில் நடந்த மாவட்டப் பொதுக் குழுவில், ‘பென்னாகரம் ஃபார்முலாவைப்போல் இனி விஞ்ஞானபூர்வமாக அரசியல் பணி ஆற்றுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். திருமங்கலம் ஃபார்முலா என்பது பணப் பட்டுவாடா! பென்னாகரம் ஃபார்முலா என்பது சாதிக் கட்டுப்பாடா? எங்கே போகிறது தமிழகம், மருத்துவரே?

வன்னியத் தமிழர்கள் 50 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக மாற்றியவர் நீங்கள்தான். ஒரு கோடிக்கு மேற்பட்ட வன்னியர்கள் இருப்பதாக அடிக்கடி ஆதாரம் தருகிறீர்கள். ஆனால், 1989 தேர்தலில் 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளைப் பெற்ற உங்கள் பா.ம.க. 2006 சட்டமன்றத் தேர்தலில் 18 லட்சத்து ஆயிரத்து 749 வாக்குகளைப் பெற்றது. அப்படியானால், பெரும்பான்மை வன்னியர்கள் வாக்கு முற்றாக உங்களிடம் இன்னும் வந்து சேரவில்லை. அவர்களது நம்பிக்கையைப் பூரணமாகப் பெறுவதற்குத்தான் சகலரும் சங்கமிக்கும் பா.ம.க-வை நீங்கள் மீண்டும் வன்னியர் சங்கமாகவே சுருக்கிவிட்டீர்கள். ஒரு பக்கம் பெரியாராகவும், மறுபக்கம் கார்ல்மார்க்ஸாகவும், இன்னொரு பக்கம் அம்பேத்கராகவும் தன்னைக் காட்ட முயன்று, அது முடியாமற்போய் மருத்துவர் ராமதாஸாகவே நீங்கள் நின்றுவிட்டீர்கள்.

இதை எல்லாம் சொல்வதால் என் மீது கோபம் வரலாம். அம்மாவுக்கு நான் ஆள் பிடிப்பவனும் இல்லை. ஐயாவுக்கு வால் பிடிப்பவனும் இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, வலிமை மிக்க மூன்றாவது அணி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அதற்காகவே, 1969 முதல் 1998 வரை என் இளமை முழுவதையும் இந்திராகாந்தியின் குடும்ப அரசியலை எதிர்ப்பதிலேயே நான் செலவழித்தேன். நேர்மை சார்ந்த அரசியலைத் தவிர வேறு எந்த நாட்டமும் என்றும் எனக்குள் இருந்தது இல்லை. பெரிய அரசியல் மாற்றத்தை ஒட்டுமொத்த தமிழ் சாதிக்கும் கொண்டுவருவீர்கள் என்று நம்பியது பிழையாய்ப் போனது. நீங்களும் குடும்ப அரசியலும், சாதிக் கண்ணோட்டமும்கொண்டவராய் குறுகிப்போனது வருத்தம் தருகிறது.

‘பொய் சொல்லவும், ஏமாற்றவும், திருடவும் உனக்குத் தெரியவில்லை என்றால், அவற்றைக் கற்க உன் பார்வையை அரசியல் பக்கம் திருப்பு’ என்றார் அறிஞர் பில்லிங். தமிழகத்தில் இன்று அதுதான் நடந்துகொண்டு இருக்கிறதோ..?

தமிழினம் முழுமைக்கும் நீங்கள் தலை​வராக முயல வேண்டும் என்று விரும்பும், தமிழருவி மணியன்


நன்றி: ஜூனியர் விகடன்

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்

தமிழருவி மணியன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு… வணக்கம்.

உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை. படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே… அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!

உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.

எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ‘பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது. என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.

யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்… கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.

‘அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர். என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. ‘ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.

முன்னாள் முதல்வரே… கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். ‘டான்சி வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு ‘விடாது கருப்பு என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய ‘நேர்மையானவர்கள், நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்… ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். ‘ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க. என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.

‘ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, ‘சகோதரி சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்… நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக ‘அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!

ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!

உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். ‘விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்? என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.

உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து ‘அம்மா என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு. ‘இந்து நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?

அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது ‘அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும் என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!

திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு ‘அன்பளிப்பு தரும் ‘ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. ‘தத்துவஞானிகள் ஆளவேண்டும். அவர்களுக்குக் குடும்பம் கூடாது என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?

போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!

சகோதரி… நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்…ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும். சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்… இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.

‘உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான் என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!

நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள், என்ற நம்பிக்கையுடன், தமிழருவி மணியன்


நன்றி: ஜூனியர் விகடன்

Thursday, March 17, 2011

தி.மு.க. போட்டியிடும் 119 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

1. ஆயிரம் விளக்கு - அசன் முகம்மது ஜின்னா
2. சேப்பாக்கம்- ஜே. அன்பழகன்
3. விருகம்பாக்கம் - தனசேகரன்
4. சைதாப்பேட்டை - மகேஷ்குமார்.
5. வில்லிவாக்கம் - க. அன்பழகன்
6. ஆர்கே நகர் - பி.கே.சேகர்பாபு
7. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
8. எழும்பூர் தனி - பரிதிஇளம்வழுதி
9. பொன்னேரி தனி -மணிமகேலை
10. திருவள்ளூர் - இஏபி சிவாஜி
11. அம்பத்தூர் - புரசை ரங்கநாதன்
12. மாதவரம் - டாக்டர் கனிமொழி
13. திருவொற்றியூர் - கேபிபி சாமி
14. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்
15. தாம்பரம் - எஸ்ஆர் ராஜா
16. உத்திரமேரூர் - பொன்குமார்
17. காட்பாடி - துரைமுருகன்
18. கேவி குப்பம் - சீதாராமன்
19. ராணிப்பேட்டை - காந்தி
20. குடியாத்தம் தனி - ராஜமார்த்தாண்டன்
21. திருப்பத்தூர் - ராஜேந்திரன்
22. திருவண்ணாமலை - எ.வ.வேலு
23. கீழ்ப்பென்னாத்தூர் - பிச்சாண்டி
24. ஆரணி - சிவானந்தம்
25. வந்தவாசி - கமலக்கண்ணன்
26. வானூர் - புஷ்பராஜ்
27. விழுப்புரம் - பொன்முடி
28. விக்கிரவாண்டி - ராதாமணி
29. திருக்கோவிலூர் - தங்கம்
30. சங்கராபுரம் - உதயசூரியன்
31. பண்ருட்டி - சபா ராஜேந்திரன்
32. கடலூர் - இள.புகழேந்தி
33. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
34. திருவிடைமருதூர் தனி- கோவி செழியன்
35. கும்பகோணம் - கா.அன்பழகன்
36. திருவையாறு - செல்லக்கண்ணன்
37. தஞ்சாவூர் - எஸ்.எம்.உபயதுல்லா
38. ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி
39. கீழ்வேளூர் தனி - மதிவாணன்
40. மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா
41. திருவாரூர் - மு.கருணாநிதி
42. நன்னிலம் - இளங்கோவன்
43. திருச்சி மேற்கு - கே.என்.நேரு
44. திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி
45. திருவெறும்பூர் - சேகரன்
46. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்
47. லால்குடி - சவுந்திரபாண்டியன்
48. மண்ணச்சநல்லூர் - செல்வராஜ்
49 துறையூர் - பரிமளா தேவி
50. பெரம்பலூர் - பிரபாகரன்
51. குன்னம் - சிவசங்கரன்
52. அரவாக்குறிச்சி - கே.சிபழனிச்சாமி
53. கிருஷ்ணராயபுரம் தனி - காமராஜ்
54. குளித்தலை - இரா.மாணிக்கம்
55. கந்தர்வக்கோட்டை - கவிதைப்பிதத்ன்
56. விராலிமலை - எஸ்.ரகுபதி
57. புதுக்கோ்டடை - பெரியண்ணன் அரசு
58. கெங்கவல்லி தனி - சின்னத்துரை
59. ஏற்காடு - தமிழ்செல்வன்
60. சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு - சிவலிங்கம்
62. வீரபாண்டி - வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு - ராஜேந்திரன்
64. ராசிபுரம் தனி - வி.பி.துரைசாமி
65. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி
66. குமாரபாளையம் - செல்வராஜ்
67. பென்னாகரம் - இன்பசேகரன்
68. பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன்
69. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன்
70. தளி - ஒய்.பிரகாஷ்
71. மேட்டுப்பாளையம் - அருண் குமார்
72. கவுண்டம்பாளையம் - டிபி சுப்பிரமணியம்
73. கோவை வடக்கு - வீரகோபால்
74. கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி
75. கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன்
76. தாராபுரம் தனி - ரா.ஜெயந்தி
77. திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி
78. மடத்துக்குளம் - சாமிநாதன்
79. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமி
80. அந்தியூர்- என்கேகேபி ராஜா
81. பவானிசாகர் தனி - லோகேஸ்வரி
82. கூடலூர் தனி - திராவிடமணி
83. குன்னூர் - ராமச்சந்திரன்
84. மேலூர் - ராணி ராஜமாணிக்கம்
85. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
86. திருமங்கலம் - மணிமாறன்
87. உசிலம்பட்டி - ராமசாமி
88. மதுரை மத்தி - எஸ்எஸ் கெளஸ் பாட்ஷா
89. மதுரை மேற்கு - கோ.தளபதி
90. பழனி - செந்தில்குமார்
91. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
92. நத்தம் - விஜயன்
93. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி
94. ஆண்டிப்பட்டி - மூக்கையா
95. கம்பம் - கம்பம் ராமகிருஷ்ணன்
96. பெரியகுளம் தனி - அன்பழகன்
97. போடிநாயக்கனூர் - லட்சுமணன்
98. திருவாடானை - சுப தங்கவேலன்
99. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
100. திருப்பத்தூர் - கே.என்.பெரியகருப்பன்
101. ராஜபாளையம் - தங்கபாண்டியன்
102. ஸ்ரீவில்லிபுத்தூர் தனி - துரை
103. சாத்தூர் - கடற்கரை ராஜ்
104. சிவகாசி - வனராஜா
105. அருப்புக்கோட்டை - கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்
106. திருச்சுழி - தங்கம் தென்னரசு
107. மானாமதுரை தனி - தமிழரசி
108. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
109. சங்கரன் கோவில் தனி - உமா மகேஸ்வரி
110. தென்காசி - கருப்பசாமி பாண்டியன்
111. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
112. பாளையங்கோட்டை - மைதீன்கான்
113. தூத்துக்குடி - கீதா ஜீவன்
114. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
115. ஒட்டப்பிடராம் - ராஜா
116. ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா
117. கன்னியாகுமரி - சுரேஷ் ராஜன்
118 நாகர்கோவில் - மகேஷ்
119 பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன்

விஜயகாந்த் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு


விஜயகாந்த் அலுவலகம் முன் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு


சென்னையில் தே.மு.தி.க., தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தனர். செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அ.தி.மு.க., தன்வசமாக்கி கொண்டதாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. விஜயகாந்திடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன. இதுதொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த்துடன் தா.பாண்டின், ஜி.ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, சேதுராமன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் அங்கு கூடிய தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஜெயலலிதாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

3வது அணி அமையுமா? விஜயகாந்த் பதில்

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூ.மு.க. தலைவர் சேதுராமன், பார்வர்டு பிளாக்கின் கதிரவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியில் வந்த இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையை முறியடிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 3வது அணி அமைப்பது குறித்து பேசி முடிவு எடுப்போம் என்றார்.

இதேபோல் 3வது அணி அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அனைத்துக் கட்சிகளுடன் பேசிவிட்டு தான் 3வது அணி பற்றி முடிவெடுக்கப்படும். மூன்றாவது அணி அமைப்பது பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றார்.

ஜெ.வுடன் சமரசம் இல்லை: தா.பாண்டியன்


தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்துடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியில் வந்த இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையை முறியடிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 3வது அணி அமைப்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அதிமுகவுடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் வைகோ

தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை ஏற்படுத்தி தேர்தலை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. இதனை விஜயகாந்திடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்தன. இதுதொடர்பாக விஜயகாந்த்துடன் தா.பாண்டின், ஜி.ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, சேதுராமன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை ஈடுபட்டுள்ளது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது அணியில் மதிமுகவையும் இணைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. இதனால் வேலூர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வைகோ, அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

விஜயகாந்த் - பூவை ஜெகன்மூர்த்தி சந்திப்பு

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தே.மு.தி.க.வை அடியோடு காலி செய்ய ஜெ. போட்ட மாஸ்டர் பிளான் ! .

160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த கையோடு நாளை மறு நாள் பிரசாரத்திற்கும் கிளம்பி விட்டார் ஜெயலலிதா. மறுபக்கம் கொதித்து, கொந்தளித்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் குறித்து அவர் சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கவும் அவர் தயாராக இல்லை. உண்மையில் ஜெயலலிதா போட்ட மெகா 'மாஸ்டர் பிளான்' திட்டம் இப்போதுதான் அம்பலமாக தொடங்கியுள்ளது.

யாருமே இந்த கோணத்தில் யோசித்துப் பார்த்திருக்க முடியாது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். அந்த அளவுக்கு தனது முக்கியமான எதிரிக்கு சரியான ஆப்பு வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி இதுவரை இருந்து வந்த ஒரே எதிரி திமுகவும், கருணாநிதியும் மட்டுமே. அவர்கள் நிரந்தர எதிரி என்பதால் பெரிய விஷயம் இல்லை. ஆனால் சமீப காலமாக அதிமுகவுக்கு முளைத்து வந்த மிகப் பெரிய எதிரி, முக்கிய எதிரி தேமுதிக.

தேமுதிக உதயமாகி, அது தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது முதல் அந்தக் கட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது அதிமுக மட்டுமே. அதிமுகவின் வாக்கு வங்கிக்குள் புகுந்து உண்டு இல்லை என்று பண்ணி விட்டது தேமுதிக. திமுகவின் வாக்குகளையும் கொஞ்சம் போல கடித்தாலும், கடுமையாக பாதிக்கப்பட்டது என்னவோ அதிமுகதான்.

எனவேதான் இந்த தேர்தலில் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தரப்பு கடுமையாக முயன்று வெற்றியும் பெற்றது. இந்த வேலையைப் பார்த்தவர் ஆர்எஸ்எஸ் சார்பு கொண்ட அந்த பத்திரிக்கையாளர் தான்.

திமுகவை வலிமையோடு எதிர்க்கத்தான் ஜெயலலிதா, விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துள்ளார் எனறு எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்க ஜெயலலிதாவின் திட்டமோ வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.

அது - முக்கிய எதிரியான திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால், புதிதாக முளைத்த எதிரியான தேமுதிகவை பலவீனப்படுத்தி, பள்ளத்தில் விழ வைக்க வேண்டும் என்பது. அதைத்தான் தற்போது ஜெயலலிதா சிறப்பாக செய்து முடித்திருப்பதாக கூறப்படுகிறது.

மிக சாதுரியமாக ஜெயலலிதா விரித்த வலையில் தானாக வந்து விழுந்து சிக்கி மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.

ஜெயலலிதாவின் திட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும்...

1. தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்ப்பது, கேட்கிற தொகுதிகளை கொடுப்பதாக கூறுவது, எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது, கடைசி நேரத்தில் கை கழுவி விடுவது.

2. விஜயகாந்த் ஆரம்பத்திலிருந்தே தனித்துப் போட்டி, மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்று கூறி வந்தார். விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் திமுக, அதிமுகவை விரும்பாதவர்களின் ஓட்டுக்கள்தான். எனவே, கூட்டணிக்குள் விஜயகாந்த் வந்து விட்டாலே அவரது வாக்கு வங்கியில் பெரும் ஓட்டை விழும் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும்.

3. விஜயகாந்ததை கூட்டணி வலையில் சிக்க வைப்பதன் மூலம் அவரது வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, கடைசியில் அவரையும் பலவீனப்படுத்தி கூட்டணியிலிருந்து அவராகவே வெளியேறும் நிலையை ஏற்படுத்துவது ஜெயலலிதாவின் திட்டம்.

4. தேமுதிகவை பலவீனப்படுத்தி விட்டால் திமுகவை சமாளிப்பது மிக மிக எளிது. இதற்கு ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சினைகள் உதவியாக இருப்பதால் அதை மட்டும் வைத்துக் கொண்டு திமுகவை வீழ்த்த வியூகம் அமைப்பது.

இதுதான் ஜெயலலிதாவின் தற்போதைய அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னணிக் காரணமாக கூறப்படுகிறது.

தற்போது ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியுள்ளார் ஜெயலலிதா.

தேமுதிக இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி அல்லது வெளியேறினாலும் சரி அல்லது யாருடனாவது சேர்ந்து கூட்டணி அமைத்தாலும் சரி, விஜயகாந்துக்கு மக்களிடம் முன்பு இருந்து செல்வாக்கு, ஆதரவு இருக்காது என்பது ஜெயலலிதா மற்றும் அவரது ஆஸ்தான ஆலோசகர்களின் எண்ணமாகும்.

இந்த கோணத்தில்தான் ஆரம்பத்திலிருந்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைகளில் ஒருவித தாமதத்தை அதிமுக கையாண்டதாகவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடைசி வரை உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் அனைவருடனும் பேசியதன் மூலம், அனைவரும் வேறு கூட்டணிக்குப் போக முடியாத நிலையையும் ஏற்படுத்தி விட்டார் ஜெயலலிதா. இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நேற்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. அதாவது வேறு 'ஆப்ஷனே' இல்லாமல் செய்து விட்டார் ஜெயலலிதா.

ஒரு வேளை தேமுதிகவை இழுக்காமல், மற்ற கட்சிகளுக்கும் கேட்ட தொகுதிகளை தர முடியாது என்று முன்பே கூறியிருந்தால், தற்போது வெகுண்டெழுந்துள்ள அனைவரும் (இடதுசாரிகள் தவிர்த்து) காங்கிரஸை தனியாக கூட்டிக் கொண்டு போய் தனிக் கூட்டணி அமைத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பார்கள்.

ஆனால் அது நடந்து விடக் கூடாது என்பதால்தான் மிக மிக கவனமாக, காங்கிரஸ், திமுக தொகுகிப் பங்கீடு, ஒதுக்கீடு முடியும் வரை காத்திருந்து கவனமாக காய் நகர்த்தி சரியான நேரத்தில் ஆப்பு வைத்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த மாஸ்டர் பிளான் எந்த அளவுக்கு அதிமுகவுக்கு பயன்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விஜய்காந்துக்கு ஜெயலலிதா கொடுத்துள்ள அடி மிகப் பெரிய அடி என்பது மட்டும் உண்மை.

நிச்சயம் திமுகவே கூட ஜெயலலிதாவின் இந்த அதிரடியால் அயர்ந்து போயிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.


Wednesday, March 16, 2011

வைகோ – ஒரு அரசியல் அனாதை.

ரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.

வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விசயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் நவரசத்தில் வைகோதான் சோகத்தின் நாயகனோ?

சில வருடங்களுக்கு முன்பு அநேகமாக 2007 என்று நினைவு. சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம். நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முகமன் சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இனி அவர்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் என்றும் சொன்னார். ஆனால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அந்த வரைக்கும் கொஞ்சம் அடக்கம் இருந்தது உண்மை.

அப்போதே யோசித்தேன். இந்த வனவாசம் இன்னும் 20,25,50 ஆண்டுகள் என்று போனால் நாஞ்சில் சம்பத் வாயில் உலக வரலாறும், உலக கட்டிடங்களும் என்ன பாடுபடும் என்று நினைத்தேன். அதனால்தான் வைகோவின் விசயத்தில் சோகமல்ல, நகைச்சுவையே மேலோங்கி இருக்கிறது என்று மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.

வைகோ குறித்து நடுநிலைமையாளர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. “அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்” என்று அவரை போற்றுகிறார்கள். வைகோவின் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமரிசப்பவர்கள்கூட இந்த விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள். எனினும் இது மிகவும் பிழையான சென்டிமெண்டான மதிப்பீடு என்கிறோம். ஒருவேளை சென்டிமெண்டாக உணர்ச்சிவசப்பட்டு, படுத்தி பேசும் வைகோ குறித்து இப்படித்தான் எண்ணுவார்களோ தெரியாது.

சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை ம.தி.மு.க வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றமில்லை என்றாலும் வைகோவிற்கு இரட்டை இலக்கில் இடங்கள் கிடைக்காது என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 41, சி.பி.எம்முக்கு 12, சி.பி.ஐக்கு 10 பிறகு சின்ன கட்சிகளுக்கு ஒரிரு இடங்களெல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ம.தி.மு.கவின் இடம் குறித்து மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தே.மு.க.தி.க வந்திருப்பதால் அதிக இடம் கொடுக்க முடியாது என்கிறது அ.தி.மு.க. வைகோ இதை உணராமல் இல்லை. எனினும் அவர் 25இல் ஆரம்பித்து 20இல் நின்று இறுதியாக 15வது கொடுங்கள் என்கிறாராம். அம்மாவோ 5இல் ஆரம்பித்து 7,8 என்று நிற்பதாக தகவல். இதனால்தான் புரட்சிப் புயல், புரட்சித் தலைவியை பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாமல் அண்ணாநகர் வீட்டில் முடங்கி கிடக்கிறது.

ஆனாலும் நண்பர்களே இந்தக்காட்சி இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இரு வருடங்களுக்கு முன்னர் கூட அட்சர சுத்தமாக இப்படித்தான் நடந்தது. அதை கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கில் சென்று பார்ப்போம்.

2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் ம.தி.மு.கவைத் தவிர மற்ற கட்சிகள் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தன. அவர்களுக்குரிய தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டாலும் வைகோவுக்கு ஒதுக்கீடு முடியவில்லை. அ.தி.மு.க நான்கு தருவதாக சொன்னது. வைகோ கராராக ஆறு என்று கேட்டார். அப்போதும் இதே நிலைதான். சோகம்தான்.

அப்போது ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தென்மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவர்கள் ஈழத்தமிழருக்காக சென்னையில் வந்து போராடுவதற்கு இரயிலில் வந்தனர். அவர்களை வரவேற்க வைகோ நிலையம் சென்றார். “ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” என்று மாணவர்கள் முழக்கமிட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த வைகோ செய்வதறியாது திரும்பினார். வெளியே நிருபர்கள் இன்னமும் தொகுதி உடன்பாடு முடியாதது குறித்து கேட்டார்கள். ” அது குறித்து பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று வைகோ வெருட்டென்று போய்விட்டார்.

இந்த மனநிலை ஈழத்தின் சோகத்தினால் வந்ததென்று நீங்கள் தவறாக கருதிவிடக்கூடாது. உண்மையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த வருத்தம்.

ஒரு வழியாக ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் விருதுநகர், தஞ்சை, நீலகிரி, ஈரோடு முடிவாகி வைகோவும் சிரிக்காத முகத்துடன் உம்மென்று ஜெயா அருகில் போஸ் கொடுத்து ஒப்பந்தத்தை காட்டினார். இந்த தொகுதிகளெல்லாம் அ.தி.மு.கவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதது என்பதால் இதில் வெல்ல முடியாதென்பது வைகோவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?

