Friday, December 2, 2011

சோனியா காந்தியின் அவசர முடிவு ஏன் ? ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போவார்களா ?



இந்தியாவில் வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வரவும், ரூபாய்க்கு எதிரான டாலரின் விலைமதிப்பைக் குறைக்கவும், ரிடெயில் (சிறு வணிகம்) துறையில் - 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று திருமதி சோனியா காந்தி அவர்களின் ஆலோசனைப்படி மத்திய அரசு அவசர அவசரமாக ஒரு முடிவை எடுத்துள்ளது.

ஏன் இந்த அவசர முடிவு ?

இது குறித்து 2005-06ல் தொகுக்கப்பட்ட சில புள்ளி விவரங்கள் இவை -

இந்தியாவில் -
விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் - 60.5 %
உற்பத்தித் துறையில் – 16.8%
சர்வீசஸ்(வர்த்தகம் போன்ற இதர பணிகளில்) -22.7%

சராசரி வளர்ச்சி விகிதம் -
விவசாயம் -2.7%
உற்பத்தி – 6.53%
இதர துறைகள் -7.9 %

இந்தியாவில் உழைக்கும் மக்களில்
வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் -7 %.
அதாவது சுமார் 4 கோடி பேர்.
நாட்டின் மொத்த உற்பத்தித்திற்னில்
அவர்கள் பங்கு -14%

சென்ற வாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள 100% அந்நிய முதலீட்டை சில்லரை வணிகத்தில் அனுமதிப்பது என்கிற முடிவால் 1 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்கிறது மத்திய அரசு. அதாவது 4 கோடி பேர் வேலை இழப்பார்கள். அதற்கு பதிலாக 1 கோடி பேருக்கு வேலை கிடைக்கும்.

பெட்டிக்கடை, மளிகைக்கடை, அண்ணாச்சி கடை, வாரச் சந்தைகள், காய்கறிக்கடை, தெருவண்டி வியாபாரி, வீட்டு வாசலில் கூடைகளில் காய்கறி -கோயம்பேடு மார்க்கெட், காந்தி மார்க்கெட், எல்லாமே அப்படியே தான் இருக்கும் - இப்போதைக்கு.

ஸ்லோ பாய்சன் கொடுத்தால் -கொஞ்சம் கொஞ்சமாக தானே செத்துப் போவார்கள். எனவே அடுத்த 10 ஆண்டுகளில் விஷம் வேலை செய்யும் !

கொஞ்சம் கொஞ்சமாக இவை எல்லாம் மறையும். அமெரிக்க “வால் மார்க்கெட்டின்” வால்கள் நம் நாடு எங்கும் முளைக்கும்.

தினக்கூலி வாங்குபவர்கள் - குப்பனும், சுப்பனும், சூப்பர் மார்க்கெட்டில் போய் மளிகை வாங்க முடியுமா ? இப்போதே பிக் பஜாரும், ரிலயன்ஸும் வந்தவுடனேயே பாதி மளிகைக் கடைகள் காணாமல் போய் விட்டன.

(இப்போதைக்கு 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள 53 நகரங்களில் மட்டும் தான் என்று மத்திய அரசு சொன்னாலும், கொஞ்ச நாட்கள் கழித்து அந்த 10 ஐ 5 ஆகவோ, 2 ஆகவோ மாற்றுவதை யார் தடுக்க முடியும் ?)

வால் மார்க்கெட் கடைகளில் என்ன கிடைக்கும் ? அமெரிக்க அழகு சாதனங்கள், சோப்புகள், ஜெர்மனியில் தயாராகும் எலெக்ட்ரானிக் சாதனங்கள், சீனாவில் தயாரிக்கப்படும் அனைத்து வித சாதனங்களும், அன்றாட சமையலறை உபகரணங்களும்,

ஆஸ்திரெலியாவிலிருந்தும் டென்மார்க்கிலிருந்தும் பால் பொருட்கள், (கடைசியாக இந்திய கிராமங்களிலிருந்து அரிசி, கோதுமை, காய்கறிகளும் )

நம் நாட்டு பிஸ்கட், டூத்பேஸ்ட், ஹார்லிக்ஸ், போர்ன்விடா ஆகியவற்றுடன் அமெரிக்க, சீன தயாரிப்புகளும் வந்து குவியும். கோகா கோலாவும், பெப்சியும் வந்ததும் நம் உள்ளூர் குளிர்பானங்களுக்கு ஏற்பட்ட கதி இந்த பொருட்களுக்கும் ஏற்படும்.

