Tuesday, February 7, 2012

ஹலாசனம், சிவலிங்காசனம், கர்ணபீடாசனம்.

ஹலாசனம்.
ஹலாசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கவும். இரு கைகளும் தரையில் உடலோடு ஒட்டிய நிலையில் இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் கால்களை மேலே தூக்கவும். இடுப்பு பகுதியோடு இரு கால்களும் தலைக்கு பின்புறம் போய் தரையை தொடவேண்டும். உங்களின் கைகளிரண்டும் முதுகுக்கு பின்னால் சம இடைவெளி தூரத்தில், தரையோடு பதிந்திருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருங்கள். அதற்கு பிறகு, மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பவும்.

பயன்கள்:

முதுகு தண்டு, அடிவயிறு இளக்கம் பெறும். உடல்எடை குறையும். கண், காது, மூக்கு, மூளை, வாய் நன்கு இயங்கும். தலைவலி போகும். நரை, திரை வராது. மலச்சிக்கல், வாயு கோளாறு, மாவிடாய் கோளாறுகள் நீங்கும்.


சிவலிங்காசனம்.
சிவலிங்காசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலைவைத்து படுக்கவும். இரண்டு கைகளும் உடம்போடு ஒட்டியிருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் கால்களை மேலே தூக்கிக்கொண்டு வந்து, தலைக்கு பின்னால் இறக்கி தரையை தொடவிடுங்கள். அதற்கு பிறகு இரு முழங்கால்களையும் மடக்கவும்.

முழங்காலின் உட்பகுதியை, தோள்பட்டையில் படுமாறு நெருக்கி கொண்டு வாருங்கள். இருகைகளையும் பின்னால் சேர்த்து, உடம்பை வட்டமாக அமைக்கவேண்டும். இந்த நிலையில் உடலும் தொடையும் விங்கபானம் போல தோற்றம் தரும்.

பயன்கள்:

முதுகுதண்டு-அடிவயிற்று நோய்கள் தீரும். சர்க்கரை வியாதி நீங்கும். உடல்எடை குறையும். டான்சில்ஸ், தைராய்டு சுரப்பி குறைபாடுகள் அகலும். பைல்ஸ், ஹிரண்யா நோய்கள் குணமாகும். நுரையீரல் நன்கு இயங்கும்.


கர்ணபீடாசனம்.
கர்ணபீடாசனம்

செய்முறை:

முதலாவதாக, ஹலாசன நிலைக்கு வரவும். கால்களை அழுத்தி இரண்டு பக்கங்களிலும் கால்களை ஒன்று சேருங்கள். அதே சமயத்தில் இரு உள்ளங்கைகளை கொண்டும் காதுகளை அழுத்தவும்.

பயன்கள்:

காது மந்தம், சீழ் வடிதல் நீங்கும்.


Wednesday, January 25, 2012

அப்துல்கலாமின் கொடும்பாவி எரிப்பு : கோவையில் 12 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது.



கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்கள் மனதில் உள்ள அச்சங்களைப் போக்க காங்கிரஸ் அரசு சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் முயற்சி செய்து வருகிறார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்ட அவர் அது மிகவும் பாதுகாப்பானது, அதனால் மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டாம் என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமை மேம்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் அப்துல் கலாமின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாணவன் கலாமின் உருவ பொம்மைக்கு தீ வைத்தார். அதை உடனே போலீசார் அணைத்துவிட்டு அந்த 12 மாணவர்களையும் கைது செய்தனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார். அவருக்குப் போகும் இடமெல்லாம் சிறப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கொடும்பாவி தமிழகத்தில் முதல்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல்முறையாக எரிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய பா.ஜ.க.அரசு தாங்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதை காட்டிக்கொள்ள ஜனாதிபதி பதவி கொடுத்து அப்துல்கலாமை கேடயமாக்கிக் கொண்டுவிட்டது.

கூடங்குளம் விவகாரத்தில் தற்போதைய காங்கிரஸ் அரசு ராமேஸவரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அப்துல்கலாமை அம் மக்களுக்கு எதிரான கேடயமாக பயன்படுத்துகிறது.

இந்த அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை அப்துல்கலாம் உணரவேண்டும். இல்லையெனில் மக்கள் உணர்த்த முற்படுவார்கள்.

Friday, January 20, 2012

ஆதார் அடையாள அட்டை : தேச பாதுகாப்புக்கு பிரச்சனை வரலாம் - ப.சிதம்பரம்.



நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் ஆதார் தேசிய அடையாள அட்டைக்காக மக்களிடம் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை (biometric data) பதிவு செய்வதில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்றும், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படலாம் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, இதை மத்திய அமைச்சரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சிதம்பரம் கோரியுள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நீலேகனி தலைமையில் ஆன குழுவிடம் இந்த ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் சில ஆண்டுகளுக்கு முன் ஒப்படைத்தார்.

இதையடுத்து இந்த அட்டையை விணியோகிக்க முதலில் வீடு வீடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இந்தப் பணிகள் முழுமையாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந் நிலையில், இந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியும் கைரேகைகள் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கும் பணியும் ஆரம்பித்துவிட்டது. தபால் நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.

ஆனால், இந்த அட்டை வழங்கும் பணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும், தேசப் பாதுகாப்புக்கு இது பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார் ப.சிதம்பரம்.

அவரது கருத்தைப் பொருட்படுத்தாமல் நீலேகனி தலைமையிலான குழு, இந்தப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந் நிலையில், பிரதமரருக்கு சிதம்பரம் கடிதம் எழுதி, இதில் உள்ள குழப்பங்களை முதலில் நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

மக்களிடம் பயொமெட்ரிக் தகவல்களை மந்திய உள்துறையின் கீழ் வரும் மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலக ஊழியர்கள் பெற வேண்டுமா அல்லது நீலேகனி தலைமையிலான தேசிய அடையாள அட்டைக் குழுவே பெறலாமா என்பதிலேயே குழப்பம் உள்ளது.

மேலும் இப்போது சேகரிக்கப்பட்டு வரும் தகவல்கள் முழுமையானதாக இல்லை, மக்கள் தரும் விவரங்கள் சரியா என்பதும் சரிபார்க்கப்படாமல் அப்படியே ஏற்கப்படுகின்றன. இது எதிர்காலத்தில் தேச பாதுகாப்புக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று ப.சிதம்பரம் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

ஆதார் அடையாள அட்டை தொடர்பாக நந்தன் நீலகேனி மத்திய அமைச்சரவை யில் ஒப்புதல் பெறாமலேயே தகவல்களை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று முன்பே சிதம்பரம் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பணிகளில் நீலேகனி தலையிடுவதாகவும், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரலின் பொறுப்பை தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

Thursday, January 19, 2012

விபரீதகரணி, சர்வாங்காசனம், சர்வாங்க பத்மாசனம்.

விபரீதகரணி.
விபரீதகரணி

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி தலைவைத்து படுத்து, கைகளை தரையோடும், உடலோடும் ஒட்டிவைக்கவும். இரண்டு கைகள், தோள்பட்டை மற்றும் தலைப்பகுதியை தரையில் அழுத்தி, இயல்பான சுவாசத்தில் கால்களை மேலே தூக்கவும். அடுத்தபடியாக இடுப்பையும் மேலே தூக்குங்கள்.

இரு கைகளையும் அந்தந்த பக்கத்து புட்டத்தில் வைத்து, இரு கால்களும் சேர்ந்த நிலையில், பாதத்தை சற்று பின்னால் கொண்டு போகவும். இந்த நிலையில் ஒட்டுமொத்த உடம்பின் எடையும் முழங்கையில் இருக்கட்டும்!

பயன்கள்:

40 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய தற்காலிக நோய்-நாள்பட்ட நோய் நீங்க காரணமாக அமைகிறது.


சர்வாங்காசனம்.
சர்வாங்காசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கால்களையும் இணையாக தலைக்கு மேல் செங்குத்தாக தூக்கவும். இரு கால்களையும் தலைக்கு பின்னால் கொண்டு போய்விடுங்கள். அதனால் இடுப்புபகுதி தூக்கியவாறு இருக்கும். இடுப்பு பகுதியை தூக்கியபின் இரு உள்ளங்கைகளையும் நடுமுதுகில் வையுங்கள்.

கால்களை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி செங்குத்தாக நேர்க்கோட்டில் நிறுத்தவும். உங்களின் கண்கள் மேலிருக்கும் இரு கால்கட்டை விரல்களை பார்க்கட்டும். கீழ்த்தாடைப்பகுதி நெஞ்சில் ஒட்டியிருக்க வேண்டும். கழுத்து பிடரி சரியாய் தரையில் படிய அமையுங்கள். ஆசனத்தின் போது உடலியக்கத்துடன் சுவாசமும் இயல்பாய் இருப்பது அவசியம்!

பயன்கள்:

சிரசாசனம் சக்கரவர்த்தி என்றால், சர்வாங்காசனம், `மகாராணி'. பிடரியிலுள்ள நாளமில்லா பிட்யூட்டரி சுரப்பியை நோக்கி புது ரத்தம் பாய்வதால், உடம்பில் சுறுசுறுப்பு வந்துசேரும். தைராய்டு, தைமஸ் ஆகியவற்றின் சுரப்பும் அருமையாக இருப்பதால், சரியான வளர்சிதை மாற்றம் அமையும். தைராய்டு குறைபாடுகள் அகலும். இது மச்சாசனத்துக்கு மாற்றுஆசனமும்கூட!

குண்டானவர்கள், மருந்து சாப்பிட்டு குரல் மாற்றம் அடைந்தவர்கள், பெண்ணுக்கு மீசை முளைத்தல், தோல் வியாதி, தொண்டையில் சதை வளருதல் போன்ற நோய்கள் குணமாகும். குதிகால் குடைச்சல், முழங்கால் மூட்டு வலி, நரம்பு சுருட்டு, மூலம், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும். கழுத்தெலும்பு தேய்வு (`பாண்டிலிட்டஸ்') குணமாகும். உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பயன்தரவல்ல ஆசனமிது!


சர்வாங்க பத்மாசனம்.
சர்வாங்க பத்மாசனம்

செய்முறை:

சர்வாங்காசன நிலையில் பத்மாசனம் செய்யுங்கள். அதே நிலையில் முன்பக்கமாக இறக்கி நெற்றியையோ, தரையையோ தொடலாம். இதேபோல முதுகு பக்கமாக இறக்கி, முழங்காலால் தரையை தொடவும்.

பயன்கள்:

மலச்சிக்கல் நீங்கும். மூலநோய் குணமாகும். வாயுத்தொல்லை நீக்கும். பிருஷ்டபாக எடை குறையும்.

உடல் எடையை குறைக்க சிறந்த ஆசன மிது!

Wednesday, January 18, 2012

மலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்


இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.

கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா, சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.

கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள். 80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.துல்லியமான middile cinema உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், , பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.

மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே. திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு நெருக்கமே.

20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.) கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.

இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை, இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.

வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால் அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.

பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம் போதவில்லை.

கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள். (இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா …..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.

கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள் வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது.

தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.


தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை), ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும்.

நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம் படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.

எனக்குத் தெரிந்து மலையாளப் படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை.

கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை. ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத் திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.

இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.

அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.

இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.

பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.

பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.

ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.


அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?

ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.

சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.

அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.

இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.

சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.

”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’ நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.

இந்தப் பாண்டிகளின் தலைநகரில் தான் மலையாள் நடிக. நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.

தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர “ பாவம் இந்தப் பாண்டிகள் என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.

தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.

நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.

தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக் கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.

கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)

1. நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்

2. நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986

3. யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987

4. இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983

5. சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989

6. நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990

7. முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987

8. வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991

9. மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

10. விஷ்ணு – மம்முட்டி - - 1993

11. கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997

13. மழவில் காவடி – ஜெயராம் – 1990

14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990

15. ஐட்டம் –மோகன்லால் - 1985

16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994

17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008

18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006

19. தாழ்வாரம் – பரதன் – 1987

20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005

21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000

22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998

23. சேக்ஸ்பியர் M.A இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008

24. பிளாக் – மம்முட்டி – 2004

25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006

26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004

27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005

28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006

29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007

30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009

31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003

32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999

33. நரன் – மோகன்லால் – 2005

34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002

35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001

36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005

37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005

38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002

39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003

40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000

41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998

42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000

43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999

44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006

45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001

46.ஏகேஜி – 2007

47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998

48. பகல் பூரம் – முகேஷ் – 2000

49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992

50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003


இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது. மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .

தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் :இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார். M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. அவர் ராமசந்திரன் அல்ல ராமச்ந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.1972ல் பெரியார் மலையாள எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார் …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்) ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது. சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.

நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை. மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். நாம்?. நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.

Sunday, January 15, 2012

ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.

ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்.
ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்

செய்முறை:

வலது காலை மேலே தூக்கி முகத்தோடு ஒட்டியவாறு நேராக காலை தூக்கி கையால் பிடிக்கவும். இடதுகாலை இடுப்புக்கு பக்கவாட்டில் சரியாக 90 டிகிரி நீட்டவேண்டும். இதுபோல இடதுகாலை பக்கம் மாற்றி செய்து, ஆசனத்தை கலைக்கவும்.

பயன்கள்:

நரம்பு தளர்ச்சி, தசைப்படிப்பு, மூட்டுவலி நீங்கும்.


பார்சுவ உத்தித பாதாசனம்.
பார்சுவ உத்தித பாதாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு உள்ளங்கை தரையில் படுமாறு வைக்கவும். அதற்குபிறகு இயல்பான சுவாசத்தில், வலதுகாலை இடுப்பிலிருந்து செங்குத்தாக மேலே தூக்குங்கள். இரு கைகளால் மேலிருக்கும் வலது கால் கட்டைவிரலை பிடித்து உடலை நிமிர்த்தவும். இத்துடன் முகத்தால் வலது முழங்காலை தொடவும் முயற்சியுங்கள். அதே சமயத்தில் இடதுகால் மடங்காமல் தரையில் பதிந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து, இதேபோல இடதுகாலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

வயிற்று கோளாறுகள் வராது. முதுகுவலி நீங்கும். வாயு கோளாறு அகலும். ஹிரண்யா, மூலநோய், மலச்சிக்கல் நீங்கும். தொடை, முழங்கால், பாதப்பகதிகள் நன்கு வலுப்படும். தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கும். இருசக்கர வாகனம், காரில் பயணிப் போர், அலுவலகத்தில் உட்கார்ந்து பணியாற்றுவோருக்கு உகந்த ஆசனமிது!


ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.
ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் தரையோடு ஒட்டிவைக்கவும். இருகால்களையும், 90 டிகிரியில் இரு கைகளையும் கொண்டு மெதுவாக, அந்தந்த பக்கத்து முழங்காலை பிடியுங்கள். இடுப்புக்கு மேல் உள்ள வயிறு, மார்பு, தோள், தலைப்பகுதியை மேல்நோக்கி தூக்கவும்.

நெற்றியால் முழங்காலை தொட்டு, பிறகு இரு கைகளையும் மேலே கொண்டு போய் கணுக்காலை பிடித்து உடலை செங்குத்தாக நிறுத்தவும். இரண்டு பிருஷ்டபாகம் மற்றும் முதுகுதண்டின் கடைசி எலும்பு ஆகியவை தரையில் படிந்து ஒரு ஃ வடிவில், உடலின் எடையை சமநிலையில் நிறுத்தவேண்டும். ஆசனம் போடும்போது, சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.

பயன்கள்:

இளமை நீடிக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, தொந்தி நீங்கும். பாதவலி, முழங்கால் வீக்கம், தொடைப் பெருக்கம் வராது. மலச்சிக்கலை நீக்க சிறந்த ஆசனமிது!

Friday, January 13, 2012

தமிழர்களின் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை.. மறைக்கப்பட்ட வரலாறு !



தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இதற்காக போராட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரச்சினை மீண்டும் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

சரி, தேவிகுளம், பீர்மேடு குறித்து வரலாறு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்...

தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் அனைத்தும் பாண்டிய மன்னனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது. எனவே, இந்த பகுதிகள் அனைத்தும் 1889 க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறுகள் கூறுகின்ற உண்மை.

வரலாற்று ரீதியாக பார்க்கும் போது சேர அரசர்கள் ஆண்ட பகுதிதான் இன்றைய கேரளா.சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிறு, குறு சமஸ்தானங்களாக அது சிதருண்டு போயுள்ளது. கி.பி 12ம் நூற்றாண்டில் இறுதியில் தற்போதைய பீர்மேடு தாலுகாவையும், கூடலூரையும் உள்ளடக்கி பூஞ்சாறு அரச வம்சம் ஆளத்தொடங்கியுள்ளது.

பூனையார் தம்பிரான் அரசு என்று தமிழில் அழைக்கப்பட்ட அந்த அரசு பாண்டிய மன்னன் குலசேகரன் என்பவரால் நிறுவப்பட்டுள்ளதாக வரலாற்று உண்மைகள் தெரிவிக்கின்றன. பூஞ்சாறு மன்னர் ஆண்ட பகுதிகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் பீர்மேடு, தேவிகுளம் மற்றும் உடும்பன்சோழா போன்ற பகுதிகள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கம்பம், உத்தம பாளையம், போடி தாலுகா தமிழகத்துடனும் இணைக்கப்பட்டன.

1886ம் ஆண்டு தமிழர்களின் ஆளுமையில் இருந்த பீர்மேடு தாலுகாவில் முல்லைப் பெரியாறு அணைக் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த வரலாற்று உண்மையை மறைத்து கேரள அரசின் இணையதளத்தில் 16 ம் நூற்றாண்டிலேயே கேரளாவுடன் பூஞ்சாறு அரசு கேரளாவுடன் இணைந்து விட்டது போல குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்குட்பட்ட பத்மநாபபுரத்தை தலைமையாக கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் தனது தலைமை இடத்தை 1756ல் திருவனந்த புரத்திற்கு மாற்றியுள்ளது. இதன் பின்பு 1866க்கு மேல்தான் பூஞ்சாறு அரசர்களின் நிலத்தை கையகப்படுத்த தொடங்கியுள்ளது.

சேரநாட்டின் ஒரு பகுதியே திருவிதாங்கூர், திருவிதாங்கூரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்ட காரணத்தால் மார்ஷல் நேசமணி, திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளை மீட்க "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை" உருவாக்கி, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீருமேடு, தேவிகுளம், சித்தூர் ஆகிய 9 பகுதிகளையும் தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்று போராடினார்.

5.11.1949 ல் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற வடஎல்லை மாநாட்டில் நேசமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் வடவேங்கடம் அதாவது திருப்பதி முதல் குமரி வரை உள்ள பகுதிகளை இணைத்து "தமிழ் மாகாணம்" அமைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர்களால் உயர்ந்த பீர்மேடு

இதே காலக் கட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு தமிழர்களை மலையாள அரசு அடக்கி ஒடுக்கியது. 434 தமிழர்களையும் 20 தமிழ் பெண்களையும், இளைஞர்களையும் ஒரே சிறையில் அடைத்து துன்புறுத்தியது.

இந்த மக்களின் துன்பங்களைப்பற்றி மார்ஷல் நேசமணி குறிப்பிடுகையில் தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும், அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் ஏல விவசாயத்தை வளர்த்த பெருமை முழுதும் தமிழனுக்கே உரியதாகும் என்று பேசினார். நேசமணி குறிப்பிட்ட தாலுகாக்களில் தமிழர்களே அதிக அளவில், அதாவது பெரும்பான்மைக்கும் அதிகமான அளவில் வாழ்ந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை

நேசமணியின் நாடாளுமன்ற பேச்சில், பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர். அன்னார் ஒப்பமிடுகின்ற போது மீனாட்சி சுந்தரம் என்றே கையொப்பமிடுவர். மன்னாடியார் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டு வரி தண்டினான் என்றும் அத்தகைய வரி வசூலிக்கும் பற்றுச்சீட்டில் மதுரை மீனாட்சி துணை என்ற முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால், இந்த, தேவிகுளம், பீருமேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது.

எனவே, மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889 க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறுகள் கூறுகின்ற உண்மை, மாடோன் கே.டி.கெச் பி. தேவன் கம்பெனியாரின் முன்னோர்கள் 1879 ல் பூஞ்சாற்று மன்னருடன் செய்து கொண்ட முதல் உடன் படிக்கையின் அடிப்படையில் இப்பகுதிகள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது என்று சுட்டிக்காட்யுள்ளார் மார்ஷல் நேசமணி.

மேலும் அவர் கூறுகையில்,பெரியார் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக பிரிட்டிஷ் – இந்திய நடுவண் அரசு செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார். 1889-ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் கெடுவை நீட்டித்த வேளையில் அது திருவிதாங்கூர் மன்னருக்கு சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கு முன்னால் இப்பகுதி தமிழகத்துடன் இருந்தது என்பது தெரிகிறது.

திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களை பூஞ்சாறு மன்னரிடமிருந்து நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் பெற்றிருக்கிறார். இப்பிரதேசங்களுக்கு வந்துபோக மதுரை, மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், கூடலூர், போடிநாயக்கனூர், கம்பம், சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என்று கூறியுள்ளார்.

பெரியார் அணைபற்றி அவர் கூறும்போது, பெரியாறு நீர்த்தேக்கத்திற்கு 13 சதுர மைல்கள் தண்ணீர் கொள்ளளவும் 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் உண்டு. இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையாகிறது. ஏனெனில் பெரியாறு நீர்த்தேக்கத்தினால் மதுரை மாவட்டத்திலுள்ள 1,90,000 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. பெரியாற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி பெரியகுளம் அருகில் ஒரு நீர்மின் நிலையமும் நிறுவுவதற்கான திட்டத்தை சென்னை மாகான அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக பெரியகுளத்தில் ஒரு கால்கோள் விழா ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது என்று 1955 டிசம்பர் 15ஆம் நாள் நேசமணி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

திருவிதாங்கூர்(கேரளம்) தமிழர் போராட்டம் நடைபெற்ற போது, கேரள அரசியல்வாதிகள் ஒன்றாக இணைந்து நின்றனர். ஆனால் தமிழக மக்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேசமணி 9 தாலுகாக்களுக்காகவும் பெரியாறு அணைக்காகவும் வாதாடியபோது எல்லா கேரள எம்.பி.க்களும் எதிர்த்தனர். ஆனால் தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி.கூட ஆதரவு காட்டவில்லை.

தமிழனின் கைவிட்டுப்போன பகுதிகள்

எல்லைக் கமிஷன் மூவரில் ஒருவராக சர்தார் கே.எம். பணிக்கரை இந்திய அரசு நியமித்தது. இவர் ஒரு மலையாளி, மலையாளிகளுக்கு சாதகமாகவே நடந்தார். மேற்கூறிய காரணங்களினால் தமிழகத்தோடு 5 தமிழ்ப் பகுதிகளே இணைந்தன (தோவாளை, அகஸ்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை), முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமும் நம்மை விட்டு கேரளாவுக்குச் சென்றது.

முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரச்சினை, நெய்யாறு தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமானால் தென் எல்லைக் காவலன் நேசமணி கேட்ட ஒன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றின் கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கட்சி சார்பு நிலையின்றி எல்லா தமிழர்களும் ஒன்றிணைந்து போராடி மேலே கூறிய நான்கரை தாலுகாக்களையும் தமிழகத் தோடு இணைத்தால் மட்டுமே தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்சினை நீங்கும்.