அப்போதும் ஏன் இப்போதும் கூட அவர் தனியாக தேர்தலில் நின்று பார்க்க முடியாது. அத்தகைய வெற்று சவடால் அடிப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை.

ஆனால் அப்படி தனியாக வென்று காட்டுவதற்கென்றுதான் கட்சி ஆரம்பித்தார். 1944- ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.

தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.

தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.

மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்து தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.

உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.

அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.

இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.

பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.

தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.

இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.

ஈழப் பிரச்சினையில் கூட வைகோ எப்போதும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாதித்து விடலாம் என்ற அணுகுமுறையையே கொண்டிருந்தார். ஒரு சில லாபி வேலைகள் செய்தால் ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பதுதான் அவரது நிலை. முக்கியமாக இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக ஈழப்பிரச்சினைக்கு வில்லனாக இருக்கிறது என்ற முறையில் அவரது அணுகுமுறை என்றும் இருந்ததில்லை.

மேலும் 2009ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை முன்னணிக்கு வந்த போதும் அதை வைத்து மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதில் அதை தேர்தல் முழக்கமாக்கி ஆதாயம் அடைய நினைத்தார். அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வென்றுவிட்டால் ஈழப்போர் முடிவுக்கு வரும் என்று புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவறாக வழிநடத்தியதில் வைகோவுக்கும் பெரும் பங்குண்டு.

முத்துக்குமார் இறந்த பிரச்சினையிலும் அது பெரிய போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக அணிமாறிய வைகோ இந்த தேர்தலில் கிட்டத்தட்ட27 சீட்டுகள் கிடைக்காது என்றாலும் அணிமாற இயலாது என்ற இழிவான நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதில் ஆறு சதவீதம் வாக்குகளும், இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தால்தான் மாநிலக் கட்சி என்ற தேர்தல் க மிஷன் அங்கீகாரம் கிடைக்கும். சென்ற தேர்தலில் பறி போன அந்த அங்கீகாரம் இனி எப்போதும் திரும்பாது என்பதுதான் களநிலவரம். மக்கள் நலன் என்ற அங்கீகாரத்திற்கு துரோகமிழைத்தவருக்கு இந்த டெக்னிக்கல் அங்கீகாரம்தான் தற்போது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாம். எனினும் அவர் இதையும் கடந்து வருவார்.

க கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோவின் இலக்குதான் என்ன? அவர் தமிழகத்தில் ஒரு தலைவராக உலா வர வேண்டும். ஊடகங்களில் அவரது கருப்பு மையடித்த மீசை கொண்ட படங்கள் வெளிவர வேண்டும். அவரது அறிக்கைகள் தினசரிகளில் இடம்பெறவேண்டும். சமீபத்தில் கூட உலக மகளிர் தினம், ஜப்பான் சுனாமி குறித்தெல்லாம் அறிக்கை வெளியிட்டார். அதே நேரம் உள்ளுக்குள் அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றை எண் தொகுதிகள்தானா என்று அவர் கொஞ்சமேனும் அழுதிருக்க வேண்டும்.

இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.

மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது இன்று அவர் அரசியல் அனாதையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கும் நாம் வருந்தத் தேவையில்லை. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் எல்லா வகை சீரழிவுகளோடும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவர்களது நிழலில் தங்கி வேலை செய்த வைகோ அவர்களது செல்வாக்கை மிஞ்ச முடியுமா என்ன?

ஆக இந்த இடம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் புறநிலையான காரணங்களும், அகநிலையான காரணங்களும் உண்டு. அதில் வைகோ விரும்பி செய்த பணிகளையே மேலே விமரிசித்திருக்கிறோம். ஆக வைகோ வாய்ப்பு கிடைக்காததால் ஒருபெரிய தலைவராக முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ம.தி.மு.க கட்சியில் சேரும் தகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அதாவது அவரும் அரசியல் அனாதையாக முடிவு செய்து விட்டார். நாமும் நமது அனுதாபங்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.

நன்றி - வினவு