நேரடி வெளிநாட்டு மூலதனம் என்றால் அமெரிக்கர்கள் டாலர்களாக இங்கே கொண்டு வந்து கொட்டுவார்கள் எனவே ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு குறையும் என்று மத்திய அரசு சொல்கிறது.

கொக்கு தலையில் வெண்ணையை வைத்து, அது உருகி வழிந்து கண்ணை மறைக்கும்போது அந்த கொக்கைப் பிடித்து விடலாம் என்று நமது மத்திய அரசு சொல்கிறது. அமெரிக்கர்கள் என்ன பைத்தியக்காரர்களா ? சும்மா இங்கே பணத்தை கொண்டு வந்து கொட்டுவதற்கு ?

தற்போது “வால் மார்ட்”நிறுவனம் அமெரிக்காவில் பங்குதாரர்களுக்கு மூலதனத்தில் (equity) 21% லாபம் கொடுத்து வருகிறது. இதற்கு குறையாத அளவில் இந்தியாவிலும் லாபம் சம்பாதிக்கத் தானே இங்கு வருகிறார்கள். இந்தியர்களைச் சுரண்ட வரும் அமெரிக்க முதலாளிகளுக்கு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது மத்திய அரசு.

அங்கு போணியாகாத பொருட்களை எல்லாம் இங்கு நம் தலையில் கட்டி, கொள்ளை லாபம் அடித்துக் கொண்டு போகப்போகிறார்கள்.

5 வருடங்களுக்கு முன் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் அவர்கள் சொன்ன வார்த்தை இது -

“உற்பத்தியாளர்களுக்கும் (விவசாயிகளுக்கும்) இறுதி உபயோகிப்பாளர்களுக்கும் இடையில் உள்ள செயல்பாடுகள் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. எனவே இங்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முன் நாம் நிறைய யோசிக்க வேண்டும் “

5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் 35 நகரங்களில் வால்மார்ட் நிறுவனம் அனுமதிக்கப்பட்டால், அது சுமார் 10,195 பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.அதே சமயம் அதனால் ஏற்கெனவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 43,254 பேர் வேலை இழக்க நேரிடும்.

அதாவது சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் புதிதாக வேலை வாய்ப்புகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஏற்கெனவே இந்த துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர் வேலையை இழப்பர்.

இத்தகைய கொடுமைகளுடனாவது இது தேவையா ?

மத்திய அரசு ஏன் பிடிவாதமாக, அவசர அவசரமாக இதைச் செய்கிறது ?

இந்த மூன்றில் எதாவது ஒன்று தான் (அல்லது மூன்றுமே கூட ) காரணமாக இருக்க முடியும் என்கிறார்கள் இது பற்றி விவரம் தெரிந்தவர்கள் -

1) விலைவாசி உயர்வு, கருப்பு பணம் பற்றி பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் விவாதங்களை திசை திருப்ப -

2) வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை, வெள்ளையாக்கி அந்நிய முதலீடாக இந்தியாவிற்குள் கொண்டு வர -

3) அண்மையில் காங்கிரஸ் தலைமையை சந்தித்த சில வெளிநாட்டு விசேஷ விருந்தினர்களின் அழுத்தமான ஆலோசனையாக – (இதை டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மட்டுமே உறுதி செய்ய முடியும்!)

இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும் சரி - எதிர்ப்பை மீறி பிடிவாதமாகக் திணிக்க முயன்றால் இது காங்கிரஸ் கட்சியின் ஒரு தற்கொலை முயற்சியாகவே முடியப் போகிறது.

No comments: